ஆளுநர் - முதலமைச்சர் மோதல் தொடர்ந்தால் அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன. இனி என்ன நடக்கக்கூடும்?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ஆளும் தரப்புடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் திங்கட்கிழமையன்று நடந்த நிகழ்வுகள், இந்த மோதலின் உச்சகட்டமாக அமைந்துள்ளன.
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்தே, அவருக்கும் ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையிலான உறவு சீராக இருக்கவில்லை. அவர் ஆளுநராக இருக்கும் இந்த ஒன்றேகால் ஆண்டிற்குள் இரண்டு முறை அவரை மாற்ற வேண்டுமென தி.மு.க. கோரிக்கை விடுக்கும் அளவுக்கு உறவு சீர்கெட்டிருக்கிறது.
ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டுமென ஒரு முறை மக்களவையிலேயே தி.மு.கவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினார். பிறகு, கடந்த நவம்பர் மாதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குச் சென்ற தி.மு.க. எம்.பிக்கள், ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றவேண்டுமென மனு ஒன்றை அளித்தனர்.
இந்தியாவில் ஆளுநர் என்ற பதவி எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே நடந்துவருகிறது. ஆனால், 2014க்குப் பிறகு இந்த மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன.
மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான மோதல்கள் தினசரி நடக்கின்றன. ஆளுநர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது அல்லது சட்ட மசோதாக்களை நிறுத்திவைப்பது, ஆய்வுகளுக்குச் செல்வது, மாநில அரசுகளின் நியமனங்களை நிறுத்திவைப்பது என இந்த மோதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைப் பொறுத்தவரை, தி.மு.க. அரசின் திராவிட மாடல் என்ற பெருமிதம், இரு மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்றவை உவப்பிற்குரியதாக இல்லை. ஆகவே, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அரசை விமர்சிக்க ஆளுநர் தவறுவதில்லை.
கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்த விசாரணையை மாநில அரசு 26ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றியது. இருந்தபோதும் அக்டோபர் 28ஆம் தேதி ஒரு விழாவில் பேசிய ஆளுநர், அந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றுவதை மாநில அரசு தாமதம் செய்ததாக குறிப்பிட்டார்.
இது ஒரு உதாரணம்தான். பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளோடு தொடர்ந்து முரண்பட்டு வருகிறார் ஆளுநர். குறிப்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெறக் காத்திருக்கின்றன. நீட் விலக்கு மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதை நீக்கிவிட்டு, மாநில முதல்வரையே வேந்தர்களாக இருக்கச் செய்வது பற்றிய மசோதாக்கள் இவற்றில் முக்கியமானவை.
பல முக்கிய விவகாரங்களில் மாநில அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடுகளுக்கு மாறாக, ஆளுநர் நிலைப்பாடு எடுப்பதும் அதனை வெளிப்படையாக தெரிவிப்பதும் ஆளும்கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். புதிய கல்விக் கொள்கையை தற்போதைய தி.மு.க. அரசு மட்டுமல்லாமல், முந்தைய அ.தி.மு.க. அரசுமே நிராகரித்தது. ஆனால், அவ்வப்போது பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் கூட்டத்தை நடத்தும் ஆளுநர் ஆர்.என். ரவி, புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தும்படி கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
மாநில அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. அது இப்போது மீண்டும் ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது.

பட மூலாதாரம், TNDIPR
அதேபோல, பா.ஜ.கவின் பார்வையிலான வரலாற்றை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுவதும் பல முறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தன்று பேசிய ஆளுநர், "ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல. அது இடம் சார்ந்தது மட்டும்தான். விந்திய மலைக்கு வடக்கில் உள்ளோரை ஆரியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் அப்போது பிரித்தனர். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே" என்று பேசினார்.
இதன் உச்சகட்டமாகத்தான். கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. அது நாம் திராவிடர்கள் என்று பிரபலப்படுத்துகிறது. இந்த தேசம் முழுமைக்குமான எதை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது. இவற்றை உடைக்க வேண்டும். சொல்லப்போனால் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று பேசினார். இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.
