ஞானவாபி மசூதியில் ஆய்வு: இது ஏன் சர்ச்சையாகிறது? இதில் என்னதான் பிரச்னை?

பட மூலாதாரம், Sameeratmaj Mishra
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி ஹிந்தி சேவை
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி கள ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் பணி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளாக நடைபெற்றது. இந்தப் பணிகள் நடந்தபோது எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று வாரணாசி நகர காவல்துறை ஆணையர் சதீஷ் கண்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு சனிககிழமை முதல் நாள் ஆய்வுக்காக அங்கு சென்ற பிறகு இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்த முழு விஷயம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.
என்ன வழக்கு?
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி தற்போது சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.
16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இங்கு மசூதி கட்டப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
18 ஆகஸ்ட் 2021 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் ராக்கி சிங் என்பவர் தலைமையில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் மா சிருங்கர் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதையை ஒட்டிய தசாஷ்வமேத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிளாட் எண் 9130இல் அன்னை சிருங்கர் தேவி, ஹனுமன் மற்றும் விநாயகர் மற்றும் அடையாளம் புலப்படாத இந்து தெய்வங்கள் இருப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.
அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு, மசூதியில் உள்ள தெய்வ சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேவேளை வழக்கு தொடர்ந்த பெண்கள், "பழமையான கோயில்" வளாகத்தில் உள்ள தெய்வ சிலைகளை தரிசனம் செய்வது, பாதுகாப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பெண்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்து, மசூதி வளாகத்தில் அனைத்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதை உறுதி செய்ய ஒரு அட்வகேட் கமிஷனரை (நீதிமன்றத்தால் குறிப்பிட்ட விவகாரத்துக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்) நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றம் தலையீடு
இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம், உள்ளூர் வழக்கறிஞர் அஜய் குமாரை அட்வகேட் கமிஷனராக நியமித்து, மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கும் அந்த ஆய்வை காணொளியாக பதிவு செய்யவும் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உத்தரவிட்டது.
அத்துடன் அட்வகேட் கமிஷனர் ஆய்வுக்கு தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
வாரணாசியில் உள்ள அஞ்சுமன் இண்டோஜாமியா மஸ்ஜித் நிர்வாகம், சுன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை வழக்கறிஞர் கமிஷனர் நியமனம் மற்றும் உத்தேச ஆய்வுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்த பின்னர், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துவதற்கு இந்திய தொல்லியல் துறைக்கு பிறப்பித்த கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991இன் படி, ஆகஸ்ட் 15, 1947இல் இருந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றுவதை சட்டம் தடை செய்கிறது என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ஆக இருந்த எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அம்சங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தலாம் என்று கூறியிருந்தது.

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், Arranged
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
இந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி அஞ்சுமன் இண்டோ-ஜாமியா மஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நிறுத்தி வைக்க உத்தரவிடவும் கோரி மூத்த வழக்கறிஞர் ஹுசைன் அகமதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் ஆவணங்களை முழுமையாக பார்க்காததால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்று கூறி இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதேநேரம், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கவும் தயாராக உள்ளோம் என்று நீதிபதிகள் கூறினர்.முன்னதாக, ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இண்டோஜாமியா மசூதி கமிட்டி சார்பில் முன்பு ஆஜரான அகமதி, "வாரணாசி மசூதி வளாகத்தில் சொத்துகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது வழிபாட்டு இடங்கள் சட்டத்தின் கீழ் வரக்கூடிய விவகாரம். ஆனால், இந்த விவகாரத்தில் சிவில் நீதிமன்றம் அதனால் நியமிக்கப்பட்டுள்ள வழக்குரைஞருக்கு ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதால் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போதைய நிலை தொடர வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பினரின் கோரிக்கைகள் என்ன?
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரின் கூற்றுகளையும் நன்கு புரிந்து கொள்ள அவர்களின் வழக்கறிஞர்களிடம் பேசினோம்.
பூஜை செய்ய அனுமதி கோரிய பெண் மனுதாரர்களின் வக்கீல் மதன், தங்கள் மனுவில், "9,130 ப்ளாட் முழுவதையும் அட்வகேட் கமிஷனரிடம் ஆய்வு செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளனர்.
"கௌரி சிருங்கர் சிலை இருப்பதை நிரூபிக்க மசூதிக்குள் செல்ல வேண்டியதில்லை" என்று அவர் கூறுகிறார்.
அஞ்சுமன் இண்டோஜாமியா மசூதியின் வழக்கறிஞர் அபய் யாதவ், "வளாக்ததில் இருப்பது சிருங்கர் கௌரியின் சிலை. அது மசூதியின் மேற்குச் சுவருக்கு வெளியே இருக்கிறது" என்று கூறுகிறார்.
"ஆய்வு செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவர்கள் மசூதிக்குள் வரக்கூடாது என்பதுதான் நிலைப்பாடு" என்கிறார் வழக்கறிஞர் அபய் யாதவ்.மேலும் அவர், "பிளாட் எண் 9130 என்று குறிப்பிடப்பட்டுள்ள இடம் முடிவு செய்யப்படவில்லை. மசூதி அமைந்துள்ள இடம் பிளாட் எண் 9130இன் ஒரு பகுதி என்று எப்படி முடிவு செய்வீர்கள்? வருவாய் துறை வரைபடத்தின்படி அது முடிவு செய்யப்படும் என்றால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் அந்த வரைபடத்தை நீதிமன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை" என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












