அர்ஷ்தீப் வீசிய நோபால்களால் தோற்றுப் போனதா இந்திய அணி?

பட மூலாதாரம், BCCI
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீச்சில் கட்டுக்கோப்பு இல்லாததே தோல்விக்குக் காரணம் என்று பேச்சு எழுந்திருக்கிறது. 16 ரன்களில் தோற்றுப் போன ஒரு போட்டியில், 7 நோபால்கள் வீசப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோபால்களை வீசியது சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, போட்டிக்குப் பிந்தைய பேட்டியிலும் இதைக் கடுமையான சொற்களால் குறிப்பிட்டார்.
“நோபால்களை இலவசம் போல வாரிக் கொடுக்கக்கூடாது. டி20 கிரிக்கெட்டில் நோபால் வீசுவது குற்றம்”
இந்திய அணி பந்துவீசிய 19-ஆவது ஓவரில் ஷனகாவின் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். ஆனால் இந்திய அணியால் அதைக் கொண்டாட முடியவில்லை. காரணம், பந்து வீசிய அர்ஷ் தீப் சிங் கிரீஸை தாண்டி பந்தை வீசியதால் நோபால் என அறிவிக்கப்பட்டது.
அந்தப் பந்தில் உபரியாக ஒரு ரன் பெற்ற இலங்கை அணிக்கு, ப்ரீகிட் மூலம் போனாஸாக 6 ரன்கள் வேறு கிடைத்தன. ஆமாம். அந்தப் பந்தை ஷனகா சிக்சருக்கு அனுப்பிவிட்டார். 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய இலங்கை அணிக்கு கூடுதலாக ரன்கள் கிடைப்பதற்கு இந்த நோபால் காரணமாக அமைந்தது.
அர்ஷ்தீப்பின் அடுத்த பந்தும் நோபாலாக மாற இலங்கைக்கு கூடுதல் உபரி ரன்கள் கிடைத்தன. அர்ஷ்தீப் ஓவரில் தப்பிய ஷனகா, கடைசி ஓவரில் மூன்று சிக்சர்களை அடித்து இலங்கையின் ரன் எண்ணிக்கையை எதிர்பாராத உச்சத்துக்குக் கொண்டு சென்றார்.
கடைசிக் கட்டத்தில் மாத்திரமல்ல, இந்திய அணியின் பந்துவீச்சு தொடக்கத்திலேயே தடுமாறியதற்கு நோபால்களே காரணமாக அமைந்தன.
இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் அந்த ஓவரின் கடைசிப் பந்தை வீசி முடிப்பதற்குள் திணறிவிட்டார். அந்தப் பந்தை நோபாலாக வீசியதால் இலங்கைக்கு உபரி ரன் கிடைத்தது. அடுத்து ப்ரீகிட்டாக வீசிய பந்தும் நோபாலாக அமைய அதில் 4 ரன்களை அடித்தார் மென்டிஸ்.
மீண்டும் அடுத்த பந்தும் நோபால். இதில் மென்டிஸ் சிக்சர் அடித்தார். அவர் கடைசிப் பந்தை வீசி முடிக்கும்போது, அந்தப் பந்தில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தன. இலங்கை பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அங்கேயே அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது.

பட மூலாதாரம், BCCI
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 5 நோபால்களை வீசிய ஒரு பந்துவீச்சாளர் என்ற பெயர் அர்ஷ்தீப் சிங்குக்கு கிடைத்திருக்கிறது. இரண்டே ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 37 ரன்களைக் கொடுத்தார். அவரது பந்துவீச்சில் இது மிகவும் மோசமானதாக அமைந்துவிட்டது.
அர்ஷ்தீப் மட்டுமல்லாமல் உம்ரன் மாலிக், ஷிவம் மாவி ஆகிய இருவரும் தலா ஒரு நோபாலை வீசினார். மொத்தமாக 7 நோபால்கள் வீசப்பட்டதால் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நோபால்கள்தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே இதை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.
“7 நோபால்களை வீசுவது கூடுதலாக ஒரு ஓவரை வீசுவது போன்றது” என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், BCCI
போட்டியில் நடந்தது என்ன?
இலங்கை அணி முதல் ஓவரில் 2 ரன்களோடு தனது ஆட்டத்தைத் தொடங்கியது. யார்க்கர் பாலுடன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தொடங்கினார்.
ஆனால், இரண்டாவது ஓவரில் அஜந்தா மெண்டிஸ், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கான ரன் கணக்கைத் தொடங்கி வைத்தார். அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் ஒரு ஓவரிலேயே அடுத்தடுத்து மூன்று நோ பால் விழுந்த நிலையில் இலங்கை அணி அந்த ஓவர் இறுதியில் 21 ரன்களுடன் இருந்தது.
அடுத்தடுத்து பவுலிங் போட்ட ஷிவம் மாவி, அக்சர் பட்டேல், யஸ்வேந்திர சாஹல், என்று இந்திய அணி தரப்பில் பந்துவீச்சு பாணியை மாற்றி முயன்று கொண்டிருந்தனர். ஆனால், மெண்டிஸ் தொடர்ந்து அடித்த பவுண்டரிகள் இலங்கை அணியின் ஸ்கோர் கணக்கை ஆறாவது ஓவர் தொடங்கியபோது 50 ரன்களுக்குக் கொண்டு சென்றது.
ஏழாவது ஓவரிலும் 8வது ஓவரிலும் நிஸ்ஸாங்க, மெண்டிஸ் ஆகியோர் அடித்த சிக்ஸர்களும் பவுண்டரிகளும் 8வது ஓவர் இறுதியில் இலங்கை அணிக்கு 80 ரன்களைக் குவிக்க உதவியது. 9வது ஓவர் வரை இலங்கை தரப்பில் நிஸ்ஸாங்கவும் மெண்டிஸும் ஆடிக் கொண்டிருந்த அதிரடி ஆட்டத்தை யஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் மெண்டிஸ் எல்பிடபுள்யூ மூலம் அவுட்டானார்.
அதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஓவர்களில் பனுகா ராஜபக்ஷவும்(10வது ஓவரில்) பதும் நிஸ்ஸாங்கவும்(12வது ஓவரில்), அவுட்டானார்கள். 12வது ஓவர் இறுதியில் இலங்கை மூன்று விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்திருந்தது. 13வது ஓவரில் சாஹலுக்கு பதிலாக ஷிவம் மாவி பந்துவீச்சைத் தொடர்ந்தார். அசலங்க பேட்டிங்கின்போது அடித்த சிக்சர் மூலம் இலங்கை அணி 100 ரன்களைத் தாண்டியது.
அதற்கு அடுத்த ஓவரிலேயே தனஞ்சய டி சில்வா ரன் அவுட் ஆனார். ஆனால், அசலங்க விடாமல் 15வது ஓவரில் இரண்டு சிக்ஸ்களை அடித்து அணியின் ரன் கணக்கை 129 ஆக உயர்த்தினார். இலங்கை அணியின் ரன் எடுக்கும் வேகத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு பந்துவீசிய உம்ரான் மாலிக், அசலங்கவை அவுட்டாக்கினார்.

பட மூலாதாரம், BCCI
அவரைத் தொடர்ந்து வனிண்டு ஹசரங்கவும் உம்ரான் வீசிய 16வது ஓவரிலேயே அவுட்டானார். அந்த ஓவரில் அசலங்க ஒரு சிக்சர் அடித்திருந்தாலும், உம்ரான் மாலிக் பந்து வீச்சில் இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிந்த நிலையில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தது.
இந்தியா தனது பந்துவீச்சில் 7 நோ பால்களை வீசியது. அதில் ஐந்து நோ பால்கலை அர்ஷ்தீப் சீங் வீசியிருந்தார். டி20 தொடர்களில் தொடர்ந்து மூன்று நோ பால்களை வீசிய வீரர் என்ற பெயர் தற்போது அர்ஷ்தீப் சிங்குக்கு வந்துள்ளது. இந்தப் போட்டி அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை.
அவர் நோ பால் வீசியது இலங்கை அணிக்குச் சாதகமாகவும் அமைந்தது. அந்த நோ பால்களை பவுண்டரிக்கு ஃபோரும் சிக்ஸுமாக பறக்கவிட்டு, தனது அணிகு ரன்களைக் குவித்தார் குசல் மெண்டிஸ். அவர் வீசிய ஒரு ஓவரில், 6 பந்துகள் மற்றும் 3 நோ பால்களில் இலங்கை அணி 19 ரன்களை எடுத்தது.
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, 20 பால்களை 50 ரன்களை அடித்தார். இதன்மூலம், டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் க்ரீன் உள்ளார்.

பட மூலாதாரம், BCCI
இலங்கையின் அதிரடி பந்துவீச்சும் ஃபீல்டிங்கும்
இலங்கை அணி நிர்ணயித்த ஸ்கோரை தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் தொடக்கமாக இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் பந்தை அநாயசமாக பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இஷான், ஷுப்மன் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே இந்திய அணி 12 ரன்களோடு தனது கணக்கைத் தொடங்கியது.
ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கக் காத்திருந்தார் கசுன் ரஜிதா. அவருடைய பந்துவீச்சின் தொடக்கத்திலேயே இஷான் கிஷன் அவுட்டானார். இலங்கை அணிக்கான விக்கெட் கணக்கையும் அவர் அதன் மூலம் தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, அதிரடியாக பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் அதே ஓவரில் தீக்ஷனவின் கேட் மூலம் கில்லையும் அவுட்டாக்கினார் ரஜிதா. மூன்றாவது ஓவரை வீசிய மதுஷங்கவும் இரண்டாவது ஓவரில் அதிரடியாக பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கிய ராகுல் திரிபாதியை ஐந்து ரன்களோடு மெண்டிஸின் கேட்ச் மூலம் வெளியேறச் செய்தார்.
இந்தியாவின் ஆட்டத்தை இலங்கை அணியின் பந்துவீச்சும் கடுமையான ஃபீல்டிங்கும் திணறடித்துக் கொண்டிருந்தது. ஐந்தாவது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவும் மெண்டிஸின் கேட்ச் மூலம் அவுட்டானார். ஐந்தாவது ஓவர் வரை நான்கு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், இலங்கை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் ஐந்து ஓவர் இறுதியில் 49 ரன்களைப் பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து 10வது ஓவர் வரை ரன்கள் ஏதும் பெரிதாக எடுக்க முடியாமல், இலங்கை அணியின் ஃபீல்டிங்கில் இந்திய அணி திணறிக் கொண்டிருக்க, 10வது ஓவர் முடியும்போது தனது ஐந்தாவது விக்கெட்டாக தீபக் ஹூடாவையும் இந்தியா இழக்க நேரிட்டது. வனிண்டு ஹசரங்க டி சில்வா பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா கேட்ச் மூலம் தீபக் ஹூடா அவுட்டானார். பத்து ஓவர்கள் முடிந்தபோது இந்திய அணியின் மொத்த ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு 64 ஆக மட்டுமே இருந்தது.
மேலும், 16ஆவது ஓவரில் அரை சதம் அடித்த அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் வனிண்டு டி சில்வாவின் கேட்ச் மூலம் அவுட்டானார். இருபதாவது ஓவருக்குள் செல்லும்போது, 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. ஆனால், இறுதி ஓவரில் தசுன் ஷனகவின் பந்துவீச்சில் இந்திய அணியால் நான்கு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதி ஓவரில், அக்சர் பட்டேல், ஷிவம் மாவி ஆகிய இருவரும், கருணாரத்னே, தீக்ஷனா ஆகியோர் கேட்ச் பிடித்ததன் மூலம் அவுட்டானார்கள். இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிய முதல் இரண்டு ஓவர்களிலேயே முடிவாகிவிட்டதைப் போல் இருந்தது. அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள், இலங்கையின் ஸ்கோரை முந்துவதை இந்திய அணிக்குச் சவாலாக்கியது.

பட மூலாதாரம், BCCI
ஆனால், அக்சர் பட்டேலும் சூர்யகுமார் யாதவும் இறுதிவரை தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். 207 ரன்கள் என்ற பெரிய சேஸிங் ஆட்டத்தில், வெறும் 16 ரன்கள் வித்தியாசத்திலேயே இந்தியா தோற்றுள்ளது என்றால், அதற்கு இவர்களுடைய அதிரடி ஆட்டமும் ஒரு முக்கியக் காரணம்.
“பந்துவீச்சு, பேட்டிங் என்று இரண்டிலுமே இலங்கையின் பவர்பிளே எங்களுக்குச் சவாலாக இருந்தது. இந்த நிலையில், செய்யவே கூடாத அடிப்படையான தவறுகளை நாங்கள் செய்துள்ளோம்,” என்று ஹர்திக் பாண்ட்யா ஆட்டம் முடிந்த பிறகு தெரிவித்தார்.
“மோசமான நிலையில் நாம் இருக்கலாம், ஆனால் அடிப்படைகளை விட்டு விலகியிருக்கக் கூடாது. இந்தச் சூழ்நிலையில் அது மிகவும் கடினமாக இருந்தது,” எனக் கூறியவர் அர்ஷ்தீப் சிங்கின் நோ பால் குறித்தும் பேசினார். “முந்தைய போட்டிகளிலும் அவர் நோ பால் வீசியுள்ளார். அது குற்றஞ்சாட்டுவதைப் பற்றியதல்ல. ஆனால், நோ பால் வீசுவது ஒரு குற்றம்,” என்றவர் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்தும் பாராட்டினார்.
ஆட்டத்தின் மத்தியப் பகுதியில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக்க. “தொடக்க ஆட்டக்காரர்களால் ஆட்டம் அமைக்கப்படுகிறது. ஃபினிஷர்கள் சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைப்பதற்கு மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் நன்றாக விளையாட வேண்டும். அதற்கு இந்திய பேட்ஸ்மேன்களும் ஒரு காரணம்.
அவர்கள் எங்கள் கைகளில் இருந்த ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். ஆனால், இறுதியில் ஒருவழியாக எங்கள் கைகளுக்குக் கொண்டு வந்துவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.
இந்திய அணி இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும்கூட, ஆரம்பத்தில் விட்டதைப் பிடிப்பதற்காக இறுதி வரை போராடியது. ஆனால், இறுதியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












