KKR vs SRH: ஒரே பந்தில் மாறிய ஆட்டம் - கே.கே.ஆர்-க்கு 'மரண பயம்' காட்டிய கிளாசன் செய்த சிறு தவறு

பட மூலாதாரம், IPL/Twitter
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 412 ரன்கள், 29 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகள், ரஸலின் ருத்ர தாண்டவம், கிளாசனின் ‘கிளாசிக்கான’ பேட்டிங், 3 ஓவர்களில் திரும்பிய ஆட்டம், கடைசி ஓவரில் எகிறிய இதயத் துடிப்பு என குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கேகேஆர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் பயணித்து, 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் போராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதரபாத்.
உண்மையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா திருடிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கிளாசனின் ஒட்டுமொத்த உழைப்பும் 2 பந்துகளில் வீணாகிவிட்டது.
திக்... திக்... கடைசி ஓவர்

பட மூலாதாரம், IPL/Twitter
மூன்று ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிக் காட்டிய ஹென்றிக் கிளாசன், கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது ராணா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் விளாசி கேகேஆர் அணி வீரர்களின் நம்பிக்கையை உடைத்தார். ஆனால் 2வது பந்தில் மட்டும் கிளாசன் ரன் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை தக்கவைத்து இருந்தால் முடிவு வேறு மாதிரி திரும்பியிருக்கும்.
ஆனால், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஷான்பாஸ் அகமதுவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க 3வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 4வது பந்தில் புதிய பேட்டர் யான்சென் ஒரு ரன் எடுத்தார். 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் களத்தில் இருந்ததால் முடிவு சன்ரைசர்ஸ் பக்கம் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், ராணா 5வது பந்தை ஸ்லோ பவுன்ஸராக வீச, கிளாசன் அடித்த ஷாட் தேர்டுமேன் திசையில் சூயசிடம் கேட்சாக மாறியதும் ஆட்டம் கை நழுவியது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் சன்ரைசர்ஸ் வெற்றி, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை ஏற்பட்டது. கேப்டன் கம்மின்ஸ் கடைசிப் பந்தைத் தவறவிடவே, சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தார் ராணா.
ஹீரோ ஆகும் நேரம்

பட மூலாதாரம், IPL/Twitter
வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “17வது ஓவரில் இருந்தே என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிட்டன. நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் கிளாசன் இருந்தவரை கடைசி ஓவரில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்று நினைத்தேன்.
கடைசி ஓவரை ஹர்சித் வீச வந்தபோது பதற்றத்துடனே இருந்தார். என்னிடம் அந்த நேரத்தில் அனுபவமான பந்துவீச்சாளர் இல்லை. எனக்கு ராணா மீது நம்பிக்கை இருந்தது. ஏதோ நல்லது நடக்கும் என்று தெரிந்தது.
நான் ராணாவிடம், 'தோற்றால்கூடப் பரவாயில்லை. இதுதான் நீ ஹீரோவாக உருவாகச் சரியான நேரம். வாய்ப்பைத் தவறவிடாதே. எது வேண்டுமானாலும் நடக்கட்டும்' என்று உற்சாகப்படுத்தினேன். அவரும் சிறப்பாகப் பந்து வீசினார்.
ரஸல் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அற்புதமாகச் செயல்பட்டார். நரைன் தனது அனுபவமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தொடக்கமே இதுபோன்ற வெற்றியாக அமைந்துவிட்டால், அணிக்கு பெரிய உற்சாகமாக அமையும். சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் அதில் முக்கியமானது ஃபீல்டிங்,” எனத் தெரிவித்தார்.
ஆபத்தான பேட்டர் கிளாசன்

பட மூலாதாரம், IPL/Twitter
ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியே வெற்றி பெற 99 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்த நிலையில் அந்தக் கணிப்பை கடைசி 3 ஓவர்களில் 88 சதவீதமாக கிளாசன் மாற்றிக் காட்டினார்.
கடந்த ஆண்டிலிருந்து டி20 உலகில் ஆகச் சிறந்த பேட்டராக கிளாசன் இருந்து வருகிறார். கிளாசனை முதல் 10 பந்துகளில் ஒரு அணி ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால், எதிரணிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும் அளவுக்கு அவர் ஆபத்தான பேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் சுழற்பந்துவீச்சை அல்வா சாப்பிடும் வகையிலும், வேகப்பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் வகையிலும் பேட் செய்யும் ‘பேட்டிங் ராட்சதன்’ கிளாசன் என்றுகூடக் கூறலாம்.
3 ஓவர்கள் ஆட்டத்தை திருப்பிய கிளாசன்

பட மூலாதாரம், IPL/Twitter
இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான். கடைசி 5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் அப்துல் சமது, ஷான்பாஸ் 17 ரன்கள் சேர்த்தனர்.
வருண் வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸர் உள்ளிட்ட 21 ரன்களை கிளாசன் விளாசினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சைப் புரட்டி எடுத்த கிளாசன் 4 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். இந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தை கேகேஆர் அணியிடம் இருந்து சன்ரைசர்ஸ் கைக்கு மாற்றியது.
ரஸலால் முடிந்தது கிளாசனால் முடியாதா
கிளாசன் 29 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் பவுண்டரியே கிடையாது, 8 சிக்ஸர்கள் மட்டும்தான்.
கொல்கத்தா வெற்றி பெறாவிட்டால் ஆட்டநாயகன் விருது கிளாசனுக்கு கிடைத்திருக்கும். ஆனால், கிளாசனின் ஆட்டம் ரஸலுக்கு போட்டியாகவே இருந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமான ஆன்ட்ரூ ரஸலின் கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்துக்குப் பதிலடியாக கிளாசன் பேட்டிங் அமைந்தது.
ரஸல் 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
துணிச்சல் ராணா
கடைசி ஓவரில் 12 ரன்களை வெற்றிகரமாக ஹர்சித் ராணா தனது துணிச்சலான பந்துவீச்சால் டிபெண்ட் செய்து கொடுத்தார். ஏற்கெனவே மதம்கொண்ட யானை போல் ஃபார்மில் கிளாசன் இருந்தபோது, கடைசி ஓவரை வீசுவது எளிதல்ல.
அனுபவமற்ற ராணா முதல் பந்தை வீசியதுமே நினைத்ததுபோல் கிளாசன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஆனால், அடுத்தடுத்து ராணா பந்துவீச்சில் காட்டிய ‘வேரியேஷன்தான்’ ஷான்பாஸ், கிளாசன் விக்கெட்டுகளை வீழ்த்தியது. இல்லாவிட்டால் கிளாசன் இருந்த ஃபார்முக்கு 2 பந்திலேயே ஆட்டம் முடிந்திருக்கும்.
கிளாசன் செய்த தவறு

பட மூலாதாரம், IPL/Twitter
கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட கிளாசன், தொடர்ந்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்ததுதான் கிளாசன் செய்த பெரிய தவறு.
கிளாசன் இருந்த ஃபார்முக்கு அடுத்த ஒரு பந்தை தவறவிட்டாலும், 3வது பந்தில் நிச்சயம் சிக்ஸர் கிடைத்திருக்கும் ஆட்டம் முடிந்திருக்கும்.
ஆனால், ஷான்பாஸுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தபோது ஷான்பாஸ் விக்கெட்டை இழந்தார், நெருக்கடி அதிகரிக்கவே பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு கிளாசனும் விக்கெட்டை இழந்தார். கிளாசன் ஸ்ட்ரைக்கை தக்க வைக்காமல் இருந்ததுதான் மிகப்பெரிய தவறு.
நெருக்கடி தரும் இலக்கு
வெற்றி இலக்கு 209 ரன்கள் என்றவுடன் எந்த அணிக்கும் இயல்பாகவே பெரிய நெருக்கடி, அழுத்தம் இருக்கும்.
ரன்ரேட் 10 என்ற கணக்கில் பயணித்தால்தான் இலக்கை எட்டமுடியும் என்று சன்ரைசர்ஸ் அணிக்கு தெரிந்துவிட்டது.
மயங்க் அகர்வால்(32), அபிஷேக் ஷர்மா(32) நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி மயங்க் விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த ராகுல் திரிபாதி(20), மார்க்ரம்(18) ஸ்கோர் செய்ய முயன்றும் முடியவில்லை.
சுழற்பந்துவீச்சில் நெருக்கடி
கேகேஆர் அணி வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து நடுப்பகுதி ஓவர்களில் ரன்ரேட்டை கட்டிப்போட்டது. சுனில் நரேன், வருண், சூயஸ் எனத் துல்லியமாக சுழற்பந்து வீசி சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்தனர். ஆனால், கிளாசன் களமிறங்கிய பின்புதான் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.
ஆட்டம் மாறிய 2 ஓவர்கள்

பட மூலாதாரம், IPL/Twitter
கிளாசன் களமிறங்கியபோது சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 8.2 ஓவர்களில் 102 ரன்கள் தேவைப்பட்டது. மெதுவாக ஆடத் தொடங்கிய கிளாசன் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார்.
வருண் பந்துவீச்சுக்கு தொடக்கத்தில் தடுமாறிய கிளாசன் அவரின் 18வது ஓவரை பிழிந்து எடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஓவரை பங்கம் செய்த கிளாசன், 26 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றில் வள்ளல் பந்துவீச்சாளராக ஸ்டார்க்கை மாற்றிவிட்டார் கிளாசன்.
இரண்டு ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கிளாசன் திருப்பி ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்தார். அப்துல் சமதுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 44 ரன்கள் சேர்த்த கிளாசன், ஷான்பாஸ் அகமதுடன் சேர்ந்து, 58 ரன்கள் சேர்த்து கிளாசன் ஆட்டத்தை மாற்றினார்.
வலுவான சுழற்பந்துவீச்சு
கொல்கத்தா அணி நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரைன், வருண், சூயஷ் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை திறமையாகப் பயன்படுத்தியது.
கிளாசன் களமிறங்காததை 3 பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகப் பந்துவீசி சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். அதிலும் நரைன் தான் வீசிய 4 ஓவரில் கொடுத்த 19 ரன்களில் ஒரு பவுண்டரிகூட சன்ரைசர் பேட்டர்களை அடிக்கவிடவில்லை. அதில் 8 டாட் பந்துகள் அடங்கும்.
அதேபோல ‘இம்பாக்ட் ப்ளேயர்’ சூயஷ் சர்மாவும் 2 ஓவர்களையும் கட்டுக்கோப்புடன் வீசினார். கிளாசனிடம் சிக்காதவரை வருண் சக்கரவர்த்தியும் துல்லியமாகவே பந்துவீசியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் நடுப்பகுதி ஓவர்களில் திணறியதற்கு கேகேஆர் சுழற்பந்துவீச்சு முக்கியக் காரணம்.
ஃபார்முக்கு வந்த ரஸல்

பட மூலாதாரம், IPL/Twitter
கேகேஆர் அணி ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 208 ரன்கள் சேர்ப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஆன்ட்ரூ ரஸிலின் “மசுல்” பேட்டிங்கும், அறிமுக வீரர் பில் சால்ட், ராமன்தீப் சிங்கின் கேமியோதான்.
அதிலும் பில்சால்ட் 40 பந்துகளில் 54 ரன்களும், ராமன்தீப் 17 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்து கேகேஆர் ஸ்கோரை உயர்த்தினர். ஃபினிஷிங் ரோலில் வந்த ரஸல் 25 பந்துகளில் 7சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 64 ரன்கள் சேர்த்துப் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.
ரஸல் களமிறங்கும் வரை புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்க்கண்டே சிறப்பாகவே பந்துவீசி இருந்தனர். ஆனால், புவனேஷ்வர் 17வது ஓவரை வீச வந்தபோது ரஸல் 18 ரன்களை வெளுத்தார்.
நடராஜன் வீசிய 18வது ஓவரில் 15 ரன்கள், புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என 26 ரன்களை ரஸல் எடுத்தார். 20 பந்துகளில் அரைசதம் அடித்த ரஸல் கேகேஆர் அணிக்கு தன்னுடைய 200வது சிக்ஸரையும் அடித்தார். கட்டுக்கோப்பாகப் பந்தவீசிய சன்ரைசர்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை வாரி வழங்கியது.
மிரட்டலாக வந்த நடராஜன்
சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனின் பந்துவீச்சு கடந்த சீசன்களில் இல்லாதவகையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது. தொடக்கத்திலே வெங்கடேஷ், கேப்டன் ஸ்ரேயாஸ் இரு பெரிய விக்கெட்டுகளை என நடராஜன் வீழ்த்தி தனது துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
ரஸலிடம் சிக்காதவரை நடராஜன் சராசரி சிறப்பாகவே இருந்தது. கடைசி நேரத்தில் ரிங்கு சிங்கின் விக்கெட்டையும் நடராஜனின் கைப்பற்றினார்.
நான்கு ஓவர்கள் வீசிய நடராஜன் 32 ரன்கள் கொடுத்தார், இதில் ரஸல் விளாசிய 15 ரன்களை கழித்துப் பார்த்தால் நடராஜனின் சராசரியும், 3 விக்கெட்டுகளும் அற்புதமான பந்துவீச்சாக அமையும்.

பட மூலாதாரம், IPL/Twitter
சன்ரைசர்ஸ் செய்த தவறுகள்
சன்ரைசர்ஸ் அணியில் கம்மின்ஸ், நடராஜன், யான்சென், புவனேஷ்வர் என 4 திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்தும் கொல்கத்தா ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடியவில்லை.
கேப்டன் கம்மின்ஸ் போன்ற அனுபவம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே தனது ஸ்பெல்லை முடிக்காமல், டெத் ஓவர்களில் வீசி இருந்தால் ரன்ரேட்டை குறைத்திருக்கலாம்.
அதேபோல டெத் ஓவர்களில் யான்சென் சிறப்பாக வீசக்கூடியவர். புவனேஷ்வர் ஸ்பெல்லை தொடக்கத்திலேயே முடிக்க வைத்து, யான்செனை கடைசியில் பந்துவீச வைத்திருக்கலாம்.
ஷான்பாஸ் அகமதுவையும் சரியாகப் பயன்படுத்தாமல் கம்மின்ஸ் விட்டுவிட்டார். ஷான்பாஸ் முதல் ஓவரில் 14 ரன்கள் சென்றவுடன் அவருக்கு ஓவர் தருவதை நிறுத்தாமல், கூடுதலாக சில ஓவர்கள் வழங்கியிருக்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












