குடவோலை: சோழர்களுக்கு முன்பே தேர்தல் நடத்திய பாண்டியர்கள் - எப்படி தெரியுமா?

- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
இன்னும் சில மாதங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் குறித்த பேச்சுகள் அடிபடத் துவங்கியிருக்கின்றன.
ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வெட்டையே சித்தரித்தது.
ஆனால் உத்திரமேரூர் சோழர் காலக் கல்வெட்டுக்கு 123 ஆண்டுகள் முன்னரே, பாண்டியர் காலத்தில் திருநெல்வேலியில் இந்த தேர்தல் முறை நடந்திருப்பற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதிகம் அறியப்படாத அந்தக் கல்வெட்டு என்ன சொல்கிறது? சோழர்களுக்கு முந்தைய பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தேர்தல் எப்படி நடந்தது? வேட்பாளர்களுக்கான தகுதிகள் என்ன? எந்த அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்?
"சோழர்களை முந்திய பாண்டியர்கள்"
தமிழ்நாட்டில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடந்துள்ளது. அதிலும் பாண்டியர்கள் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது என்ற ஆச்சரியமளிக்கும் தகவல்களுடன் பிபிசி தமிழுடன் உரையாடினார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் முருகன்.
"தேர்தல் தொடர்பான வரலாறு என்றாலே பெரும்பான்மையான பெரும்பான்மையானவர்கள் உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்."
"ஆனால் அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே (கி.பி. 8-ஆம் நூற்றாண்டு) திருநெல்வேலி மாவட்டம் மானூர் கிராமத்தில் உள்ள பாண்டிய மன்னன் மாறன் சடையனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த முக்கியமான கல்வெட்டு ஒன்று உள்ளது. மன்னர் ஆட்சியிலும் மக்களாட்சி நடைபெற்றது என்பதை விளக்கும் கல்வெட்டு இது" என்று முருகன் விவரித்தார்.

மானூர் வட்டெழுத்து கல்வெட்டு
திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ தொலைவில் மானூர் என்ற சிற்றூர் உள்ளது. அந்த ஊரில் அம்பலவாணசுவாமி கோவிலில் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.
"அது அக்காலத்தில் நடந்த தேர்தலைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிவிக்கின்றது" என்று முருகன் தொடர்ந்து பேசினார்
இந்தக் கல்வெட்டு பாண்டிய மன்னன் மாறன் சடையனின் (கி.பி. 768-815) 35-ஆம் ஆட்சியாண்டில் நிறுவப்பட்டது. இந்த மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனவும் அழைக்கப்படுகிறான்.

"மானூரில் உள்ள இந்தக் கல்வெட்டை ஒரு பொக்கிஷம் எனலாம்" என்கிறார் முருகன்.
"காரணம் கிராம சபையில் எப்படி உறுப்பினர்களை தேர்வு செய்வது என இந்தக் கல்வெட்டு தெளிவாக விளக்குகிறது. அந்த கிராம சபையை ‘மானநிலை நல்லூர் மகாசபை’ என அழைக்கின்றனர். (மானூர் என்று தற்பொழுது அழைக்கப்படும் இந்த ஊர் அக்காலத்தில் மான நிலைநல்லூர் என்று அழைக்கப்பட்டது.)"
இந்தச் சபைக்கு உறுப்பினராவதற்குக் கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம். எனக் கூறிய முருகன், 'ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறஞ்ச டையருக்கு யாண்டு முப்பதஞ்சு' எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டை படித்து காண்பித்தார்.

அந்த காலத்தின் வேட்பாளரின் தகுதிகள் என்ன?
அந்த வட்டெழுத்து கல்வெட்டில் உள்ள விதிமுறைகள், அதாவது வேட்பாளரின் தகுதிகள், இதுதான் என்று முருகன் விளக்கினார்.
- வேட்பாளர்கள் 35 முதல், 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- கல்வி மட்டுமல்ல, வருமானம் ஈட்டி, அரசுக்கு, வரி கட்டுபவராகவும் இருக்க வேண்டும்.
- அவர்களிடம் அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும்.
- அத்துடன் திட்டங்களைச் செய்து முடிக்கும் திறமைசாலிகளாகவும் இருக்க வேண்டும்.
- அனைத்திற்கும் மேலாக நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- மேலும் வேட்பாளர்கள் நல்ல குணம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம்.
- கடந்த ஐந்தாண்டுகளில் எந்த பொதுநல (அரசு) பணியிலும் இருந்திருக் கூடாது.

தொடர்ந்து அவர் யாரெல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்பதையும் பதிவு செய்துள்ளதை விளக்கினார்.
- பொது நலப்பணியைச் செய்து முடித்து கணக்குக் காட்டாதவர்கள்
- மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்
- திருடிய வழக்கில் தண்டனை பெற்றவர்கள்
- லஞ்சம் வாங்கியவர்கள்
- மேற்கண்ட குற்றங்களைச் செய்து பின்னாளில் நல்லவர்களாக வாழ்பவர்கள்
- மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தாய் மற்றும் தந்தை வழி சொந்தங்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியாது
என விதிமுறைகளை படித்துக் காட்டி விளக்கி கூறினார்
தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிட்ட பாண்டிய மன்னன்
பாண்டியர் காலத்தில் நடந்த இந்தத் தேர்தலில் ஒருவருக்கு ஒரு முறை மட்டும் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் ஐந்தாண்டுகள் மட்டும்தான் அவர் அந்த பணியை செய்ய முடியும் என்பதை இந்த கல்வெட்டு விதிமுறைகள் தெளிவாக விளக்குகின்றன என்று கூறினார் முருகன்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மேற்கண்ட சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகச் சிறந்தவராகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே அந்த பணியில் இருக்க முடியும்."
"பின்னர் புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதற்குக் காரணம் இளைஞர்கள், மற்றும் திறமையானவர்களை அடையாளம் காண்பது அவசியம், சமூக அக்கறையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்பதை பாண்டிய மன்னன் அப்போதே சிந்தித்திருப்பார் என இந்த கல்வெட்டு உணர்த்துகின்றது,” என்று கூறினார்.

பாண்டியர் - சோழர் கல்வெட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
பாண்டியர்கள் போலவே அவர்களுக்கு பின் வந்த சோழர்களும் தேர்தல் விதிமுறைகளை மிகத் தெளிவாக கட்டமைத்திருந்தனர் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பத் துறை மற்றும் தொல்லியல் துறை (பொறுப்பு) பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவர் சுதாகர் சிவசுப்பிரமணியம் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புகழ் பெற்ற ஒரு கல்வெட்டு உள்ளது. அங்குள்ள திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டு அந்தக் காலத்துத் தேர்தல் முறையைப் பற்றிப் பேசுகிறது. இது முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-955) காலத்தில் நிறுவப்பட்டது. அதாவது இந்த கல்வெட்டு 1,105 ஆண்டுகள் பழமையானது.
ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தின் மானூரில் உள்ள ஊர் சபை உறுப்பினர் தேர்வு பற்றிய கல்வெட்டை நிறுவி 1,228 ஆண்டுகள் ஆகின்றன, என்றார் சுதாகர்.

மேலும், இந்தக் கல்வெட்டு உத்திரமேரூர் குடவோலை தேர்வு தகவல் அடங்கிய கல்வெட்டை விட 123 ஆண்டுகள் பழமையானதாகும்.
“இந்த 123- ஆண்டுக் கால இடைவெளியில் தமிழ் எழுத்து வடிவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக மானூர் கல்வெட்டு வட்டெழுத்திலும், உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ் எழுத்திலும் காணப்படுகின்றன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுக்கும் தற்கால தமிழ் எழுத்து வடிவத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எனவே தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வட்டெழுத்தைப் படிக்க முடியும். அதனால் பொதுமக்கள் மானூர் கல்வெட்டைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது,” என்றார் சுதாகர்.

"மாறாக, உத்திரமேரூர் கல்வெட்டு தமிழ் எழுத்து கல்வெட்டாகும். இதனைச் சற்று முயற்சி செய்தால் எளிதில் படித்துவிடலாம். காரணம் இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும் தற்கால தமிழ் எழுத்துக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவைதான்."
"எனவே இவ்விரு கல்வெட்டுக்களும் வேட்பாளர்கள் தேர்வு முறைகளை விளக்கினாலும் மானூர் கல்வெட்டு பழமையானது என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும் இவ்விரு கல்வெட்டுகளிலும் வேட்பாளர்கள் தேர்வு சட்ட திட்டங்கள் கிட்ட தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. அதாவது தமிழகத்தின் வடபகுதியிலிருந்து தென்பகுதிவரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சட்டதிட்டங்கள் இருந்திருக்கிறது எனவும் இந்த இரு கல்வெட்டுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்" என்றார் அவர்.
"மேலும் பண்டைய தமிழகத்தில் அரியணையில் அமரும் மன்னர்கள் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், கிராமங்களை ஆளும் முக்கிய பதவிகளுக்குத் தேர்தல் முறையிலேயே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என இந்த கல்வெட்டுக்கள் விளக்குகிறன" என்றார்.

பாண்டியர் கல்வெட்டு பிரபலமாகாதது ஏன்?
"மானூர் வட்டெழுத்து கல்வெட்டு அங்குள்ள சிவாலயத்தில் உள்ள ஒரு தூணில் காணப்படுகிறது. ஆனால் உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டு திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டில் உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டு 1898-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது."
"அதற்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் துறை 1906-ஆம் ஆண்டு மானூர் கல்வெட்டைக் கண்டுபிடித்தது. இவ்வாறாக இவ்விரு கல்வெட்டுகளும் 8 ஆண்டுகள் இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன."
"உத்திரமேரூர் கல்வெட்டு செய்திகள் பல கல்வெட்டு ஆய்வாளர்களின் மூலமாகவும், பல புத்தகங்களின் வாயிலாகவும், நிறைய கருத்தரங்க கட்டுரைகள் மூலமாகவும் பிரபலமடைந்துவிட்டது. உத்திரமேரூர் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகே அமைந்திருப்பதாலும், இது கிட்டத்தட்ட தற்கால தமிழில் இருப்பதாலும் இந்த கல்வெட்டு விரைவில் பெயர்பெற்றுவிட்டது எனலாம்" என்றார் சுதாகர்.
"மாறாக உத்திரமேரூர் கல்வெட்டிற்கு 123 ஆண்டுகள் மூத்த மானூர் கல்வெட்டு பற்றிய உண்மை மக்களைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம். மானூர் வட்டெழுத்து கல்வெட்டை மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாததாலும், அதிக புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் இந்தக் கல்வெட்டைப் பற்றி வெளிவரவில்லை என்பதாலும், இது தென்தமிழகத்தில் ஒரு சிற்றூரில் இருப்பதாலும் இந்த கல்வெட்டின் பெருமை வெளியுலகிற்குத் தெரியாமல் போனது"
"அதனால்தான் தேர்தல் குடவோலை முறை என்றால் மக்களுக்கு உத்திரமேரூர் கல்வெட்டுதான் நினைவுக்கு வருகிறது" என்று தெரிவித்தார்.

1,000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஆகம எதிர்ப்பாளர்கள்
"உத்திரமேரூர் கல்வெட்டு ஆகமங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாது என்கிறது. இதிலிருந்து 1,100 வருடங்களுக்கு முன்பே ஆகமங்களை எதிர்ப்பவர்களும் தமிழகத்திலிருந்துள்ளனர் எனவும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மானூர் கல்வெட்டில் இந்த ஆகம விதிமுறை இல்லை."
"மேலும் உத்திரமேரூர் கல்வெட்டுகழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் தேர்தலில் நிற்க முடியாது என்கிறது. இந்த இரு விதிமுறைகளும் மானூர் கல்வெட்டில் இல்லை" என்று இரண்டு கல்வெட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களையும் தொடர்புகளையும் விவரித்தார் சுதாகர்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நடந்த அணிவகுப்பில் கூட உத்திரமேரூர் கல்வெட்டின் மாதிரிதான் இடம்பெற்றது. இது இந்திய அளவில் மூன்றாம் பரிசையும் வென்றது.
"1,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பிற நாடுகளில் அபூர்வமாகவே தேர்தல்கள் நடத்தப் பட்டுள்ளன. எனவே வாக்காளர்களின் தகுதியைத் தன்னகத்தே தாங்கியுள்ள மானூர் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறன."
"சோழர்களுக்கு முன்னரே பாண்டியர்கள் மிக நேர்த்தியாக தேர்தல் நடத்தி ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு மானூர் கல்வெட்டு மிகப்பெரிய சான்றளிக்கின்றது," என்று கூறினார் சுதாகர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