இந்த நிலையில்தான், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை வாசிப்பதைத் தவிர்த்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் ஆளுநர். பா.ஜ.கவினரைப் பொறுத்தவரை, ஆளுநர், சில பகுதிகளை வாசிப்பதைத் தவிர்த்தது தவறில்லை, மாறாக, முதலமைச்சர் அந்தப் பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்தது தவறு என்கிறார்கள்.
"ஆளுநர் அவர்களின் கருத்துக்களை சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா? கவர்னர் அவர்கள் பேசிய பின்னர், மரபிற்கு புறம்பாக முதல்வர் குறுக்கிட்டுப் பேசியதும், ஆளுநர் உரையை சட்டசபைக் குறிப்பில், எப்படி இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்துவதும் முற்றுலும் தவறானது.

பட மூலாதாரம், TNDIPR
ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில், ஆளுநர் உரையை படித்த பிறகு முதல்வர் பேசுவது மரபல்ல, ஆனால் ஆளுநர் அவையில் இருக்கும் போதே, ஆளுநர் மாண்புக்கு மரியாதை செலுத்தாமல், ஒலிபெருக்கி வழங்கப்படாத போதும் முதல்வர் பேசுவது தவறான முன்னுதாரணம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்துகொண்டதால், ஆளுநரே அவையைவிட்டு வெளியேற நேரிட்டது." எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம், ஆளுநர் உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
"இவர் ஏதேதோ பேசுகிறார். தமிழ்நாடு என்பது அரசியல் சாஸனப்படியான பெயர். ஆனால், தமிழ்நாடு என இருக்கக்கூடாது என்கிறார். இன்று மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார். அவர் கவர்னராக இருக்க லாயக்கில்லாதவர். அவர் உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும். அவர் ஆளுநர் உரையில், சில விஷயங்களைப் படித்துவிட்டு, சில விஷயங்களை விட்டுவிட முடியாது. அவருக்கு தமிழ்நாட்டின் கலாச்சாரம், மொழி, சூழல், அரசியல் ஏதும் புரியவில்லை. தில்லியிலிருந்தே அவருக்கு உத்தரவு வருகிறதா, இல்லை இவரே பேசுகிறாரா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர் திரும்பப்பெறப்பட வேண்டும்" என்கிறார் என். ராம்.
ஆளுநரின் அதிகாரம் என்பது மிகக் குறுகியது. அது பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், N RAM
ஆளுநர் - முதல்வர்களின் அதிகாரங்கள் குறித்த கவலைகள், மோதல்கள்
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே, ஆளுநர்களின் அதிகாரம் குறித்த கவலைகள் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாகப் பதவியேற்றவர்களுக்கு இருந்திருக்கின்றன. 1935ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டப்படி சென்னை மாகாணத்தில் தேர்தல் நடந்து முடிந்ததும் புதிய முதல்வராக சி.ஆர். ராஜகோபாலாச்சாரியார் பதவி வகிப்பார் என காங்கிரஸ் முடிவுசெய்தது.
அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபு எந்த அளவுக்கு அரசுக்கு ஒத்துழைப்பார் என்ற கவலை ராஜகோபாலாச்சாரியாருக்கு இருந்தது. "வைஸ்ராயோ அல்லது அயல் விவகார மந்திரியோ உத்தரவிட்டாலொழிய கவர்னரின் விசேஷ அதிகாரங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது என்று எழுத்து மூலம் உறுதியளிக்க முடியுமா?" என்று பதவி ஏற்கும் முன்பே ஆளுநர் எர்ஸ்கினிடம் கேட்டார் ராஜகோபாலாச்சாரியார். இது தொடர்பாக, வைஸ்ராய் லின்லித்கோவிடம் ஆலோசனை கேட்டபோது, அம்மாதிரி வாக்குறுதியை அளிக்க முடியாது எனக் கூறினார்.
அதற்குப் பிறகு, லிபரல் கட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ சாஸ்திரியிடம் ஒரு காபந்து அரசையாவது அமைக்க முடியுமா எனக் கேட்டார் எர்ஸ்கின். அவர் அதனை ஏற்கவில்லை. அதற்குப் பிறகு கே.வி. ரெட்டி தலைமையில் அமைந்த அமைச்சரவை நீண்டகாலம் நீடிக்கவில்லை.
