பசுவின் சிறுநீரில் இந்தியர்கள் தயாரித்த 'இந்த நிறத்தை' பிரிட்டிஷார் தடை செய்தது ஏன்?

பட மூலாதாரம், PICTURES FROM HISTORY/GETTY
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி செய்தியாளர்
நீலநிற அரிதான தாது, மம்மி எச்சங்கள் மற்றும் பசுமாட்டு சிறுநீர். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. ஆனால் அவை அனைத்தும் ஒரு காலத்தில் வண்ணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன.
உலகின் புகழ்பெற்ற பல ஓவியங்கள் இவற்றால் தயார் செய்யப்பட்ட வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று சொன்னால் அதை நம்புவது கடினம்.
பண்டைய காலங்களில் விரும்பிய வண்ணங்களைத் தயாரிப்பது இன்று போல் அவ்வளவு எளிதான செயல் அல்ல. அப்போது செயற்கை வண்ணங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கவில்லை. ஆனாலும் மக்கள் வண்ணங்களைப் பயன்படுத்தினர்.
அது அஜந்தாவின் ஓவியங்களாக இருந்தாலும் சரி, முகலாய காலத்தில் வரையப்பட்ட சிறு ஓவியங்களாக இருந்தாலும் சரி அல்லது இடைக்கால ஐரோப்பிய ஓவியங்களாக இருந்தாலும் சரி, இவற்றில் இடம்பெற்றுள்ள வண்ணங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை அறிவது சுவாரசியமான விஷயமாகும்.

பட மூலாதாரம், HISTORICAL PICTURE ARCHIVE/GETTY
பசுவின் சிறுநீரில் தயாரான 'இந்திய மஞ்சள்' நிறம்
'இந்திய மஞ்சள்' என்பது ஆரஞ்சு நிறத்துடன் கூடிய மஞ்சள் நிறமாகும். பிரகாசமான தங்க நிறங்களை வரைவதற்கு இது பயன்படுத்தப்பட்டது.
இந்த நிறமியின் பயன்பாடு 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தொடங்கியது மற்றும் இங்கிருந்து விரைவில் ஐரோப்பாவை அடைந்தது.
இந்த வண்ணம் முகலாயர் காலத்தின் பல சிறிய ஓவியங்களிலும் காணப்படுகிறது.
ஐரோப்பாவில் உள்ள பல ஓவியர்கள் இந்த வண்ணத்தை, சுவரோவியங்கள், எண்ணெய் ஓவியங்கள் மற்றும் நீர் வண்ணங்களில் பயன்படுத்தினர்.
வின்சென்ட் வான்கோவின் 'தி ஸ்டாரி நைட்' படத்தில் மஞ்சள் நிலவும், ஆங்கில ஓவியர் ஜோசப் மல்லோர்ட் வில்லியம் டர்னர் வரைந்த ஓவியத்தில் சூரிய ஒளியும் இந்த இந்திய மஞ்சள் நிறத்தால் மிளிர்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்த நிறம் எப்படி உருவானது? இந்த சாயம் பசுமாட்டு சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எல்லா பசுக்களின் சிறுநீரும் அதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
சிறுநீரில் மஞ்சள் நிறம் வருவதற்காக இந்த மாடுகளுக்கு மா இலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. இதற்காக அவை பட்டினி போடப்பட்டன. அதன் பின்னர் அவை மா இலைகளை உண்ணும்.
அத்தகைய மாடுகளின் சிறுநீர் மண் பானைகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் கொதிக்க வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வடிகட்டி உலர்த்தி, சிறு சிறு துண்டுகள் தயாரிக்கப்பட்டன.
ஓவியர்கள் இவற்றை தட்டில் வைத்து தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தங்கள் தேவைக்கேற்ப வண்ணம் தீட்டுவார்கள்.

பட மூலாதாரம், SOLTAN FRÉDÉRIC/GETTY
'இந்திய மஞ்சள்' நிறத்தை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது ஏன்?
இந்த வண்ணம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்ற தகவலைக் கொடுக்கும் அறிக்கை,1883 இல் லண்டனில் உள்ள சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக, பிரபல எழுத்தாளர் திரிலோகிநாத் முகோபாத்யாய் இன்றைய பிகாரில் உள்ள முங்கருக்குச் சென்றார். அங்கு அவற்றின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்தார்.
இதற்காக பசுக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விவரங்களையும் அவர் எழுதினார். இதையடுத்து 'இந்திய மஞ்சள்' நிறம் 1908 இல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. பின்னர் நவீன ரசாயனங்களைப் பயன்படுத்தி மஞ்சள் நிறம் தயாரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், KUNTALSAHA/GETTY
பண்டைய காலத்தில் இந்திய ஓவியம் எவ்வளவு செழுமையாக இருந்தது என்பது அஜந்தாவின் எண்ணெய் ஓவியங்களில் பிரதிபலிக்கிறது. இந்த ஓவியங்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் பயன்பாடு மிகவும் நன்றாகவே தெரிகிறது.
இது சிவப்பு-மஞ்சள் நிறம், சிவப்பு காவி மற்றும் மஞ்சள் காவியால் ஆனது. தீபாவளியின் போது ரங்கோலி போடுவதற்கு முன் தரையில் பரப்பும் வண்ணங்களும் காவியில் இருந்து தயாரிக்கப்பட்டன.
உண்மையில் காவி நிறம் என்பது சிவப்பு-மஞ்சள் நிற மண். அத்தகைய மண்ணில் அயர்ன் ஆக்சைடின் அளவு அதிகமாக உள்ளது. மண்ணில் உள்ள இரும்பு மற்றும் பிற தனிமங்களின் அளவைப் பொறுத்து அதன் நிறமும் மாறுபடும்.
மனிதர்கள் பயன்படுத்திய முதல் நிறமி காவியாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் உலகம் முழுவதும் குகை ஓவியங்களில் காவி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த நிறமி சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானது.
பழங்குடியினர் பகுதிகளில் இன்றும் தங்கள் உடலுக்கு வண்ணம் பூசுவதற்கு பழங்குடியினர் இதைப் பயன்படுத்துகின்றனர்.

பட மூலாதாரம், PICTURES FROM HISTORY

பட மூலாதாரம், Getty Images
லாபிஸ் லாசுலி மற்றும் ஹான் பர்பிள் அதாவது நீல நிறத்தின் மாயாஜாலம்
அஜந்தாவின் ஓவியங்களில் இன்னொரு வண்ணம் நினைவுக்கு வருகிறது. நீலக்கடலைப் போல ஆழமாகவும், பிரகாசமாகவும், சற்றே மர்மமாகவும் அது இருக்கும்.
இன்று அல்ட்ராமரைன் என்று அழைக்கப்படும் இந்த நீல நிற ஷேடின் கதையும் சுவாரசியமானது. அதன் உறவு ஆப்கானிஸ்தானுடன் நேரடியாக தொடர்புடையது.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியின் சுரங்கங்களில் 'லாபிஸ் லாசுலி' என்ற கனிமம் காணப்படுகிறது. இது இந்தி மற்றும் அரபு மொழிகளில் லாஜ்வர்த் அல்லது ராஜாவர்த் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கனிமம் ஹரப்பா நாகரிகத்தின் (சிந்து சமவெளி நாகரிகம்) காலத்திலும் பயன்படுத்தப்பட்டது. மெசபடோமியாவிலும் லாசுலி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய எகிப்தியர்களும் நைல் நதி மற்றும் ராயல் ப்ளு நிறத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் இந்த நிறத்தை அங்கு கொண்டு வர அவர்களால் முடியவில்லை.

