விஷம் குடித்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை தகவல்

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
    • எழுதியவர், ச.பிரசாந்த் மற்றும் கலைவாணி பன்னீர்செல்வம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு மக்களவைத் தொகுதியின் ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதிமுக தொடங்கியது முதலே அதன் மூத்த தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்து வந்தவர் கணேசமூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியிலும் அவரையே அக்கட்சி நிறுத்தியது. தற்போதைய ஈரோடு தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், மார்ச் 24ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்குப் பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணேசமூர்த்தி தற்போது எப்படி இருக்கிறார்?

கணேசமூர்த்தியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.

“கணேச மூர்த்தி தொடர்ந்து அபாய கட்டத்திலேயே இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் உயிர் பிழைக்க 50க்கு 50 சதவீதம் என்ற அளவிலேயே வாய்ப்புள்ளது. தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும், அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது ” என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

வைகோ நேரில் நலம் விசாரித்தார்

கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 24ஆம் தேதி வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உயிராக நேசித்த, கண்ணின் மணியாக திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேச மூர்த்தி, தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தொடர்பில் உள்ளார்.

மாணவர் அணியிலிருந்த அவர், சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை சான்ஸ் பார்ப்போம் என்றனர்.

நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது.

99% அவரை (துரை வைகோ) நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர்.

அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன்.

இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். இன்று காலை 10 நிமிடம் மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர்.

அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிரார். அங்கு வந்த கபிலனிடம் 'இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்' எனக் கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்ய வேண்டிய முதன்மையான முதலுதவிகள் அனைத்தும் செய்து விட்டனர்." என்றார்.

மருத்துவ தலைமை நிபுணர் என்ன கூறினார்?

கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டிருக்கும் கே எம் சி ஹெச் மருத்துவமனையின் தலைமை மருத்துவ நிபுணரிடம் கணேச மூர்த்தியின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்துள்ளார். அப்போது மருத்துவ நிபுணர் பகிர்ந்து கொண்ட தகவல்களாக வைகோ கூறுகையில், "முதலுதவி சரியாக செய்ததால் தான் நாங்கள் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம்.

அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். ஆதலால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்கோவும் கொடுக்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.

துரை வைகோ நேரில் நலம் விசாரித்தார்

கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ உடனே கோவை விரைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கணேசமூர்த்தியை இரவில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் பதிலளித்தார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, துரை வைகோ, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர்

‘கணேசமூர்த்தி கவலைக்கிடமாக உள்ளார்’

கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்துப் பேசிய துரை வைகோ, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர்.

அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’’ என்றார்.

தேர்தலில் சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சியா?

கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி கணேசமூர்த்திக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது" என்று துரை வைகோ தெரிவித்தார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

தனியார் மருத்துவமனை கூறியது என்ன?

கணேசமூர்த்தியை அவரது உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் முதலில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கணேசமூர்த்தி சுயநினைவுடன்தான் இருந்தார். காலை 10 மணிக்கு அவர் விஷம் குடித்தார் என்று உறவினர்கள் கூறினார்கள். விஷத்தை தண்ணீரில் கலந்து அவர் குடித்துவிட்டதாக உறவினர்கள் கூறினர்.

விஷம் குடித்திருந்ததால் அவரது வயிற்றை மருத்துவமனையில் சுத்தம் செய்தார்கள். அப்போது அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்று கூறினார்.

விஷ முறிவு சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

ஒரு மனிதனின் உடலுக்குள் விஷம் நுழைந்தால், மருத்துவர்கள் அந்த விஷத்தை முறிக்க என்னென்ன செய்வார்கள் என விளக்கினார் தடயவியல் துறையின் விஷ முறிவு மேலாண்மை நிபுணர். பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில்,

“எம்.பி. கணேஷமூர்த்தி உட்கொண்டது மாத்திரையின் ஜெனரிக் பெயர் கிடைத்தால்தான், அதன் பண்புகள், உடலில் கலந்து விஷமாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரியும். ஆயினும் பொதுவாக விஷமுறிவைப் பொறுத்தவரை நேர மேலாண்மேதான் முக்கியம்” என்றார்.

"ஒருவர் வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ, வாய்க்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல முறைகளில் விஷத்தை உட்கொண்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம்.

அவர் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டால், உணவுக்குழாய், குடல் ஆகியவை சுத்தம் செய்யப்படும்.

அதுவே 3 முதல் 4 மணி நேரமாக ஆகியிருந்தால், நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்தே விஷத்தின் மாதிரி அறியப்படும்.

நோயாளிக்கு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, இருதயத் துடிப்பு குறைவது, சுயநினைவு இழத்தல், வலிப்பு உள்ளிட்டவற்றை வைத்து என்ன மாதிரியான விஷம் என அறிய வாய்ப்பு உண்டு,

சிறுகுடல் 8 மீட்டர் நீளம் கொண்டது. 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தால் அதில் 6 மீட்டர் அளவுக்கு விஷம் பரவி குடலில் ஓட்டியிருக்கும்.

இதையடுத்து நேரம் ஆக ஆக, அது பெருங்குடல் உள்ளிட்ட பல உறுப்புக்களில் பரவக்கூடும்.

வயிற்றைச் சுத்தம் செய்யும்போது, மெக்கானைஸ்ட் வடிவில் உள்ள சார்கோல் பயன்படுத்தும்போது, வயிற்றின் குடல்பகுதியில் விஷம் ஒட்டிக்கொள்ளாதபடி அகற்ற உதவும்.

இந்த முறை குடலில் ஓட்டியிருக்கும் 70-80% விஷத்தை வெளியேற்ற உதவும்.

அதை விட நேரம் அதிகம் கடந்து விட்டால், கூடிய விரைவில் உரிய மருந்துகளை வைத்து குடலைக் கழுவி சுத்தம் செய்வதோடு பிற வகை சிகிச்சைகளும் பின்பற்றப்படும்.

மலம் மற்றும் சோடா பை கார்பனேட் கொண்டு சிறுநீர் வழியாகவும் விஷத்தை முறித்து உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

ஒருவேளை சுயநினைவிழந்திருந்தாலோ, விஷமானது ரத்தத்தில் கலந்து இருந்தாலோ, ஹீமோ டயாலிசிஸ், ஹீமோ ஃபில்ட்ரேசன், ஹீமோ பர்ஃப்யூசன் ஆகிய முறைகளில் ரத்தத்தில் இருந்து அகற்றப்படும்." என்று தெரிவித்தார்.

யார் இந்த கணேசமூர்த்தி?

ஈரோட்டைச் சேர்ந்தவரான கணேசமூர்த்தி (77), இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டம் படித்துள்ளார். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக வைத்துள்ள இவர் ம.தி.மு.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். கணேசமூர்த்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அக்கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்.பியாக உள்ளார்.

பல ஆண்டுகளாக அவர் ம.தி.மு.கவில் இருந்தாலும், இவரின் அரசியல் வாழ்க்கை தி.மு.கவில் இருந்து தான் துவங்கியது. ம.தி.மு.க தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக தி.மு.கவில் இருந்த கணேசமூர்த்திக்கு தி.மு.க மேலிடம் 1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில், தி.மு.க மேலிட உத்தரவுப்படி 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின், 1993ம் ஆண்டு தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.கவில் இருந்து வெளியேறிய கணேசமூர்த்தி, ம.தி.மு.கவில் இணைந்தார். 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

மூன்று முறை எம்.பி!

1998 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையிலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இவருக்கு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இந்தத்தேர்தலில் வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு அதன்பின் நடந்த, 2014 மக்களவை தேர்தலிலும் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார்.

அதன்பின், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், ஈரோடு தொகுதியில் போட்டியிட ம.தி.மு.கவினர் வாய்ப்பு வழங்கிய நிலையில், அதில் வெற்றி பெற்று தற்போது ‘சிட்டிங்’ எம்.பியாக உள்ளார். மக்களவைத் தேர்தல்களில் எப்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வைகோ, கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார்.

ஒரு முறை, எம்.எல்.ஏ, மூன்று முறை ஈரோடு எம்.பி பதவியை பெற்றுள்ள கணேசமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.கவிற்கென தனிச்செல்வாக்கை உருவாக்கியுள்ளார்.

30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளர்!

தேர்தல்களில் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், ம.தி.மு.க கட்சியில் பொருளாளர் பதவியையும் வகித்து, பல ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராக விசுவாசியாக இருக்கிறார்.

ம.தி.மு.கவில் இருந்து பலர் வெளியேறி தி.மு.கவில் இணைந்தபோதும் கூட, 1993 முதல் இன்று வரையில் கணேசமூர்த்தி ம.தி.மு.கவில் வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வருகிறார்.

தற்போதைய தேர்தலிலும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியி்ல போட்டியிடுவார் என, கணேசமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.கவினர் இந்த முறை ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதியை மட்டுமே ஒதுக்கியதால், கணேசமூர்த்தி மனவிரக்தியில் இருந்ததாக, அந்தக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)