நீட் போல பொறியியல் படிக்க அகில இந்திய தகுதித் தேர்வு: "விரைவில் அறிவிப்பு வரும்" என்கிறார் ஏஐசிடிஇ தலைவர் சகஸ்ரபுத்தே

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தற்போது நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் தகுதித் தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்பிற்கும் அகில இந்திய தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாகவும், இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுத்தே.
நர்சிங், சித்தா, ஆயுர்வேதா, பி.எஸ்.சி. லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடத்துவது தொடர்பாக தேசியத் தேர்வு முகமை கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பி இருந்தது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தலைவர் அனில் டி. சஹஸ்ரபுத்தே கலை அறிவியல் உள்பட எல்லா உயர் கல்விப் படிப்புகளில் சேர்வதற்கும் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுவது என்ற திசையை நோக்கி "நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம்" என்று பேசியதாக தி ஹிண்டு உள்ளிட்ட சில நாளேடுகளில் செய்திகள் வெளியாயின.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற உத்தரவு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அனிதா தொடங்கி பல மாணவிகள் பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் தோற்று மருத்துவக் கனவு பொய்த்துப் போனதால் தற்கொலை செய்துகொண்டனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாட்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த நீட் தேர்வு எதிர்ப்பு என்பது ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்து நர்சிங், கலை அறிவியல் போல அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் போல இந்திய அளவிலான தகுதித் தேர்வு என்ற பேச்சு சமூக ஊடகத்தில் கடும் எதிர்வினைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சென்னை கருத்தரங்கில் என்ன பேசினார் என்பது குறித்து அனில் சஹஸ்ரபுத்தேவிடமே கேட்டது பிபிசி தமிழ்.
அதற்குப் பதில் அளித்த அவர், கலை அறிவியல் படிப்புகளுக்கு திறனறித் தேர்வு வருவதாக தாம் பேசவில்லை என்றும், ஆனால், பொறியியல் படிப்புகளுக்கு அப்படி ஒரு கட்டாயத் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
''கலை,அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி ஒரு தேர்வு கொண்டுவரப்படலாம் என்பது என் கருத்து. ஆனால் பொறியியல் படிப்புகளுக்கு கட்டாய தகுதித் தேர்வு நடத்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில், பொறியியல் படிப்புக்கு எந்த நுழைவு தேர்வும் இல்லை. 12ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து சேர்க்கை நடைபெறுகிறது. ஒரு சில மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளே நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. ஐஐடி மற்றும் என்ஐடி ஆகிய மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க ஜேஇஇ தேர்வு கட்டாயம். தற்போது நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்பிற்கும் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவு விரைவில் வெளியாகும்,''என்றார்.

தகுதித் தேர்வுக்கு தயாராவதற்கு மாணவர்கள் அதிக கவனம் செலுத்தினால், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் எவ்வாறு கவனம் செலுத்துவார்கள் என கேட்டபோது, ''நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த பல கோச்சிங் மையங்கள் செயல்படுகின்றன. தேவையான மாணவர்கள் படிக்கலாம்,''என்றார்.
பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவது பெற்றோரின் பொருளாதார சுமையை அதிகரிக்காதா என கேட்டபோது, ''இலவசமாக கோச்சிங் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பவர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஸ்வயம் பாடத்திட்டத்தை படிக்கலாம். இணையத்தில் இலவசமாக அந்த பாடங்களை மாணவர்கள் படிக்கலாம். எந்த கட்டணமும் கிடையாது. ஐஐடி பேராசிரியர்கள் அந்த பாடங்களை நடத்துகிறார்கள்,''என்கிறார்.
இந்திய அளவில் வெவ்வேறு பாடத்திட்டங்களை படிக்கும் மாணவர்கள் எப்படி ஒரு விதமான தகுதித் தேர்வுக்கு தயாராக முடியுமா என கேட்டபோது, ''இந்த தகுதித் தேர்வு பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது இல்லை. அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவனுக்கு அடிப்படையாக தெரிந்திருக்கவேண்டிய பகுதிகளை கொண்டுதான் கேள்வித்தாள் அமையும். விதவிதமான பாடங்களில் மாணவன் பெற்றுள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை வைத்து ஒருவரைத் தேர்வு செய்வதை விட, பொறியியல் படிப்பு என்றால், அதை படிக்க தேவைப்படும் திறன்கள் அந்த மாணவருக்கு இருக்கிறதா என்றுதான் சோதிக்கவேண்டும்,''என்றார் அனில் டி.சஹஸ்ரபுத்தே.
பிற செய்திகள்:
- கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












