அனிதா இறப்பும் அரசியலும்: "நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம்" - விலக்குப் பெறுவது சாத்தியமா?

- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
இந்தி திணிப்பு, பாட திட்டத்தில் சமஸ்கிருதம் ஆகியவற்றை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திய வரலாறு தமிழகத்திற்கு உண்டு.
அந்த வரிசையில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட்டை எதிர்த்தும் தமிழகம் பெரிய அளவில் போராடியது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், உயிரை மாய்த்துக் கொண்டதையும் தமிழகம் இன்றளவும் மறக்கவில்லை. அதன் தாக்கமாகவே திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் நீட் தேர்வு ஒரு பிரதான இடத்தை பிடித்திருக்கிறது.
இந்நிலையில் அனிதாவின் கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டது பிபிசி தமிழ்.
அங்கு அனிதாவின் நினைவாக அவரது சகோதரர் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு, மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
'அனிதா இறந்ததற்கு காரணம் அரசியல்'

"2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம்.
மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார்.
பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம்.
2021 சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நீட் பிரதான இடம் பிடித்திருப்பது குறித்து அவரது கருத்தை கேட்டறிந்தோம்.
"அனிதா இறந்ததற்கு காரணம் அரசியல்தான். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ சீட் என்றுதான் அனிதாவுக்கு கூறப்பட்டது. அதற்காக நன்கு படித்து, நல்ல மதிப்பெண் எடுத்தார். அதன்பிறகு சம்மந்தமே இல்லாமல் நீட் என்ற நுழைவுத்தேர்வை கொண்டுவந்தார்கள். இங்கு சமமான கற்றல் வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கையில் சமமான ஒரு தேர்வு முறையை கொண்டுவந்து அனிதாவை படிக்க விடாமல் செய்தது அரசியல்தான். அனிதா தெருவில் இறங்கி போராடினார், அனைத்து கட்சி அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அரசையும் சந்தித்து மனு அளித்தார். உட்சபட்சமாக உச்சநீதிமன்றம் வரை சென்றும் போராடினார்.
அனிதாவின் போராட்டம்தான் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு அடிப்படை தீப்பொறியாக அமைந்தது. அனிதாவின் இறப்புதான் கடைசியாக இருக்கும் என்று நாம் அனைவரும் நினைத்தோம். ஆனால் அதன் பிறகும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் நீட் தேர்வால் இறந்துவிட்டனர். அந்த குழந்தைகள் இறப்பு வெளியே தெரிந்ததற்கும் அனிதாவின் இறப்புதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். அனிதா போராடாமல் இறந்திருந்தால், படிக்க முடியாமல் இறந்து விட்டார்கள் என்பதை சாதாரண விஷயமாக நாம் கடந்து சென்றிருப்போம். அனிதாவின் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள்" என்று மணிரத்னம் தெரிவித்தார்.
தொடர் தற்கொலைகள்

2017ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நீட் தேர்வுக்கு முந்தைய நாள் மட்டுமே 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அதில் ஒருவரான மதுரையை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா 'I am sorry, I am tired' என்று எழுதிவிட்டு இறந்தது பலருக்கும் அனிதாவை நியாபகப்படுத்தியது.
இது போல நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்தரநாத்.
நீட் தேர்வுக்கு முன் - அதற்கு பின்

"நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை தமிழகத்தில் புகுத்திய பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் மொழியில் படித்தவர்கள், கிராமப்புற மாணவர்கள் ஆகியோர் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களால் மற்றவர்களுடன் சேர்ந்து போட்டிப் போட முடியவில்லை. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள், மூன்றில் இருந்து ஆறு பேர்தான் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள். நீட் தேர்வுக்கு முன்பு சராசரியாக 20 - 60 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள். இந்த மிகப்பெரிய வீழ்ச்சிக்கு காரணம் நீட் தான்" என்கிறார் ரவீந்தரநாத்.
நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது சரியாக இருக்காது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதுதான் இங்கு கோரிக்கை. மருத்துவ கல்வியில் உள்ள அனைத்து விதமான உரிமைகளையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுவிட்டதாக மருத்துவர் ரவீந்தரநாத் குற்றஞ்சாட்டுகிறார்.
நீட் தேர்வால் குறைந்தது 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனால் பெற்றோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் 13 மாணவர்கள் இறந்ததற்கு யார் பொறுப்பு என கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக அதிமுக இடையே பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு சாத்தியமா?

13 மாணவர்கள் தற்கொலைக்கு அதிமுகதான் பொறுப்பு என திமுக குற்றஞ்சாட்ட, திமுக - காங்கிரஸ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் நீட் என அதிமுக விமர்சனம் செய்தது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். சட்டப்படி இது சாத்தியமா என்பதை தெரிந்து கொள்ள மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனிடம் பேசினோம்.
"அரசியல் அமைப்பு சட்டத்தில் உயர்கல்வி, குறிப்பாக மருத்துவக்கல்வி, பொறியியல் உள்ளிட்ட மேற்கல்வியை பொறுத்த வரை சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசிடம்தான் உள்ளது. மத்திய அரசு மட்டும்தான் இதற்கான சட்டம் போட முடியும். மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் இது இல்லை. எனவே, மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் என்ற விஷயம், முடியாத ஒன்று. ஒருவேலை இது பொதுப் பட்டியலில் இருந்திருந்தால், மாநில அரசு தன்னுடைய மாநிலத்தில் மட்டும் இதனை ரத்து செய்து விட்டு, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம் .அப்படி ஒரு சூழல் இல்லை என்பதால், மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் இல்லை."
எனினும் ஒரு வழி இருக்கிறது. தமிழகத்தில் இருந்து திமுக-வுக்கு 39 எம்.பிக்கள் இருக்கிறார்கள். இதே போல இதே சிந்தனை கொண்ட வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட எம்பிக்களை திரட்டினால் இது சாத்தியம் என்று கே.எம்.விஜயன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












