ரோகித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக், தவறு செய்தது எங்கே?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் டி20 தொடரில் கடைசி ஓவர், கடைசிப் பந்துவரை இதுதான் முடிவு என்பதை எந்த ரசிகரும் கணிக்க முடியாது. ஒவ்வொரு பந்தும் ஒவ்வொருவிதமான ட்விஸ்ட்களோடு கொண்டு செல்லும். அதுபோலத்தான் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆட்டமும் அமைந்திருந்தது.
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 5ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
கேப்டன்சி மாற்றத்துக்குப்பின் சுப்மான் கில் தலைமையில் முதல்முறையாக களமாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. அதேபோல கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின், புதிய கேப்டனோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனதுமுன்னாள் அணியிடமே தோல்வி அடைந்துள்ளார்.
குஜராத் அணி இக்கட்டான நேரத்தில் 45 ரன்கள் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தில் ஒரேஅணியில் இடம் பெற்ற இரு தமிழக வீரர்களும் அற்புதமாகச் செயல்பட்டனர். பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் சாய் சுதர்சனும் முத்தாய்ப்பு.

பட மூலாதாரம், Getty Images
திருப்பங்கள் நிறைந்த 5 ஓவர்கள்
கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பிரிவிஸ் விக்கெட்டை சாய்த்தார். 17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.
18-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் டிம்டேவிட் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை வீசிய ஜான்சனின் முதல் பந்தில் திலக் வர்மா சிக்ஸர் விளாசினார். ஆனால், அடுத்த பந்தில் திலக் வர்மா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசிப் பந்தில் கோட்ஸியும் ஆட்டமிழக்க மும்பை அணி தோல்வியின் நெருக்கடியில் திக்குமுக்காடியது.
கடைசி ஒரு ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸரை விளாசி ஹர்திக் பாண்டியா ஷாக் அளித்தார்.
ஆனால், 3வது பந்தில் ஹர்திக் அடித்த ஷாட் லாங்ஆனில் நின்றிருந்த திவேட்டியா கைகளில் தஞ்சமடைய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பியூஷ் சாவ்லாவும் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். முலானி, பும்ராவால் ரன் சேர்க்கமுடியாததால், மும்பை பரிதாபமாக தோற்றது.

பட மூலாதாரம், Getty Images
"தவறுக்காக காத்திருந்தோம்"
குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் செயல்பட்டவிதம் அற்புதமாக இருந்தது. பனிப்பொழிவும் இருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் கிஷோர், ரஷித் கான் கட்டுக்கோப்பாக பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். மோகித் சர்மா அருமையாகப் பந்தவீசினார் மும்பை பேட்டர்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தோம் அதைப் பயன்படுத்தி நெருக்கடி அளித்தோம். 170 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றாலும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்
குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த 168 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடமுடியாத அளவுக்கு பெரிய ஸ்கோர் அல்ல. ஆனாலும், அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து, மும்பை அணிக்கு நெருக்கடி வெற்றியை பறித்தவிதம்தான் பாராட்டுக்குரியது. குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு முழுமையாக உரித்தானவர்கள் அவர்களின் பந்துவீச்சாளர்கள்தான்.
ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் தங்களின் பணியை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் ஒரு விக்கெட் என அற்புதமாக பந்துவீசினார். அதிலும் அறிமுகபோட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கி, அதிலும் வலுவான பேட்டர் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது எளிதானது அல்ல. அதை தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாகச் செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை குறைக்க சாய் கிஷோர், ரஷித் கான் பந்துவீச்சு முக்கியக் காரணமாகும்.
ரஷித் கான் விக்கெட் இன்று பந்துவீசினாலும், அவரின் வழக்கமான டிரேட்மார்க், ரன்சிக்கனத்துடன் பந்துவீசி மும்பை பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். அதிலும் டெத் ஓவர்களில் ரஷித் கான் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனும் தனக்குரிய பணியை சிறப்பாகச்செய்து தன்னுடைய விலை தகும் என்பதை நிரூபித்தார். ஜான்சன் 2 ஓவர்களே வீசினாலும் அவர் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் ஒட்டுமொத்த ஓட்டத்தையே மாற்றினார்.
கிரிக்கெட்டில் “அன்சங் ஹீரோ” என்பார்கள். அதில் குறிப்பிடவேண்டியது மோகித் சர்மா. டெத் ஓவர்களை அற்புதமாகக் கையாண்ட மோகித் சர்மா தான் வீசிய கடைசி 2 ஓவர்களிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை நிலைகுலையச் செய்தார். அதிலும் தனது 3வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே மோகித் சர்மா கொடுத்தது தரமான பந்துவீச்சுக்கு உதாரணம்.
முகமது ஷமி இல்லாத நிலையில் அனுபவ பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் பணி செய்ய வேண்டியதிருந்தது. கடந்த காலசீசன்களில் டெத் ஓவர்களை உமேஷ் எவ்வாறு கையாண்டார் என்பதால், அவருக்கு டெத்ஓவர்கள் வழங்கப்படுவதில்லை.
ஆனால், கேப்டன் கில் துணிச்சலாக கடைசி ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார். ரசிகர்கள் நினைத்தது போலவே முதல்பந்தை சிக்ஸர், 2வது பந்தில் பவுண்டரி அடிக்கவிட்டார் உமேஷ். ஆனால், 3வது, 4வது பந்தில் அவரின் பந்துவீச்சில் காண்பித்த வேரியேஷன் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்சாயும் தனது பங்கற்கு சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார். ஒட்டுமொத்த்தில் குஜராத் அணிக்கு கிடைத்த வெற்றி என்பது பந்துவீச்சாளர்களால் கிடைத்தது.

பட மூலாதாரம், Getty Images
ஃபினிஷர் ரோலில் கையை சுட்டுக்கொண்ட ஹர்திக்
மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியைப் போன்று ஃபினிஷர் ரோல் எடுக்க முயன்று தோல்விஅடைந்துள்ளார். “ எல்லோரும் தோனியாகிவிட முடியாது, ஃபினிஷர் ரோல் செட் ஆகாது” என்று ஹர்திக் பாண்டியாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். குஜராத் டை்டன்ஸ் கேப்டனாக ஹர்திக் இருந்தபோது 4வது வரிசையில் களமிறங்கி பலமுறை விளையாடியுள்ளார்.
அதுபோல் இந்த ஆட்டத்திலும் ஹர்திக் பேட் செய்திருந்தால், ஆங்கர் ரோல் எடுத்திருக்கலாம், ஆட்டத்தையும் கட்டுப்படுத்தி வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம். ஆனால், தான் கேப்டன் செய்த அணி வீரர்களை குறைத்து மதிப்பி்ட்டு கடைசி நேரத்தில் ஃபினிஷர் ரோல் செய்து ஹர்திக் கையைச் சுட்டுக்கொண்டார் என்பதுதான் நிதர்சனம்.

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக்
மும்பை அணிக்கு புதிய கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா நேற்று அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார். முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள், ஹர்திக்கின் செயல்பாடுகளைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார். இந்த காட்சிகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்தனர்.
அதேபோல பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை தொடக்கத்திலேயே பயன்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் தொடக்கத்தில் ஒரு ஓவர் மட்டுமே பும்ராவுக்கு வழங்கி, கடைசி நேரத்தில் 3 ஓவர்களை ஹர்திக் வழங்கினார். இதுவும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
மும்பை அணியைப் பொறுத்தவரை 3வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா(43) பிராவிஸ்(46) கூட்டணி 77 ரன்கள் சேர்த்ததுதான் நல்ல பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. அதன்பின் களமிறங்கிய பேட்டர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். 129 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த மும்பை அணி அடுத்த 33 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பதற்றத்தில் பறிகொடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
மும்பையும் முதல் போட்டி தோல்வியும்
மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் தோல்வியும் கடந்த 12 ஆண்டுகளாக பிரிக்க முடியாததாக இருந்து வருகிறது. கடந்த 12 சீசன்களாக அதாவது 2013ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான்சந்தித்த அனைத்து முதல் ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து 2024 சீசன்வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை தமிழக வீர் சாய் சுதர்சன் அடித்த 45 ரன்களும், கேப்டன் கில் சேர்த்த 31 ரன்களும்தான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் எந்த பேட்டரும் பெரிதாக சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓமர்சாய்(17), மில்லர்(12) ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ராகுல் திவேட்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால், பதற்றப்படாமல் வெற்றியை ருசித்திருக்கலாம்.
தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “கடைசி 5 ஓவர்களில் 42 ரன்களை சேஸிங் செய்வது செய்யமுடிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கான தருணங்களை தவறவிட்டோம். அரங்கில் நிறைந்த ரசிகர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திலக் வர்மா ஒரு ரன் அடித்து டேவிட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் திலக் செய்தது சரி.இன்னும் 13 போட்டிகள் இருக்கின்றன பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












