தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா வைரஸ் - மாநிலம் முழுவதும் கண்காணிப்பு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

(இன்றைய நாளிதழ்கள், இணையதளங்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 800 பேரை தாண்டி இருக்கிறது என்கிறது தினத்தந்தி செய்தி. சுமார் 65 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் ஏற்படும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு சற்று மேலாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 1 சதவீதத்திற்கு மேலாகவும் வைரஸ் பரவல் பதிவாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுஇடங்களில் செல்பவர்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்களை பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும். ஏதாவது நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்கிறது அந்த நாளிதழ் செய்தி.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணிடம் பாலுறவை லஞ்சமாக கேட்ட காவல் அதிகாரி

Rajasthan police

பட மூலாதாரம், Rajasthan police

ராஜஸ்தானில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணிடம் பாலுறவு கொள்வதையே லஞ்சமாக கேட்ட காவல் உதவி ஆணையர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக புகார் கொடுத்த இளம்பெண்ணிடம் தொடக்கத்தில் பணத்தை லஞ்சமாக கேட்ட காவல் உதவி ஆணையர் கைலாஷ் போரா, பின்பு அப்பெண் தன்னிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதையடுத்து அந்த பெண் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார்.

பணத்தை லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்கள் கைது செய்யும் அதே முறை இந்த வழக்கிலும் கைலாஷ் போராவை கைது செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது என்று ஜெய்ப்பூர் ஊரக பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நரோத்தம் வர்மா தெரிவித்துள்ளார்.

ரசாயனம் தடவப்பட்ட பணத்தை தொட்ட அதிகாரிகளின் கைகளை சோடியம் கார்பனேட் கலந்த நீரில் வைக்கும்போது நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.

கைலாஷ் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயல்வார் என்று முன்னரே கணித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அப்பெண்ணின் ஆடையில் அந்த ரசாயனத்தை தூவினர்.

எதிர்பார்த்தது போலவே ஞாயிறன்று அந்த பெண்ணை தனது அலுவலகத்துக்கு வரவழைத்த கைலாஷ் போரா அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

அப்பெண்ணை அவர் தொட்டவுடன் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ரசாயனம் மூலம், இந்த சிக்கலான வழக்கில் கைலாஷ் போரா செய்த தவறுக்கான ஆதாரத்தையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பதிவு செய்துள்ளனர் என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட ரூ.22 கோடியே 53 லட்சம்

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் தேர்தல் தொடர்பான சோதனையில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.22 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

கடந்த பிப்ரவரி 26 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அனைத்து தொகுதிகளிலும் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தொடங்கிவிட்டனர். அந்த வகையில், கடந்த மார்ச் 14-ம் தேதி வரை ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை என, ரூ.111 கோடியே 20 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலானவற்றை கைப்பற்றியிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :