கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் அறிவிக்கும் முன்பு அமைச்சர்களிடம் ஆலோசித்தாரா நரேந்திர மோதி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜூகல் புரோஹித் & அர்ஜுன் பார்மர்
- பதவி, புதுடெல்லி
உங்களுக்கு இந்த சொற்கள் நினைவு இருக்கின்றனவா?
"நாடு முழுவதும் பொது முடக்கம் அமலாகிறது. வீட்டில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு முழு தடை விதிக்கப்பட இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்வதை அடுத்த 21 நாட்களுக்கு நீங்கள் மறந்து விட வேண்டும்."
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், 2020 மார்ச் 24 இரவு 8 மணிக்கு நாடு தழுவிய பொது முடக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி திடீரென அறிவித்தார்.
அதுவரையில், நாட்டில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்து இருந்தனர்.
கூடுதலாக மேலும் ஒரு தகவல்
அப்போதும் தனது உரையில், வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில், தனது அரசு எவ்வாறு மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பதை பிரதமர் மோதி தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்.
உண்மையில், இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இந்திய அரசு கொரோனா வைரஸை கண்காணிக்கத் துவங்கி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும், அனைத்து தரப்பினருடன் இணைத்து பணியாற்றத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும், தனிப்பட்ட முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோதி மேற்கொண்டு, அன்றாடம் கண்காணித்து வந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்து வந்தது.
ஆனால், பிபிசி மேற்கொண்ட விரிவான ஆய்வில், கடுமையான பொது முடக்கம் அறிவிக்கும்வரை எந்தவித ஆலோசனகளையும் மோதி அரசு மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கும் முக்கிய மத்திய அரசு முகமைகள், தொடர்புடைய அரசுத் துறைகள், மாநில அரசுகளை பிபிசி அணுகியது. தேசிய அளவிலான பொது முடக்கம் அமலுக்கு வருவதற்கு முன்பு அது குறித்து அவர்களுக்குத் தெரியுமா அல்லது அரசுத் துறைகளை தயார்படுத்தியதில் தங்களது பங்களிப்பு என்ன, பொது முடக்கத்தை செயல்படுத்தும் பணியில் மாநிலங்கள் ஈடுபட்டு இருந்தனவா அல்லது பாதகமான சூழல் ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனவா என்பது குறித்து பிபிசி கேட்டது.

பட மூலாதாரம், Reuters
பொது முடக்கம் குறித்த தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்ற கோணத்தில் 2021, மார்ச் 1 அன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தையும் அணுகினோம். ஆனால், இதுவரை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அல்லது அந்த துறையின் செயலாளர் அமித் காரே இருவரும் பிபிசி நேர்காணலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை.
பிபிசி தொடர்புகொண்டவர்களிடமோ, பேசியவர்களிடமோ, உலகின் மிகப் பெரிய பொது முடக்கத்தைத் திட்டமிட தாங்கள் உதவியதாக கூறுவதற்கோ அல்லது தங்களிடம் கலந்தாலோசித்தார்கள் என்று கூறுவதற்கோ எந்த தகவலும் இல்லை.
பிறகு, எவ்வாறு இந்தியா பொது முடக்கம் என்ற முடிவுக்கு வந்தது? எவ்வாறு அரசு இயந்திரத்துக்கோ, அதில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளுக்கோ பொது முடக்க முடிவு குறித்து சுத்தமாகத் தெரியவில்லை?
முதலில் - சில சூழல்கள்
மார்ச் 24 ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இரண்டரை மாதங்களுக்கு முன்பு 2020, ஜனவரி மாத மத்தியில் இருந்தே கொரோனா வைரஸ் பரவலை இந்தியா கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து வந்தது.
2020, பிப்ரவரி 22 ஆம் தேதியன்று, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வரவேற்க இந்தியா பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், "இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார கண்காணிப்பு கட்டமைப்பு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் என்று பிரகடனம் செய்து இருந்தார்.
நாட்டில் சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் 2020, மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போது "தனி நபர் பாதுகாப்பு கவச உடைகள் பெரிய அளவில் இருப்பு உள்ளன. மாநில அரசுகளும் மத்திய அரசும் என்95 மாஸ்க் இருப்பு குறித்து கண்காணிப்பு மேற்கொள்கின்றன. எந்த அவசர சூழலையும் சமாளிக்க நாடு முழுவதும் தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன" என்று தெரிவித்து இருந்தார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான மூன்று வாரங்களுக்குள் தேசிய அளவில் கடுமையான பொது முடக்கம் அமலுக்கு வந்தது.
பொது முடக்கத்தை பிரதமர் மோதி அறிவிக்கும் முன்பே 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே முடக்கம் அறிவித்து இருந்தன. இதை மத்திய அரசு நியாயப்படுத்தி பேசியது.
அந்தந்த மாநிலங்களில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பொருத்து மாநிலங்கள் தாங்களாகவே பொது முடக்கத்தை அறிவித்து இருந்தன. பல மாநிலங்கள் பொது முடக்கத்தை 2020, மார்ச் 31ஆம் தேதி வரை அறிவித்து இருந்தன. ஆனால், மாநிலங்கள் அறிவித்ததைப் போல இல்லாமல், பிரதமரின் அறிவிப்பு தொடர்ந்து மூன்று வாரங்களுக்கான முடக்கமாக இருந்தது.
உலக அளவில்...
இந்தியா பொது முடக்கத்தை அறிவித்து இருந்த கால கட்டத்தில் சில ஐரோப்பிய நாடுகள் பொது முடக்கத்தை அறிவிக்காமல், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தன.
இத்தாலி (இந்த கால கட்டத்தில் இத்தாலியில் 60,000பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பும், 6,000 உயிரிழப்புகளும் இருந்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது), ஸ்பெயின் (50,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, 3,000 பேர் உயிரிழந்து இருந்தனர்) மற்றும் பிரான்ஸ் (இங்கு 20,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 700 பேர் உயிரிழந்து இருந்தனர்) ஆகிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் இருந்தன.
ஆனால், சீனா 80,000 கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் 3,000 உயிரிழப்புகளுடன் ஹூபெய் மாகாணத்தில் மட்டும் பொது முடக்கம் அறிவித்து இருந்தது. ஆனால், நாடு முழுவதும் பொது முடக்கம் இல்லை.
எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது?
பிரதமரின் மார்ச் 24 அன்றைய அறிவிப்பு பொது மக்களுக்கான அறிவிப்பாக இருந்த நிலையில், அந்த அறிவிப்பு அரசு ஆவணமாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் 1-29/2020-பிபி (பிடிII) என்று பதிவாகி இருந்தது.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக பிரதமர் மோதி இருக்கிறார் என்பதுதான்.
மத்திய உள்துறை செயலகத்தின் முகவரியிட்டு, இந்த ஆவணத்தை தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை மற்றும் திட்ட பிரிவு வெளியிட்டு இருந்தது. அதில், "நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும், பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதிலும் ஒரு நிலைத்தன்மை தேவை.
நாட்டில் கோவிட் 19 பரவலை தடுப்பதற்கு, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். இதற்கான நடவடிக்கைகளை அமைச்சகங்கள்/இந்திய அரசின் கீழ் வரும் துறைகள், மாநில அரசுகள், மாநில அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிடுகிறது" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. .
பொது முடக்கம் அமலில் இருக்கும்போது, அதே நாளில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு அங்கமான தேசிய செயல் கமிட்டி தலைவராக இருந்த உள்துறை செயலாளரும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பிபிசி தொடர்பு கொண்டது.
இந்த பொது முடக்க உத்தரவை பிறப்பிக்கும் முன்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கலந்தாலோசித்த அரசு அதிகாரிகள்/ நிபுணர்கள்/ தனிப்பட்ட நபர்கள்/ அரசு நிறுவனங்கள்/ தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் குறித்த பட்டியலை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிபிசி விண்ணப்பம் அளித்து இருந்தது.
2020, மார்ச் 24ஆம் தேதி பொது முடக்க அறிவிப்புக்கு முன்பு, கொரோனா வைரஸ் பேரிடர் குறித்து, பிரதமர் தலைமையில் எவ்வளவு கூட்டங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூட்டி இருந்தது என்பது குறித்தும் பிபிசி கேட்டு இருந்தது.
அது மாதிரி எந்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பிரதமர் பங்கேற்ற கூட்டங்களில் பொது முடக்கம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பதில் அளித்தது.

பிரதமரின் அலுலவகம் என்ன கூறியது?
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே பிரதமர் மோதி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட முறையில் அன்றாடம் விசாரித்து, கண்காணித்து வருகிறார் என்று கூறப்பட்டு வந்ததை மறந்து விடவேண்டாம், ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் தேசிய கண்காணிப்பை மேற்கொண்டாரா அவர்?
கொரோனா வைரஸ் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்கள், பிரதமர் மோதி கலந்து கொண்டதாக கூறப்படும் விவரங்கள் குறித்த தகவலை பிரதமர் அலுவலகத்திடம் பெறுவதற்கு பிபிசி முயற்சி மேற்கொண்டது.
பொது முடக்க அறிவிப்புக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்கள் பட்டியல், முதல்வர்கள், ஆலோசகர்களின் பட்டியலை பிரதமரின் அலுவலகத்திடம் பிபிசி கோரியது.

இரண்டு முறை கேட்டும் பிரதமர் அலுவலகம் இதற்கான பதிலை அளிக்கவில்லை.
ஒரு விண்ணப்பம் தெளிவற்ற நிலையில் இருக்கிறது என்று நிராகரித்து விட்டனர்.
எந்த வகையில் தகவல்கள் கேட்கப்படுகிறதோ அந்த வகையில் கொடுக்கலாம். உதாரணமாக அந்த வகையில் கொடுப்பதற்கு அதிகபட்ச நேரம் எடுக்காத வகையிலும், அந்த ஆவணங்களுக்கு எந்தவித தீங்கு ஏற்படாத வரையிலும் கொடுக்கலாம் என்று தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 7 (9)ஐ குறிப்பிட்டு இரண்டாவது விண்ணப்பத்தையும் நிராகரித்து விட்டனர்.
இதுகுறித்து அரசுத் துறையில் பணியாற்றி வரும் அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில், "எந்த வகையில் தகவல்களை கேட்கின்றனரோ, அந்த வகையில் கொடுப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் பட்சத்தில் வேறு வகையில் தகவல்களை கொடுக்கலாம். ஆனால், பிரிவு 7 (9) பயன்படுத்தி தகவல்களை கொடுக்க மறுப்பது, சட்டத்திற்கு விரோதமானது" என்கிறார்.
2020, மார்ச் 20 ஆம் தேதியன்று பொது முடக்க அறிவிப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்பு மாநில முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். ஆனால், பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருந்த பத்திரிக்கை செய்தியில் எந்த இடத்திலும் பொது முடக்கம் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை.
ஆதலால், தேசியப் பொது முடக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா இல்லையா என்ற தகவல் கோரப்பட்டது.
தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியது. பின்னர் இது சுகாதார விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் பிபிசிக்கு, செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த அதே செய்திக்குறிப்புதான் கிடைத்தது.

உள்துறை அமைச்சகம் என்ன செய்தது?
இரண்டு அம்சங்கள் இந்த செய்திக்கு சிக்கல்களை ஏற்படுத்தின.
முதலில், உள்துறை அமைச்சகத்தின் கீழ், பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
இரண்டாவது, பிபிசியின் தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பத்தை உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்து, அதன் மூலம் பொது முடக்க முடிவில் பல்வேறு முக்கிய துறைகள் மற்றும் அமைச்சகங்களின் பங்களிப்பை அறிய முயற்சித்தது. இதில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவக் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவையும் அடங்கும்.

ஆனால், பிபிசியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
காரணம்?
அமைச்சகம் அளித்து இருந்த பதிலில், "உபாயம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விண்ணப்பமாக உள்ளது உள்ளது. மேலும், இந்த தகவல்கள் நம்பிக்கை சார்ந்ததாக உள்ளதால், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005, உட்பிரிவு 8 (1) (a) மற்றும் (e) ஆகியவற்றின் கீழ் தகவல்களை தர இயலாது என்று நிராகரித்து விட்டது.

இதுபோன்ற நிலை பல்வேறு தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களுக்கு ஏற்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சில சம்பவங்களில் உள்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பத்தை அமைச்சகத்துக்கு அனுப்பி, என்ன தகவல் கேட்கப்படுகிறது என்பது குறித்து பதில் அளிக்குமாறு கூறியது.

மாநிலங்களுக்கு தெரியுமா?
தலைநகர் டெல்லியில் இருக்கும் துணை நிலை ஆளுநர், முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் பொது முடக்கத்திற்கு முன்பு மத்திய அரசு கலந்தாலோசித்தது என்று கூறுவதற்கு எந்த தகவலும் இல்லை.
இதேபோல், அசாம் முதல்வர் அலுவலகம் மற்றும் தெலுங்கானா அரசு அளித்து இருக்கும் பதிலில், பொது முடக்கம் குறித்து தங்களிடம் முன்கூட்டியே கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் ஆளுநர் அலுவலகங்களும் தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்ற பதிலை அளித்துள்ளன.

உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு இது தொடர்பான தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தை அளித்தபோது, இது தொடர்பாக மத்திய அரசிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று பிபிசிக்கு பதில் வந்தது.
வடகிழக்கு மாநில வளர்ச்சி துறை அமைச்சகம் வடகிழக்கில் இருக்கும் ஏழு மாநிலங்களில் கொரோனா பேரிடரை எவ்வாறு கையாள்வது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், இந்த துறையிடமும் பொது முடக்கம் குறித்து விவாதிக்கவில்லை என்ற தெரிவித்தனர்.

அமைச்சரவையிலாவது விவாதிக்கப்பட்டதா?
2020, பிப்ரவரி 3 ஆம் தேதி அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை பிரதமர் மோதியின் அறிவுறுத்தலின் பேரில் அறிவித்து இருந்தனர். இவர்களது பணியே நாவல் கொரோனா வைரஸ் மேலாண்மையை ஆய்வு செய்வதுதான்.
இந்தக் குழுவை சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வழி நடத்தினார். இதில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், கப்பல் துறை அமைச்சர், உள்துறை அமைச்சகம் ஆகியவை இடம் பெற்று இருந்தன.
பிப்ரவரி 3ஆம் தேதிக்கும், பொது முடக்கம் அமல் செய்யப்பட்டதற்கும் இடையே இந்தக் குழு பல முறை சந்தித்தது முக்கிய முடிவுகளை எடுத்தது. இந்தியாவுக்கான சர்வதேச பயணிகள் விமானங்களை ரத்து செய்தது போன்ற முக்கிய முடிவுகளை இந்தக் குழுதான் எடுத்தது.
பொது முடக்கத்தை அமல்படுத்த அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தததா அல்லது திட்டமிட்டதா என்பது குறித்து தெரிந்து கொள்ள அமைச்சரவை செயலகத்தை பிபிசி தொடர்பு கொண்டது.
ஏன் அமைச்சரவை செயலகத்தை கேட்டோம்?
ஏனென்றால் இந்த செயலகம் தான் அமைச்சரவைக் குழுக்கள் மற்றும் கமிட்டிகளுக்கு உதவி செய்யும். பல அமைச்சகங்கள் இணைந்து எடுக்கும் முடிவுகளுக்கும், ஒத்துழைப்புக்கும் உதவி செய்து அரசு சுமூகமான முடிவுகளை எடுக்க இந்த செயலகம் உதவும். நாட்டில் பெரிய அளவில் மேலாண்மை சிக்கல் ஏற்படும் போது, பல்வேறு அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து முடிவுகளை மேற்கொள்ள உதவும்.
இந்த செயலகம் பிபிசி விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
ஒரு நாளுக்குள் இதற்கான பதிலை உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகம் அளித்து விட்டது. என்னவென்றால், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன் கீழ் 8 (1) ( a) மற்றும் (e) ஆகிய பிரிவுகளின் கீழ் கேட்கப்படும் தகவலை வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருந்தது.
இதே தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அமைச்சகம் பதில் அளிக்கவில்லை. பதில் அளித்த பின்னர் தகவலை பகிருகிறோம்.
அமைச்சக செயலகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலில், "பொது முடக்கத்திற்கு சில தினங்கள் முன்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பேரிடர் அல்லது பொது முடக்கம் குறித்து கலந்தாலோசித்தார்களா என்பது குறித்து தகவல் இல்லை".

