திருவண்ணாமலை: மேல்மா விவசாயிகளின் கோபம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மேல்மா சிப்காட் போராட்டம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக தங்கள் நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது எனப் போராடிவரும் விவசாயிகள் இந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து என்ன சொல்கிறார்கள்?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ள மேல்மா, குரும்பூர் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு மேலாக வாழ்க்கை நிம்மதியில்லாமல் இருக்கிறது. அந்தப் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக கடந்த ஆண்டு மே - ஜூன் மாதவாக்கில் வெளியிடப்பட்ட அறிவிப்புதான் இந்த விவசாயிகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஏற்கெனவே இரண்டு சிப்காட் தொழில் வளாகங்கள் செயல்பட்டுவரும் நிலையில், மூன்றாவதாக தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பதற்காக செய்யாறு வட்டத்திலுள்ள மேல்மா, நர்மாபள்ளம், குரும்பூர், காட்டுக்குடிசை, தேத்துறை, இளநீர்குன்றம், வட ஆளப்பிறந்தான், அத்தி, சௌந்தரபாண்டியபுரம், மணிப்புரம், நெடுங்கல், வீரம்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது.

மேல்மா சிப்காட் போராட்டம்

1200 ஏக்கர் நிலம் எடுக்க அறிவிப்பு

இந்த தொழிற்பேட்டைக்காக கடந்த மே - ஜூன் மாதவாக்கில் 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1,200 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களில் சிலருக்கு இதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்துத்தான் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு ஜூலை 2ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். இதற்காக மேல்மா கிராமத்தில் ஒரு சிறிய பட்டா நிலத்தைச் சரிசெய்து, அங்கு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முயற்சித்த விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, 9 விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஏழு பேர் மீது குண்டர் தடுப்புக் காவல்சட்டம் போடப்பட்டது.

குண்டர் சட்டத்தில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டது பெரும் சலசலப்பையும் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்திய நிலையில், அவர்களது குடும்பத்தினரிடம் இனிமேல் போராட மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தது. ஆனால், இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.

நவம்பர் மாதத்தில் நடந்த கைது சம்பவம், அதையொட்டி எழுந்த எதிர்ப்பு ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, வெளிப்படையாக நடவடிக்கைகள் இல்லை என்றாலும் இந்தப் பகுதி மக்களிடம் அச்சம் இன்னமும் நீடிக்கிறது.

மேல்மா சிப்காட் போராட்டம்

"இங்குள்ள நிலங்கள் அனைத்தும் கிணற்றுப் பாசனத்தில் மூன்று போகம் விளையக்கூடியவை. தர்பூசணி, பூசணிக்காய், நெல், கரும்பு, வேர்கடலை என எல்லாவிதமான பயிரும் விளையக்கூடிய மண் இது. செய்யாறு சர்க்கரை ஆலைக்குத் தேவையான கரும்பில் இருபது சதவீதம் இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது. இம்மாதிரி ஒரு பகுதியில் சிப்காட்டை அமைக்கக்கூடாது. சில மாதங்களுக்கு முன்பாக சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு வந்த பிறகு, வெளிப்படையான பணிகள் நடப்பதாகத் தெரியவில்லை என்றாலும் உள்ளூர பணிகள் தொடர்ந்து நடப்பது புரிகிறது. ஆனால், அதிகாரிகள் யாரும் வந்து எங்களிடம் பேசவும் இல்லை விளக்கமளிக்கவும் இல்லை. வெளியூரிலிருந்து ஆட்களைக் கூட்டிவந்து நிலத்தை எடு, வேலை கொடு எனப் போராட்டம் நடத்துகிறார்கள். இதெல்லாம் சரியா?" என்கிறார் குரும்பூரைச் சேர்ந்த சந்திரன்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தருக்கும் அவரது சகோதரர் அபிமன்னனுக்கும் சேர்த்து சுமார் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. சாலையை ஒட்டியுள்ள அந்த நிலத்தில் வீடு கட்டி, மாடு வளர்ப்பது, கோழி வளர்ப்பது, மூன்று போக விவசாயம் செய்வது என இருக்கிறார்கள். கடந்த ஆண்டு, இவர்களது நிலத்தை மொத்தமாக அரசு எடுக்கப்போவதாக நோட்டீஸ் வந்தபோது, அதிர்ந்து போய், பல நாட்கள் அழுதுகொண்டேயிருந்திருக்கிறார்கள்.