இந்த நிலையில், அயல் விவகார மந்திரி ஸெட் லாண்ட் ஒரு அறிவிப்பை செய்தார். அதன்படி, "கவர்னர் தனக்கு விசேஷமாக வழங்கப்பட்டுள்ள குறுகிய அளவு பொறுப்புகளை மீறி ஒரு ராஜதானியின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் பெற்றுள்ளார் என்றோ, அவருக்கு அந்த உரிமை உண்டு என்றோ அல்லது சுதந்திரம் இருக்கிறது என்றோ கூறப்படுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது" என்று அந்த அறிவிப்பு கூறியது. இதனையடுத்தே, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவைகள் பதவியேற்றன.
ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் இருக்கும் என்ற பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, அன்றாட அலுவல்களில் ஆளுநர்கள் தலையிடக்கூடாது என்ற உறுதியைப் பெற்ற பிறகே, மாநில அரசுகள் பதவியேற்ற நிகழ்வை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில், ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் மிக மோசமான மோதல் நடந்த காலகட்டம்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஆளுநர் சென்னா ரெட்டியும் மோதிக்கொண்ட காலகட்டம்.

பட மூலாதாரம், Getty Images
1991 - 96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த டாக்டர் மாரி சென்னா ரெட்டி இதுபோல எப்படிச் செயல்படுவதெனக் காட்டியிருக்கிறார்.
பல தருணங்களில் தமிழ்நாடு அரசின் செயலர்களை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து நிர்வாகம் குறித்து கேட்டறிந்திருக்கிறார். தலைமைச் செயலர் ஹரி பாஸ்கரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான கோப்பை மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அதில் கையெழுத்திட மறுத்தார் சென்னா ரெட்டி.
ஜெயலலிதா அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரை பல முறை சந்தித்தார். அரசு நிர்வாகம் தொடர்பான தகவல்கள் தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டினார். ஆளுநர் - முதல்வர்கள் இடையிலான மோதலின் கறுப்புப் பக்கங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மோதல்கள் நீண்டன.
அதேபோல, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநராகப் பதவிவகித்த பன்வாரிலால் புரோகித், மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைளில் இறங்கினார். பல மாவட்டங்களுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அந்தத் தருணத்தில் இருந்த தமிழ்நாடு அரசுக்கு இவை தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும், ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அரசு நீடிக்க வேண்டும் என்ற கவலை இருந்ததால் அது மோதலாக உருப்பெறவில்லை.
அவருக்குப் பிறகு, ஆளுநரான ஆர்.என். ரவியும் மாநிலத்தின் நிர்வாகத்தில் தானும் முடிவெடுக்க முடியுமெனக் காட்ட விரும்புகிறார். தமிழ்நாட்டின் சூழல் ஆர்.என். ரவிக்குப் புரியவில்லை என பலர் கருதினாலும், அதைத் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களை அவர் தொடர்ந்து சந்தித்து, மாநில அரசியல் குறித்து அவர்களுடைய கருத்துக்களை பெற்றுவருகிறார்.
இருந்தாலும் சமூகவலைதளங்கள் தீவிரமாக இயங்கும் இந்தக் காலகட்டத்தில் அவரால் எந்த அளவுக்கு மாநில அரசுக்கு எதிராகச் செயல்பட முடியும் என்பது சந்தேகம்தான். அப்படி நடக்கும் பட்சத்தில் தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வைத்து, ஆளுநருக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்க முயலும். தமிழ்நாடு சட்டப்பேரவையில், திங்கக்கிழமையன்று தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே அதற்கு உதாரணம்.
இது தவிர, ஆளுநருடைய நடவடிக்கைகள் எந்த அளவுக்கு மாநில பா.ஜ.கவுக்கு பலனளிக்கும் என்பதும் கேள்விக்குறிதான். "ஆர்.என். ரவியின் நடவடிக்கைகள் ஒருபோதும் மாநில பா.ஜ.கவுக்கு பலனளிக்காது. மக்களிடம் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்" என்கிறார் என். ராம். இந்தக் கருத்தை ஏற்பதாக இருந்தால், தி.மு.க. அரசுக்கு நிர்வாக ரீதியான நெருக்கடி தருவதைத் தவிர, வேறு எதையும் சாதிக்காது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












