தமிழ்நாடு என்ற பெயரும் தொடர் சர்ச்சைகளும் - பின்னணி என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி
    • எழுதியவர், இரா.சிவா
    • பதவி, பிபிசி தமிழ்

"தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்சையாகியுள்ளது.

75-ஆவது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்தக் கருத்தைக் கண்டித்து திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரிவினையையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் ஒற்றை நோக்கத்துடன் நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் ஆளுநர் வெளிப்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மைக்காலங்களில் தமிழ், தமிழ்நாடு, திராவிடம், திராவிட இயக்கம் மற்றும் சனாதனம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் கருத்துகள் அனைத்தும் தொடர் சர்ச்சையாகி வருகின்றன.

தமிழ்நாடு என்ற சொல்லின் தொன்மை

இந்தியா என்ற சொல் புழக்கத்திற்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு என்ற சொல் புழக்கத்திற்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தியாகு.

”இந்தியா என்ற பெயர் பழக்கத்திற்கு வருவதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ்நாடு என்ற பெயர் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ’இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்’ என்றுதான் சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்துள்ளார். இதேபோல பரிபாடலிலும் தமிழ்நாடு என்ற சொல் உள்ளது” என்கிறார் தியாகு.

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தோழர் தியாகு

பட மூலாதாரம், FACEBOOK/THOZHAR THIYAGU

படக்குறிப்பு, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தியாகு

தமிழ்நாடு என்ற பெயரின் பின்னணி குறித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியினர் மெட்ராஸ், மதராஸ், சென்னை என மூன்று பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். இதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, வேறு நாட்டினர் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று காமராஜர் சொன்னார்.

அந்தக் காலகட்டத்தில் ப்ளீடிங் மெட்ராஸ் என்று ஒரு துணி இங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. எனவே மெட்ராஸ் என்றால்தான் வெளிநாட்டினருக்குத் தெரியும், தமிழ்நாடு என்று வைத்தால் எப்படி அவர்களுக்கு புரியும், இந்தத் துணி விற்பனை ஆக வேண்டாமா, நமக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் என்ற பெயர்தான் சரியாக இருக்கும், தமிழில் வேண்டுமானால் சென்னை என்று வைத்துக் கொள்வோம் என காமராஜர் சொன்னார்.

பின்னர், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மபொசியின் தமிழரசுக் கழகம் போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகள் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தினர். காங்கிரஸ்காரராக இருந்தாலும் பெயர் மாற்றத்திற்காக 72 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்தார்.

முதலில், தமிழ்’நாடு’ என்ற பெயர் வைத்தால் இந்தியா என்ன என்று பக்தவச்சலம் சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், கோரிக்கை தொடர்ந்து வலுத்த பிறகு அனைவருமே ஏற்றுக்கொண்டனர். 1967இல் சி.என். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு என்றே மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுவதற்கான தீர்மானம் 1967 ஜூலை 18ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அனைவருமே வெல்க தமிழ்நாடு என்று ஒருமனதாக முழக்கம் எழுப்பினர். அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற ஒருவருடம் வரை காலம் எடுத்தது.

அதற்கெல்லாம் முன்பு நாடாளுமன்றத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பூபேஷ் குப்தா இது தொடர்பாக தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மசோதாவை காங்கிரஸ் கட்சியினர் தோற்கடித்தனர்” என்றார் தியாகு.

இந்தியாவிற்கு எதிரானது அல்ல

தனித்த கலாசாரம், பண்பாடு கொண்ட இனத்திற்கு தனித்தேசியம் இருப்பது இயல்பானதுதான் என்கிறார் வரலாற்று பேராசிரியர் கருணானந்தன்.

”இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்னரே தமிழ் என்ற மொழி இருக்கிறது. அதையொட்டி தனி கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளது அப்படியென்றால் அவர்களுக்கென தனித்தேசியம் இருப்பது இயல்பானதுதான். ரஷ்யாவில் சோவியத் யூனியன் இருந்த போது கூட அதில் இருந்த நாடுகளில் கஜகஸ்தான் போன்று ’தான்’ என்ற பெயருடன் முடியும் நாடுகள் இருந்தன. அதில் உள்ள தான் என்பதும் தமிழ்நாடு என்பதில் உள்ள நாடும் ஒரே பொருள்தான் கொள்ளும்.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போல தமிழ்நாட்டின் பெயரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரதேசம் என்றால் தேசத்தின் துணைப்பகுதி என்ற பொருள் வரும். அதைத்தான் ஒற்றை இந்தியா தத்துவம் கொண்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தனித்தன்மை கொண்ட நாடுகளின் ஒருங்கிணைப்புதான் இந்தியா. அந்த தனித்தன்மையை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதுதான் இவர்களது எண்ணமாக இருக்கிறது.

 வரலாற்று பேராசிரியர் கருணானந்தன்
படக்குறிப்பு, வரலாற்று பேராசிரியர் கருணானந்தன்

இவர்களுக்கு நாடு என்பதில் பிரச்னை இல்லை. தமிழ்நாடு என்பதில்தான் பிரச்னை. கொஞ்ச காலத்திற்கு முன் இவர்கள்தான் கொங்கு நாடு, கொங்கு தேசம் என்று ஆரம்பித்தார்கள். அது இவர்கள் சொல்லும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இல்லையா?

தமிழ்நாடு என்பது தமிழர்களின் ஒற்றுமையைக் குறிப்பதற்கான சொல்தானே ஒழிய இந்தியாவிற்கு எதிரானது அல்ல. இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் இந்தப் பெயரால் என்ன பிரச்னை என்று விளக்க வேண்டும்.

இதே ஆளுநர்தான் சனாதனம், ஆன்மிகம் குறித்தெல்லாம் பேசினார். அவர் இவ்வாறு பேசுவதெல்லாம் அரசியலமைப்பிற்கு முரணான செயல். இந்தியா என்றைக்கும் ஒற்றை நாடாக இருந்தது இல்லை. அவ்வாறு சொல்வது அப்பட்டமான பொய். பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அந்தப் பொய்யைச் சொல்லக் கூடாது” என்கிறார் வரலாற்று பேராசிரியர் கருணானந்தன்.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு நீண்ட போராட்டமும், தியாகமும் இருப்பதாகக் கூறும் தியாகு, தமிழ்நாடு ஆளுநர் என்ற பெயரில்தான் ஆர்.என்.ரவி சம்பளம் வாங்குகிறார், கொள்கைப் பிடிப்பாளராக அவர் இருந்தால் தனக்கு சம்பளம் வேண்டாம் எனக் கூறட்டும் என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: