எதிரிகளைக் கொன்று உடலை சமைத்து உண்ணும் நரமாமிச கும்பல்கள் எப்படிச் செயல்படுகின்றன?

நரமாமிசம் உண்ணும் மெக்சிகோவின் குற்றக் குழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், செசிலியா பர்ரியா
    • பதவி, பிபிசி முண்டோ

மெக்ஸிகோவில் செயல்பட்டுவரும் குற்றக் குழுக்கள் மிருகத்தனமாகச் செயல்படக்கூடியவை. அவர்களுக்கு மத நம்பிக்கை இருக்கும் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான்.

ஆனால், சிறிதும் இரக்கமின்றி கடத்தல், சித்ரவதை, கொலை, தங்கள் போட்டியாளர்களையும் துரோகிகளையும் துண்டு துண்டாக வெட்டுதல், ஆகியவற்றில் ஈடுபடுபவை இந்தக் குழுக்கள். இவை நரமாமிசம் உண்ணும் ஒரு மதத்தைக் கடைபிடிக்கின்றன என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் க்ளாடியோ லோம்னிட்ஸ், இந்தக் குழுக்களின் குற்றச் செயல்களுக்கு தார்மீக ஆதரவை வழங்க அவர்கள் தங்களுக்கென ஒரு ஆன்மீகக் கட்டமைப்பை வைத்திருப்பதாக நம்புகிறார்.

‘குற்றக் குழுக்களின் அரசியல் இறையியல்’ என்ற தனது புத்தகத்தில், லோம்னிட்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் மத நம்பிக்கைகள் மற்றும் அதிகார அமைப்புகளுடனான அவற்றின் உறவை ஆராய்கிறார்.

குற்றக் குழுக்களின் நரமாமிசம் உண்பதன் பின்னுள்ள அரசியல், மத நம்பிக்கைகளைக் குறித்து லோம்னிட்ஸ் பிபிசி முண்டோவிடம் விவரித்தார்.

"நரமாமிசம் உண்பது என்பது பொது ஒழுக்கத்தின் அடித்தளத்தை மீறுவதாகும்," என்று அவர் கூறுகிறார்."அதை விட அருவருப்பான விஷயம் எதுவும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

லோம்னிட்ஸ், கடந்த சில தசாப்தங்களில் மெக்சிகோவின் குற்றக் குழுக்களிடையே நிலவிய பல்வேறு வகையான நரமாமிசம் உண்ணும் பழக்கங்களை ஒரு மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆராய்கிறார்.

மேலும் அந்நாட்டில் செயல்பட்டு வரும் மிகப்பெரும் போதைப்பொருள் விற்பனையாளர்களால் உருவாக்கப்பட்ட சடங்குகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தைத் தேடுகிறார்.

தனி நாடு அமைக்க முனையும் குற்றக் குழுக்கள்

குற்றக் குழுக்கள் கொண்டுள்ள சொந்த வழிபாட்டு முறைகள் மற்றும் மத நம்பிக்கைகளின் பின்னுள்ள அரசியல் தாக்கங்களைப் பற்றிப் பேசிய லோம்னிட்ஸ், மெக்ஸிகோவில் அரசாங்கத்தின் இறையாண்மைக்கு மாற்று இறையாண்மைகள் உருவாகி வருகின்றன என்றார்.

“குற்றக் குழுக்களுக்கு பல இறையாண்மைகள் உள்ளன என்று சொல்லலாம். அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தை வைத்திருப்பது போல ஆடை அணிகிறார்கள். அவர்கள் நில வரி வசூலிக்கிறார்கள். சில குழுக்கள் தங்களை நிறுவனங்கள் என்று அழைத்துக்கொள்கின்றன அதாவது அவர்கள் ஒரு அதிகாரத்துவத்தை உருவாக்குகிறார்கள்,” என்றார்.

இது ஒரு வகையில் தனியான ஒரு நாட்டை அமைக்கும் முயற்சி என்கிறார் லோம்னிட்ஸ்.

“அன்னையர் தினம் அல்லது குழந்தைகள் தினத்தன்று இந்த குற்றக் குழுக்கள் பரிசுகளை விநியோகிப்பது ஒரு எடுத்துக்காட்டு. குற்றக் குழுவின் தலைவர், தான் கட்டுப்படுத்தும் பிரதேசத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பூக்களை கொண்டு வருவார். இவை சுயாட்சி நிர்மாணத்திற்கான எடுத்துக்காட்டுகள். நீங்கள் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினால், நீங்கள் ஒரு அரசாங்கத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்,” என்கிறார் அவர்.

நரமாமிசம் உண்ணும் மெக்சிகோவின் குற்றக் குழுக்கள்

பட மூலாதாரம், CLAUDIO LOMNITZ

படக்குறிப்பு, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் க்ளாடியோ லோம்னிட்ஸ்

சமூக ஒழுக்கவிதிகளை மீறும் மத நம்பிக்கைகள்

இப்படி, தனியாக ஓர் ஆட்சி அதிகாரத்தைக் கட்டமைக்க முயலும் குற்றக் குழுக்களின் மத நம்பிக்கைகள், இறையியலைப் பற்றிப் பேசிய லோம்னிட்ஸ், மாற்று அரசக் கட்டமைப்புகளுக்கு சில ரகசிய ஒப்பந்தங்கள், அமைதி ஒப்பந்தங்கள் தேவை, என்கிறார். பொதுச் சமூகத்தினரால் பரவலாக நிராகரிக்கப்பட்ட விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு ரகசிய சமூகத்தை அவர்கள் ஒன்றிணைக்க வேண்டும், என்கிறார்.

“அவர்கள் தங்கள் சொந்த ஒழுக்க விதிகளை உருவாக்க வேண்டும். இது பொதுவெளியின் ஒழுக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு ஒழுக்கம். எனவே, ரகசிய சமூகங்களில், மிகவும் மாறுபட்ட மத நடைமுறைகள் உருவாகின்றன. இருப்பினும் அவர்கள் சில நேரங்களில் பயன்படுத்தும் சின்னங்கள், படங்கள், பொதுச் சமூகத்திலிருந்து வந்தவை தான்,” என்கிறார்.

ஆனாலும், பொதுச் சமூகத்திலிருந்து பிரிந்த அவர்களின் பிரிவு மிக மிக தீவிரமானது என்கிறார்.

“நரபலி, நரமாமிசமும் உண்பது ஆகியவை யூத-கிறிஸ்துவ ஒழுக்கத்தின் அடிப்படையில் தடைசெயப்பட்டவை என்பதால்தான், இந்தக் குழுக்களைப் பற்றிய புத்தகத்தை நரமாமிசம் என்ற தலைப்பிலிருந்து துவங்கினேன்,” என்கிறார் அவர்.

மேலும், யூத-கிறிஸ்துவ மத ஒழுக்கமே நவீன அரசின் அடிப்படை என்கிறார் லோம்னிட்ஸ். “இது பொதுச் சமூகத்தின் ஒரு முக்கியமான ஒழுக்க விதியை மிக மோசமான முறையில் மீறுவது. மக்களைக் கொன்று பிழைப்பு நடத்தினால் அதற்கு உண்டான ஒழுக்கம்தான் உங்களிடம் இருக்கும். இறையியல் இல்லாமல், தெய்வீக, புனிதம் பற்றிய எண்ணம் இல்லாமல் அரச இறையாண்மை இருக்க முடியாது,” என்கிறார் அவர்.

நரமாமிசம் உண்ணும் மெக்சிகோவின் குற்றக் குழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இக்குழுக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் கூறுகளையும் உள்வாங்கிக்கொள்ளும்

கடத்தல் கும்பல்களின் வழிபாடு முறைகள்

கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களில் மெக்ஸிகோவின் குற்றக் குழுக்களின் அரசியல் இறையியலை பகுப்பாய்வு செய்திருக்கும் லோம்னிட்ஸ், குற்றக் குழுக்ள், போதைப்பொருள் கடத்தல் குழுக்களின் முக்கிய வழிபாட்டு முறைகள், முக்கிய போதைப்பொருள் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.

இந்தக் குழுக்களின் மதநம்பிக்கைகள் புதிதாகப் பிறந்து காலப்போக்கில் மாறும், மறையும், பிற குழுக்களால் உள்வாங்கப்படும், என்றார்.

