இன்னொரு சதம் அடிக்க முடிந்தது எப்படி? கோலி கூறிய மந்திரம்

கோலி

பட மூலாதாரம், BCCI/TWITTER

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விராட் கோலி, சமீப காலமாக தனது ஆட்டத்தைப் புதுப்பித்து உலகத்தை வியக்க வைத்திருக்கிறார்.

2019 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதில்கூறும் விதமாக இன்னொரு சதத்தை இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்.

“ஒவ்வொன்றும் கடைசி ஆட்டம்தான்” என்கிறார் விராட் கோலி. அதுதான் அவருடைய மந்திரம். இத்தனை ஆண்டுகளில் எப்போதும் போலத்தான் தான் தயாராகி ஆட வந்ததாக அவர் கூறுகிறார்.

இத்துடன் அவர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று பலமுறை பேசப்பட்டது உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் ஏதோ ஒரு வகையின் தன்னை நிரூபித்து மீண்டு வந்திருக்கிறார்.

ஆசிய கோப்பை டி20 போட்டியில் சதம் அடித்த தருணம் அப்படிப்பட்ட தருணங்களுள் ஒன்று. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமும் அவர் மீண்டு வந்துவிட்டார் என்பதற்கான இன்னொரு அடையாளமாக பார்க்கப்பட்டது. 

இப்போது தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்து இப்போதைக்கு தாம் கிரிக்கெட்டை விட்டு விலகப்போவதில்லை என்று மறைமுகமாக அறிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 80 பந்துகளில் அவரால் சதம் அடிக்க முடிந்தது. 87 பந்துகளில் 113 ரன்களைக் குவித்திருக்கிறார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் 45-வது சதம். ஒட்டுமொத்தத்தில் 73-வது சதம். 265 ஒரு நாள் போட்டிகளில் 45 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும், டி20 போட்டிகளில் ஒரு சதமும் அடித்திருக்கிறார் கோலி.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வரிசையில் இரண்டாவது இடத்தில் கோலி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கோலியைக் காட்டிலும் அதிக சதங்கள் முதலிடத்தில் இருக்கிறார். 

கோலி

பட மூலாதாரம், BCCI/Twitter

"விரக்தியடைந்தால் வெற்றி இல்லை"

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக் கொண்ட கோலி இத்தனை ஆண்டுகளில் தாம் கற்ற அனுபவத்தை ஓரிரு வாக்கியங்களில் கூறிவிட்டுச் சென்றார்.

“ஆட்டம் மிக எளிமையாகவே இருக்கிறது. நாம்தான் அதை நமது சொந்தப் பற்றுகளால் அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம். அந்தப் பற்று இல்லாவிட்டால் அச்சமில்லாமல் ஆட முடியும்” என்று கூறினார் விராட் கோலி.

ஆட்ட நேரத்தில் விரக்தி அடைந்தால் அது எதற்கும் உதவாது என்று கூறிய கோலி, "நான் தயாராவது எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எனது நோக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். சில சமயங்களில் விரும்பும் ரன்களை நான் பெறமுடியவில்லை. ஆனால் இன்று நான் பந்தை நன்றாக அடிப்பது போல் உணர்ந்தேன். விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் நான் மறுமுனையில் நீடித்து மற்ற நண்பர்களுடன் பேட் செய்ய வேண்டியிருந்தது” என்று கூறினார்.

அவரது பேட்டிங்கின்போது, கோலி இரண்டு முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முதலில் 52 ரன்களிலும், பின்னர் மீண்டும் 81 ரன்களிலும் அந்த வாய்ப்பை இலங்கை தவறவிட்டது. 

“அதிர்ஷ்டம் காரணமாக நான் சதம் அடித்திருக்கலாம். இந்த சிறிய அதிர்ஷ்டத்தை நான் பெற்றதற்கு நன்றி கூறுகிறேன். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."

கோலி

பட மூலாதாரம், Getty Images

இலங்கைக்கு எதிராக அதிக சதம் 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் சச்சினுடனான இடைவெளியை வேகமாக குறைத்து வரும் கோலி, அவரது மற்ற சில சாதனைகளை தகர்த்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து கோலி தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சச்சின் 8 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அவரைத் தாண்டி கோலி 9 சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இருவருமே 9 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். 

கோலி

பட மூலாதாரம், BCCI/Twitter

சொந்த மண்ணில் அதிக சதம்

ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 12,500 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 20 சதங்களுடன் கோலி சமன் செய்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 99 போட்டிகளிலேயே அதனை சாதித்துள்ளார். 

சச்சின்

பட மூலாதாரம், Getty Images

சதத்தில் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 5 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 

சச்சின் தனது கடைசி 5 சதங்களை அடிக்க 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். கோலியைப் பொருத்தவரை 2020-ம் ஆண்டுக்குப் பிறகு 2 சதங்கள் மட்டுமே கண்டுள்ளார். ஆனால், அவையிரண்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் வந்துள்ளன.

இதே பார்மை கோலி தொடர்ந்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் கண்ட வீரர் என்ற சாதனையை அவர் முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: