தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: `சசிகலா ஆதரவு குரல்கள்; அ.ம.மு.கவின் திட்டம்' - தென்மண்டலத்தில் அ.தி.மு.கவுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரிடம் இருந்து சசிகலா ஆதரவு குரல்கள் வெளிப்பட்டுள்ளன. தென்மண்டலத்தில் சமூகரீதியான கோபத்தைத் தணிக்கவே இவ்வாறு பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது தென்மண்டலத்தில்?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருவார காலமே இருப்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலக் கட்சிகளின் தலைவர்களைத் தவிர, தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். ராகுல்காந்தியின் வருகை, ஸ்மிருதி இரானியின் பிரசாரம் என தேர்தல் களம் களைகட்டினாலும், மறுபுறம் பரிசுப் பொருள்கள், பணம் பறிமுதல் போன்ற செய்திகளும் வலம் வருகின்றன. இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் வகையில் தி.மு.க பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்படுகிறது. அ.தி.மு.க தரப்போ, `ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றாக வேண்டும்' என்ற முனைப்பில் செயல்படுகிறது.
அ.ம.மு.கவின் திட்டம் என்ன?

`கொங்கு மண்டலத்தில் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வட மாவட்டங்களில் ஓரளவு தொகுதிகளைக் கைப்பற்றலாம்' என்ற மனநிலையில் அ.தி.மு.க தலைமை உள்ளது. அதேநேரம், தென்மண்டலத்தில் இருந்து வரக் கூடிய செய்திகள் அ.தி.மு.க தலைமையை கலவரப்படுத்தும் விதத்தில் இருப்பதாகவே அ.தி.மு.கவினர் தெரிவிக்கின்றனர். கடைசிநேர நிலவரம் குறித்து தனியார் ஏஜென்சிகள் மூலம் சர்வே எடுக்கும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர். இந்தப் பணிகளை கொங்கு மண்டலம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிடைத்த தகவல்களும் உளவுத்துறை அளிக்கும் தகவல்களும் முதல்வர் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது.
`` தென்மாவட்டங்களில் 64 தொகுதிகள் வரை வருகின்றன. இந்தத் தொகுதிகளில் 40 பேர் வரையில் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 28 கேள்விகள் வரை கேட்கப்பட்டன. இங்கு சசிகலா பற்றிய கேள்விகளுக்கு, `டி.டி.வி.பதிலடி கொடுப்பார்' என்ற தகவலே கிடைத்துள்ளது. `அ.தி.மு.கவுக்கு தி.மு.கவே பரவாயில்லை' என்ற கருத்துகளையும் சர்வே எடுத்தவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஸ்டெர்லைட் விவகாரம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம் போன்றவை களத்தில் அ.தி.மு.கவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தென்மண்டலத்தை மையப்படுத்திதான் தினகரனின் ஆட்டமே இருக்கிறது. அ.தி.மு.கவின் மொத்த திட்டத்தையும் குலைப்பதே அ.ம.மு.கவின் நோக்கமாக இருக்கிறது" என்கிறார் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட தகவல்களை நம்மிடம் விவரித்தார்.
ஓ.பி.எஸ்ஸுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், Getty Images
``திருவாடனையில் அ.ம.மு.க வேட்பாளர் வ.து.ந.ஆனந்த், கடுமையான போட்டியைக் கொடுப்பார். ராமநாதபுரத்திலும் அ.ம.மு.க வாக்குகளைப் பிரிக்கும் சூழல் உள்ளது. சாத்தூரில் அ.ம.மு.க ராஜவர்மன் உள்பட பல தொகுதிகளில் அ.தி.மு.கவை அ.ம.மு.க பலவீனப்படுத்துகிறது. போடியில் ஓ.பி.எஸ் கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது. அதனை எவ்வாறு தாண்டி வர வேண்டும் என்பதும் ஓ.பி.எஸ்ஸுக்கு தெரியும். போடி தொகுதியில் ஓ.பி.எஸ்ஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பின் தேர்தல் பணிகளால் ஓ.பி.எஸ்ஸுக்கு ஓரளவு சாதகமான சூழல் உள்ளது. இதை உணர்ந்துதான் சசிகலா சார்ந்த சமுதாய மக்களின் கோபத்தைத் தணிக்கும் வகையில் ஓ.பி.எஸ் பேசி வருகிறார். அதேநேரம், மக்கள் முடிவெடுத்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழலும் உள்ளது. பெரியகுளத்தில் 25,000 வாக்குகள் வரையில் அ.ம.மு.க பிரிக்கலாம் எனவும் களநிலவரம் தெரிவிக்கிறது.
மதுரை தெற்கில் அ.தி.மு.க சார்பாக சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த சரவணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அங்கு தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பாக பூமிநாதனும் அ.ம.மு.க சார்பில் ராஜலிங்கமும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இங்கு தி.மு.கவுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதுபோல் தி.மு.கவுக்கு அ.ம.மு.கவால் சிக்கல் ஏற்படுத்தக் கூடிய தொகுதிகளும் வருகின்றன" என்கிறார்.
எங்கெல்லாம் பாதிப்பு?
தொடர்ந்து பேசுகையில், `` தென்மண்டலத்தின் பல தொகுதிகளில் மக்கள் அரசியலை மட்டும்தான் பேசி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள்தான் இருக்கின்றன. தற்போதுள்ள சூழலை அறிந்து கொள்ள தென்மண்டலம், அடர் தென்மண்டலம் எனப் பிரித்து தனியார் ஏஜென்சியின் நிர்வாகிகள் சர்வே எடுத்தனர். இதில், `டீப் சௌத்' பகுதியான கன்னியாகுமரியில் ஆறு தொகுதிகள் வருகின்றன. இதில், கிள்ளியூர் தொகுதியில் மட்டுமே அ.தி.மு.கவுக்கு சண்டை போட வாய்ப்புள்ளது. அங்கு பா.ஜ.கவுக்கும் வாக்குவங்கி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. மற்றபடி, குளச்சல், நாகர்கோவில், ராதாபுரம், பத்மநாபபுரம், விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் சற்று சிரமமான சூழலே நிலவுகிறது" என்றார்.
தாமரை மலருமா?
`` ஒக்கி புயல் பாதிப்பு, கிறிஸ்துவ நாடார் வாக்குகள், மீனவர்கள் வாக்கு ஆகியவை தி.மு.க அணிக்குப் பலத்தைச் சேர்த்துள்ளது. அடுத்து, நெல்லையில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் அம்பாசமுத்திரத்தில் அ.தி.மு.க சார்பாக இசக்கி சுப்பையாவும் தி.மு.க சார்பாக ஆவுடையப்பனும் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதியில் 35 சதவிகிதம் மறவர் வாக்குகள் உள்ளன. இந்தத் தொகுதி அ.தி.மு.கவுக்கு சற்று செல்வாக்கானதாகவே பார்க்கப்படுகிறது. இங்கு அ.ம.மு.க வாக்குகளைப் பிரித்தாலும் பெரிதாக பாதிப்பு வராது எனவும் நம்புகின்றனர். திருநெல்வேலியில் பா.ஜ.க சார்பாக நயினார் நாகேந்திரன் நிற்கிறார். அங்கு அவருக்கு எதிராக தி.மு.க சார்பாக ஏ.எல்.எஸ்.லட்சுமணன் நிற்கிறார். நெல்லை நகரத்தில் அனைத்து சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். தொகுதியில் நாடார் சமூக வாக்குகளும் 5 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது.
