விராட் கோலி, சுப்மன் கில் அதிரடி சதம்- பந்து வீச்சில் கலக்கிய சிராஜ்: இலங்கைக்கு எதிராக இந்திய அணி `சாதனை` வெற்றி

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதத்தில் ஒரு சாதனை - விராட் கோலி (கோப்புப் படம்)

இலங்கை உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோரின் சதம் , முகமது சிராஜ் பந்து வீச்சு ஆகியவை இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற தகுதியை இந்த வெற்றியின் மூலம் இந்தியா பெற்றுள்ளது.

இலங்கை- இந்தியா இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் 5 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்த ஜோடி, அதன் பின்னர் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. லஹிரு குமார வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த ரோகித் அடுத்த பந்தில் 1 ரன் அடித்து சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். மீதமிருந்த 4 பந்துகளிலும் 4 ஃபோர் அடித்த கில் அணியின் ரன்னை மளமளவென உயர்த்தினார்.

அணியின் ஸ்கோர் 95 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 42 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதையடுத்து சுப்மன் கில்லுடன் இணைந்த விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம், சுப்மன் கில் தனது சதத்தை எட்டினார். அவர் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து வெளியேறியபோது இந்திய அணியின் ஸ்கோர் 226 ஆக இருந்தது. இதையடுத்து கோலியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்த்தார்.

கடந்த ஆட்டத்தில் 4 ரன்களில் வெளியேறிய விராட் கோலி, இந்த ஆட்டத்தில் மிகவும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்தப் பின் தனது அதிரடியை தொடர்ந்த விராட் கோலி, அடுத்த 21 பந்துகளில் 50 அடித்து 150 ரன்கள் என்னும் இலக்கை எட்டினார். இறுதி வரை ஆட்டம் இழக்காத அவர், 110 பந்துகளில் 166 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் லஹிரு குமார மற்றும் கசூன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் கோலியின் இந்த இன்னிங்க்ஸ் அமைந்துள்ளது. தான் விளையாடிய கடந்த 4 ஆட்டங்களில் விராட் கோலி அடித்த 3வது சதம் இதுவாகும். கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் (113) கண்ட அவர், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம்(113), 2வது போட்டியில் 4 ரன்கள், தற்போது சதம் என எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சச்சினின் சாதனை முறியடிப்பு

விராட்

பட மூலாதாரம், Getty Images

ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனை தாண்டியுள்ளார். 

ஒரு நாள் போட்டி: சதத்தில் சச்சினை விரைவில் முந்த வாய்ப்பு

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 

கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 46-வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 74-வது சதமாகவும் இது பதிவாகியுள்ளது.

தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி

391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நுவானிது ஃபெர்னாண்டோ ஆகியோர் தொடக்க இணையாக விளையாடினார். 2வது ஓவரில் சிராஜின் பந்துவீச்சில் அவிஷ்கா ஆட்டமிழந்தார். 3வது ஓவரில் இந்திய பந்துவீச்சாளர் சமி தொடர்ந்து 5 வைட்களை வீசி ரன்களை விட்டுக்கொடுத்தார். இதை தவிர்த்து பார்க்கும்போது இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சையே வெளிப்படுத்தினர்.

இதனால், இலங்கை அணியால் அதிரடியாக ரன்களை சேர்க்க முடியாமல் போனது. இறுதியில் 22 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. நுவானிது ஃபெர்னாண்டோ, தஸுன் ஷனகா, கசுன் ரஜிதா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கங்களில் ரன்களை எடுத்தனர். இதனால் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், முகமது சமி மற்றும் குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 77 ரன்கள் , அந்த அணியின் 4வது குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இலங்கை எடுத்திருந்த 43 ரன்களே அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

அதேவேளையில், ஒருநாள் போட்டியில் அதிக ரன் (317) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: