'அனைத்தையும் மாற்றிய கால்பந்து ராஜா' - நெய்மார், மெஸ்ஸி, எம்பாப்பே, ரொனால்டோ அஞ்சலி

பட மூலாதாரம், Getty Images
"கிங்" பெலே "எல்லாவற்றையும் மாற்றினார்" என்று பிரேசில் முன்கள வீரர் நெய்மார், கால்பந்து ஜாம்பவான் பெலேக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தனது 82-ஆவது வயதில் பெலே காலமானார். அவருக்கு கால்பந்து நட்சத்திரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
"பெலேவுக்கு முன், கால்பந்து ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது" என்று நெய்மார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"பெலே அனைத்தையும் மாற்றினார். கால்பந்தை கலையாகவும், பொழுதுபோக்காகவும் மாற்றினார். ஏழைகளுக்காக, கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார்."

பட மூலாதாரம், Getty Images
"முக்கியமாக, அவர் பிரேசிலை அறியும்படி செய்தார். கால்பந்தும் பிரேசிலும் அவரால் மேம்பட்டன. மன்னருக்கு பிரேசில் நன்றி செலுத்துகிறது! அவர் மறைந்துவிட்டார், ஆனால் அவரது மந்திரம் நிலைத்திருக்கும்."
பிரான்ஸ் முன்கள வீரரும் நெய்மரின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வீரருமான கிலியன் எம்பாப்பே பெலேவை "கால்பந்தாட்டத்தின் ராஜா" என்று வர்ணித்துள்ளார். "அவரது பாரம்பரியத்தை ஒருபோதும் மறக்க முடியாது" என்றும் கூறினார்.
தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பெலே தனது நாட்டுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் உட்பட 21 வருட வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர், பெலே 2000 ஆம் ஆண்டில் ஃபிஃபாவின் நூற்றாண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"மறைவில்லாத மன்னர் பெலேவுக்கு சாதாரணமாக விடை தருவது, கால்பந்து உலகம் முழுவதையும் தற்போது சூழ்ந்திருக்கும் வலியை வெளிப்படுத்த போதுமானதாக இருக்காது” என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.
"தொலைவில் இருந்தால்கூட, அவர் எப்பொழுதும் என்மீது காட்டிய அக்கறை, நாங்கள் சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு கணத்திலும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.”

பட மூலாதாரம், Getty Images
“கால்பந்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரிடமும் அவரது நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும்.”
உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டோவும் பெலேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
"தனித்துவம் வாய்ந்த மேதை. நுட்பம், கற்பனை, துல்லியம். அனைத்துக் காலத்திலும் சிறந்தவர்"
பெலேவுக்கு புகழாரம் சூட்டியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "தாழ் நிலையில் இருந்து வந்த கால்பந்து ஜாம்பவான் பெலேவின் எழுச்சி, வேறு எவருடன் ஒப்பிட முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












