மோதி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? பிபிசிக்கு ரகுராம் ராஜன் பேட்டி

பட மூலாதாரம், Getty Images
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரும் , பொருளாதார நிபுணத்துவத்திற்காக உலகளவில் அறியப்பட்டவருமான ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மிகைப்படுத்துவது தவறு என்று கூறியுள்ளார்.
இந்தியா தனது கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்க வேண்டும் அப்போதுதான் அது வலுவாக முடியும் என்று ரகுராம் ராஜன் கூறினார்.
பிபிசி செய்தியாளர் நிகில் இனாம்தாருக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில், பிரதமர் மோதியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மக்கள் மீது எந்த முதலீடும் செய்யப்படவில்லை என்று ராஜன் தெரிவிக்கிறார்.
‘மக்கள் மீது முதலீடு செய்ய வேண்டும்’
"உள் கட்டமைப்பை பொறுத்தவரை கொள்கை அமலாக்கம் மிகவும் வலுவாக இருந்தாலும், பொருளாதாரம் மேலும் தாராளமயமாக்கப்பட வேண்டும். ஆனால் மனித மூலதனத்தை நாம் இன்னும் உருவாக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய சவால் மற்றும் கவலைக்குரிய விஷயம். நாம் மக்களிடம் முதலீடு செய்யவில்லை." என்று அவர் கூறுகிறார்.
கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்பட்ட கல்வி பின்னடைவை இந்தியா சரி செய்யவில்லை என்கிறார். “ ஒரு சில மாநிலங்களை தவிர, பல இடங்களில் குழந்தைகள் (பள்ளிகளில்) பின்தங்கியுள்ளனர். நாம் அந்த குழந்தைகளில் முதலீடு செய்யவில்லை. அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வர நாம் தவறிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் 35 சதவீதமாக உள்ளது, ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளை விட அதிகம், இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்த தசாப்தம் இதுவரை சிறந்த தசாப்தம் என்று மக்கள் நம்புகிறார்கள். அரசு அப்படித்தான் முன்வைப்பதாக அவர் கருதுகிறார்.
இதுகுறித்து ரகுராம் ராஜன் கூறுகையில், "ஆனால், புள்ளிவிவரங்கள் அப்படி கூறவில்லை. நாம் 7.5% வளர்ந்து வருகிறோம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைமையை விட நான்கு முதல் ஐந்து சதவீதம் பின்தங்கியுள்ளோம். வேலையின்மை புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மக்களின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள், 1 கோடியே 20 லட்சம் பேர் ரயில்வே வேலைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவை அனைத்தும் ஒரு கலவையான சூழ்நிலையைக் குறிக்கின்றன.” என்று விவரிக்கிறார்.
ஆமாம், நல்ல விஷயங்கள் நடந்துள்ளன என்று ஒப்புக் கொள்ளும் அவர், “ஆனால் நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை" என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜன் ப்ளூம்பெர்க்கிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் எந்த புதிய அரசு வந்தாலும், அது மக்களின் கல்வி மற்றும் திறன்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
“கல்வி மற்றும் திறன்கள் இல்லாமல், இந்தியா இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.

மோதி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கிறது?
"1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். மிகைப்படுத்தப்பட்ட தரவுகளை நம்புவது ஒரு பெரிய தவறு. இந்திய அரசியல்வாதிகள் இந்த கூற்றுகளை மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர, மக்கள் அதை நம்புவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோதி இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆனால் இது சாத்தியமில்லை என்று கூறி இதனை நிராகரிக்கிறார் ரகுராம் ராஜன்.
“இது அடையக்கூடிய இலக்கு அல்ல. ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான இந்திய குழந்தைகள் உயர் கல்வியைப் பெற முடியவில்லை. இடைநிற்றல் விகிதம் மிக அதிகமாக உள்ளது” என்று ரகுராம் ராஜன் கூறினார்.
"நமது தொழிலாளர் சக்தி அதிகரித்து வருகிறது, ஆனால் நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே அதன் நன்மைகளை உணர முடியும்" என்று ராஜன் கூறினார். இந்தியாவுக்கு மிக முக்கியமான விஷயம் அதன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும், புதிய வேலைகளை உருவாக்குவதும் ஆகும்.
இந்திய பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத்திறன் குறித்தும் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். “மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20.5% பேரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க முடிகிறது.” என்று சுட்டிக்காடிய ராஜன், இந்தியாவின் கல்வியறிவு விகிதம் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளை விட குறைவாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். “இதுபோன்ற புள்ளிவிவரங்கள் நம்மை ஏமாற்றமடையச் செய்கின்றன. மனித வளத்தில் தரம் இல்லாதது நம்மை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளி விடுகிறது” என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
எட்டு சதவீத நிலையான வளர்ச்சி விகிதத்தை அடைய இந்தியா இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று ரகுராம் ராஜன் கூறினார்.

பட மூலாதாரம், ANI
‘சிப் உற்பத்தியை விட கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்’
“இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விரிவாக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தை தாண்டும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, இது இந்தியாவை உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாற்றி வருகிறது.” என்று ரகுராம் ராஜன் கூறினார்.
உயர் கல்விக்கான பட்ஜெட்டை அதிகரிப்பதற்கு பதிலாக சிப் உற்பத்தியில் மானியங்களுக்கு அதிக செலவு செய்யும் கொள்கையை மோதி அரசு பின்பற்றுகிறது என்று விமர்சித்துள்ளார் ரகுராம் ராஜன்.
“இந்தியாவில் செமி கண்டக்டர் வணிகத்தை நடத்த ரூ.760 பில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உயர் கல்விக்கு பட்ஜெட்டில் ரூ. 476 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“இந்த தொழில்களுக்கு பயிற்சி பெற்ற பொறியாளர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கும் போது, கல்வி முறையை சரிசெய்வதை விட சிப் உற்பத்தி போன்ற உயர்மட்ட திட்டங்களில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது” என்று ராஜன் கூறினார்.
"எனக்கு என்ன கவலை என்றால், சிப் உற்பத்தி போன்ற கௌரவமாக கருதப்படும் திட்டங்கள் மீது நமது கவனம் உள்ளது. ஆனால் ஒரு நிலையான சிப் உற்பத்தித் தொழிலுக்கு பங்களிக்கும் அடித்தளத்தை கொடுக்கும் காரியங்களை நாங்கள் கைவிடுகிறோம்" என்று விளக்கி பேசினார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நிதித்துறை பேராசிரியராக இருக்கும் ராஜன், உலகப் பொருளாதாரம் குறித்து நன்கு அறிந்த நிபுணர். அவர் இந்தியாவின் கொள்கைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த அவரது பதவிக்காலம் 2016 இல் முடிவடைந்தது. அதன் பிறகு அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்கு சென்றார்.
சமீபத்தில், 'பிரேக்கிங் தி மோல்ட்: ரீமேஜினிங் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம்' என்ற தலைப்பிலான அவரது புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. லிங்க்ட் இன்னில் காணொளிகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தனது பார்வையையும் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
கல்வி மேம்பாட்டை தவிர அரசுக்கு அவர் வேறு சில கோரிக்கைகளையும் வைக்கிறார். தொழிலாளர்கள் அடிப்படையிலான உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் சமத்துவமின்மையை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் மையப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்றும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார். நமக்கு தேவை “ஒரு நடைமுறை அணுகுமுறை” என்று ராஜன் கூறினார்.
முன்னாள் சீனத் தலைவர் டெங் ஜியோ பிங்கின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சீனாவிடமிருந்து இந்தியா எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அது "பூனை கருப்பாக இருந்தாலும் அல்லது வெள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை, அது எலியைப் பிடிக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்” என்றார் ராஜன்,
சீனாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் தலைவராக டெங் ஜியோ பிங் கருதப்படுகிறார்.

பட மூலாதாரம், ANI
ரகுராம் ராஜன் மோதி அரசை குறிவைப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, மோதி அரசாங்கத்தின் பெரும்பான்மைவாத அரசியலை அவர் விமர்சித்து பேசியிருந்தார்.
பெரும்பான்மைவாதமும் எதேச்சதிகாரமும் நாட்டை இருளில் இட்டுச் செல்லும் என்றும், நிலையற்ற தன்மை அதிகரிக்கும் என்றும் 2019 அக்டோபரில் ராஜன் கூறியிருந்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிலையானது அல்ல என்றும், பிரபலமான கொள்கைகள் காரணமாக, பொருளாதாரம் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல மாறும் அபாயம் உள்ளது என்றும் ரகுராம் ராஜன் கூறியிருந்தார்.
ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொள்கைகளே இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ரகுராம் ராஜன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராகவும் இருந்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் தேக்க நிலைக்கு மோதி அரசாங்கத்தில் அனைத்து அதிகாரங்களும் மையப்படுத்தப்பட்டதே காரணம் என்று ராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.
"மோதி தனது முதல் பதவிக்காலத்தில் பொருளாதாரத்திற்கு எந்த நல்லதும் செய்யவில்லை, ஏனென்றால் இந்த அரசாங்கத்தில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில், பொருளாதாரம் குறித்து அரசுக்கு எந்த தொலைநோக்கும் இல்லை. அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரிகள் முடிவுகளை எடுக்கத் தயங்கினர். தீவிர சீர்திருத்தம் என்ற எண்ணம் இல்லை” என்று பேசியிருந்தார்.
ரகுராம் ராஜன், "மூத்த அதிகாரிகள் கூட எந்த ஆதாரமும் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர். முன்னாள் நிதியமைச்சர் எந்த விசாரணையும் இல்லாமல் பல வாரங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். எனக்கு அது மிகவும் வருத்தமளிக்கிறது. அரசு அமைப்புகளின் பலவீனம் காரணமாக, சர்வாதிகாரமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 1971-ல் இந்திரா காந்தி காலத்தில் இப்படித்தான் இருந்தது, 2019-ல் மோதி காலத்தில் இப்படித்தான் இருக்கிறது” என்றார்.
ரகுராம் ராஜனின் விமர்சனத்திற்கு பதிலளித்த பாஜகவின் வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் அரசாங்கத்தை நடத்தினார், நாடு பத்து ஆண்டுகளை இழந்தது. மோதிக்கு நன்றி, இந்தியா இந்த தவறை மீண்டும் செய்யாது."என்று கூறியிருந்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்ததால், மன்மோகன் சிங்கின் பெயரைக் குறிப்பிடாமல் சௌதைவாலே தனது பதிவில் தாக்கியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












