தேர்தல் பத்திரம்: பா.ஜ.க.வுக்கு அதிக நிதி வழங்கியது யார்? மார்ட்டின், வேதாந்தா நிறுவனங்களிடம் அதிக நிதி பெற்ற கட்சி எது?

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (எம்இஐஎல்) பாஜகவுக்கு ரூ.584 கோடி நன்கொடை அளித்துள்ளது. அந்த நிறுவனம் தனது மொத்த நன்கொடையில் 60 சதவீதத்தை பாஜகவுக்கு வழங்கியுள்ளது.

எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நன்கொடையாளராலும் வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடை இதுவாகும். இது தவிர, தெலுங்கானாவில் கேசிஆர் கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு 195 கோடி ரூபாயை மேகா நிறுவனம் வழங்கியது. இந்தத் தொகை அவரது மொத்த நன்கொடையில் 20 சதவீதமாகும்.

தமிழ்நாட்டில் திமுக அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.85 கோடி பெற்றுள்ளது. அதன் துணை நிறுவனமான வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் காங்கிரசுக்கு ரூ.110 கோடியும், பாஜகவுக்கு ரூ.80 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் மூலம், எந்தக் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக அளவில் நன்கொடை கிடைத்துள்ளது என்ற அனைத்துத் தகவல்களும் பகிரங்கமாகியுள்ளன. இந்தத் தரவு ஏப்ரல் 12, 2019 முதல் 24 ஜனவரி 2024 வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஆகும்.

லாட்டரி கிங் என்று அழைக்கப்படும் மார்ட்டினின், பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.542 கோடியை திரிணாமுல் காங்கிரசுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

இந்தத் தொகையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 39.6 சதவீதமும், திமுக 36.7 சதவீதமும் (ரூ.503 கோடி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.154 கோடியும் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி ரூ.100 கோடி பெற்றுள்ளது.

மார்ச் 21ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களின் ஆல்பா எண் எண்களை வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனம் அல்லது நபரிடம் இருந்து எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பதை அறிய இந்த ஆல்பா எண் எண்கள் பயன்படுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவுக்கு முன், எஸ்பிஐ ஆல்பா எண்களை வழங்குவதைத் தவிர்த்து வந்தது.

முதல் தொகுப்பில், 386 பக்கங்களில், எந்தெந்த நிறுவனம், எந்த தேதியில், எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற தகவல் உள்ளது. தேர்தல் பத்திரத்தின் எண் மற்றும் அதை வழங்கும் கிளையின் குறியீடு ஆகியவை இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது தொகுப்பில், எந்தெந்தத் தேதியில் எந்தெந்த அரசியல் கட்சியால் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று 552 பக்கங்களில் பட்டியல் முறையில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பத்திர எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த கட்சி யாரிடம் இருந்து எவ்வளவு பெற்றது?

பாரதிய ஜனதா கட்சி

  • மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்துள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு ரூ.584 கோடி கொடுத்தது.
  • குயிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.375 கோடி நன்கொடை அளித்துள்ளது.
  • வேதாந்தா லிமிடெட் பாஜகவுக்கு ரூ.230.15 கோடி நன்கொடை அளித்தது.

திரிணாமுல் காங்கிரஸ்

  • ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.542 கோடி நன்கொடை அளித்துள்ளது
  • இந்த கட்சிக்கு ஹால்டியா எனர்ஜி ரூ.281 கோடி கொடுத்தது
  • தரிவால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.90 கோடி நன்கொடை அளித்தது
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சி

  • காங்கிரஸ் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிகபட்ச நன்கொடைகளைப் பெற்றது. இந்த நிறுவனம் காங்கிரசுக்கு ரூ.125 கோடி நன்கொடை அளித்துள்ளது
  • மேற்கு உ.பி பவர் டிரான்ஸ்மிஷன் காங்கிரசுக்கு ரூ.110 கோடி கொடுத்தது
  • எம்கேஜே எண்டர்பிரைசஸ் காங்கிரசுக்கு ரூ.91.6 கோடி கொடுத்தது

பாரத ராஷ்டிர சமிதி

  • தெலுங்கானாவின் இந்தக் கட்சிக்கு மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.195 கோடி கொடுத்தது
  • இந்த கட்சிக்கு யசோதா மருத்துவமனை ரூ.94 கோடி கொடுத்தது
  • இந்த கட்சிக்கு சென்னை கிரீன் வுட்ஸ் ரூ.50 கோடி கொடுத்தது

மேகா இன்ஜினியரிங் எவ்வளவு கொடுத்துள்ளது?

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், PREDDYOFFICIAL/INSTA

ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் ரூ.966 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது.

நிறுவனத்தின் முழுப் பெயர் மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் (MEIL). இது ஒரு சிறிய ஒப்பந்த நிறுவனமாகத் தொடங்கியது, இது இப்போது நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இந்த நிறுவனம் முக்கியமாக அரசு திட்டங்களில் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் அப்சா நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய பகுதியைக் கட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டத்தை மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் கையாள்கிறது. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் இது.

இந்நிறுவனம் நீர்ப்பாசனம், போக்குவரத்து, மின்சாரம் என பல துறைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் சுமார் 15 மாநிலங்களில் தனது வணிகத்தைச் செய்து வருகிறது.

நிறுவனம் Olectra எலக்ட்ரிக் பஸ்ஸையும் தயாரித்து வருகிறது.

ரேட்டிங் நிறுவனமான பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹுருன் இந்தியா ஆகியவற்றின் படி, இந்தியாவில் பட்டியலிடப்படாத முதல் 10 நிறுவனங்களில் மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாமிரெட்டி பிச்சி ரெட்டி என்பவரால் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பிச்சி ரெட்டியின் உறவினரான புரிபதி வெங்கட கிருஷ்ணா ரெட்டி இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். பத்துக்கும் குறைவானவர்களுடன் துவங்கிய நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாக விரிவடைந்துள்ளது. இப்போது அதன் வணிகம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது.

மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் துவங்கிய இந்நிறுவனம், 2006ல் மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமாக மாறியது.

நிறுவனம் தனது முதல் அலுவலகத்தை ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் திறந்தது. ஆரம்பத்தில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டது. ஆனால் 2014க்குப் பிறகு இந்நிறுவனத்தின் நிலை மாறியது.

தெலுங்கானா உருவான பிறகு, பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நிறுவனம் பெற்றது. விரைவில் நிறுவனம் ஆந்திரா மற்றும் வட இந்திய மாநிலங்களுக்கு விரிவடைந்தது.

ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம்

தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் அக்டோபர் 2021 இல் ரூ.195 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியபோது, ​​மிகப்பெரிய அளவிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

இந்த நிறுவனம் 2022 ஜனவரியில் இரண்டு முறை ரூ.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்நிறுவனத்தின் சமீபத்திய கொள்முதல் இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது. ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 30 டிசம்பர் 1991 இல் இணைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ளது, ஆனால் அதன் கணக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள முகவரி கொல்கத்தாவில் உள்ளது. இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் முன்பு மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது.

இந்த தகவலின்படி, இந்த நிறுவனம் இந்தியாவின் லாட்டரி துறையில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்றுமுதலுடன் முன்னணி நிறுவனமாக உள்ளது.

நிறுவன வலைத்தளத்தின்படி, 1991 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பல்வேறு மாநில அரசாங்கங்களின் பாரம்பரிய காகித லாட்டரிகளின் விநியோகத்தில் ஃபியூச்சர் கேமிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டின். மார்ட்டின் 'லாட்டரி கிங்' என்றும் அழைக்கப்படுகிறார்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, மார்ட்டின் 13 வயதில் லாட்டரி துறையில் நுழைந்தார் மற்றும் இந்தியா முழுவதும் லாட்டரி வாங்குவோர் மற்றும் விற்பவர்களின் பரந்த வலையமைப்பை உருவாக்கியுள்ளார். நிறுவனத்தின் இணையதளத்தின்படி, மார்ட்டின் நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் என்ற பட்டத்தை பலமுறை பெற்றுள்ளார்.

மார்ட்டின் அறக்கட்டளை வலைத்தளத்தின்படி, வணிக உலகில் சேருவதற்கு முன்பு, மார்ட்டின் முதலில் மியான்மரின் யாங்கூன் நகரில் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவரது குடும்பத்தை நடத்துவதற்கு ஒரு சிறிய சம்பளத்தை சம்பாதித்து வந்தார். "பின்னர், அவர் இந்தியாவுக்குத் திரும்பினார், அங்கு அவர் 1988 இல் தமிழ்நாட்டில் தனது லாட்டரி வியாபாரத்தைத் தொடங்கினார். படிப்படியாக கர்நாடகா மற்றும் கேரளாவை நோக்கி விரிவடைந்தார்."

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)