இக்குழுக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் கூறுகளையும் உள்வாங்கிக்கொள்ளும், என்கிறார் அவர்.

“இது ஒரு முக்கிய வழிபாட்டு முறையாகும். இது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழிபாடாக இருக்கலாம், அல்லது பொதுவாக சட்டவிரோத பொருளாதாரங்கள் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்,” என்கிறார்.

நரமாமிசம் உண்ணும் பழக்கம் எப்படித் துவங்கியது?

இந்தக் குற்றக்குழுக்கள் நரமாமிசம் உண்பது, மனித உறுப்புகளை உண்பது ஆகியவற்றை எப்படித் துவங்கின என்பதைப் பற்றிப் பேசிய லோம்னிட்ஸ், நரமாமிசம் என்பது பொது ஒழுக்கத்தின் அடித்தளத்தையே மீறுவதாகும், என்கிறார்.

“இது வெறுமனே மீறுவது மட்டும் அல்ல. அவர்கள் ஏற்கனவே கற்பழிப்பு, சித்திரவதை, கொலை, கடத்தல் ஆகியவற்றின்மூலம் அதை மீறுகிறார்கள். ஆனால் நரமாமிசத்தில் ஒரு சடங்கு சார்ந்த உள்ளடக்கமும் உள்ளது,” என்கிறார் அவர்.

“அதைவிட பெரிய அருவருப்பு எதுவும் இல்லை, என்கிறார்.

இக்குழுக்களில் நரமாமிசம் உருவாகி வந்தது மூன்று படிகளைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் அவர். முதலாவது, 1989-இல் மெக்ஸிகோவின் வடகிழக்கில் உள்ள மாடமோரோஸ் நகரத்தில் ‘நார்கோசடானிகோஸ்’ என்று அழைக்கப்படும் தருணம்.

“அதில், எல்லாமே ஒரு சடங்கிற்கு உட்பட்டது. ஒரு சடங்கு நிபுணர், நரபலியை உள்ளடக்கிய ஒரு சடங்கு மூலம் ஒரு குழுவிற்கு மந்திரப் பாதுகாப்பு அளிப்பார்,” என்கிறார்.

இரண்டாவது தருணம், குற்றக் குற்றங்களில் புதிய அடியாட்களைச் சேர்த்தபோது நரமாமிசம் ஒரு சடங்காகப் பயன்படுத்தப்பட்டது, என்கிறார்.

“மற்றொரு குழுவில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் ஒரு உடலில் இருந்து ஒரு பகுதியை சாப்பிட வைக்கப்படுவதன் மூலம் அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். அது அதே குழுவைச் சேர்ந்த நபரின் மாமிசமாகவும் இருக்கலாம். அதைச் சாப்பிடவில்லையெனில் புதிய நபர் அங்கேயே கொலை செய்யப்படுவார். இது அந்நபர் அந்த அமைப்பில் சேரத் தகுதியானவரா என்பதற்கான சோதனை,” என்கிறார் லோம்னிட்ஸ்.

நரமாமிசம் உண்ணும் மெக்சிகோவின் குற்றக் குழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸீட்டா குழுவால் கைப்பற்றப்பட்டிருந்த ஒரு வீடு

புத்தாண்டுக்கு நரமாமிச விருந்துகள்

இந்த வரலாறில், மூன்றாவது தருணம், எல்லாவற்றையும் விட மிகவும் மோசமானது, என்கிறார் லோம்னிட்ஸ்.

ஸீட்டாக்கள் (Los Zetas) என்றழைக்கப்பட்ட மிகக் கொடூரமான ஒரு குற்றக் குழு ஒரு துரோகியைக் கொன்று, அவரது இறைச்சியை சமைப்பர்கள், என்கிறார் அவர்.

வெறுமனே ஒரு சடங்கிற்காக ஒரு நபரின் இதயத்தின் இரு சிறுதுண்டை உட்கொள்வதல்ல இது, என்கிறார் அவர். ஒரு நபரின் கால்கள் போன்ற இறைச்சி மிகுந்த பாகங்கள் சமைக்கப்பட்டு, அது ‘தமால்’ (Tamale) எனப்படும் கொழுக்கட்டை போன்ற ஒரு பண்டத்திற்குள் வைத்துப் புத்தாண்டு விருந்தில் பரிமாறப்படும். அவ்விருந்தில் உணவருந்துபவர்கள் நரமாமிசத்தை உண்ண அழைக்கப்படுகிறார்கள், என்கிறார் லோம்னிட்ஸ்.

இதில் கூட்டு நம்பிக்கை என்ற பொருளில் ஒரு வகையான அடையாளம் உள்ளது, என்கிறார் அவர். ‘இந்த அமைப்பின் உறுப்பினர்களோ இல்லையோ, நாங்கள் அனைவரும் இதை சாப்பிடுகிறோம்’, என்று கூறுவது போன்றது இது. இது மெக்ஸிகோவில் ஆவணப்படுத்தப்பட்ட நரமாமிசத்தின் ஒரு வடிவமாகும், என்கிறார் அவர்.

நரமாமிசம் உண்ணும் மெக்சிகோவின் குற்றக் குழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கைதுசெய்யப்பட்ட ஒரு மெக்ஸிகோவைச் சேர்ந்த ஒரு குற்றக் குழுவைச் சேர்ந்த நபர்கள்

அதிகாரத்துக்கு பயந்து நரமாமிசம் உண்ட மக்கள்

ஸீட்டா குழுவினர் கொடுத்த நரமாமிச விருந்தில் ஒருவர் மனித இறைச்சியை சாப்பிடுகிறாரா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது, என்கிறார் லோம்னிட்ஸ்.

“எடுத்துக்காட்டாக, அந்த நேரத்தில் ஸீட்டா குழுவின் தலைவராக இருந்த ஹெரிபெர்டோ லாஸ்கானோ, விருந்தாளிகளை வரவேற்கும் போது, ‘இன்று ஒரு ஸ்பெஷல் உணவு உள்ளது. ‘நரமாமிச தமால்’ என்பார். அதைக்கேட்டி அனைவரும் உரக்கச் சிரிப்பார்கள். ஒருவருக்கு சந்தேகம் ஏற்படும். ஆனால் அவர்கள் அதை சாப்பிடத்தான் செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் ஸீட்டா குழுவினரின் ஆதிக்க மையத்தில் பங்கேற்கிறார்கள்,” என்கிறார் லோம்னிட்ஸ்.

இங்கு நரமாமிசம் வெளிப்படையான ஒரு நுழைவுத் தேர்வாக இருப்பதற்குப் பதிலாக, ஒரு மறைமுக சாத்தியக்கூறாக முன்வைக்கப்படுகிறது. பங்கேற்பவர்களுக்கிடையில் ஒரு கூட்டு நம்பிக்கை இருப்பதை சமிக்ஞை செய்வதற்கான ஒரு வழி இது,” என்கிறார் அவர்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு ஸீட்டா குழுவின் ஒரு விருந்தில் கலந்துகொண்ட ஒருவர், அந்த விருந்தில் அக்குழுவின் பிரதிநிதி ஒருவர், அன்றைய விருந்தின் ஸ்பெஷல் உணவு ‘மனித பார்பெக்யூ’ என்று அறிவித்ததாகக் கூறுகிறார். அப்போதிருந்து அவருக்கு தமால்களின் மீது அருவருப்பு ஏற்பட்டதாகக் கூறினார்.

“அது உண்மையா இல்லையா என்ற குழப்பத்திலேயே அனைவரும் அதை உண்டனர். வேறு வழியில்லை. எனெனில், அனைவரும் ஏதோவொரு வகையில் ஸீட்டா குழுவைச் சார்ந்து இருந்தனர்,” என்று அந்த நபர் கூறினார்.

இவ்வளவு கொடூரமான விஷயங்களை ஆராய்ந்த பின்னரும் தான் மனிதத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்கிறார் லோம்னிட்ஸ். இதையெல்லாம் ஆராய்ந்ததன் நோக்கம் இதுபோன்ற கொடூரமான விஷயங்களிலிருந்து வெளிவருவதுதான், என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)