கொரோனா வைரஸ் ஊரடங்கின் ஓராண்டு: பொதுமுடக்கம் அறிவிக்கும் முன் நரேந்திர மோதி யாரிடம் ஆலோசித்தார்? - BBC SPECIAL

கொரோனா வைரஸ் ஊரடங்கு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜூகல் புரோஹித் & அர்ஜூன் பார்மர்
    • பதவி, பிபிசி

ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்தெகா மாவட்டத்தில் சீமா குமாரி உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதே சமயம் கடந்தாண்டு இவர் கோவாவில் இருக்கும் காப்பகம் ஒன்றில் தேர்ந்த செவிலியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு முன்களப் பணியாளர். அந்த சமயத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த கடந்தாண்டு இந்திய அளவில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

இவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "அதுபோன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்பட்டால், சாவதையே விரும்புகிறேன். கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, எனது இதயம் கடுமையாகத் துடிக்கிறது'' என்கிறார்.

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த போதும், எந்த பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என காப்பகத்தின் உரிமையாளர் தெரிவித்ததாகவும், வேறு வழியில்லாமல், பணியில் இருந்து விலகியதாகவும் சீமா ஆதங்கத்துடன் கூறுகிறார்.

மேலும் சீமா கூறுகையில், "கொரோனா பொது முடக்கத்தின்போது, ஒரு மாதத்திற்கும் மேல் நாங்கள் அனைவரும் கைவிடப்பட்ட நிலையில் கோவாவில் சிக்கித் தவித்தோம். எந்த உதவியும் கிடைக்கவில்லை. காவலர்கள் எங்களைப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் எங்களது குரலை உயர்த்திய பின்னர்தான், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயிலில் நாங்கள் பயணம் செய்ய பதிவு செய்து கொடுத்தனர்.

ஆனால், ரயிலுக்குள் நாங்கள் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம். உள்ளே சென்றவுடன் அங்கிருந்த ஒருவர் எங்களை கடுமையாக வசைபாடியவாறு, தனிமனித இடைவெளியில் அமருமாறு கத்தினார். ஆனால், ரயிலில் அப்படியொரு நிலைமை இல்லை. ஆட்டு மந்தைகளை அடைத்தது மாதிரி தான் எங்களையும் அடைத்து இருந்தனர். நிலைமையை சமாளிக்க எந்தவித ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்யவில்லை'' என்கிறார் மனக் குமறலுடன்.

கொரோனா பொது முடக்கம் அறிவிக்கும் முன்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Reuters

பிரதமர் நரேந்திர மோதி, 2020ஆம் ஆண்டு, மார்ச் 24ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கும் முன்பு, எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தனிப்பட்ட முறையில் பொது முடக்கம் அறிவித்து இருந்தது எனத் தெரியுமா?

அரசு புள்ளி விவரங்களின்படி 30 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் பொது முடக்கத்தை அறிவித்திருந்தன. தங்களது மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவல் பாதிப்பைக் கருதி, ஏற்கனவே இந்த மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்து இருந்தன. இவற்றில் சில மாநிலங்கள் 2020, மார்ச் 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்து இருந்தன.

ஏற்கனவே இந்த பொது முடக்கம் அமலில் இருக்கும்போது, ஏன் மீண்டும் தேசிய அளவில் பொது முடக்கம்?

மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய பொது முடக்கத்திற்கான விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்து இருந்தது. அதில், "கொரோனா வைரஸ் தொடர்பான நிவாரணப் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை நாடு முழுக்க செயல்படுத்துவதில் ஒரு நிலைத்தன்மை தேவை" என்று விளக்கம் அளித்து இருந்தது.

அப்படியென்றால், தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவிப்பதற்கான பொறுப்பை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட பின்னர், எந்தளவிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டது?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி, கொரோனா பிரச்னை நேரடியாக எதிர்கொள்ளும் முக்கிய அரசு முகமைகள், அரசு துறைகள், மாநில அரசுகள் ஆகியவற்றை பிபிசி நேரடியாக தொடர்பு கொண்டு ஆய்வு மேற்கொண்டது.

தேசிய பொது முடக்கம் அமலுக்கு வரும் முன்னர் உங்களுக்கு அதுபற்றி தெரியுமா எனக் கேட்டோம் அல்லது அரசு முகமைகள் தங்களை எந்த மாதிரி தயார்படுத்திக் கொண்டனர், மாநிலங்களில் பொது முடக்கத்தை செயல்படுத்துவது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு கையாளுவது" என அரசு துறைகளிடம் பிபிசி வினா எழுப்பியது.

ஆனால், பிபிசி மேற்கொண்ட ஆய்வில் மிகக் குறைந்த அளவிலான ஆதாரங்கள் அல்லது எந்தவிதமான சாட்சியங்களும் கிடைக்கவில்லை.

கொரோனா ஊரடங்கின் ஓராண்டு: இந்தியாவுக்கு பலன் கிடைத்ததா?

2021, மார்ச் 01 ஆம் தேதியன்று, இதுகுறித்த தகவல்களைப் பெறுவதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தை பிபிசி அணுகியது. ஆனால் இதுவரை அத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அல்லது செயலாளர் அமித் கார்வோ இருவரும் நேர்காணலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கையாளும் மத்திய அரசின் பிற துறைகள் குறித்து பார்ப்போம்.

பொது முடக்கம் திணிக்கப்படுவதற்கு முன்பு தங்களுக்கு இதுகுறித்து எந்தவித தகவலும் தெரியவில்லைஅல்லது பொது முடக்கம் குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என பலரும் தெரிவித்தனர்.

'உலகிலேயே மிகவும் கடுமையான பொது முடக்கம்' என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தால் கூறப்பட்ட இந்த முடிவை இந்தியா எவ்வாறு எடுத்தது என்கிற கேள்வி எழுகிறது.

பொது முடக்கத்திற்கு தயார்படுத்திக் கொள்ளாத சூழலில், மக்களுக்கு உதவ வேண்டிய அரசின் முக்கிய துறைகளுக்கே இந்த தகவல் தெரியாத போது, இவர்களால் எப்படி மக்களுக்கு உதவி இருக்க முடியும்?

இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்

சீனாவின் வூகானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சில நாட்களிலேயே, 2020ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் தேதியில் இருந்தே இந்தியாவிலும் வைரஸ் தொற்று காணப்பட்டது.

2020ஆம் ஆண்டில், ஜனவரி 8ஆம் தேதியில் இருந்து மார்ச் 24ஆம் தேதி வரையான, இரண்டரை மாதங்களில், பிரதமர் மோதி 'தனிப்பட்ட முறையில் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டது. அரசு சம்பந்தப்பட்ட பலரோடு கலந்தாலோசித்து வந்த போதும், பொது மக்களுக்கு தெளிவாக ஒரு செய்தி கூறப்பட்டு வந்தது.

'தயாராக இருங்கள் பீதியடைய வேண்டாம்' என பொது மக்களுக்கான செய்தியில் பிரதமர் நரேந்திர மோதி கூறி வந்தார்.

இதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில், பிப்ரவரி 22ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொண்டு இருந்தது. "இந்த சமயத்தில்தான் இந்தியாவின் வலுவான சுகாதார கண்காணிப்பு கட்டமைப்பு, நாட்டிற்குள் கொரோனா வைரஸ் நுழைவதை தடுத்து நிறுத்திவிடும்," என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார். ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

கொரோனா வைரஸால் முகக்கவசம் அணிந்து இருக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

2020ஆம் ஆண்டு, மார்ச் 5ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ''தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் மற்றும் என்-95 மாஸ்க் போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும், தனிமைப்படுத்துவதற்கான போதிய படுக்கைகள் இருப்பதாகவும், எந்தவித அவசர சூழலையும் சமாளிக்க முடியும்" என பேசி இருந்தார்.

2020ஆம் ஆண்டு, மார்ச் 12ஆம் தேதியன்று, கொரோனா வைரஸை "பெருந்தொற்று" என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அப்போதும், இந்தியா நம்பிக்கையுடன் பேசி வந்தது. அப்போது, "சரியான நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். சமூக கண்காணிப்பை வலுப்படுத்தி இருக்கிறோம், தனிமைப்படுத்தலுக்கான வசதிகளை செய்து இருக்கிறோம், தனிமைப்படுத்தல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் உள்ளன, தேர்ந்த பணியாளர்கள் உள்ளனர், விரைந்து செயல்படும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்து இருந்தார்.

ஆனால், 12 நாட்கள் கூட ஆகவில்லை. 600க்கும் குறைவான கொரோனா நோயாளிகள், 9 உயிரிழப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருந்த்து. அதிரடியாக, கடுமையான ஒரு பொது முடக்கம் தேசிய அளவில் திணிக்கப்பட்டது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம், தேசிய பொது முடக்கத்தைத் திட்மிட்டதில் அதன் பங்களிப்பைக் குறித்த தகவல்களை பிபிசி கேட்டது. பெரும்பாலான கோரிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து, முக்கிய துறைகள் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் சில உட்பிரிவுகளை தொடர்பு கொண்டோம்.

முதலில், பொது சுகாதார சேவை இயக்குநரகத்தை தொடர்பு கொண்டோம். இந்த இயக்குநரகம் தான் அனைத்து மருத்துவ மற்றும் பொது சுகாதார விவகாரங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது. மேலும் பல்வேறு சுகாதார சேவைகளை அமல்படுத்தி வருகிறது.

கொரோனா ஊரடங்கின் ஓராண்டு: இந்தியாவுக்கு பலன் கிடைத்ததா?

இந்த துறையிடம் 2020ஆம் ஆண்டு, மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் குறித்து முன்கூட்டியே கலந்தாலோசிக்கவில்லை. பொது முடக்கம் அறிவிக்க இருக்கும் செய்தியை இந்த துறையிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதற்கான விவரங்கள் இல்லை என 'அவசரகால மருத்துவ நிவாரண அமைப்பு' தெரிவிக்கிறது. இந்த துறை பொது சுகாதார சேவை இயக்குநரகத்தின் கீழ் வருகிறது. இந்த துறையின் பணியே சுகாதாரத் துறையில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் பேரிடர் மேலாண்மை தான்.

மீண்டும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வரும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை பிபிசி அணுகியது. நோய் கண்காணிப்பு, நோய் தடுப்பு மற்றும் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவது தான் இம்முகமையின் முக்கிய பணி. இந்த மையமும் தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என கூறியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வருகிறது. இந்தியாவின் மருத்துவம் தொடர்பான அனைத்து செயல்களுக்கும் பதில் அளிக்கும் இடத்தில் முதன்மை வகிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் எதிர்வினையில் இவ்வமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.

பரிசோதனை எண்ணிக்கை தொடர்பான கேள்விகள், கொரோனாவுக்கான சிகிச்சை விதிமுறைகள், வைரஸ் ஆய்வு, தடுப்பூசி கண்டுபிடிப்பில் உதவுவது போன்ற பல விஷயங்களில் இந்த கவுன்சில் வழிநடத்தி இருக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் வரும் தொற்று நோய் மற்றும் எளிதில் பரவும் நோய் துறை தலைவர் மருத்துவர் ஆர்.ஆர். கங்காதரன், கொரோனா தொற்று பரவும் காலத்தில் "யாரிடமும் கலந்தாலோசிக்காமல், பேசாமல் பொது முடக்கம் திணிக்கப்பட்டது என்று கூறுவது தவறு. இதுதொடர்பான கூட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் ஆலோசனைகள் மேற்கொண்டபோது, குறிப்பிட்ட தேர்வு செய்யப்பட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டோம். ஆனால், இது திடீர் என்று எடுக்கப்பட்ட முடிவுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். பொது முடக்கத்தை முன்னரே தெரியப்படுத்தி, பின்னர் அமல்படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவ்வாறு தெரியப்படுத்துதலிலும் ஆபத்து இருக்கிறது" என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பிபிசி கடிதம் எழுதி இருந்தது. அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மாறாக, மத்திய சுகாதார விவகாரத் துறை அமைச்சகத்துக்கு இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்தனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொது முடக்கம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களிடம் கலந்தாலோசித்தனர் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

துவக்கத்தில் இருந்து இந்திய ராணுவ மருத்துவர்களும் கொரோனா பேரிடரை கையாண்டு வந்தனர். இவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். ராணுவ மருத்துவ சேவை படையினர் பெரிய அளவில் எவ்வாறு கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவது என்பதற்கான ஆலோசனைகளை வழங்கி, அதற்கான ஏற்பாட்டையும் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் இந்த முறை நாட்டின் பல்வேறு நகரங்களில் பின்பற்றப்பட்டது.

இவர்களுக்கும் பொது முடக்கம் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. கலந்தாலோசிக்கவும் இல்லை.

கொரோனாவால் நடந்தே ஊருக்குச் செல்லும் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

பிரதமரின் பொது முடக்க அறிவிப்பை ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் இருந்துதான் நாங்களும் தெரிந்து கொண்டோம் என ராணுவ மருத்துவ சேவை படையினர் தெரிவிக்கின்றனர். சுகாதார அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, களத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதை உணர முடிந்தது.

டெல்லியைச் சேர்ந்த சமீத் அஹ்மத் ஃபருகீ ஒரு திட்ட மேலாளர். இவரது பெற்றோருக்கு 2020, ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இவர்கள் இருவரும் முதியவர்கள். சமுதாயத்தில் மற்ற வயதினரை விட இவர்கள் எப்போதும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்.

பிபிசியிடம் சமீத் கூறுகையில், "அரசின் பல்வேறு உதவி எண்களை தொடர்பு கொண்டோம். பெரும்பாலானவை செயலில் இல்லை. அப்படி தொலைபேசி தொடர்பு கிடைத்து பேசினாலும், எதிர் திசையில் இருப்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், காவலர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். எனது பெற்றோரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, பல்வேறு மருத்துவமனைகளின் வாகனம் நிறுத்துமிடத்தில், ஆம்புலன்சில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருந்தது. இது முற்றிலும் அதிர்ச்சிகரமான கால கட்டமாக இருந்தது. தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால், நாட்டின் மற்ற இடங்களில் நிலைமை எவ்வாறு இருந்து இருக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்" என்றார்.

அதிர்ஷ்டவசமாக, சிகிச்சை பெற்று குணமடைந்து இவரது பெற்றோர் இருவரும் வீடு திரும்பினர்.

பொருளாதார ரீதியாக பொதுமுடக்கத்துக்கு கொடுத்த விலை என்ன?

பொது முடக்கத்தினால் பொருளாதார இழப்பை நாடு எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் மோதி மக்களுக்கு ஆற்றிய உரையில், "இந்த சமயத்தில் என்னுடைய முக்கிய முன்னுரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனின் உயிரையும் காப்பாற்றுவது தான்" என்று கூறி இருந்தார்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 24 சதவீதம் குறைந்து இருந்தது. நடப்பாண்டில் தற்போதும் கூட, நாட்டின் வளர்ச்சி -8 சதவீதமாக இருக்கும் என அரசு கணித்துள்ளது. பொது முடக்கத்தை அமல்படுத்தியதால் வேலையிழப்புகள் அதிகரித்தன.

பெரிய அளவிலான லே ஆஃப் காரணத்தினால், வேலை இழப்பு 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 8.7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டதாக சென்டர் ஃபார் இந்தியன் எகானமி (சி.எம்.ஐ.இ) என்கிற தனியார் நிறுவனம் கணித்து இருந்தது. இந்த வேலை இழப்பு ஏப்ரல் மாதம் 23.5 சதவீதமாக அதிகரித்து, ஜூன் மாத இறுதிவரை 20 சதவீதமாகவே தொடர்ந்ததாக இந்த மையம் தெரிவித்து இருந்தது.

நடப்பு 2021 ஆம் ஆண்டில், பிப்ரவரி மாதம் இந்த வேலை இழப்பு என்பது 6.9 சதவீதத்திற்கு திரும்பியுள்ளது.

இதுகுறித்து, இந்திய சென்டர் ஃபார் இந்தியன் எகானமி அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ் எழுத்துபூர்வமாக அளித்து இருந்த தகவலில், "வேலையிழப்பு சதவீதம் பொது முடக்கத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பி இருந்தாலும், இதை கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், வேலை இழப்பு குறைவதற்கு பதிலாக, வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்ற சில முக்கிய தொழிலாளர் சந்தை சார்ந்த குறியீடுகள் மோசமடைந்திருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் குறிப்பிட்டவைகளில் முக்கியமான ஒன்று வேலைவாய்ப்பு விகிதம், இந்தியாவில் வேலை செய்யும் வயதில் உள்ளவர்களில் வேலை கிடைத்து இருப்பவர்களின் விகிதம் குறைந்து வருகிறது. 2016-17-ல் வேலை செய்யும் வயதில் உள்ளவர்களின் விகிதம் 42.7 சதவீதமாக இருந்துள்ளது. இதுவே பின்னர் 41.6, 40.1 என்று குறைந்து 2019-2020ஆம் ஆண்டில் 39.4 சதவீதமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக குறைந்து வந்துள்ளது. தற்போது 2021, பிப்ரவரி மாதத்தில் 37.7 சதவீதமாக குறைந்துள்ளது.

பொது முடக்கத்தினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்து அறிந்து கொள்வதற்கு பொருளாதார விவகாரத் துறை, செலவினங்கள் துறை, வருவாய் துறை, நிதி சேவைகள் துறை ஆகியவற்றின் மூலம் நிதி அமைச்சகத்தை பிபிசி தொடர்பு கொண்டது.

கொரோனா வைரஸ் ஊரடங்கின் ஓராண்டு: இந்தியாவுக்கு பலன் கிடைத்ததா?

தொடக்கத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிதித் துறையில் இருந்து உள் துறைக்கு அனுப்பப்பட்டது. பின்னர், உள் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட துறைகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தது.

பொது முடக்கம் தொடர்பான எந்தவித கலந்துரையாடல்களும் நடந்ததற்கான அறிகுறிகள் தெரிய வரவில்லை என பொருளாதார விவகாரங்கள், செலவினங்கள், வருவாய், நிதி சேவைகள் துறை ஆகியவற்றிடம் இருந்து இறுதியாக பதில் கிடைத்தன.

அவ்வளவு ஏன் தனி அமைப்பான சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட எந்த தகவலும் கொடுக்கவில்லை. பிபிசி அனுப்பிய தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தை உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது ஜிஎஸ்டி கவுன்சில். அவ்வமைப்பு எந்த தகவலையும் கொடுக்கவில்லை.

வைரஸால் பொருளாதார பாதிப்பு இருக்கும் என்பதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோதி, நிதித் துறை அமைச்சரின் கீழ் 'கோவிட் 19 பொருளாதார பணிக்குழு' ஒன்றை அறிவித்தார். இந்தக்குழு பொது முடக்க அறிவிப்புக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மார்ச் 19ஆம் தேதி அமலுக்கு வந்தது.

பொருளாதார சிக்கல்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு இந்த பணிக்குழு அமல்படுத்தியுள்ளது, என ஆலோசனை வழங்கியுள்ளது, என்ன சாதித்துள்ளது என்பது குறித்து அறிய பிபிசி முயற்சித்தது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் படி விண்ணப்பித்து இருந்தும், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் இரண்டில் இருந்தும் இதுதொடர்பான எந்தவொரு தகவல் இன்னும் வழங்கப்படவில்லை.

"பொது முடக்கம் தொடர்பான முடிவில் தங்களுக்கு தொடர்பு இருந்ததற்கான எந்தவித தகவலும் இல்லை" என்று இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு முறை பிபிசிக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

பொது முடக்கம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என செபியும் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற பதிலைத்தான் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொலை தொடர்புத்துறை அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகம் என பல அமைச்சகங்களும் தெரிவித்தன.

பொருளாதார கொள்கை ஆய்வாளர் பிரிய ரஞ்சன் தாஸ் கூறுகையில், "இந்தியாவில் முழுமையான பொது முடக்கம் தேவையில்லாதது. எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் பொது முடக்கம் செய்தது முற்றிலும் தவறானது" என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "சிறந்த முறையில் திட்டமிடுவதற்கு வாய்ப்பு இருந்த்து. முடிவு எடுக்கும் அதிகாரம் பரவலாக இருக்க வேண்டும். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியா பல போர்களை சந்தித்துள்ளது. பல இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது. பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி. இன்று நமது பொருளாதார நிலை, உலகின் வேறு எந்த நாடுகளுடனும், உலகின் எந்த பெரிய பொருளாதாரங்களுடனும் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது" என்றார்.

பொதுமுடக்கத்தால்எத்தனை பேர் உயிரிழந்தார்கள்?

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களால் இயன்ற வழிகளில் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

இதுகுறித்த தகவல்களை பகிருமாறு 2020, செப்டம்பர் 14 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகத்தின் முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர் என்றும் இவர்களில் 63.07 லட்சம் பேரை, மத்திய அரசு, ரயில்கள் மூலம் அனுப்பி வைத்தது என்றும் அமைச்சகம் பதில் அளித்து இருந்தது.

தங்களது சொந்த ஊருக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பும்போது, இவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், எத்தனை பேர் தங்களின் வேலை வாய்ப்பை இழந்தனர் என்பது குறித்தும் மதிப்பீடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்திகளை பிபிசி ஆய்வு செய்ததில், 300க்கும் அதிகமானவர்கள் சோர்வு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட அன்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓர் உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில், Transfer funds என்றழைக்கப்படும் நிதியை நேரடியாக கட்டட தொழிலாளர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.

அமைச்சகம் வேறு என்ன செய்து இருந்தது? பொது முடக்கத்தை முன்னிட்டு வேறு ஏதாவது ஆலோசனையில் ஈடுபட்டு இருந்ததா? பொது முடக்கம் வரும் என முன் கூட்டியே கணிக்கவில்லையா? போதுமான மற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லையா?

முக்கிய செயலகத்தில் 45 துறைகளிடம், பிபிசி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து இருந்தது. இவர்களில் பதில் அளித்தவர்களில் ஒருவரிடம் கூட பொது முடக்கம் குறித்த எந்த தகவலும் இல்லை.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீட்புக் குழுவின் தன்னார்வலர் ப்ரீத்தி சிங் கூறுகையில், "தேர்வு என்றால் கூட நாம் அதற்கு தயாராக வேண்டும். ஆனால், பொது முடக்கம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்களிடம் பணம் இல்லை. வருவாய் இழந்தனர். என்னை பணத்திற்காக தொடர்பு கொண்ட ஒரு தொழிலாளி, தன்னுடைய சுயமரியாதையை இழந்துவிட்டதாக கண்ணீர் விட்டு கதறினார். சோதனைப் எலிகளைப் போல எங்களை நாங்கள் உணர்ந்தோம். தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பத்து நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால், இந்த உயிரிழப்புகளை தவிர்த்து இருக்கலாம்" என்கிறார்.

இந்தக் குழு தான் 40,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல பணம் கொடுத்து உதவி இருந்தது.

மற்றவர்கள் என்ன கூறுகின்றனர்?

பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, அது குறித்து, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி அலுவலகங்களுக்கு தெரியுமா அல்லது இந்த முடக்கத்தால் ஏற்படும் தாக்கங்கலைக் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்களா அல்லது பிரதமர் அலுவலகத்துடன் வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொண்டார்களா என்பதை அறிந்து கொள்ள பிபிசி தொடர்பு கொண்டது.

இதுபற்றிய எந்த தகவலும் ஜனாதிபதி அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட பிரிவில் இல்லை என்று ஜனாதிபதிக்கான செயலகம் தெரிவித்திருக்கிறது.

'பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 2020, மார்ச் 24 அன்று சுகாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவு மூலம் தெரிந்து கொண்டோம். இதுதொடர்பாக பிரதமரின் அலுவலகத்துடன் வேறு எந்த தகவல் தொடர்பும் இல்லை' என துணை ஜனாதிபதி அலுவலகத்தின் பொது தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் முப்படைகளுக்குமான தலைமை தளபதி பற்றிய அறிவிப்பை பிரதமர் மோதி வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் ராணுவ விவகார துறைக்கு இந்த முப்படைத் தளபதி தலைமை பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 'கொரோனா தடுப்பில் ஈடுபட்டு இருக்கும் வீரர்களின் திறனை அங்கீகரிக்கிறோம். தொடர்ந்து அவர்களுக்கு உதவுவோம்' என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் 2020, மே 1ஆம் தேதி மற்ற படைத் தளபதிகள் உடன் இருக்கும்போது செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

பொது முடக்கம் குறித்த தகவல் எதுவும் இவரது அலுவலகத்துக்கு தெரிந்து இருக்குமா என்பது குறித்து பிபின் ராவத்தின் அலுவலகத்திடம் பிபிசி கேட்டது. அதற்கு, எந்த தகவலும் எங்களிடம் இல்லை என பதில் கிடைத்தது.

பொது முடக்கம் அறிவிக்கும் முன்பு இதுகுறித்து உயர் கல்வித் துறையிடம் பிரதமர் அலுவலகம் ஆலோசித்ததா என்பது குறித்தும், மற்ற தொடர்புடைய கேள்விகள் குறித்தும் தங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: