தேனி: தினகரன் - தங்கதமிழ்செல்வன் உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?

தேனி - நாடாளுமன்ற தேர்தல்
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவதே.

அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தவர்.

தேனி மக்களவைத் தொகுதி எம்.ஜி.ஆர் காலம் முதலே அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொகுதியில் இம்முறை அமமுக, திமுக இடையேயான போட்டியாக பார்க்கப்படுவதன் பின்னணி என்ன? தேனி தொகுதியில் அதிமுகவின் நிலைமை என்ன? திமுக - அமமுக உக்கிர போட்டிக்கு நடுவே அதிமுக என்ன செய்கிறது?நாடாளுமன்றத் தேர்தல் தேனி மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய தேனிக்கு நேரடியாக சென்றது பிபிசி தமிழ்.

தேனி தொகுதியில் பலமான கட்சி எது?

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தேனி நாடாளுமன்ற தொகுதி, முன்பு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது அதில் பெரியகுளம்,தேனி, போடிநாயக்கனூர்,கம்பம், ஆண்டிபட்டி, சேடபட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

இதி்ல் 1952 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் சரிபாதியாக அதாவது 7 முறை அதிமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக, சுதந்திர கட்சி, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியிருக்கிறது.

பின்னர் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

அப்போது பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகள், மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் தேனி தொகுதியுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு 2009, 2014, 2019 ஆகிய மூன்று முறை நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

பட மூலாதாரம், Getty Images

2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனி்யில் அதிமுக வெற்றது.

இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி,கேஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 1,44,050 வாக்குகளைப் பெற்றார். அதிமுக பணத்தை வாரி வழங்கி வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

தேனி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக - அமமுக உக்கிர போட்டி

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தேனி மக்களவை தொகுதி இம்முறை கவனம் பெற முக்கிய காரணம் பாஜக கூட்டணியின் சார்பில் அங்கு களமிறங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

இவரை எதிர்த்து இந்தியா கூட்டணியி்ல் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை அமமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து மூன்றாமிடம் பிடித்தார்.

2019 தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேனி மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது உள்ளார்.

டிடிவி தினகரன், கடந்த 1999-ல் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2009-ல் அதிமுக, 2019-ல் அமமுக என இருமுறை களம் கண்டு தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் தங்க தமிழ்செல்வனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது.

மேலும் முன்பு இரட்டை இலை சின்னத்தில் நின்ற இருவரும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து தற்போது வெவ்வேறு சின்னங்களில் களம் காண உள்ளனர்.

தேனியின் அதிமுக வேட்பாளராக 40 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய வி டி நாராயணசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுகிறார். ஆனால் தேனி தொகுதியில் டிடிவி தினகரனா? தங்கதமிழ்செல்வனா? என இருமுனைப் போட்டியாகவே பார்க்கப்படுவதாக தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனால் அதிமுக எப்படி இவர்களை தாண்டி வாக்காளர்களை ஈர்க்கும் என அனைவரும் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.

தேனி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மாவட்டம் விவசாயம் அது சார்ந்த பணிகள் பிரதானமாக உள்ளன. இந்த தொகுதி வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், கடந்த முறை வென்ற எம்.பி எதை செய்தார், எதை செய்யத் தவறினார் என்பதை அறிந்து கொள்ள அந்த தொகுதியைச் சேர்ந்த பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது.

‘கட்சிக்குதான் வாக்கு, வேட்பாளருக்கு இல்லை’

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

கட்சி அடிப்படையிலேயே வாக்கு அளிப்போம் என்கிறார் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த விவசாயி பெ. முத்து காமாட்சி.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது."தேர்தலில் எங்களது பகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனக் கவனித்து வாக்கை செலுத்துவேன். எனக்கு 40 வயது ஆகிறது. நான் உதயசூரியன் சின்னத்திற்கு தான் வாக்கைச் செலுத்தி வருகிறேன். ஏனென்றால் எனது பகுதியில் உள்ள திமுகவினர் எங்களது பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்கள். டிடிவி தினகரன் மீண்டும் இந்த முறை தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரிய வரும்", என கூறினார்.

