இளம் பெண்ணுடன் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது இந்து அமைப்பினர் சரமாரி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images
(இன்று (16 நவம்பர் 2020, திங்கட்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
கர்நாடக மாநிலம் மங்களூரு பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன் நின்ற வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக இந்து அமைப்பினர் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கங்கனாடி ஆம்னி பேருந்து நிலையத்தில் ஒரு இளம்பெண்ணும், ஓர் இளைஞரும் நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்குச் செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர், காதல் ஜோடி என நினைத்து அவர்களுடன் தகராறு செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞர் மீது இந்து அமைப்பினர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர் மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கங்கனாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு, பெல்தங்கடி, புத்தூர், சுள்ளியா உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் இளம்பெண்களுடன் வரும் வாலிபர்களை தாக்கி வருவதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது "கங்கனாடி பகுதியில் பேருந்துக்காக இளம்பெண்ணுடன் காத்திருந்த இளைஞரை ஒரு அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக 8 பேரை சந்கேத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட வாலிபரும், இளம்பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு பெங்களூருவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை கிடைத்துள்ளது. இதனால் பெங்களூருவுக்கு செல்ல இளம்பெண், வாலிபரை அழைத்து செல்ல திட்டமிட்டார்.
அதன்படி வாலிபருடன் அவர் கங்கனாடி பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மங்களூரு பகுதியில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்ற 4 சம்பவங்கள் நடந்துள்ளன.
எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பூங்கா, மைதானங்கள், பஸ் நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம்" என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதையில் சில மாற்றங்களுடன் ஆளவந்தான் வெளியிடப்படும்:தாணு

பட மூலாதாரம், Kalaipuli S Thanu, Twitter
கதையில் சில மாற்றங்கள் செய்து கமல் நடித்த ஆளவந்தான் படத்தை மீண்டும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் தாணு இறங்கியுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. ரவீணா டாண்டன், மனிஷா கொய்ராலா போன்றோர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் ஆளவந்தான் படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ஃபிலிம் கம்பானியன் செளத் இணைய இதழுக்காக பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது:
ஆளவந்தான் - சொன்ன கதை ஒன்று, எடுத்த கதை ஒன்று. முடித்த கதை ஒன்று. அது ஒரு குழப்பமான கதை. இப்போது சொல்கிறேன். ஆளவந்தான் கதையை மீண்டும் நான் எழுதுகிறேன். நானே எடிட் செய்து, அந்தப் படத்தை வெளியிட்டு, உச்சத்துக்குக் கொண்டு செல்லப் போகிறேன். இப்போது இதைச் செய்யப் போகிறேன். படம் இரண்டே முக்கால் மணி நேரம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின்னால் வரக் கூடிய கதையை கமல் முன்பே சிந்தித்துவிட்டார். பரீட்சார்த்த முயற்சியாக அவரே படத்தை எடுத்திருக்கலாம். என்னை எடுக்க வைத்துவிட்டார் என்று கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தாம் கூறியதை வெட்டி, ஒட்டி திரித்து பிரசாரம் செய்வதாக பாஜக மீது வங்க நடிகை புகார்

பட மூலாதாரம், Getty Images
வங்க நடிகை கெளசானி முகர்ஜி நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் "தயவு செய்து வாக்களிப்பற்கு முன் சிந்தியுங்கள், உங்கள் வீட்டில் அம்மா மற்றும் சகோதரிகள் இருகிறார்கள்" என அவர் கூறியதாக ஒரு காணொளி வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அவர், பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு தன் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து, வேறு பொருள் தரும் படிச் செய்துவிட்டார்கள் என கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
"ஹத்ராஸில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அவரின் பெற்றோர்கள் போராடினால் சுடப்படுகிறார்கள். இப்படி பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைப் போல அல்லாமல், மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்கிற உண்மையை எடுத்துக் கூற விரும்பினேன். அதை பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு கீழ் தரமான அரசியலுக்காக எடிட் செய்துவிட்டது" என விளக்கமளித்துள்ளார்.
அதோடு, கெளசானி முகர்ஜி தன் ஃபேஸ்புக் பக்கத்தில், தன் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, தான் உண்மையில் பேசியதாக கூறும் காணொளியை பதிவேற்றி இருக்கிறார். அதில் "பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். உங்கள் வீட்டில் உங்களின் தாய் மற்றும் சகோதரிகள் இருக்கிறார்கள். மமதா பானர்ஜியின் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மேற்கு வங்கம் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஹத்ராஸ் போல ஆகிவிடக் கூடாது என்றால் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்" என அவர் கூறுவதைப் பார்க்க முடிவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியாகி இருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அனிதா இறப்பும் அரசியலும்: "நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம்" - விலக்குப் பெறுவது சாத்தியமா?
- "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?": கமல்ஹாசன் பேட்டி #BBC_Exclusive
- சுல்தான் - சினிமா விமர்சனம்
- எடப்பாடி Vs ஸ்டாலின்: வார்த்தைப்போரில் மோதும் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம்
- புதுச்சேரியில் "முதல்வர் வேட்பாளர்" இல்லாமல் களம் காணும் அதிமுக, பாஜக கூட்டணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