பட மூலாதாரம், RATTHAM/GETTY
அதனால்தான் எகிப்திய கலைஞர்கள் சிலிக்கா, சுண்ணாம்பு, தாமிரம் மற்றும் காரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ரசாயன வண்ணங்களை உருவாக்கினர்.
எகிப்தியர்களால் உருவாக்கப்பட்ட இந்த நிறம் உலகின் முதல் ரசாயன நிறமியாகக் கருதப்படுகிறது.
சீனாவில், பேரியம், தாமிரம் மற்றும் சிலிக்கேட் நிறமிகளைப் பயன்படுத்தி நீலம் மற்றும் ஊதா நிறங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த நிறங்கள் ஹான் ப்ளூ மற்றும் ஹான் பர்பிள் என்று அழைக்கப்படுகின்றன.
அதற்கு முன்பே இந்தியாவில் நீல நிறமானது, நீல நிற ஆடைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் லாபிஸ் லாசுலியின் கவர்ச்சி அதைவிட அதிகமாக இருந்தது.
உருகிய மெழுகு, எண்ணெய் மற்றும் பைன் பிசின் ஆகியவற்றுடன் நீல கனிமத்தின் மெல்லிய தூள் கலந்து இந்த நிறமி தயாரிக்கப்பட்டது.
இந்த கனிமம் மிகவும் அரிதானது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இது காணப்பட்டது. மேலை நாடுகளில் நீல நிறம் அதிகம் பயன்படுத்தப்படாததற்கும் சில மொழிகளில் நீலம் என்ற வார்த்தை கூட இல்லாததற்கும் இதுதான் காரணம்.
ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லாபிஸ் லாசுலி, அரபு வர்த்தகர்களுடன் ஐரோப்பாவை அடைந்தது. அப்போது ஐரோப்பாவில் தங்கத்தை விட இதன் விலை அதிகமாக இருந்ததால் சில இடங்களில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.
இந்த நிறம் இயேசு, மேரி மற்றும் சில சமயங்களில் அரச குடும்பத்தின் முக்கிய நபர்களை வரைய பயன்படுத்தப்பட்டது.
மைக்கேலேஞ்சலோ மற்றும் ரஃபேல் போன்ற கலைஞர்களால் கூட இந்த நிறத்தை வாங்க முடியவில்லை. டச்சு கலைஞர் ஜோஹன்னஸ் வெர்மீர் இந்த நிறத்தை தனது ஓவியங்களில் அதிகமாக பயன்படுத்தினார். ஆனால் அதன் காரணமாக கடன் சுமைக்கு ஆளானார்.
நீல செயற்கை நிறமிகள் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தன. ஆனால் லாபிஸ் லாசுலியின் கவர்ச்சி இன்றும் தொடர்கிறது.
சிந்தூர்

பட மூலாதாரம், Getty Images
சினாபார் அதாவது சிந்தூர், பாதரசத்தின் தாது. இது விஷமாகவும் கருதப்படுகிறது.
இந்த எரிமலை கனிமம் பண்டைய காலங்களில் பிரகாசமான சிவப்பு வண்ணப்பூச்சு செய்ய பயன்படுத்தப்பட்டது.
இந்த நிறம் சிந்தூரி சிவப்பு என்று அழைக்கப்படுகிறது.
சீனா, இந்தியா மற்றும் மாயா (மெக்சிகோவின் மெசோ அமெரிக்கன்) நாகரிகங்களில் வண்ணங்களை உருவாக்க இந்தப்பொருள் பயன்படுத்தப்பட்டது.
மம்மி பிரவுன்

பட மூலாதாரம், CHRISTOPHEL FINE ART/GETTY
பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில், மம்மி பிரவுன் எனப்படும் பழுப்பு நிறமி எகிப்தில் பிரபலமானது.
கலை வரலாற்றாசிரியர் விக்டோரியா ஃபின்லே தனது ’கலர்ஸ் ட்ராவல்ஸ் த்ரூ தி பெயிண்ட் பாக்ஸ்’ புத்தகத்தில் இதைப் பற்றி கூறியுள்ளார்.
இந்த நிறம் ஓரளவு ஒளிபுகும் தன்மை கொண்டது என்பதால், ஓவியங்களில் மனித உடல்களின் வடிவங்களை வண்ணமயமாக்க அல்லது நிழல்களை உருவாக்க இது பயன்படுத்தப்பட்டது.
மிகவும் பழமையான மம்மிகளின் எச்சங்கள் இதைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












