பஞ்சாபை வெற்றி பெறச் செய்த சென்னையின் 'சுட்டிக் குழந்தை' - காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் என்ன சாதித்தார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்” என்று கிரிக்கெட்டில் சொல்வதுண்டு. அதுபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் கோட்டை விட்ட கேட்ச் உள்ளிட்ட பல்வேறு தவறுகளால் அந்த அணி வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தாரை வார்த்தது.
முலான்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கி 4 பந்துகள் மீதிமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சி.எஸ்.கே. அணியில் முன்பு விளையாடிய, சென்னை ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கரண் பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண், பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான ஆட்டத்தை டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் தொடங்கினர்.
சாம் கரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி 10 ரன்களை மார்ஷ் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார். அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரில் வார்னர் சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை எகிறச்செய்தார். ரபடா வீசிய 3வது ஓவரிலும் மார்ஷ் பவுண்டரி, சிக்ஸர் என 12 ரன்களைச் சேர்க்கவே டெல்லி அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது.
4வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய மார்ஷ் 2வது பந்தில் சஹரிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஷாய் ஹோப் களமிறங்கினார். ரபாடா வீசிய 5-வது ஓவரில் வார்னர் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 11 ரன்களை சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
ஹோப், ரிஷப் பந்த் ஏமாற்றம்
பொறுமையாக பேட் செய்த ஹோப் அதிரடிக்கு மாறினார். சஹர் வீசிய 7-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களை விளாசினார். இதனால் 8-வது ஓவரில் ஹர்சல் படேல் பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது, ஹர்சல் படேல் ஓவரின் கடைசிப் பந்தில் வார்னர்29 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கார் விபத்துக்குப்பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ரிஷப் பந்த் நீண்ட காலத்துக்குப்பின் களமிறங்கி ஹோப்புடன் சேர்ந்தார். ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்ய, ஹோப் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக்கொண்டார். 10ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்திருந்தது.
ஹோப் விக்கெட்டை வீழ்த்த ரபாடா அழைக்கப்பட்டார். ரபாடா வீசிய 11வது ஓவரில் சிக்ஸர் விளாசிய ஹோப், அதேஓவரில் ஷார்ட் கவரில் ஹர்பிரித் பிராரிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரிக்கி புயி களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். சஹர் வீசிய 12-வது ஓவரில் ரிஷப் பந்துக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை ஹர்சல் படேல் தவறவிட்டது மட்டுமின்றி பவுண்டரியும் கோட்டைவிட்டார்.
13-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். ஹர்சல் ஓவரில் பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய ரிஷப் பந்த், ஸ்லோபவுன்ஸரில் விக்கெட்டை இழந்தார். ஹர்சல் வீசிய ஸ்லோ பவுண்ஸரில் ஸ்குயர் திசையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சரிவில் சிக்கிய டெல்லி
பிரார் வீசிய 14-வது ஓவரில் ரிக்கி புயி 3 ரன்களில் விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 74 ரன்கள் வரை டெல்லி அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது.
சஹர் வீசிய 15-வது ஓவரில் ஸ்டப்ஸ் 5 ரன்னில் சசாங் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக பேட் செய்த அக்ஸர் படேல் 21 ரன்னில் ரன்அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்துவந்த சுமித் குமார் 2 ரன்னில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆபத்பாந்தவன் போரெல்
ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் அபிஷேக் போரல் வெளுத்து வாங்கிவிட்டார். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தி 10 பந்துகளில் 33 ரன்கள் என அழகான கேமியோ ஆடி அணியை மீட்டெடுத்தார். குல்தீப் யாதவ் கடைசிப் பந்தில் ஒரு ரன்எடுக்க முற்பட்டு ரன்அவுட்டாகினார். அபிஷேக் போரல் 33 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20வது ஓவர் தொடக்கத்தில் டெல்லி வெற்றி பெற 38 சதவீத வாய்ப்பு இருப்பாத கணினி முடிவுகள் தெரிவித்த நிலையில் 20வது ஓவர் முடிவில் 55 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் கிங்ஸ் அதிரடித் தொடக்கம்
175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஷிகர் தவண், பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே தவண் 2 பவுண்டரிகள், பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் விளாசி 17 ரன்களைக் குவித்தனர். இசாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் தவண் பவுண்டரி உள்பட 8 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.
விக்கெட் சரிவு
இசாந்த் சர்மா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவண் 22 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த பிரப்சிம்ரன் சிங் வந்தவேகத்தில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் 2 பவுண்டரிகளை விளாசினார்.
3வது பவுண்டரி அடிக்க ஸ்ட்ரைட் டிரைவ் ஆடியபோது, பந்து இசாந்சர்மா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டதால் ரன்அவுட் முறையிடப்பட்டது. இதில் 3வது நடுவர் தீர்ப்பில் இசாந்த் சர்மா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டது உறுதியாகவே, பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட் முறையில் வெளியேறினார். அடுத்து சாம் கரன் களமிறங்கி பிரப்சிம்ரன் சிங்குடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பிரப்சிம்ரன் அவசரம்
அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரிலும், குல்தீப் யாதவ் வீசிய 8-வது ஓவரிலும் பிரப்சிம்ரன், சாம் கரன் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். அதிலும் குல்தீப் தற்போது சர்வதேச அளவில் நல்லஃபார்மில் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் கூக்ளியாக வீசப்பட்ட பந்தை பிரப்சிம்ரன் சிங் லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க முற்பட்ட வார்னரிடம் கேட்சானது. பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் வெளியேறினார். 10ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது.
அடுத்து வந்த ஜிதேஷ் சர்மாவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 9 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து லியாம் லிவிங்ஸ்டோன் களமிறங்கி சாம்கரனுடன் சேர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக் கூட்டணி
14 ஓவர்கள் வரை ரன்ரேட் மெதுவாகவே சென்றது. மார்ஷ் வீசிய 15-வது ஓவரில் கரன் 2 பவுண்டரிகளும், லிவிங்ஸ்டோன் ஒரு சிக்ஸரும் விளாச 18 ரன்கள் கிடைக்கவே ஆட்டம் பரபரப்படைந்தது.
அதிரடியாக ஆடிய சாம்கரன் 39 பந்துகளில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.
கலீல் அகமது வீசிய 17-வது ஓவரை குறிவைத்த லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். 18 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. மார்ஷ் வீசிய 18-வது ஓவரில் சாம்கரன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், லிவிங்ஸ்டோன் ஒருசிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி 2 ஓவர்களில்...
கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கலீல்அகமது வீசிய 19-வது ஓவரில் சாம் கரன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களமிறங்கிய சசாங்க் சிங் வந்தவேகத்தில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கலீல் அகமது எடுத்ததால் ஆட்டம் பரபரப்பானது.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. லிவிங்ஸ்டோன் களத்தில் இருந்ததால் பஞ்சாப் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல், கடைசி ஓவரை சுமித்குமார் முதல் இரு பந்துகளை வைடாக வீசினார், 2வது பந்தில் லிவிங்ஸ்டோன் சிக்ஸருக்கு வின்னிங் ஷாட் அடிக்கவே பஞ்சாப் வெற்றி உறுதியானது.
4 பந்துகள் மீதிருக்கையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. லிவிங்ஸ்டோன் 21 பந்துகளில் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சொத்தையான பந்துவீச்சு
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் பலமாக அமைந்த வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா காயமடைந்தது அந்த அணிக்கு பலவீனமாக அமைந்தது. இதனால், மார்ஷ், கலீல் அகமதுக்கு முழு ஓவர்கள் வழங்க வேண்டியதிருந்தது. மார்ஷ் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களையும், கலீல் அகமது 43 ரன்களையும் வாரி வழங்கினார். இருவர் மட்டுமே சேர்ந்து 95 ரன்களை வழங்கி அணிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தினர்.
குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் தங்களுக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்தனர். இருவரின் பந்துவீச்சால்தான், நடுப்பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கலீல், மார்ஷ் பந்துவீச வந்தபின் லிவிங்ஸ்டோன், கரன் இருவரும் குறுகிய பவுண்டரி தொலைவைப் பயன்படுத்தி, குறிவைத்து டெல்லி கேபிடல்ஸ் அணியைத் தகர்த்தனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் கிடைத்த தருணத்தை பயன்படுத்தவில்லை. பேர்ஸ்டோ, தவண் ஆட்டமிழந்தவுடன் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தவறவிட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு பீல்டிங் இல்லை, சராசரிக்கும் குறைவாகவே பீல்டிங் தரம் இருந்தது. குறிப்பாக வார்னர் முக்கியமான கட்டத்தில் கேட்சை தவறவிட்டது ஆட்டத்தை தவறவிட்டதாக மாறிவிட்டது.
மார்ஷ், கலீல் அகமது இன்னும் லைன், லென்த்தில் பந்துவீசி இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர் ரன் ரேட்டை இறுக்கிப் பிடித்தனரே தவிர விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இதுபோன்ற அடுக்கடுக்கான தவறுகளால் வெற்றி வாய்ப்புகளை பஞ்சாபிடம் டெல்லி தாரை வார்த்தது.

பட மூலாதாரம், Getty Images
பதற்றமாக இருந்தது
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ இசாந்த் சர்மா காயமடைந்தது எங்களுக்கு பெரிய பாதிப்பாக அமைந்தது. அபிஷேக் போரல் கடைசி நேரத்தில் அடித்த கேமியோ ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தது. இசாந்த் சர்மா இல்லாததால் கூடுதல் பந்துவீச்சாளர்இல்லாதநிலையில் விளையாடினோம். நீண்டகாலத்துக்குப்பின் பேட்டிங் செய்த போது எனக்கு பதற்றம் இருந்தது. இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆடுகளம் அருமையாக இருந்ததால், அதிகமாக குறை கூறவிரும்பவில்லை. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் பாடம் கற்போம்” எனத் தெரிவித்தார்.
வெற்றி நாயகர்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு சாம் கரன்(63), லிவிங்ஸ்டோன்(33) ஆகியோரின் ஆட்டம்தான் முக்கியக் காரணமாகும். நீண்ட பேட்டிங் வரிசை வைத்திருந்தும் பெரிதாக எந்த பேட்டரும் சோபிக்கவில்லை. ஆனால் 5-வது விக்கெட்டுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை ஓவர்கள்
குறிப்பாக மார்ஷ், கலீல் அகமது ஓவர்களை குறிவைத்து இருவரும் வெளுத்து வாங்கியதுதான் ஆட்டத்துக்கு உயிரை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியின் பிடியில் இருந்தது. ஆனால், 15 ஓவர்களுக்குப்பின் இருவரின் மிரட்டல் அடியால், ஆட்டத்தின் போக்கு, டெல்லியிடம் இருந்து பஞ்சாப் கிங்ஸ் கரங்களுக்கு மாறியது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் அடித்த சாம் கரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