தன்னுடைய வாக்கு அதிமுகவிற்கு கிடையாது, என்கிறார் 78 வயதான செல்வராஜ்.

"நான் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலிருந்து அதிமுகவின் கட்சியின் உறுப்பினராக உள்ளேன். அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி் தலைமை பொறுப்பேற்றவுடன் அங்கிருந்து விலகி விட்டேன். நான் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தான் வாக்கு செலுத்த உள்ளேன். ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்திற்கு பாலங்கள், சாலைகள் என வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது ஓ.பி.எஸ், டிடிவி தினகரனும் இணைந்து இருப்பதால் அவருக்கு தான் என் ஆதரவு."

‘அதிமுகவுக்கு அறிமுகம் தேவையில்லை’

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

அதிமுக வேட்பாளர் வெளியே தெரியவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் எளிய மனிதரான நாராயணசாமிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் உள்ளது என்கிறார் தேனி பஜாரில் நகைப்பட்டறை வைத்திருக்கும் சிதம்பரம்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும் போது,"தேனி நாடாளுமன்ற தொகுதியில் தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வேட்பாளராக வெளியில் தெரியலாம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைந்து போட்டியிட்டாலும் அதிமுகவிற்கான வாக்குகள் அப்படியே தான் இருக்கும், அது எங்கேயும் சிதறிவிடாது," எனத் தெரிவித்தார்.

"கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எவ்வளவோ திட்டங்களை தேனிக்கு செய்து இருக்கலாம். அவர் செய்யத் தவறிவிட்டார். குறிப்பாக சுருளிப்பட்டியில் திராட்சை உலர்த்தும் தொழிற்சாலை, பெரியகுளத்தில் மாம்பழம் கூலிங் செய்யும் தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும்" என்றார் சிதம்பரம்.

தங்கதமிழ்ச்செல்வன் பல கட்சிகள் மாறி இருப்பதால் அவருக்கு வாக்களிக்க மக்கள் யோசிப்பார்கள் என பிபிசியிடம் பேசியவர்களில் சிலர் தெரிவித்தனர்.

"தற்போதைய நிலவரப்படி, திமுக - அமமுக இடையே போட்டி இருப்பதாக தெரிந்தாலும், அதிமுக வேட்பாளர் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கினால் தேனி தொகுதியில் நிச்சயம் மும்முனை போட்டி இருக்கும்", என்கிறார் வியாபாரியான சிதம்பரம்.

மகளிர் வாக்கு யாருக்கு?

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தன் கணவர் சொல்லும் கட்சிக்கே இதுவரை வக்களித்து வந்துள்ளேன். இம்முறையும் அப்படியே செய்வேன், என்கிறார் தேனி அரப்படிதேவன்பட்டியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அபர்ணா.

"நாங்கள் தேர்தலை பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது. எங்கள் தொகுதியில் டிடிவி தினகரன், தங்கதமிழ் செல்வன் போட்டியிடுவதாக எனது தந்தை கூறினார். தேர்தல் சமயத்தில் என் கணவரோ, அப்பாவோ எந்த வேட்பாளர் நம் தொகுதிக்கு நல்லது செய்வார்கள் என்று என்னிடம் சொல்வார்கள். அதை வைத்து என் வாக்கை செலுத்துவேன்," என தெரிவித்தார்.

தேனி தொகுதியில் பல்வேறு பெண்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர்களின் கருத்தும் அபர்ணாவை கருத்தை எதிரொலிப்பதாகவே இருந்தது.

‘மீண்டும் போட்டியிட விரும்பினேன்’

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

பட மூலாதாரம், P.RAVINDHRANATH /FACEBOOK

"தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட விரும்பினேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தாலும், மூத்த தலைவர்களின் விருப்பத்தாலும் டி.டி.வி. தினகரன் போட்டியிட வழிவிட்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்", என்கிறார் தேனி தொகுதி எம்பியான ஓ.பி ரவீந்திரநாத்.

"தேனி நாடாளுமன்றத் தொகுதிக்காக கடந்த 5 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். அதில் 550 கோடி ரூபாயில் மதுரை- போடிநாயக்கனூர் இடையேயான ரயில்பாதை திட்டம் முடிக்கப்பட்டது மிக முக்கியமான திட்டம். இது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது." என்றார் அவர்.

திமுக vs அமமுக

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த 2 முறை நல்லாட்சி கொடுத்த மோதி மூன்றாவது முறையாக வரவேண்டுமென நாங்கள் சேர்ந்து கூட்டணியில் நிற்கிறோம். மோதி தலைமையிலான ஆட்சிக்கு அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து சென்றால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வருவார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ் செல்வன் கடந்த முறை அமமுகவில் நின்று போட்டியிட்டவர். எனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெறுவார். தேனியில் அதிமுக வேட்பாளர் யாரென்று கூட மக்களுக்குத் தெரியாது”, எனக் கூறினார்

"ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். எனவே ஓ.பி.எஸ் ராமநாதபுரத்திலும், டி.டி.வி. தினகரன் தேனியிலும் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் தரப்பு வெற்றி உறுதியாகியுள்ளது" என்று ரவீந்திரநாத் தெரிவித்தார்.

தினகரன் கூறுவது என்ன?

தேனி தொகுதி அமமுக அதிமுக திமுக டிடிவி தினகரன்

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பரப்புரைகளில் " கடந்த 15 ஆண்டுகளாக வனவாசம் சென்றது போல நான் தேனி மாவட்டத்தை விட்டு சென்றாலும் மீண்டும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன். இந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தற்பொழுது நமக்கு ஜெயலலிதாவிற்கு பதிலாக நரேந்திர மோதி கிடைத்திருக்கிறார்.

அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல் என்பதால் அவரது கூட்டணியில் போட்டியிடும் எனக்கு உங்களது வாக்கினை செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஸ்டாலினை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அவர் பிரதமர் ஆகிவிட முடியுமா?", என கேள்வியை முன் வைக்கிறார், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமமும் எனக்கு நன்றாகத் தெரியும் மக்களின் தேவையை நான் நிறைவேற்றுவேன் என பொதுவான பிரச்சாரமே”, செய்கிறார்.

தங்கதமிழ்செல்வன் பிரசாரம்

தங்கதமிழ்செல்வன்

திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் தனது பரப்புரைகளில் டி.டி.வி தினகரை குறிவைத்து விமர்சனத்தை முன்வைக்கிறார்.

“தேனியில் எனக்கு எதிராக ஒருவர் போட்டியிடுகிறார் அவர் இந்த மாவட்டத்தை சேராதவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவர், இன்று மீண்டும் வந்திருக்கிறார். அவர் மீது இருக்கும் வழக்கிலிருந்து தப்பிக்க பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றால், அவரை எளிதில் நீங்கள் தொடர்பு கொள்ள இயலாது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றி வெற்றியை வசப்படுத்தியவர்.. அதேபோல தேனியிலும் செய்துவிடலாம் என நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.“

அதிமுக வேட்பாளர் கூறுவது என்ன?

அதிமுக தரப்பில், மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவில் சார்பாக போட்டியிட்டு விலகிச் சென்றவர்கள் என்ற பரப்புரை முன்வைக்கப்படுகிறது.

“தேனியில் இந்த முறை போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்களும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள். மக்கள் உண்மையான அதிமுக யார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்,” என்று கூறி அதிமுக வேட்பாளர் வி டி நாராயணசாமி வாக்கினை சேகரிக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)