‘சௌதி அரேபியாவை பாராட்டாதீர்கள்’ - ரொனால்டோவுக்கு அம்னெஸ்டி அறிவுரை கூறுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குக் கிடைத்திருக்கும் புதிய தளத்தைப் பயன்படுத்தி சௌதி அரேபியாவில் மனித உரிமைகள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக் கொண்டிருக்கிறது.
37 வயதான ரொனால்டோ, 2025 ஆம் ஆண்டு வரை சௌதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பில் ஆடுவதற்கு ஆண்டுக்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய மதிப்பின்படி அவருக்கு ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கும் அதிகமான பணம் கிடைக்கும்.
ரொனால்டோவின் ஒப்பந்தம் "அரசியலுக்காக விளையாட்டைப் பயன்படுத்தும் உத்தியின் (ஸ்போர்ட்ஸ் வாஷிங்)" ஒரு பகுதியாகும் என்று அம்னெஸ்டி கூறுகிறது.
செவ்வாயன்று அல் நாசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரொனால்டோ சௌதி அரேபியாவை "அற்புதமான நாடு" என்று அழைத்தார்.
சௌதி அரேபியாவின் உத்தி என்ன?
சௌதி அரேபியா விளையாட்டு நிகழ்வுகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. தனியாகப் பிரிந்த LIV கோல்ஃப் தொடருக்கு நிதி ஆதரவு அளித்தது. உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை, ஃபார்முலா ஒன் கிராண்ட்ப்ரீ ஆகியவற்றையும நடத்துகிறது.
அதே நேரத்தில் பிரீமியர் லீக் கிளப்பான நியூகேஸில் யுனைடெட்டை கையகப்படுத்த சௌதி அரேபிய பொது பொது முதலீட்டு நிதியம் நிதி உதவி அளித்தது.
விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் சௌதி அரேபியாவும் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பெண்ணுரிமை பேசுவோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் நிர்வாகத்தின் கீழ் நடந்தாலும், குற்றச்சாட்டுகளும் நீடித்திருக்கின்றன.
2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய பட்டத்து இளவரசர் உத்தரவிட்டார் என்று மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் நம்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டை முகமது பின் சல்மான் தொடர்ந்து மறுக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அம்னெஸ்டியின் அறிவுரை
"சௌதி அரேபியாவை விமர்சனம் செய்யாமல் பாராட்டுகளை மட்டும் வழங்குவதற்கு பதிலாக, ரொனால்டோ தனது கணிசமான பொது தளத்தை பயன்படுத்தி நாட்டின் மனித உரிமைகள் பிரச்னைகளை கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்" என்று அம்னெஸ்டியின் மத்திய கிழக்கு ஆய்வாளர் டானா அகமது கூறினார்.
"கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக சௌதி அரேபியா தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றுகிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில், 81 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பலருக்கு நியாயமான விசாரணை நடக்கவில்லை”.
"கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது புகழையும் பிரபலம் என்கிற அந்தஸ்தையும் சௌதியின் ‘விளையாட்டு உத்திக்கான’ கருவியாக மாற்ற அனுமதிக்கக் கூடாது. நாட்டில் உள்ள எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு அல் நாசரில் இருக்கும் நேரத்தை அவர் பயன்படுத்த வேண்டும்." என்று டானா அகமது கோரியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
செளதியில் தீவிரமாகும் கால்பந்து மோகம்
உலக கோப்பையில் செளதி அரேபியா அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை தோற்கடித்து ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
நவம்பர் 22ஆம் தேதியன்று போட்டியைக் காண வசதியாக, அந்த நேரத்தில் சவுதி அரேபியாவில் அமைச்சகங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அர்ஜென்டீனாவை சவுதி அரேபியா வென்ற உற்சாக மிகுதியில், அடுத்த நாளை தேசிய விடுமுறை தினமாக மன்னர் சல்மான் அறிவித்தார்.
இந்த வெற்றியை சவுதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரபு உலகமும் கொண்டாடி மகிழ்ந்தது. சமூக வலைதளங்களில் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் செளதியின் வெற்றியை தங்களது வெற்றியாகவே கருதி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இந்த வெற்றி ஒன்றும் தற்செயலானது அல்ல. இந்த தருணத்திற்காக செளதி அரேபிய அணி 3 ஆண்டுகளாக கடுமையாக தயாராகி வந்ததாக அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும், இளவரசருமான அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் ஃபெய்சல் தெரிவித்தார். கால்பந்துக்கு செளதி விளையாட்டு அமைச்சகம் தரும் ஊக்கம், அதன் பாதை மற்றும் நோக்கங்களை தெளிவாக உணர்த்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
செளதியின் தொலைநோக்குத் திட்டம்
கத்தாரில் உலகக்கோப்பை நடந்தேறிய போது, உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) தலைவர் இன்ஃபான்டினோவுடன் செளதி பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஒன்றாக பலமுறை தென்பட்டார். 2016-ல் வெளியிடப்பட்ட அவரது தொலைநோக்குத் திட்டம் 2030-ல் விளையாட்டுத் துறைக்கு பிரதான இடம் தரப்பட்டுள்ளது.
அதன் பிறகு, செளதி அரேபியாவின் விளையாட்டு உலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடிந்தது.
2030-ம் ஆண்டிற்குள் விளையாட்டில் மக்களின் பங்களிப்பை 40 சதவீதமாக உயர்த்துவது, சர்வதேச அரங்கில் சவுதி விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது, விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவது ஆகிய 3 முக்கிய நோக்கங்களை இந்த தொலைநோக்குத் திட்டம் கொண்டுள்ளது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசிய வீடியோ ஒன்றை கால்பந்து பத்திரிகையாளரான யூரி லெவி பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில், ரொனால்டோவின் செளதி அரேபிய வருகை மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்று பட்டத்து இளவரசர் கூறியிருக்கிறார். அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