"இது எங்களுடைய பூர்வீக ஊர். எங்கள் தாத்தா காலத்தில் ஒரு கிணறு இருந்தது என்றாலும், நாங்கள்தான் பெரிய அளவில் கிணற்றை வெட்டி விவசாயம் பார்க்க ஆரம்பித்தோம். விவசாயத்தில் வந்த பணத்தை வைத்து, அக்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வீடு கட்டினோம். இந்த வீட்டிற்கு பின்னாலேயே நிலம். 3 போகம் விளையும். திடீரென ஒரு நாள் இந்த நிலத்தை எடுக்கப்போவதாக நோட்டீஸ் வருகிறது. அதற்கு முன்பு யாரும் வந்து எதுவும் சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் அழுதுகொண்டேயிருந்தோம்" என்கிறார் ரவீந்தர்.

மேல்மா சிப்காட் போராட்டம்

தேர்தல் புறக்கணிப்பு தீர்வாகுமா?

எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டோம் என்கிறார் அவர். "இங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் ஒரு லட்ச ரூபாய் வரை விற்கிறது. இதனை விற்று காசாக்க வேண்டுமென்றால் என் தந்தை எப்போதோ அதைச் செய்துவிட்டு, அதில் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாமே.. அப்படியிருக்கும்போது, எவ்வளவு பணம் கொடுத்தாலும் நிலத்தை நாங்கள் கொடுக்க மாட்டோம்" என்கிறார் அவர்.

தன் நிலத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதைத் தவிர, இவருக்கு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பெரிய திட்டம் ஏதும் இல்லை.

சந்திரனைப் பொறுத்தவரை, தேர்தல் புறக்கணிப்பு ஒரு தீர்வாக இருக்க முடியாது என்கிறார். "தேர்தலைப் புறக்கணித்தால் எங்களுக்கு ஆதரவான கட்சியினருக்கு வாக்களிக்க முடியாது. அது எங்களுக்கு எதிரான கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும். ஆகவே, தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என நினைக்கிறோம்" என்கிறார் அவர்.

அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது காட்டுக்குடிசை கிராமம். இங்கு வசிக்கும் மீனாவுக்கும் அவரது கணவருக்கும் சேர்த்து மொத்தமாக 40 சென்ட் நிலம்தான் இருக்கிறது. மூன்று போகம் விளையக்கூடிய இந்த நிலம்தான் இவர்களது வாழ்வாதாராம்.

"சுமார் 9 மாதங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் என்ன முடிவெடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. சிப்காட்டில் வேலை தருவதாகச் சொல்கிறார்கள். எனக்கு இருந்த இரு மகள்களையும் திருமணம் செய்துகொடுத்தாகிவிட்டது. எனக்கும் என் கணவருக்கும் வயதாகிவிட்டது. என்ன வேலை தரப்போகிறார்கள்.? மூன்று போகம் விளையும் என்பதால், இரண்டு போகத்தில் வருவதைக் காசாக்கிவிடுவோம். ஒரு போகத்தை சாப்பாட்டிற்கு வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறோம். நாங்கள் உயிரை விட்டாலும் விடுவோமே தவிர, நிலத்தை விடுவதாக இல்லை" என்கிறார் இவர்.

மேல்மா சிப்காட் போராட்டம்

எங்கள் நிலத்தை எடுக்க மாட்டோம் என யாராவது வாக்குறுதி அளிக்கட்டும், தேர்தல் குறித்து அப்போது பார்க்கலாம் என்கிறார் மீனா.

நர்மாபள்ளத்தைச் சேர்ந்த மாசிலாமணி, கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். நர்மாபள்ளத்தில் பனங்காடாக இருந்த ஒரு நிலத்தை வாங்கி, சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு செலவழித்து, விளைநிலமாக மாற்றி கரும்பு விவசாயம் செய்து வருகிறார்.

"நிலத்தின் லையைவிட மூன்றரை மடங்கு கொடுத்தால்கூட, அதை எடுத்துக்கொணடுபோய் இன்னொரு இடத்தில் இதுபோல நிலத்தை வாங்க முடியுமா? இந்த நிலத்தை விளை நிலமாக்க நான் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன், எவ்வளவு பணம் செலவழித்திருக்கிறேன்? மிகப் பெரிய கிணறு ஒன்றையும் வெட்டியிருக்கிறேன். இதெல்லாம் வேறு இடத்தில் கிடைக்குமா? இந்த நிலத்தைக் கொடுக்க மறுத்தால், பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டிவந்து போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களின் நிலத்தை எடுத்தக்கொள்ளட்டும்" என்கிறார் மாசிலாமணி.

இவருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இப்போதைக்கு பெரிய திட்டம் இல்லை. அனைவரும் சேர்ந்து முடிவெடுக்கும்போது அதைப்பற்றி யோசிக்கலாம் என நினைக்கிறார் மாசிலாமணி.

நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் வட ஆளப்பிறந்தானைச் சேர்ந்த ரேணுகோபால், இந்தப் பகுதியில் நிலங்களை எடுக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தால் அவர்களுக்கு வாக்களிக்கலாம் என இருப்பதாகச் சொல்கிறார்.

இந்த 12 கிராமங்களும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றன. இதில் தி.மு.க. சார்பில், எம்.எஸ். தரணிவேந்தனும் அ.தி.மு.க. சார்பில் ஜி.வி. கஜேந்திரனும் பா.ம.க. சார்பில் ஏ. கணேஷ் குமாரும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

மேல்மா சிப்காட் போராட்டம்

இப்பகுதி மக்களில் பலரும் செய்யாறு தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி மீதுதான் கோபத்துடன் இருக்கின்றனர். அவர் தங்களை வந்து பார்க்கவில்லை என்பதோடு, திட்டத்தை முன்னகர்த்திச் செல்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் ஓ. ஜோதி. "2019ல் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் இது. அவர்கள்தான் எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இதற்கென ஒரு டி.ஆர்.ஓ., தாசில்தார் ஆகியோரை நியமித்தார்கள். நாங்கள் நிலத்திற்கான மதிப்பீட்டைச் செய்ததோடு சரி. அங்கு சுமார் 300 ஏக்கர் நிலம்தான் நல்ல விளை நிலம். மற்றவையெல்லாம் ஒரு போகம் விளைந்தாலே அதிகம். சிப்காட் எடுக்கப்போகும் நிலத்தில் 375 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருக்கிறது. உள்ளடங்கிய நிலத்திற்கே நாங்கள் ஒரு சென்டிற்கு 18 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்கிறோம். சாலையை ஒட்டிய பகுதி என்றால் 20,000 ரூபாய் வரை தருகிறது அரசு. பலர் நிலத்தை அளிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், வேண்டுமென்றே சிலர் பிரச்சனையைத் தூண்டிவிடுகிறார்கள்" என்கிறார் ஓ. ஜோதி.

பொதுவாகவே அது பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவுள்ள பகுதி. அதனால், இந்த விவகாரம் காரணமாக எந்தத் தாக்கமும் புதிதாக ஏற்படாது என்கிறார் ஓ. ஜோதி.

இந்தத் திட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பது விவசாயிகளுக்கு தெரியவில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடந்துவருவதாகச் சொல்கிறது. இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டுமெனக் கோரி, மேல்மா கூட்ரோட்டிற்கு அருகில் ஒரு பந்தல் அமைத்து தினமும் இரவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். திட்டம் கைவிடப்படும்வரை இதனைத் தொடர முடிவுசெய்திருக்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)