அங்கு நயினாருக்கு உள்ளூர் செல்வாக்கு அதிகம். தற்போது அ.தி.மு.கவும் களமிறங்கி வேலை பார்க்கிறது. இதுவே அ.தி.மு.க சார்பாக நயினார் களமிறங்கியிருந்தால் உறுதியாக வெற்றி பெறுவார். தற்போதைய சூழலில் ஓரளவுக்கு சண்டை போடும் நிலையில் பா.ஜ.க உள்ளது. இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தோற்றுப் போனது. இந்தமுறையும் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க சார்பாக கணேசராஜா போட்டியிடுகிறார். இந்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கலாம் என்ற சூழல் உள்ளது. பாளையங்கோட்டையில் தி.மு.கவின் அப்துல் வகாப்பும் அ.தி.மு.கவின் ஜெரால்ட்டும் நிற்கின்றனர். இங்கும் அ.தி.மு.கவுக்கு சற்று சிரமமான சூழலே நிலவுகிறது," என்கிறார்.
கோவில்பட்டியில் மீண்டும் 1989?
தொடர்ந்து பேசுகையில், `` ஆலங்குளத்தில் அ.தி.மு.க சார்பாக மனோஜ் பாண்டியன் நிற்கிறார். அங்கு அவருக்குக் கட்சிக்குள்ளேயே பல்வேறு எதிர்ப்புகள் உள்ளன. பூங்கோதைக்கும் உள்கட்சியில் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்தாலும் களநிலவரம் அ.தி.மு.கவுக்கு சற்று கடுமையாகவே உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகியவற்றில் 29 தொகுதிகள் வருகின்றன. இவற்றில் 5 முதல் 6 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.கவுக்கு சாதகமாக உள்ளதாக முதல்வர் தரப்புக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் அ.ம.மு.க சார்பாக தினகரன் நிற்பதால் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கடம்பூர் ராஜூவுக்கு நாயக்கர் சமூக வாக்குகள் மட்டுமே கை கொடுக்காது. அதேநேரம், கோவில்பட்டியில் சி.பி.எம் போட்டியிடுகிறது. 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இதேபோல் பிரிந்து நின்றபோது
கம்யூனிஸ்ட் வேட்பாளர் வென்றார். அதேபோன்ற சூழல் இப்போதும் ஏற்படலாம் என சி.பி.எம் தரப்பில் கணக்குப் போடுகின்றனர்" என்றார் விரிவாக.
தி.மு.கவின் சாதனையா?
அதேநேரம், அமைச்சர்களை தங்கள் தொகுதிகளுக்குள்ளேயே முடக்கி வைத்ததில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டதாக அ.தி.மு.க தரப்பில் பேசி வருகின்றனர். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் ஓர் அமைச்சர் தான் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், பக்கத்தில் உள்ள வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்கப் பாடுபடுவார். இப்போது தங்களது தொகுதிக்குள்ளேயே அமைச்சர்கள் முடங்கிவிட்டதால், அருகில் உள்ள வேட்பாளர்கள் களத்தில் போராடி வருகின்றனர். தொடர் புகார் மனுக்களை அனுப்பி கொங்கு தரப்பை முடக்கியதை தன்னுடைய சாதனையாகவே தி.மு.க பார்க்கிறது.
`போடிநாயக்கனூர் தொகுதியிலேயே ஓ.பி.எஸ்ஸுக்கு சிக்கல் வரலாம் என்கிறார்களே?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` அப்படியெல்லாம் இல்லை. போடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். போடி தொகுதியில் கல்வி, சாலை வசதிகள், குடிநீர் வசதி என ஏராளமான திட்டங்களை துணை முதல்வர் செயல்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற வசதிகளையெல்லாம் வேறு எந்தத் தொகுதியிலும் இந்த அளவுக்குப் பார்க்க முடியாது. மக்களவைத் தேர்தலில் தங்க.தமிழ்ச்செல்வன் டெபாசிட் இழந்தார். இந்தமுறையும் அவர் டெபாசிட்டை பறிகொடுப்பார்," என்கிறார்.
சசிகலா ஆதரவுப் பேச்சு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
`பிறகு ஏன் சசிகலா ஆதரவுக் குரலை உயர்த்த வேண்டும்?' என்றோம். ``அதற்குக் காரணம், ஒருவர் சிறையில் இருந்து வந்து அரசியலையே மாற்றியமைப்பார் என்று பேசினார்கள். அனைத்து ஊடகங்களும் இதைப் பற்றி கருத்துகளை வெளியிட்டன. கர்நாடகாவில் இருந்து மக்கள் வெள்ளத்தில் வந்தவர், சரியான முடிவெடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு அவரைக் குறைசொல்வதில் நியாயம் இல்லை. இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது. அரசியலிலேயே இல்லாதவரோடு ஏன் மோத வேண்டும். அரசியலில் இருந்து அவர் விலகாமல் இருந்த காலகட்டத்தில்தான் முதல்வர் அவ்வாறு பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைக் களைவதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷனில் ஓ.பி.எஸ் ஆஜராகவில்லை என்பதையும் குற்றமாகச் சொல்கிறார்கள். ஓ.பி.எஸ் ஆஜராவது தொடர்பாக நான்கு முறை விசாரணை கமிஷன் தேதியை ஒத்தி வைத்தது. இரண்டு முறை மட்டுமே அவர் செல்லவில்லை" என்கிறார்.
`தென்மண்டலங்களில் அ.தி.மு.கவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக களநிலவரம் இல்லை' எனவும் கூறப்படுகிறதே?' என்றோம். `` தென்மண்டலங்களைப் பொறுத்தவரையில் அ.தி.மு.கவின் கோட்டையாக உள்ளது. எங்கள் அரசின் மீதோ முதல்வர், துணை முதல்வர் மீதோ எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லை. பயிர்க்கடன், நகைக்கடன் ரத்து என எவ்வளவோ சாதனைகளைச் சொல்லலாம். மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டால்தான் தோல்வி வரும். அப்படி எந்த நிகழ்வுகளும் இங்கே அரங்கேறவில்லை. தென்மண்டலத்தில் பெருவாரியாக அ.தி.மு.க வெற்றி பெறும்" என்கிறார்.
தீர்மானிக்கும் சக்தியா சசிகலா?
`சசிகலா விவகாரத்தால் தென்மண்டத்தில் அ.தி.மு.கவுக்கு சரிவு ஏற்படுமா?' என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சசிகலா விவகாரத்தைப் பொறுத்தவரையில் பாசிட்டிவ் அம்சங்களும் உள்ளன. நெகட்டிவ் அம்சங்களும் உள்ளன. அவர் தண்டனை பெற்றவர் என்ற இமேஜும் உள்ளது. மதுரை, உசிலம்பட்டி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அவரது சமூகம் பரவலாக உள்ளது. இதன் காரணமாக ஓ.பி.எஸ்ஸுக்கே நெருக்கடி உள்ளதாகத்தான் பார்க்கிறேன்" என்கிறார்.
தொடர்ந்து, `` தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஓ.பி.எஸ் அளித்த பேட்டியிலும், நான் எதிர்க்கவில்லை என அவர் கூறுவதும் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது காலம் கடந்துவிட்டதாகவே பார்க்கிறேன். இதுபோன்ற பேச்சுக்களால் களநிலவரம் மாறுமா எனத் தெரியவில்லை. விசாரணை ஆணையம் அமைத்தும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதையும் நிரூபிக்கவில்லை.
சசிகலா சமூகத்தினரால் அ.தி.மு.கவுக்குப் பலம் என்றால், 1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஏன் தோற்க வேண்டும். 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் எல்லாம் அ.தி.மு.க தோல்வியை சந்தித்ததே. அதனால் சசிகலா விவகாரம் என்பது உதவி செய்யக் கூடிய அம்சமே தவிர, அதுவே தீர்மானிக்கும் விஷயமாக மாறிவிடாது. சசிகலா ஆதரவுப் பேச்சின் மூலம் வாக்குகளைப் பெறுவார்களா என்பதும் சந்தேகம்தான்," என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