பொது முடக்கம் வரும் என்பது எங்களுக்கு தெரியும்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமாரிடம் பிபிசி நேர்காணல் செய்தது. அமைச்சர் அந்தஸ்திலான பொறுப்பு வகிக்கும் ராஜீவ் குமார் கூறுகையில், "பொது முடக்கம் குறித்து திட்டமிடவில்லையென என நான் கருதவில்லை. பன்முகத்தன்மை மற்றும் பாதிப்புகளை கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பொது முடக்கம் தேவைப்பட்டது. நாங்கள் இதுகுறித்து ஆலோசித்து அதன் பின்னர் அமல்படுத்தினோம். யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. பிரதமர் ஒவ்வொருவரிடமும் இதுகுறித்துப் பேசினார்" என்றார்.
ஜனநாயகத்திற்கு எதிரானது
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகம் இரண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த பதில் குறித்து அஞ்சலி கூறுகையில், "தேசிய பேரிடர் மேலாண்மை என்று வரும்போது இதன் அதிகாரம் பரவலானது. ஜனவரி தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால், இந்தியாவில் மார்ச் இறுதி வாரத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இது வெள்ளமோ அல்லது நிலநடுக்கமோ அல்ல ஒரே நாள் இரவில் ஏற்படுவதற்கு. பிரதமர் மோதி பொது முடக்கம் பற்றி அறிவிக்கும் முன்பாக, அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, தயாரிப்புகளை மேற்கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பானது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரப்பட்டது. ஆனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதில் என்ன ரகசியம் இருக்கிறது, நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் தங்களிடமே வைத்துக் கொள்வதற்கு? இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்றார்.
தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மாநிலங்கள் கூறுவது பற்றி அஞ்சலியிடம் கேட்டபோது, "இவ்வாறு மாநிலங்கள் கூறுவது மத்திய அரசின் பொறுப்புணர்வுக்கு உகந்ததாக இருக்காது. மாநிலங்கள் எளிதில் கையை விரித்து, தங்களது பொறுப்புக்களை சுருக்கிக்கொண்டு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை
- பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300 சதவீதம் அதிகரிப்பு
- "மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ உடனடி அமல்" - அமித் ஷாவின் அதிரடி வாக்குறுதி
- "1996" தேர்தல்: 4ஆவது முறையாக முதல்வரான கருணாநிதி - சுவாரஸ்ய வரலாறு
- இந்தியா-பாகிஸ்தான் சமரசத்துக்கு செளதி அதிக அக்கறை காட்டுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












