சோழர், பாண்டியர் ஆட்சியில் அரசு அதிகாரிகளின் ஊழல், முறைகேடுகளுக்கு வழங்கிய தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
சோழ, பாண்டிய, சேரர், விஜயநகர அரசர்களின் காலகட்டத்தில் கோவில்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ளும் ஆதாரமாக கோவில் கல்வெட்டுகள் இருக்கின்றன.
அந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் சாதனைகள், போர்கள், தானங்கள் பற்றியே அமைந்திருக்கும்.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இலவனாசூர் கோட்டை சிவன் கோவிலில் அந்தக் கால மன்னர்களின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் செய்த தவறுகள் மற்றும் அதற்காக அவர்களுக்குக் கிடைத்த தண்டனைகள் போன்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் அக்கால மக்களின் வாழ்வியல், மன்னர்களின் ஆட்சி முறை, அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, குறிப்பாக அதற்கு வழங்கப்பட்ட தண்டனை முறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அது பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.
பிரெஞ்சு படையால் கைப்பற்றப்பட்ட இலவனாசூர் கோட்டை


ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இலவனாசூர் கோட்டையும் அதைச் சார்ந்த இடங்களையும் கண்காணிக்கும் பொறுப்பை மீர் உசைன் கான் சாகிப் ஏற்றிருந்தார். கி.பி.1755ஆம் ஆண்டில் தொத்தேய் தலைமையில் 200 ஐரோப்பியர்கள், ஆயிரம் சிப்பாய்கள், பீரங்கி முதலான போர் தளவாடங்களுடன் கூடிய பிரெஞ்சு படையானது இலவனாசூர் கோட்டையைத் தாக்கத் தொடங்கியது. போரில் ஏற்பட்ட காயத்தால் மீர் உசைன் கான் இறந்தார். மிக எளிதாக பிரெஞ்சுகாரர்கள் இந்தப் பகுதியை கைப்பற்றினர்.
இலவனாசூர்கோட்டை சிவன் கோவில் யானை ஏறாத வண்ணம் மிக உயரமான பீடத்தில் அமைக்கப்பட்ட மாடக்கோவில். தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே இந்த அமைப்பு காணப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் இறையானறையூர் சோழ கேரள சதுர்வேதி மங்களம், சோழ கேரள நல்லூர், பிடாகை பற்று எனப் பலவகையான பெயர்களைப் பெற்றிருந்த இந்த ஊர் தற்போது இலவனாசூர்கோட்டை என அழைக்கப்படுகிறது.
கி.பி.1801ஆம் ஆண்டு இலவனாசூர்கோட்டைப் பகுதி அனைத்தும் ஆங்கிலேய கம்பெனி வசமானது.
இதில் ஆற்காடு பகுதிக்கு கேப்டன் கிரகாம் என்னும் ஆங்கிலேயர் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் பாலாற்றுக்கும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை நிர்வாகத்தின் பொருட்டு இராவென் ஷா என்னும் ஆங்கிலேயர் 21 கோட்டங்களாகப் பிரித்தார். அவற்றில் இலவனாசூர் கோட்டமும் ஒன்று.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெருமதிப்பு மிக்க நகரம்

இலவனாசூர் கோட்டை கோவில் கல்வெட்டு விபரங்கள் பற்றித் தெரிந்துகொள்ள, பிபிசி தமிழுடன் திருவண்ணாமலை வட்டாட்சியரும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ செயலாளருமான பாலமுருகன் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான உளுந்தூர்பேட்டை லலித்குமார் ஆகியோர் வந்தனர்.
இலவனாசூர்கோட்டை ஊர் பாகம் கொண்ட அருளிய மகாதேவர் என்ற சிவன் கோவிலில் திரும்பும் இடமெல்லாம் கல்வெட்டுகள், வித்தியாசமான கலைச் சிற்பங்கள், கலை நுணுக்கத்துடன் மெருகேற்றப்பட்ட புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள் என்று நம்மை ஆச்சரியப்படுத்தின.
“நாம் நிற்கும் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை பெருமதிப்புக்குரிய நகரமாக இருந்துள்ளது,” என்று திருவண்ணாமலை வட்டாட்சியரும் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவச் செயலாளருமான பாலமுருகன் விளக்க ஆரம்பித்தார்.
இங்கு 80க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. சோழர் கால கல்வெட்டுகள், பாண்டியர் கால கல்வெட்டுக்கள், கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள், விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.
வரிப் பணத்தைக் கையாடல் செய்த அதிகாரிகளுக்கு என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் வசூல் செய்யப்பட்ட வரிப் பணத்தில் கையாடல் செய்த அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவது உட்படப் பல நடவடிக்கைகளைப் பார்க்கிறோம்.
அதைப் போலவே, கி.பி. 1116ஆம் ஆண்டிலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அதிகாரிகள் வசூல் செய்த வரியைக் கட்டாமல் ஓடிப் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார் திருவண்ணாமலை வட்டாட்சியரும் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவச் செயலாளருமான பாலமுருகன்.
அது தொடர்பான கல்வெட்டு இலவனாசூர் கோட்டை கோவிலில் உள்ளது என்று கூறி, இரண்டாம் கோபுர வலப்பக்கச் சுவர் பகுதிக்கு அழைத்துச் சென்று கல்வெட்டைக் காண்பித்தார்.
'ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் மாது விளங்க ஜயமாது விரும்பநிலமாக...' எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டை படித்து அதை விவரித்தார்.
அதன்படி, முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இளமை வேங்கடமான பண்டித பிரியன், கருமாணிக்கமான பட்டப் பிரியன் என்ற இரண்டு அதிகாரிகளும் ஊர் கணக்கராகப் பணியாற்றினர்.
கி.பி. 1116ஆம் ஆண்டில் அவர்கள் வசூலித்த வரித் தொகையை ஊர் சபையோரிடம் ஒப்படைக்காமல் ஊரைவிட்டு ஓடிவிட்டனர் .இதை அறிந்த ஊர் சபையார் அவர்களது சொத்துகளை விற்று அந்தத் தொகைக்கு ஈடுகட்ட முயன்றனர்.

"இளவனாசூருக்கு அருகில் உள்ள செம்பியன் மாதேவி என்ற கிராமத்தில் உள்ள வானவன் மாதேவி பேரேரி என்ற இடத்திற்குக் கிழக்கே, முதல் கண்ணாறு என்ற இடத்தில் உள்ள நஞ்சை நிலமும் அங்கிருந்த கிணறும் மேற்கூறிய இரண்டு கணக்கர்களுக்குச் சொந்தமான சொத்துகளாக இருந்துள்ளன.
ஊர் சபையினர் கி.பி. 1118ஆம் ஆண்டில் நிலம், கிணறு, வீட்டு மனை ஆகிய அனைத்தையும் வீதி விடங்கண் கோலால் அளந்து 20 குழியும் கிணறும் மனையும் விற்கப்பட்டது. பதின்மூன்றே நாலு மா முக்காணிக் காசுக்கும் (இது பழங்கால தமிழர்களின் கணக்கீடு வகை. நான்குமா என்பது 400 குழிகளைக் கொண்டது, அதேபோல் முக்காணி அல்லது மூன்று வீசம் என்பது 375 குழிகளாகக் கணக்கீடு செய்யப்படுகின்றது. அதாவது 4/20 என்பது நான்குமா எனவும் 3/80 என்பது முக்காணி எனவும் கணக்கீடு செய்யப்பட்டது), மூன்று கழஞ்சு பொன்னுக்கும் (கழஞ்சு என்பது தங்கத்தை அளவிட பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய அளவீட்டு முறை. ஒரு கழஞ்சு என்பது தற்போதைய கணக்கின்படி 5.1கிராம்) விற்றனர். கி.பி. 1116இல் நடந்த முறைகேடுக்கு கி.பி. 1118இல் தொண்டைமானார் என்ற அதிகாரி வந்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று கல்வெட்டு கூறும் தகவல்களை விவரித்தார் பாலமுருகன்.
மேலும் அதிகாரி தொண்டைமான் என்பவரே இவற்றை விலைக்கு வாங்கியதையும் இந்தக் கல்வெட்டில் பதிவு செய்துள்ளதாகக் கூறினார் அவர்.
இவ்வாறு ஊர் கணக்கராகப் பணியாற்றிய அதிகாரிகளின் தவறான செயலையும் ஊர் சபையாரின் செயலையும் நடவடிக்கைகளையும் இலவனாசூர் கல்வெட்டு விளக்குகிறது.
வரி வசூலிக்காத அதிகாரிக்கு என்ன நடந்தது?

இதுமட்டுமின்றி, இதே கோவிலில் வரி வசூலிக்காமல் மெத்தனமாக இருந்த அதிகாரிகள் குறித்தும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும் கல்வெட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் ரமேஷ்.
கோவிலின் முதல் பிரகார திருச்சுற்று மாளிகையின் தெற்குச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைப் படித்துக் காட்டி விளக்கமளித்தார்.
'ஸ்வஸ்திஸ்ரீ கோற்சடைய பன்மரான திரி புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்க்கு யாண்டு எட்டாவது கற்கட நாய...' எனத் தொடங்கும் கல்வெட்டைப் படித்து விரிவாகக் கூறினார்.
இந்தக் கல்வெட்டு கி.பி. 1261ஆம் ஆண்டில் சடையவர்மன் வீரபாண்டியனின் எட்டாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இலவனாசூருக்கு தென்கிழக்கில் மலையனூர் என்னும் சிற்றூர் உள்ளது. பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, அது குடி நீங்க தேவதானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரித்தொகை அனைத்தும் கோவில் காரியங்களுக்குச் செலவிடப்படுவது அந்தக் கால வழக்கம்.
"அங்குள்ள மக்கள் அனைவரும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி தொகைகளை கோவிலுக்குச் செலுத்த வேண்டும். அது போலவே மலையனூர் மக்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த கோவில் நிலத்திற்கான தங்களது வரிகளை இலவனாசூர் சிவன் கோவிலுக்கு செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், வீரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இளவனாசூர்கோட்டை அருகில் உள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய நிலத்திற்கான வரிகளை அதிகாரிகள் வசூல் செய்யாமல் பல ஆண்டுகள் மெத்தனமாக இருந்துள்ளனர்.
அதாவது, விக்கிரம பாண்டியன் ஏழாவது ஆட்சி ஆண்டு வரை 637 காசு, வீரபாண்டித் தேவர் நான்காவது ஆட்சியாண்டு வரை 121 காசு, மீண்டும் வீரபாண்டியன் ஏழாவது ஆட்சியாண்டு வரை 547 காசு என ஆக மொத்தம் 3.100 காசுகள் வரிவசூலிக்கப்படவில்லை,” என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
இதற்கு மக்கள் மட்டும் காரணமல்ல அவர்களிடம் வரி வசூலிக்காத தானத்தார்கள் அதாவது அதிகாரிகளுமே காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு அப்போதே தானத்தார்கள் கைது செய்யப்பட்டு கோவிலில் தடுத்து வைக்கப்பட்டதாக பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும் வரி செலுத்தத் தவறிய பெருந்தொகையை ஒட்டுமொத்தமாக செலுத்த இயலாததால், பட்டர்கள் அனுபவித்து வந்த மலையனூர் நிலங்களை கோவிலுக்கு விற்று அந்தத் தொகையைச் செலுத்தி தானத்தார்களை சிறை மீட்டதாக கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓடிப்போன கடனாளி; சிக்கிய ஜாமீன்தாரருக்கு என்ன ஆனது?

வரி வசூலில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மற்றும் தண்டனைகள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது போலவே, கடன் கொடுக்கும்போது வாங்கியவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் அதற்காக ஜாமீன் கையெழுத்து போட்டவர் பணம் செலுத்திய நிகழ்வும் மாறவர்மன் விரபாண்டியன் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதை விவரிக்கும் கல்வெட்டு கோவிலின் வடக்குச் சுவரில் உள்ளது. இது மாறவர்மன் வீரபாண்டியனின் ஏழாவது ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது என்று கூறி விவரிக்கத் தொடங்கினார் பேராசிரியர் ரமேஷ்.
”திருமுனைப்பாடி நாட்டின் திருநாவலூரைச் சேர்ந்த வியாபாரி பானூர் கிழவன் ஆட்கொண்ட தேவன் தொண்ட பிள்ளை என்பவர் கோவிலினுடைய பூஜைக்கு திருவமுது படைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு முதலீடாக 10 பணம் ஒரு திருநாளுக்கு எனக் கணக்கிட்டு நான்கு நாட்களுக்கு 40 பணம் சபையில் இருப்பவரிடம் வழங்குகிறார்.
சபையில் எழுத்தழகியரான சோமதேவப்பட்டர் என்பவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடமை ஆற்றாமல் ஓடிப் போய்விட்டார். அப்பொழுது அவருக்குப் பிணையாக (ஜாமீன்தாரர்) ஒருவர் கையெழுத்துடுகிறார்,” என விவரிக்கிறார் ரமேஷ்.
அவரது கூற்றுப்படி, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டவர் ஓடிப் போனதால் ஜாமீன்தாரர் தனது இலுப்பஞ்செய்தடி, களரிதடி, குலச்செய்தடி, குண்டல் தடி என நான்கு நிலமும் 1250 குழி திருநாமத்துக் காணியாக கோவில் தானத்தார் பெறுகின்றனர்.
இவ்வாறு கடமையாற்ற வேண்டியவர், ஓடிப் போக அதற்கு ஜாமீன்தாரராக இருந்தவர் தனது நிலத்தை விற்று கடமையை நிறைவேற்றிய செய்தியை இந்தக் கல்வெட்டு மிகத் தெளிவாக விளக்குகிறது.
மக்கள் மீது அரசன் விதித்த வரிச்சுமை

அதிகாரிகளின் மெத்தனப்போக்கு மற்றும் முறையற்ற செயல்பாடுகள் பற்றிய கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் இருப்பதைப் போல் அரசன் அதிக வரியை மக்கள் மீது விதித்ததும் மீண்டும் கோரிக்கையை ஏற்று மக்கள் மீது சுமத்திய மிகுதியான வரிகளைக் குறைத்த செயலும் இங்கு கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் இரண்டாம் பிரகாரத்து கிழக்குச் சுவரில் உள்ள விஜயநகர மன்னர்களின் கல்வெட்டை காண்பித்த எழுத்தாளர் உளுந்தூர்பேட்டை லலித் குமார் அதை விவரிக்கத் தொடங்கினார்.
"விஜயநகர மன்னர்களில் வீர பிரதாப விசய ராயரின் கி.பி. 1446ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இது. இதில் மிகுதியான வரிகள் காரணமாக மக்கள் துயருற்றதும் அதைத் தொடர்ந்து அரசே வரிகளைக் குறைத்து மக்களின் துயர் நீக்கியதும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது."
இதில், வழிதிலம்பட்டு சாவடி நாடும் கரணிகரும் பரிவாரமும், தொண்டைமானார் கச்சிராயரும்கூடி விஜயநகர மன்னரான ராயரிடம் வரி தொடர்பாக முறையிட்டனர். உடனே அவர் கோரிக்கையை ஏற்று மக்களின் துயரங்களை நீக்கி அவர்கள் துயர் துடைக்க இடங்கை, வலங்கை இன வரிகள் நீக்கப்பட்டு வரி குறைப்பு செய்த செயல்பாடுகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லலித் குமார் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












