தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாறு: 2001ஆம் ஆண்டு தேர்தல் - வீழ்ச்சியிலிருந்து ஜெயலலிதா மீண்டது எப்படி?

ஜெயலலிதா

பட மூலாதாரம், Sharad Saxena/The The India Today Group via Getty

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

1996லிருந்து ஐந்தாண்டுகள் பெரிய புகார்கள் இல்லாமல் ஆட்சி நடத்திய தி.மு.க, 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. ஊழல் புகார்கள், கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்த ஜெயலலிதா எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவந்து ஆட்சியைப் பிடித்தார். இது நடந்தது எப்படி?

1996ல் பெரும் பலத்துடன் தி.மு.க. அரசு பதவியேற்றிருந்த நிலையில், ஜெயலலிதாவும் அ.தி.மு.கவும் ஊழல் குற்றச்சாட்டுகளால் முடங்கிப்போயிருந்தன. ஜெயலலிதா மீதும் அவரது தோழி சசிகலா மீதும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1996 ஜூன் 20ஆம் தேதி அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் சசிகலா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அதே ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதியன்று ஜெயலலிதா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 28 நாட்கள் சிறையில் இருந்த பிறகு ஜனவரி 3ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அடுத்ததாக, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதில் கவனம் செலுத்திய தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளோடு சேர்த்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தியது. தமிழ்நாட்டின் தலைநகரான மெட்ராஸின் பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஒற்றைச் சாளர முறை, கிராமங்களில் கான்க்ரீட் சாலைகள், அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமங்களை உருவாக்க அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்வியில் 15 சதவீத இட ஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், விவசாயிகள் நேரடியாகப் பொருட்களை விற்க ஏதுவாக உழவர் சந்தைகள் என விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தது தி.மு.க. அரசு.

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திவரும் வாய்ப்புகளை மனதில் கொண்டு, தகவல்தொழில்நுட்பத்திற்கென இந்தியாவிலேயே முதல் முறையாக கொள்கையை வடிவமைத்ததோடு, 'டைடல் பார்க்' என்ற பெயரில் மிகப் பெரிய வளாகத்தையும் கட்டியது. தனது ஆட்சியின் உச்சகட்டமாக, கன்னியாகுமரியில் 133 அடி உயரத்திற்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 2000வது ஆண்டின் முதல் நாளில் சிலை திறக்கப்பட்டது.

1995ல் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில்

பட மூலாதாரம், ARUNKUMAR

படக்குறிப்பு, 1995ல் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில்

ஆனால், தேசிய அரசியல் களத்தில் 1996 முதல் 2001வரையிலான ஆண்டுகள் பெரும் சலசலப்புகள் நிறைந்த ஆண்டுகளாகவே இருந்தன. 1996ஆம் ஆண்டு நடந்த இந்திய பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பதவியேற்ற அடல் பிஹாரி வாஜ்பாயியின் அரசு உடனடியாகக் கவிழ்ந்தது. இதையடுத்து ஐக்கிய முன்னணியின் சார்பில் எச்.டி. தேவேகவுடா புதிய பிரதமராகப் பதவியேற்றார். தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த அரசில் பங்கேற்றன. காங்கிரஸ் வெளியில் ஆதரவளித்தது.

சீத்தாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ் கட்சி திடீரென அந்த அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், ஐ.கே. குஜரால் புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், ஐ.கே. குஜராலுக்குப் பதிலாக ஜி.கே. மூப்பனார் பிரதமராக தி.மு.க. ஆதரவளிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இரு கட்சிகளின் தொண்டர்களும் மாறி மாறி கொடும்பாவிகளைக் கொளுத்தினர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையின் சில பகுதிகள் இந்தியா டுடே இதழில் வெளியாயின. இதில் தி.மு.க. மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சரவையிலிருந்து அக்கட்சியை வெளியேற்ற வலியுறுத்தியது காங்கிரஸ். இதற்கு தி.மு.கவும் ஐ.கே. குஜராலும் மறுக்க, ஆட்சி கவிழ்ந்தது.

