தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை - ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடன்

Indu makkal katchi

பட மூலாதாரம், Indu makkal katchi offl twitter

(இன்று 26.03.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 கோடி கடன் வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளா்கள் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது:

அா்ஜுன் சம்பத் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் சூழலில், தமிழகத்தில் இந்து சமய, சனாதன தா்மத்தின் முறைப்படி ஆட்சி நடத்தப்படும். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும்.

தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: கோயில் நிர்வாகத்தை அறங்காவலா் சபை உருவாக்கி ஒப்படைக்கப்படும். மத்திய அரசிடம் தமிழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்துக்கு வழங்க வலியுறுத்தப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வள்ளுவன் கோட்டை என பெயா் சூட்டப்படும்.

இலவசத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்படும். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை மக்களே பூா்த்தி செய்யலாம். அந்தத் தொகையை சுலபத் தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

5-ஆம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். நவோதயா பள்ளிகள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும். மாணவா்களுக்கு தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும். 18 வயது பூா்த்தி அடைந்த மாணவா்களுக்கு ஓராண்டு காலம் ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்படும்.

தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: ஜாதி, மத அடிப்படையிலான சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். மோசடி மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும். இந்துக்களின் ஜனத் தொகை குறைந்து விடாமல் பாதுகாக்கப்படும். இந்து இயக்கத் தலைவா்களுக்கு மணிமண்டபம், சிலை ஆகியன அமைக்கப்படும்.

இராம.கோபாலன் வாழ்ந்த தெருவுக்கு, அவரது பெயா் வைக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட இந்து தலைவா்கள் கொலை வழக்குகள் விரைந்து தீா்வு காணப்பட்டு, அவா்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

திருவண்ணாமலை, அறுபடை வீடுகள் அமைந்த நகரங்கள், ராமேசுவரம் போன்றவை புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு மது, மாமிசம், தடை செய்யப்பட்டு, பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட 64 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

'இந்திய இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தான்களை உருவாக்கலாம்' - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறியதாக சர்ச்சை கருத்து

மேற்கு வங்கம்: மமதா பானர்ஜி

பட மூலாதாரம், Sanjay das / bbc

ஷேக் ஆலம் என்பவர் கையில் திரிணாமூல் காங்கிரஸ் படத்துடன், இந்தியாவில் இருக்கும் 30 சதவீத இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் நான்கு பாகிஸ்தான்களை உருவாக்கலாம் என கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில், பிர்பும் மாவட்டத்தில் நனூர் எனும் ஊரில் இந்த 30 நொடி காணொளி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஷேக் ஆலம் என்பவர் "மைனாரிட்டிகளாகிய நாங்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கிறோம். மீதி 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த 70 சதவீதம் பேரின் உதவியோடு மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என பாஜக நினைக்கிறது. இந்த 30 சதவீதம் பேர் ஒன்று சேர்ந்தால், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால், நான்கு பாகிஸ்தானை உருவாக்கலாம். அப்போது மீதி 70 சதவீதம் பேர் எங்கே செல்வார்கள்?" என பேசி உள்ளார்.

இதை பாஜக கடுமையாக விமர்சித்து இருக்கிறது. மமதா பானர்ஜி, ஷேக் ஆலமின் கூற்றை ஆதரிக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.

ஷேக் ஆலம் அக்கட்சியின் உறுப்பினர் கூட கிடையாது, தங்களுக்கும் ஷேக் ஆலமிற்கும் எந்தவித உறவும் இல்லை. நாங்கள் அவரின் கூற்றை ஆதரிக்கவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அந்த நிலை தொடரும் என திரிணாமுல் காங்கிரஸ் தன் தரப்பில் இருந்து விளக்கமளித்திருக்கிறது.

இச்செய்தி தேர்தல் பரபரப்பில் இருக்கும் மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலையைக் கிளப்பி இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'21 ஆண்டுகள் மக்கள் சேவையில் விடுப்பு எடுக்கவில்லை' - நரேந்திர மோதி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Reuters

குஜராத் முதல்வராக இருந்தபோதிலும், பிரதமராகப் பதவியேற்ற பின்பும், 21 ஆண்டுகள் பொதுச்சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் சேவையில் இருக்கிறேன் என பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோதி பேசியதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் பிரதமர் மோதி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கர், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், குஜராத் முதல்வராக இருந்த காலத்திலும், பிரதமராகப் பதவி ஏற்ற பின்னும் இதுவரை 21 ஆண்டுகள் மக்கள் சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றுகிறேன். தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் எம்.பி.க்கள் உண்மையாகப் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தேசம் செயலாற்றிய விதம் சிறப்பானது என நினைக்கிறேன் என பிரதமர் மோதி தெரிவித்தார். பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் செயல்பாடுகளையும், முயற்சிகளையும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டியது என மோதி தெரிவித்தார்.

பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் பணியை 110 நாடுகளின் தலைவர்கள் பாராட்டினார்கள். இந்தக் கடினமான காலகட்டத்தில் 130 கோடி இந்தியர்களும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்து, ஆதரவு அளித்ததை வெகுவாகப் பாராட்டினார்.

நாடாளுமன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்" எனத் தெரிவித்தார் என அச்செய்தியில் கூறபட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: