ரொனால்டோ ஆசிய லீக்கில் நுழைந்ததன் மூலம் இந்திய அணிகளுடன் மோத வாய்ப்புள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
போர்ச்சுகல் நட்சத்திர ஸ்டிரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். இனி ஆசிய கால்பந்து போட்டிகளில் விளையாடப் போகும் ரொனால்டோ, இந்திய அணிகளுடன் மோதுவதற்கு வாய்ப்புள்ளதா?
மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ தற்போது இந்த அணியில் இணைந்துள்ளார்.
இந்த அணிக்காக 2025ஆம் ஆண்டு வரை ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு தருவதற்கு அல்-நாசர் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பர ஒப்பந்தங்களைச் சேர்த்தால் சுமார் 1,775 கோடி ரூபாய் அளவுக்கு அவருடைய வருமானம் இருக்கும் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.
“புதிய கால்பந்து லீக்கில், வேறொரு நாட்டில் ஆடும் அனுபவத்தைப் பெறுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்,” என்று இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ கூறினார்.
மேட்ரிட், மிலன், முனிச் என்று ஆடிய இடங்களில் எல்லாம் இறுதிச்சுற்று வரை சென்று தனது அதிரடியைக் காட்டி, மக்களின் கரகோஷங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்பியவர் ரொனால்டோ.
ஆனால், சௌதி அரேபியாவில் அல்-நாசரின் சிறிய மைதானமான மிர்சூல் பூங்காவில் அவர் எதிர்பார்த்த கரகோஷங்களை எழுப்புவதற்கான கூட்டம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
இருப்பினும், ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றியாளர்களாக கோலோச்சி வரும் அல்-ஹிலால் அணிக்கு தீவிர போட்டியாளராக இருக்கும் அல்-நாசர் அணிக்கு அவர் செல்வது அந்தப் பகுதிகளில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அல்-நாசர் அணிக்கு ரொனால்டோ எவ்வளவு முக்கியம்?
தனது 37 வயதில் ரொனால்டோ இந்த அணிக்கு வந்துள்ளார். இருப்பினும், அவருடைய தொழில்முறை கால்பந்து வாழ்வில், 819 கோல்களை அடித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
அதில், 700 கோல்களை கிளப் போட்டிகளில் அடித்துள்ளார். கடந்த சீசனில் மேன்செஸ்டர் யுனைடெடின் முதன்மை கோல் ஸ்கோரராக 24 கோல்களை அடித்துள்ளார். அதில், 18 கோல்கள் ப்ரீமியர் லீக்கில் அடித்தவை.
இருப்பினும், அவருக்கும் மேன்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்குமான ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் மொத்தமாகச் சேர்த்து மூன்று கோல்களையே அடித்துள்ளார்.
கத்தாரில் உலகக்கோப்பை போட்டியிலும், ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி ஆகிய சுற்றுகளில் அவர் போர்ச்சுகலுக்கு பெரியளவிலான பங்களிப்பை வழங்கவில்லை.
இந்நிலையில், அவர் தற்போது ஆசிய லீக் போட்டிகளின் பக்கம் வந்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், இது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என்றும் அல்-நாசர் அணிக்கும் இது நல்ல வலுவைச் சேர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ரொனால்டோவின் புதிய கிளப் எப்படிப்பட்டது?
அல்-நாசர் கிளப் 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சௌதி தலைநகரான ரியாத்தில் இது அமைந்துள்ளது. அந்நாட்டின் உச்சகட்ட பிரிவான சௌதி தொழில்முறை லீக் போட்டிகளில் ஆடும் 16 அணிகளில் இதுவும் ஒன்று. கடந்த சீசனில் அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
சௌதி தொழில்முறை லீக் போட்டிகளில் 9 முறை அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அந்த லீக் போட்டியின் வரலாற்றில் இது இரண்டாவது அதிக வெற்றி எண்ணிக்கை. முதல் இடத்தில், 18 வெற்றிகளோடு அல்-நாசருக்கு நீண்டகால போட்டியாளராக இருக்கும் அல் ஹிலால் அணி உள்ளது.
2018-19 போட்டியின்போது கடைசியாக அல் நாசர் கடைசியாக சௌதி தொழில்முறை லீக் கோப்பையைக் கைப்பற்றியது. 1995ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்தபோது, அவர்கள் ஆசிய கால்பந்து லீக் போட்டியில் தங்களுடைய சிறந்த ஆட்டத்தைக் காட்டினார்கள்.
இந்நிலையில், ரொனால்டோவை தற்போது தங்கள் அணிக்கு வர வைப்பதன் மூலம், உள்நாட்டு லீக் போட்டிகளிலும் சரி, ஆசிய லீக் போட்டிகளிலும் சரி தங்களுக்குப் பெரிய பக்கபலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான வடிவத்தை ஆசிய கால்பந்து சம்மேளனம் தற்போது மாற்றியுள்ளது. அல்-நாசர் 2022-23க்கான குரூப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமெனில், அதற்கு சௌதி ப்ரீமியர் லீக்கில் வெற்றி பெற வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த சீசனுக்கான ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில், அணிகள் அனைத்தும் 6 வெளிநாட்டு வீரர்களை தங்கள் அணிகளில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படும். ஆனால், அதில் ஒருவரேனும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சௌதி ப்ரீமியம் லீக்கில், கிளப் அணிகள் 8 வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ஆட்டங்களில் ஒரே நேரத்தில் ஏழு பேரைத்தான் களமிறக்கலாம். அல்-நாசர், சௌதியின் நாக்-அவுட் போட்டியான கிங்ஸ் கோப்பையையும் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது.
அல்-நாசர் அணியின் பயிற்சியாளர் ரூடி கார்சியா, ஜூன் 2022 முதல் அந்த அணிக்குப் பயிற்சியளித்து வருகிறார். கேமரூனின் கத்தார் உலகக்கோப்பை நாயகனாக அறியப்பட்ட வின்சென்ட் அபூபக்கர், ஆர்செனல் அணியின் முன்னாள் கோல் கீப்பராக இருந்த கொலம்பியாவை சேர்ந்த டேவிட் ஒஸ்பினா, பிரேசில் மிட்ஃபீல்டர் லூயிஸ் கஸ்டாவோ ஆகிய சிறப்பான வீரர்களும் அல்-நாசர் கிளப்புக்காக விளையாடுகின்றனர்.
இப்போதைய சௌதி ப்ரீமியர் லீக்கில், 11 போட்டிகளில் 26 புள்ளிகளோடு அல்-நாசர் முதலிடத்தில் உள்ளது. அதன் எதிரியாக அறியப்படும் அல் ஹிலால் ஐந்தாவது இடத்தில் 22 புள்ளிகளோடு உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ரொனால்டோவுடன் மோதும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைக்குமா?
அல்-நாசர் கிளப்புக்கு வந்ததன் மூலம் ரொனால்டோவை இனி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் பார்க்க முடியாது. அதுமட்டுமின்றி அவர் முதன்முறையாக ஆசிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவுள்ளார்.
இதன்மூலம் ரொனால்டோ முதல்முறையாக இந்தியாவில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
2021-22 சௌதி ப்ரீமியர் லீக் சாம்பியனாக இருப்பதால், அல் ஹிலால் ஏற்கெனவே 2023-24 ஆசிய சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்றுக்குள் நேரடியாக நுழையும் தகுதியைப் பெற்றுள்ளது. சௌதி அரேபியாவிலிருந்து செல்லக்கூடிய மற்ற இரண்டு அணிகளுக்கான இடங்கள், 2022-23 ப்ரீமியர் லீக் சாம்பியன் மற்றும் கிங்ஸ் கோப்பை வெற்றியாளருக்குச் செல்லும்.
ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஏற்கெனவே 2021-22 கிங்ஸ் கோப்பையை வென்ற அல் ஃபய்ஹாவுக்கு சென்றுள்ளது. அல்-நாசர் அணியைப் பொறுத்தவரை, 2022-23இல் மூன்று குரூப் சுற்றுகள் மற்றும் ஒரு ப்ளே-ஆஃபில் விளையாடவுள்ளார்கள். 2021-22, 2022-23 இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பொறுத்து ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு இந்திய அணிகள் தகுதி பெறுவது முடிவாகும்.

பட மூலாதாரம், Getty Images
2021-22 லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றிபெற்று ப்ளே-ஆஃபில் தங்களுடைய இடத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், அல்-நாசர் 2022-23 சௌதி ப்ரீமியர் லீக் அல்லது கிங்ஸ் கோப்பையை வென்றால், இந்திய கிளப்புகளோடு மோதும் வாய்ப்பு 2023-24 ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் கிடைக்க வாய்ப்புள்ளது. அது நடந்தால், ரொனால்டோ இந்தியாவில் விளையாடும் வாய்ப்பு உருவாகும்.
அதுமட்டுமின்றி, ரொனால்டோவின் கடுமையான போட்டியாளர்களில் ஒருவரான லியோனெல் மெஸ்ஸி, ஏற்கெனவே 2010இல் கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானத்தில் வெனிசுலாவுடன் ஒரு நட்பு ஆட்டத்தில் விளையாடினார். ஆக, இந்திய மண்ணில் அவர் விளையாடிய பெருமை நிகழ்ந்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அல்-நாசர் கிளப்புடன் மோதும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தால், ரொனால்டோவோடு மோதும் வாய்ப்போடு அவர் இந்திய மண்ணில் விளையாடுவதற்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