1998ல் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை சந்தித்தது இந்தியா. அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க. இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கும் வந்தது. ஆனால், தன்னுடைய பல கோரிக்கைகளை வாஜ்பாயி தலைமையிலான அரசு ஏற்காத நிலையில், அந்த அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதற்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த தி.மு.க., தேர்தலுக்குப் பிறகு அந்த அரசிலும் இடம்பெற்று வலுவான சக்தியானது.

2001 தேர்தல் நெருங்கியபோது தி.மு.க. தரப்பு இப்படியாக பெரும் பலத்தோடு காட்சியளித்தது. மாறாக, அ.தி.மு.க. தரப்போ ஊழல் குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கைகள், மத்திய அரசுக்கு தந்த ஆதரவை திடீரெனத் திரும்பப் பெற்றதால் அரசியல் களத்தில் ஏற்பட்ட பின்னடைவு என பலவீனமாகவே காட்சியளித்தது.

இந்தத் தருணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எடுத்த முடிவு இந்தக் கணக்குகளை எல்லாம் மாற்றியமைத்தது. 2001ஆம் ஆண்டுத் தேர்தலை ஜெயலலிதாவுடன் இணைந்து சந்திக்க விரும்பிய ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார். தே.ஜ.கூ. அரசில் பா.ம.க. சார்பில் இடம்பெற்றிருந்த என்.டி. சண்முகம், பொன்னுச்சாமி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்தால், சட்டமன்றத் தேர்தலில் போதுமான தொகுதிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்ததே இதற்குக் காரணம்.

இதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய விரும்பியது. ஆனால், ஜெயலலிதாவிடமிருந்து சாதகமான பதில் ஏதும் வரவில்லை. மாறாக, மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மீது ஆர்வம் காட்டியது அ.தி.மு.க.

ஊழல் புகார்களால் சூழப்பட்ட ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதை எதிர்த்து உருவான கட்சிதான் த.மா.கா. ஆனால், எந்தக் கட்சியுடனான கூட்டணியை எதிர்த்து, கட்சி உருவானதோ அதே கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

ராமதாஸ்

பட மூலாதாரம், DR. S. RAMADOSS /FaceBook

ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க பக்கம் திரும்பிவிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸை தன் பக்கம் வைத்துக்கொள்ள விரும்பியது தி.மு.க. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், த.மா.காவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர். இருந்தபோதும் மூப்பனார் பிடிகொடுக்கவில்லை.

திடீரென ஒரு நாள், 2001ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ஜெயலலிதாவைச் சந்தித்தார் மூப்பனார். உடனடியாக, அ.தி.மு.க. - த.மா.கா. இடையில் கூட்டணி உருவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்சியில் இருந்த எல்லோரும் இதனை ஏற்கவில்லை. த.மா.காவின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கூட்டணியைக் கடுமையாக எதிர்த்தனர்.

ஆகவே, த.மா.காவை விட்டு வெளியேறிய ப. சிதம்பரம் த.மா.கா. ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் கட்சிக்கு ஏ.எஸ். பொன்னம்மாள், ப. ரங்கநாதன் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். இந்த அணி, தி.மு.கவில் இணைந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள் கூட்டணி சேர்ந்துவிட்ட நிலையில், தி.மு.கவின் கூட்டணியில் ம.தி.மு.கவைத் தவிர குறிப்பிடத்தக்க கட்சிகள் ஏதும் இல்லை. பா.ஜ.க. அந்தக் கூட்டணியில் இருந்தாலும், குறிப்பிடத்தக்க செல்வாக்கு அக்கட்சி தமிழகத்தில் இல்லை.

இதையடுத்து சின்னச் சின்ன கட்சிகளைத் தம் பக்கம் ஈர்க்கத் துவங்கியது தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை இந்தக் கூட்டணியில் இணைந்தன. மேலும், அ.தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் யாதவ சமூகத்தை முன்னிறுத்தி மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். அதேபோல, முதலியார் சமூகத்தை முன்வைத்து ஏ.சி. சண்முகம் புதிய நீதிக் கட்சி என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். முத்தரையர்களை முன்வைத்து முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தமிழர் பூமி என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். இந்தக் கட்சிகள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் இணைந்தன.

கருணாநிதி

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

இந்தக் காரணங்களால் தி.மு.க. கூட்டணி ஜாதிக் கட்சிகளின் கூட்டணி என்ற விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் தோன்றின. ம.தி.மு.கவுக்கு தி.மு.க. கூட்டணியில் 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்தக் கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில், தங்களது கட்சிக்கு உரிய மரியாதையை தி.மு.க. தரவில்லையென கருதியது ம.தி.மு.க. தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாத பா.ஜ.கவுக்கு 23 இடங்களைத் தந்திருக்கும் நிலையில், மாநிலத்தில் பரவலாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தங்களுக்கு 21 இடங்களை மட்டுமே தந்திருப்பது சரியல்ல என்றது. தங்களுக்கும் 23 இடங்களைத் தர வேண்டும் என்றது. முடிவில், பா.ஜ.க. தன்னிடமிருந்த இரண்டு இடங்களை குறைத்துக்கொண்டது.

இதற்குப் பிறகு, ம.தி.மு.கவுக்கான 21 இடங்களை அடையாளம் காண்பதில் பிரச்னை ஏற்பட்டது. ம.தி.மு.கவின் சார்பில் 43 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து அதில் தங்களுக்கான 21 தொகுதிகளைத் தரும்படி கேட்டார். ஆனால் அந்த 43 தொகுதிகளில் பல இடங்கள் ஏற்கனவே வேறு தோழமைக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் பட்டியலில் இருந்து 18 இடங்களையும் வேறு மூன்று இடங்களையும் வழங்க முன்வந்தது தி.மு.க. ஆனால், தாங்கள் அளித்த பட்டியலில் இருந்து 12 இடங்களையே தர தி.மு.க. முன்வந்திருப்பதாக குற்றம்சாட்டினார் வைகோ.

உடனே தி.மு.க., வைகோ அளித்த பட்டியலை வெளியிட்டது. முடிவில் தி.மு.க. - ம.தி.மு.க. இடையிலான கூட்டணி முறிந்தது. ஆனால், வேறு கூட்டணிகளில் சேராத அக்கட்சி, பா.ஜ.க. போட்டியிடும் 21 தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 213 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.

முடிவில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 167 இடங்களிலும் பா.ஜ.க. 21 இடங்களிலும் புதிய தமிழகம் 10 இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும் மக்கள் தமிழ் தேசம் 6 இடங்களிலும் புதிய நீதிக் கட்சி 5 இடங்களிலும் தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் 3 இடங்களிலும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. 3 இடங்களிலும் த.மா.கா. ஜனநாயகப் பேரவை 2 இடங்களிலும் எம்.ஜி.ஆர். கழகம் இரண்டு இடங்களிலும் குமரி ஆனந்தனின் தொண்டர் காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, முத்தரையர் சங்கம், தமிழர் பூமி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தீரனின் தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

இப்படியாக சின்னச் சின்னக் கட்சிகளை வைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கியிருந்த தி.மு.கவிலிருந்து ஓர் அதிருப்திக் குரல் எழுந்தது. எழுப்பியவர் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த தமிழ்க் குடிமகன். அவருடைய தொகுதியான இளையான்குடி, கூட்டணி பேச்சு வார்த்தைகளின்போது கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், கோபமடைந்த தமிழ்க் குடிமகன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார். ஆனால், அ.தி.மு.கவிலும் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. 141 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 32 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் பா.ம.க. 27 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா எட்டு இடங்களிலும் போட்டியிட்டன. இந்திய தேசிய லீக், ஃபார்வர்ட் பிளாக், த.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இடதுசாரிக் கட்சிகள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டது தமிழ்நாட்டில் அதுதான் முதல் முறை.

ஆனால், கூட்டணி அமைக்கத் துவங்கிய தருணத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடந்துகொண்ட அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைந்த பிறகு, தனது பெரியண்ணன் தோரணையைக் காட்டத் துவங்கியது. தோழமைக் கட்சிகளுக்கு எந்தெந்த இடங்கள் என்பதை முடிவுசெய்வதற்கு முன்பாகவே, தான் போட்டியிடும் தொகுதிகளை எல்லாம் அறிவித்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருந்த 21 தொகுதிகள் இதில் பறிபோயின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகள் பறிபோயிருந்தன. "எங்கள் வசமுள்ள திருப்பூர், பெருந்துறை, நாங்குநேரி தொகுதிகளில்கூட அ.தி.மு.க. போட்டியிடுமென அறிவித்தது சரியல்ல" என்று வருத்தத்தை பதிவுசெய்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Hk Rajashekar/The The India Today Group via Getty

இதற்குப் பிறகு வேட்புமனு தாக்கல் செய்யும் படலம் துவங்கியது. 2000வது ஆண்டு அக்டோபர் ஒன்பதாம் தேதியன்று டான்சி நில பேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கியது. ஜெயலலிதா முறையிட்டதை அடுத்து தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த ஜெயலலிதா, தீர்ப்பை நிறுத்திவைக்கும்படி கூறினார். இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பை தம்மால் நிறுத்திவைக்க முடியாது எனக் கூறியது. அந்தத் தீர்ப்பால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் அதனை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கும்படியும் கூறியது.

இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று புதுக்கோட்டை தொகுதியிலும் புவனகிரி தொகுதியிலும் ஜெயலலிதாவின் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது. இருந்தபோதும் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார். எதிர்பார்த்ததைப்போலவே நான்கு தொகுதிகளிலும் அவரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இது குறித்து தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை" என்றார். ஆனால், அந்தத் தருணத்திலேயே பிரசாரத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டுமென ஜெயலலிதா முடிவுசெய்திருந்தார்.

தி.மு.க. கூட்டணியில் அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி சேப்பாக்கத்திலும் பொதுச் செயலாளர் க. அன்பழகன் துறைமுகத்திலும் மு.க. ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பா.ஜ.கவின் கே.என். லட்சுமணன் மயிலாப்பூரிலும் எஸ்.பி. கிருபாநிதி மானாமதுரையிலும் எச். ராஜா காரைக்குடியிலும் போட்டியிட்டனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வால்பாறை, ஓட்டப்பிடாரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். திருமாவளவன் மங்களூரிலும் கண்ணப்பன் இளையான்குடியிலும் போட்டியிட்டனர்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான தம்பிதுரை பர்கூரிலும் பொன்னையன் திருச்செங்கோட்டிலும் ஓ.பி.எஸ். பெரியகுளத்திலும் போட்டியிட்டனர். தமிழ் மாநில காங்கிரசைப் பொறுத்தவரை, ஞானசேகரன் வேலூரிலும் சோ. பாலகிருஷ்ணன் கடலாடியிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோதா திருப்பெரும்புதூரிலும் பா.ம.கவின் ஜி.கே. மணி பெண்ணாகரத்திலும் பண்ருட்டியில் வேல்முருகனும் போட்டியிட்டனர்.

ம.தி.மு.கவின் சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் மல்லை சத்யாவும் ஈரோட்டில் கணேச மூர்த்தியும் போட்டியிட்டனர்.

தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சாதித்த விஷயங்களை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. "தொடரட்டும் இந்த பொற்காலம்" என்ற முத்திரை வாசகத்துடன் தி.மு.கவின் பிரச்சார விளம்பரங்கள் செய்யப்பட்டன. அ.தி.மு.கவின் சார்பில், "நியாயமா, இது நியாயமா" என்ற தலைப்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ம.தி.மு.கவைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்ததோடு, தாங்கள் வந்தால் நேர்மையான, நல்லாட்சியை வழங்குவோம் என்று முழங்கியது.

தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதா இரண்டு விஷயங்களைத் திரும்பத் திரும்ப முன்வைத்துப் பேசினார். ஒன்று, பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.முக. எப்படி இணையலாம் என்று எல்லா இடங்களிலும் கேட்டார். அடுத்ததாக, தனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் அரசியல் சதி இருப்பதாகக் குற்றம்சாட்டினார் அவர். தன்னை அரசியலில் இருந்து ஒழிப்பதற்கு சதி நடப்பதாகக் கூறினார். ஜெயலலிதாவின் இந்தப் பிரசாரத்திற்கு நல்ல ஆதரவு இருந்தது.

ஜெயலலிதாவின் கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெறவில்லையென்பதால், அந்தக் கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

மே மாதம் 10ஆம் தேதி வாக்குப்பதிவும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்குமென அறிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவைப் பொறுத்தவரை பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றது. சென்னை எழும்பூர் தொகுதியில் மட்டும் சிறிய அளவில் நடந்த கலவரத்தில் தி.மு.க. வேட்பாளர் பரிதி இளம்வழுதியைத் தாக்க முயற்சிகள் நடைபெற்றன.

தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோதே, காற்று அ.தி.மு.கவுக்கு சாதகமாக வீசுகிறது என்பது புரிந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தன. அ.தி.மு.க. கூட்டணி 197 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அதில் அ.தி.மு.க. மட்டும் 132 இடங்களைப் பிடித்தது. தமிழ் மாநில காங்கிரஸ் 23 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி 20 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து இடங்களிலும் வெற்றிபெற்றன.

தி.மு.க. கூட்டணிக்கு மொத்தமாக 37 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தி.மு.க. 28 இடங்களிலும் பா.ஜ.க. 4 இடங்களிலும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. 2 இடங்களிலும் த.மா.கா. ஜனநாயகப் பேரவை இரண்டு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட மங்களூரிலும் வெற்றி கிடைத்தது.

திருமாவளவன்

பட மூலாதாரம், Thiruma official facebook

ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நான்கு இடங்களிலுமே அக்கட்சி அல்லது அக்கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர். ஆண்டிப்பட்டியில் தங்க தமிழ்ச்செல்வனும் கிருஷ்ணகிரியில் கோவிந்தராசுவும் புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரும் வெற்றிபெற்றனர். புவனகிரியைப் பொறுத்தவரை பி.எஸ். அருள் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவளித்திருந்தது. அவர் வெற்றிபெற்றார்.

தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டவர்களில் மு. கருணாநிதி, க. அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வெற்றிபெற்றனர். ப. சிதம்பரத்தின் கட்சியான த.மா.கா. ஜனநாயகப் பேரவையைச் சேர்ந்த ப. ரங்கநாதனும் வள்ளல்பெருமானும் வெற்றிபெற்றிருந்தனர்.

ம.தி.மு.கவைப் பொறுத்தவரை போட்டியிட்ட 211 இடங்களில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது.

வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 40 லட்சம் வாக்குகளையும் தி.மு.க. கூட்டணி 1 கோடியே 8 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தன. ம.தி.மு.க. 13 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

தேர்தல் முடிவு குறித்துக் கருத்துத் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, "எங்களின் ஐந்தாண்டு கால அடுக்கடுக்கான சாதனைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பரிசாக இந்த முடிவைக் கருதுகிறேன்" என்றார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அவசர அவசரமாக நடைபெற்றது. ஜெயலலிதா உடனடியாக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். அன்று மாலையிலேயே அவருக்கு தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவி அவருக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது அவருடன் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். பிறகு, 19ஆம் தேதியன்று மேலும் 19 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

தமிழக ஆளுநரின் இந்த செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா முதல்வராகப் பதவிவகிப்பதை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்திலும் ஒரு வழக்கைத் தொடர்ந்தார் சுவாமி.

இந்த நிலையில் வேறொரு வழக்கில் வந்த தீர்ப்பில் ஒருவர் ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகாமல் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது எனத் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, டான்சி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆகவே, அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. பதவி விலகிவிட்டு, மீண்டும் பதவியேற்பதையும் மேலே சொன்ன தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் தடைசெய்திருந்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா பதவிப்பிரமாணம் செய்தது சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்குவதாக தெரிவித்தார். அன்று இரவு 8.15 மணியளவில் ஓ. பன்னீர்செல்வம் புதிய முதலமைச்சராக அமைச்சரவையுடன் பதவியேற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: