பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக சீனா கட்டிய ‘குவாதர்’ துறைமுகம் மூழ்குவது ஏன்?

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்
    • எழுதியவர், ரியாஸ் சோஹைல்
    • பதவி, பிபிசி உருது, கராச்சி

கஸ்பானோ பலூச்சின் வீடு குவாதர் துறைமுகத்தின் பழைய பகுதியில் உள்ளது. அது இப்போது மழையால் முற்றிலும் இடிந்ததுவிட்டது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மருமகன் ஒரு தையல்காரரிடம் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.

மீன்பிடி துறைமுக சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் கஸ்பனோ. 16 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாகவும், தண்ணீரின் அளவு மிகவும் அதிகமாக இருந்ததாகவும் கூறுகிறார். கஸ்பானோவின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் தாக்கிய புயலை விட இது மிகவும் மோசமானது.

கனமழையால் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. அதன்பிறகு, கஸ்பானோவின் வீடு, சமையலறை, சாலையின் குறுக்கே இருந்த ஒரு கடையும் இடிந்து விழுந்தது. தனது வீடு இடிந்து விழுந்ததால் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் கஸ்பானோ.

குவாதர் துறைமுகம் மூழ்குவது ஏன்?

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

இந்த கனமழை மிகவும் அசாதாரண ஒரு நிகழ்வு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியின் பிற்பகுதியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் ஒரே வாரத்தில் சுமார் 250 மிமீ மழை பெய்தது.

முன்னதாக, குவாதர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 38 மிமீ மழை பதிவானது. இயற்கை பேரழிவுகளைக் கையாள்வதற்கான மாநில அமைப்பான பிடிஎம்ஏ (PDMA- மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம்) அறிக்கையின்படி, 450 வீடுகள் மழையால் முற்றாக இடிந்துள்ளன.

அதேநேரத்தில் 8,200 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளன. இந்த மழையால் குவாதர் நகரம் ஏரி போல காட்சியளிக்கிறது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

2005 முதல் 2024 வரை, குவாதர் ஐந்து முறை நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளம் போன்ற சூழல், மழையால் மட்டும் ஏற்பட்டதா அல்லது குவாதரில் வேகமாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், திட்டங்களால் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறிய பிபிசி முயற்சித்துள்ளது.

சீனாவால் கட்டப்பட்ட துறைமுகம்

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

குவாதர் நகரில் பெரும்பாலும் வசிப்பது மீனவ மக்களே. ஆனால், 2007இல் முன்னாள் ராணுவத் தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் அங்கு துறைமுகத்தைத் திறந்து வைத்ததில் இருந்து, விஷயங்கள் வேகமாக மாறிவிட்டன. இந்த துறைமுகம் சீனாவால் கட்டப்பட்டது.

சிபிஇசி (சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை- CPEC) திட்டம் 2015இல் அறிவிக்கப்பட்ட போது, ​​குவாதர், இந்த திட்டத்தின் மையப் புள்ளியாக மாறியது.

ஆசிய வர்த்தகத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், நீண்டநாள் போட்டியாளரான இந்தியாவிற்கு எதிரான தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், மிகவும் தீவிரமாக பல பொருளாதார யுக்திகளை முன்னெடுத்து வருகிறது சீனா. அதன் முக்கியமான பகுதி தான் சிபிஇசி திட்டம்.

இந்த துறைமுகத்தின் உட்பகுதி மற்றொரு 'ஷென்சென்' என்று வர்ணிக்கப்பட்டது. ​​சீனாவின் மூன்றாவது பெரிய நகரமாக தற்போது மாறியுள்ளது ஷென்சென்.

கோ-இ-படீல் (Koh-e-Batil) மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட இந்த துறைமுகம் உள்ளூர் மக்களுக்கு பல தடைகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், மழைநீர் செல்வதற்கான பாதையையும் அடைத்தது.

கோ-இ-படீலுக்கும் துறைமுகத்துக்கும் இடையே அமைந்துள்ள கோத்ரி பஜார் என்ற அரசு உயர்நிலைப் பள்ளியை அடைந்த போது, ​​பள்ளியின் உட்புறமும், தரையும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காண முடிந்தது.

பள்ளியின் முதல்வர் முகமது ஹசன், நனைந்த பதிவேடுகளை என்னிடம் காட்டி, எதிரே உள்ள கணினி ஆய்வகத்தைக் காட்டி சைகை செய்தார். அங்கு அனைத்து கணினிகளும் தண்ணீரில் மூழ்கியிருந்தன.

முதல்வர் முகமது ஹசனின் கூற்றுப்படி, கனமழை பெய்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கனமழை பெய்தபோது தண்ணீர் கடலில் கலக்க வழி இருந்தது.

சீன கட்டுமானங்களால் இயற்கை நீர்வழித் தடங்கள் அடைப்பு

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

“முதலில் நிலத்திலிருந்து கடலுக்கு செல்லும் அமைப்பான ஜெட்டி கட்டப்பட்டது, பின்னர் துறைமுகம் கட்டப்பட்டது, அதன் பிறகு எக்ஸ்பிரஸ்வே கட்டப்பட்டது. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. முன்பு தண்ணீர் செல்வதற்கு ஒரு இயற்கை வாய்க்கால் இருந்தது, அதன் மூலம் தண்ணீர் கடலுக்குள் சென்றது.” என்கிறார் முகமது ஹசன்.

தொடர்ந்து பேசிய அவர், “சாலைகள் மூடப்பட்டன, ஆனால் மாற்று சாலைகள் அமைக்கப்படவில்லை. இப்போது, ​​தண்ணீர் செல்ல ஒரு வழி தேவை இல்லையா? இதனால் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தண்ணீர் சென்றதுடன், வீடுகளும் இடிந்து விழுந்தன” என்கிறார்.

குவாதர் துறைமுகத்தையும் மக்களையும் பிரிக்க ஒரு கான்கிரீட் சுவர் உள்ளது. மாலாபந்தின் ஒரு பகுதியில், மழை நீர் வெளியேறும் வகையில், ஒரு மூலையில் இருந்து சுவர் உடைக்கப்பட்டது.

இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சுவர்களை இடித்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குவாதர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் சையத் முகமது கூற்றின்படி, முன்பு துறைமுகப் பகுதியை நோக்கி நீர் ஓட்டம் இருந்தது. அப்போது அங்கு திறந்த வாய்க்கால் ஒன்று அமைக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டது.

அவர் கூறுகையில், “இந்த வாய்க்கால் ஏன் மூடப்பட்டது என்பது துறைமுகத்தை நிர்வகிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால் தண்ணீர் அனைத்தும் ஊரின் மயானம் வழியாக சென்று மாலாபந்த் பகுதிக்கு வந்தது." என்கிறார்.

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

கடற்கரைக்கு முன்பாக மரைன் டிரைவ் எனப்படும் ஆறுவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது அப்பகுதிக்கு அழகு சேர்த்தாலும், குடியிருப்பு பகுதிக்கும் கடலுக்கும் இடையே ஒரு அணையைப் போல உருவெடுத்துள்ளது.

துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள் கட்டமைப்புகளுக்கு குவாதரில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டில், துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல ஆறு வழிகள் கொண்ட 19 கிமீ விரைவுச் சாலையை அரசாங்கம் அமைத்தது.

இந்த சாலையால், நிலைமை மேலும் மோசமாகியது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மேற்பரப்பு, குடியிருப்பு பகுதியை விட உயரமாக இருக்கிறது. இதனால் இயற்கை வடிகால் கால்வாய்களும் அடைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முனிசிபல் கார்ப்பரேஷன் தலைவர் ஷெரீப் மியான்தத் கூறுகையில், “இது மெகா சிட்டி, துபாய் சிட்டி, சீபாக் சிட்டி என்று அழைக்கப்படுகிறது, ஆனால் முந்தைய குவாதர் இதை விட சிறப்பாக இருந்தது. மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் கடலுக்குச் சென்றது.

இங்கு வலப்புறமும் இடப்புறமும் இரண்டு வடிகால்கள் இருந்தன. இங்கிருந்து தண்ணீர் கடலில் கலக்கும் நிலை இருந்தது. இருபுறமும் மேம்பாடு என்ற பெயரில் சாலைகள் கட்டப்பட்ட போது பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்டன. கடல் நீர் உள்ளே வராமல் இருக்க இது செய்யப்பட்டது, இதனால் மழைநீர் அங்கு செல்லவில்லை” என்றார்.

மோசமான நிலையில் கழிவு மேலாண்மை திட்டங்கள்

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

முராத் பலோச் ஒரு மீனவர். 2010 மழையில், அவரது வீட்டின் மூன்று அறைகள் இடிந்து விழுந்தன.

சமீபத்தில் பெய்த மழையால், இவரது வீட்டின் இரண்டு அறைகள், கழிப்பறை, சமையலறை ஆகியவற்றில் இரண்டாவது முறையாக விரிசல் விழுந்தது.

நாங்கள் அவரைச் சந்தித்தபோது, ​​ஜெனரேட்டர் மூலம் வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

“முதலில் வாளிகள் மூலம் தண்ணீரை எடுக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. உள்ளூர் கார்ப்பரேட்டரிடம் சென்று ஜெனரேட்டர் வேண்டும் என்று கேட்டபோது பெட்ரோல் இல்லை என்று கூறிவிட்டார்” என்கிறார் முராத் பலோச்.

பெட்ரோலை தானே வாங்கிய முராத் பலோச், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து குழாய்களை சேகரித்து, தண்ணீரை வெளியேற்ற ஒரு நீண்ட குழாய் உருவாக்கினார்.

தனது பகுதியில் வடிகால் அமைப்பு சரியில்லாததால் இந்த முயற்சிகள் அனைத்தையும் அவர் செய்ய வேண்டியிருந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் மழை பெய்த போது, தண்ணீர் வெளியேற்றுவதற்காக குழி தோண்டப்பட்டது. இன்னொரு முறை குழாய் மூலம் தண்ணீரை வெளியேற்றுவது.

குவாதர் மேம்பாட்டு ஆணையமும் இதே முறையைத் தான் பின்பற்றுகிறது. இதையெல்லாம் செய்வதால் சாலைகள் மீண்டும் சேதமடைந்துள்ளன.

2004இல் குவாதர் மேம்பாட்டு ஆணையம் (ஜிடிஏ) நிறுவப்பட்டபோது நகரத்திற்கான ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. இந்த மாஸ்டர் பிளானில், நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக அந்நாட்டு மத்திய அரசு அறிவித்தது.

ஜிடிஏ அதிகாரிகள் கூறுகையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், பாதி தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் நகர சாக்கடைக்கான பணம் இன்னும் சேர்க்கப்படவில்லை.

பலுசிஸ்தானில், மாலிக் பலூச்சின் அரசு பதவிக்கு வந்த பிறகு, குவாதர் வடிகால் அமைப்பிற்கு மாநில அரசு ரூபாய் 1.35 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் பாதி தொகை மட்டுமே செலவிடப்பட்டு முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.

ஜிடிஏ தலைமை பொறியாளர் சையத் முகமது கருத்துப்படி, இதுவரை 8.5 கிமீ மற்றும் 16 கிமீ வடிகால்களை அமைத்துள்ளனர். ஓல்ட் டவுன் பகுதியின் 15 முதல் 16 சதவீதம் வரையிலான நிலப்பரப்பை இது உள்ளடக்குகிறது.

இந்தக் கட்டுமானத்தில், தண்ணீர் தேங்கும் பகுதிகளுக்கு தாம் முன்னுரிமை அளித்ததாகவும். எங்கெல்லாம் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோ, அங்கு தண்ணீர் வெளியேறிவிட்டது என்கிறார் சையத் முகமது.

கடல் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

அல்ஹதாத் பலூச்சின் வீடும், தெருவும் வெள்ளத்தில் மூழ்கின. அவர்கள் வீட்டிலிருந்து தண்ணீரை வெளியேற்றினார்கள், ஆனால் காலையில் மீண்டும் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ஒருபுறம் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், மறுபுறம் கடல் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் முன்னோக்கி சென்றுள்ளது.

கடல் மட்டம் உயர்ந்து வருவதாக புவியியலாளர் பஜிர் பலோச் எச்சரிக்கிறார். அவர் பேசுகையில், ''கழிவுநீர் அமைப்பு பல இடங்களில் இல்லை. கழிவுநீர் அமைப்பு உள்ள இடங்களில், அது சரிவர இயங்குவதில்லை. மீண்டும் தண்ணீர் ஊருக்குள் வருகிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, கட்டுமான பணிகளும் அதிகரித்துள்ளன. இதனால், தண்ணீர் செல்லும் இயற்கை பாதை மாறியுள்ளது. ஓவர் பம்பிங் ஏற்படும் போது, ​​கடல் நீர் தானாகவே முன்னோக்கி நகர்கிறது. அதனால் ஏற்படும் மாற்றங்களால், நிலம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வருகிறது” என்றார்.

குவாதர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் சையத் முகமது கூறுகையில், “நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நகரின் பழைய பகுதிகளில் ஒன்றரை அடிக்கு மேல் கடல் நீர் வருகிறது. பல இடங்களில் இரவோடு இரவாக தண்ணீரை வெளியேற்றி கால்வாய்கள் கட்டியுள்ளனர்.

வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டாலும், அதற்கு நிலத்தடி நீரை எடுக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரித்தால், நிலத்தின் மீதான சுமை அதிகரிக்கும். முன்பு மண் வீடுகள் இருந்தன, இப்போது மக்கள் கான்கிரீட் வீடுகளைக் கட்டுகிறார்கள்” என்கிறார்.

பாகிஸ்தானின் ‘குவாதர்’ துறைமுகம்

குவாதர் துறைமுகம், துறைமுக ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நகரத்தின் மற்ற பகுதிகள் குவாதர் மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் மற்றொரு அமைப்பு உள்ளது, முனிசிபல் கமிட்டி- குவாதர்.

இது உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும்.

ஒரு மெகா நகரத்திற்கான திட்டமிடல் இங்கு உள்ளது, ஆனால் உள்ளூர் அமைப்பு கிராமப்புற அமைப்பாக உள்ளது. தேவையான ஆதாரங்களோ அல்லது வடிகால் அமைப்புகளோ அங்கு இல்லை.

குவாதரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த தண்ணீர் எங்கிருந்து கொண்டு வரப்படும் என்பதுதான் இங்கு முதல் கேள்வி.

அதே நேரத்தில் கழிவு நீர் எங்கே போகும் என்ற கேள்வியும் உள்ளது. ஏனெனில் சர்வதேச விமான நிலையம், புதிய குடியிருப்பு திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த மண்டலத்தில் அமைக்கப்பட்டால், அதிகளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை உண்டாகும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)