கோயம்புத்தூரில் வானதி சீனிவாசனுக்காக பாஜகவின் ஸ்மிரிதி இரானி பிரசாரம்; கமல் ஹாசனுக்கு விடுத்த சவால் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

kamal haasan vs vanathi bjp coimbatore

பட மூலாதாரம், Smriti Z Irani twitter page

(இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சவால் விடுத்துள்ளார் என இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நேற்று கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பின்னர், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் கலையரங்கில் நடந்த ஹோலி விழாவில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்குமாறு அங்கிருந்த குஜராத், ராஜஸ்தான் மற்றும் இதர வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் ஸ்மிரிதி இரானி பரப்புரை செய்தார்.

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை - டி.ராஜேந்தர்

ராஜேந்தர்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிக்குமே அவரவருக்கு இருக்கிறது பலம். இது தவிர சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பக்கபலம். அது தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புதுச்சிகிச்சை என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை அதனால் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். பத்தும்பத்தாததற்கு இது கொரோனா காலம்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அணிய வேண்டும் முகமூடி அதேபோல பக்குவப்பட்டவனாக இருக்க வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி... இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை அரவணைக்கவும் இல்லை. நாங்கள் நடு நிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்' என்றார் .ராஜேந்தர்.

100 சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்

நரேந்திர மோதி அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் 100 செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி முதலிடத்திலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நாட்டா ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் உள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி ஐந்தாம் இடம் பெற்றுள்ளார்.

முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே பெண்ணாக ஒன்பதாம் இடம் பெற்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 28ஆம் இடத்திலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 54ஆம் இடத்திலும் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: