கோபி மஞ்சூரியன்: புற்றுநோய் உண்டாக்கும் நிறமிகள் கலப்பதால் ஆபத்து - எச்சரிக்கும் சுகாதாரத்துறை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியின் பஞ்சுமிட்டாயை அடுத்து, கர்நாடக அரசு கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளது. அம்மாநிலத்தில் மாலை நேர சிற்றுண்டிகளில் அதிகம் இடம்பிடிப்பது கோபி மஞ்சூரியன் தான் என்பதால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் தடையானது கிட்டத்தட்ட அதே நிறத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் விரும்பிச் சாப்பிடப்படும் காளான் ஃபிரை, காளான் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன் ஆகிய உணவுகளின் நுகர்விலும் எதிரொலிக்கிறது.
இனிப்பும், காரமும் சேர்ந்த தக்காளி மற்றும் சோய் சாஸ் கலந்து செய்யப்படும் ஒரு வகை சீன சமையல் முறையே மஞ்சூரியன் எனப்படுகிறது. இந்த வகையான உணவில் அலூரா ரெட் என்ற கேசரி பவுடர் போன்ற செயற்கை நிறமி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் சேர்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோபி மஞ்சூரியனுக்கு மட்டும்தான் தடையா?

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் தடை செய்யப்பட்டது கோபி மஞ்சூரியன்தான். இருந்தாலும் சிந்தடிக் டை எனப்படும் செயற்கை நிறமூட்டிகளை அதிகளவில் கலந்த அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் மக்கள் நலன் கருதி உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்பதுதான் அம்மாநில அரசின் உத்தரவில் உள்ள நோக்கம் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கலரான உணவுகளே குழந்தைகளின் தேர்வு
திருப்பூரில் உள்ள உணவகம் ஒன்றுக்கு வாரந்தோறும் வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம், அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடும் உணவு எது எனக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியது, "பெரும்பாலும் பிரியாணிக்காகத்தான் கடைக்கு வருவோம். அப்போது சிக்கன் 65, லெக் பீஸ், கிரில், தந்தூரி போன்ற அசைவ உணவைத்தான் உடன் சேர்த்து வாங்குவோம். கடைகளிலும் அந்த காம்போ தான் விற்பார்கள். வறுவல் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், சிவப்பு நிறத்தில் பொறித்த உணவுகளைக் கண்முன் வைத்ததுமே நமக்கு வேறு ஏதும் வாங்கத் தோன்றாது."
“சனிக்கிழமை வாரச் சம்பளம் வாங்கினால், குழந்தைகளும் அதைத்தான் விரும்பிச் சாப்பிட வீட்டுக்கு வாங்கி வருமாறு கேட்பார்கள். அதனால் நானும் வாங்கிச் செல்வேன். வார நாட்களில், சாலையோரக் கடைகளில் காளான் மசாலா வாங்கி வருமாறு குழந்தைகள் கம்பெனியில் இருந்து கிளம்பும்போதே போன் செய்துவிடுவார்கள். இந்த உணவுகளைத்தான் கடையில் சாப்பிடுவோம். மற்ற நாட்களில் எப்போதும் வீட்டு சாப்பாடுதான்,” என்றார் அதன் தொடர்பயன்பாட்டின் பின்விளைவுகளை உணராத ஒரு உணவுப்பிரியர்.
எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணும் உணவுகளில் அடர் சிவப்பு நிறமுள்ள (அலூரா ரெட்) உணவுகள் அதிகம் இடம்பெறுகிறது. ஏற்கெனவே குழந்தைகளின் விருப்பத் தேர்வாக இருந்த பஞ்சுமிட்டாயில் ரோடமைன் பி என்ற கெமிக்கல் கலப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட வியாதிகள் வந்துவிடும் அபாயம் உள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை தடை செய்தது. புதுச்சேரியைப் பின்பற்றி, தமிழ்நாடு, கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் பஞ்சுமிட்டாயைத் தடை செய்தன.
பின் நிறமிகள் சேர்க்கப்படாத வெண்ணிற பஞ்சுமிட்டாய்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துதான் அடர் சிவப்பு நிறுத்தில் உள்ள கோபி மஞ்சூரியனுக்கும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆய்வுகளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

பட மூலாதாரம், Getty Images
தடை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குன்டு ராவ், “பஞ்சுமிட்டாய் போன்றே கோபி மஞ்சூரியனிலும், அதிக சிந்தடிக் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் வந்ததும் மாதிரிகளைச் சேகரிக்கத் தொடங்கினோம். மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள உணவகம், சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகள் என 171 இடங்களில் கோபி மஞ்சூரியன் மாதிரி சேகரித்ததில், 107 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்திருப்பது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்தது. அதேபோல் 25 பஞ்சுமிட்டாய் மாதிரிகளில் 15இல் சிந்தடிக் டை சேர்ப்பு கண்டறியப்பட்டது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “யார் யாருக்கு சிந்தடிக் டை விற்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவும், அதிக நிறமுள்ள உணவுப் பொருட்களை மக்கள் வாங்கிச் சாப்பிடுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த நிறமிகளால் புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் வரும் என்பதால் கர்நாடக உணவுப் பாதுகாப்புத்துறை விதிகளை கண்டிப்போடு பின்பற்ற அறிவுறுத்தியிருக்கிறது. அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,” என்று அவர் தெரிவித்தார்.
“சிந்தடிக் டை எனப்படும் செயற்கை நிறமூட்டிகள் கேக், பேஸ்ட்ரிக்கள், ஐஸ்க்ரீம்களில் மிக மிகக் குறைந்த அளவே சேர்க்க அனுமதியுண்டு. அதேபோல், சமைத்து தயாரிக்கும் பிற உணவில் அந்த நிறமிகள் அதிகம் சேர்க்க ஒருபோதும் அனுமதியில்லை. எனவே, தடையை அறிவித்த பின்பும், விதிகளை மீறி செயற்கை நிறமிகள் சேர்த்து சமைத்து விற்றால், 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பூரிலும் கலர் உணவுகளுக்கு ரெய்டு

கர்நாடக அரசின் நடவடிக்கையை அடுத்து, திருப்பூரிலும் அதிரடி ஆய்வுகள் ஆட்சியர் உத்தரவின் பேரில் நடைபெறுகின்றன. அம்மாவட்டத்தில், சிக்கன் 65, காளான் மசாலா, மஞ்சூரியன் உள்ளிட்டவை விற்கும் 82 கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகவும், 23 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலரான மருத்துவர் விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
இதில் அங்கீகரிக்கப்படாத செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட துரித உணவு வகைகளான இறைச்சி, காளான் மற்றும் காலிஃபிளவர் ஆகிய 4 கிலோ உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.
கலரான உணவுப்பொருட்களுக்கு ஆசைப்பட்டால், ஆயுளுக்குத்தான் கேடு என எச்சரித்த அவர், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பட்டியலிட்டார். அதன்படி,
- அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் சேர்த்த உணவை விற்கக்கூடாது
- அசைவம் அல்லது பொறித்த உணவுகளை வாழை இலையில் வைத்துத்தான் பார்சல் செய்ய வேண்டும். பேப்பரில் மடித்துத் தரக்கூடாது.
- பொரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை RUCO (Repurpose used cooking oil) திட்டத்தின் கீழ் அரசுக்கே விலைக்குக் கொடுத்து பயன்பெறலாம்.
- நிறமிகள் உள்பட கொள்முதல் செய்வதற்கான அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ரசீது வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்றவற்றை FOSTAC (Food safety Training and Certification) என்ற திட்டத்தின் கீழ், உணவு விற்பவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுவதாகவும் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நிறமிகளின் வகைகள்

தமிழகத்தில் ஆடை மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் ரோடமைன் பி எனும் சாயத்தை சமைத்த உணவுகளில் கலக்க ஒருபோதும் அனுமதியில்லை.
ஆனால், அவை ஒருவேளை உணவுகளில் கலந்து இருக்கிறதா என்பது ஆய்வின் மூலமே தெரிய வரும் எனக் கூறியுள்ளது தமிழக சுகாதாரத்துறை.
டார்ட்ராசைன் மஞ்சள் (Tartrazine yellow), சன்செட் மஞ்சள் (sunset yellow), கார்மோசைன் (Carmoisine), எரித்ரோசின் (Erythrosine), பொன்சியோ 4 ஆர், இண்டிகோ கார்மைன் (Indigo carmine), ஃபாஸ்ட் கிரீன் (fast green) ஆகிய நிறமிகளை 100 பி.பி.எம் (100 PPM (Parts per million) அளவில் மட்டுமே சேர்க்க மட்டுமே அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவில் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
இயற்கை நிறமிகளை ஏன் கடைகளில் பயன்படுத்துவதில்லை?

இயற்கை நிறமிகளுக்கு பீட்ரூட், புதினா, மஞ்சள்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், சிந்தடிக் டை என்ற செயற்கை நிறமிகள் இயற்கை நிறமிகளைவிட விலை மலிவானது. அடர் நிறத்தில் பிரகாசமாகவும் இருக்கும். நீண்ட காலம் நிறம் மாறாமல் இருக்கும். எனவேதான், இதைப் பல உணவகங்கள் பயன்பாட்டுக்குத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் பி.சதீஷ்குமார், “ஒரு சில கடைகள் அதிக ஜிலேபி பவுடர் சேர்த்தால், மக்களைக் கவரும்படி கலர் அதிகமாக வரும் என இந்தத் தவறைச் செய்துவிடுகின்றனர். இது ஒட்டுமொத்த உணவுத்துறையின் மீதான் மதிப்பையும் பாதிக்கிறது.
உதாரணமாக அலூரா ரெட் எனப்படும் சிவப்பு நிறமியை ஒரு கிலோவுக்கு 200 மில்லிகிராம் என்ற அளவில்தான் சேர்க்க வேண்டும். அப்படி ஆய்வில் அதிக நிறமி பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கும் இதன் பின்விளைவுகளை எடுத்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “சிக்கன் 65, கோபி மஞ்சூரியன், பிரியாணி, கிரில் சிக்கன் ஆகியவற்றைப் பல உணவகங்களில் மாதிரியாக எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்புகிறோம். அனுமதிக்கப்பட்ட சாப்பிடக்கூடிய நிறமிகளைத் தவிர பிற நிறமிகளை அதிக அளவில் கலந்திருப்பது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த வகையான உணவில் அதிகம் சேர்க்கப்படுவதாகக் கண்டறியப்படுகிறதோ, அந்த உணவுகளின் தரம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும்.” என்று தெரிவித்தார்.
செயற்கை நிறமி கழிவாக வெளியேற 2 மாதமாகும்

செயற்கை நிறமிகளின் தீமைகளையும் மருத்துவர் சதீஷ்குமார் எடுத்துரைத்தார். “நாம் இயற்கையான நிறமுள்ள பீட்ரூட்டுகளை எவ்வளவு சாப்பிட்டாலும்கூட, உடல் அதை உணவுப்பொருளாக அங்கீகரிக்கும். 2 முதல் 3 மணிநேரத்தில் அது ஜீரணமாகி, மலம், சிறுநீர் வழியாக அந்த நிறமி சிவப்பு நிறத்தில் வெளியேறிவிடும்.
ஆனால், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு நிற குளிர்பானங்களைப் பருகினால், அந்த நிறம் நமது சிறுநீர் மற்றும் மலத்தில் வெளிப்படாது. காரணம், செயற்கை நிறமிகள் உடலை விட்டு கழிவாக வெளியேற 50 முதல் 60 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
அதுவரை, அது குடலில் ஒட்டி அல்சரை ஏற்படுத்தலாம். ஈரலில் சிக்கி அங்குள்ள திசுக்களை தாக்கி அழிக்கலாம். இதனால் கல்லீரல் செயல்பாடு குறைந்து கிட்னி ஃபெயிலியர், மூளையின் வளர்ச்சி மற்றும் செல்கள் பாதிப்பு ஏற்படும்.” என எச்சரித்தார்.
என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும்?
செயற்கை நிறமிகளை வைத்து ஆய்வு செய்ததில், பெரிய எலிகளைவிட குட்டி எலிகளில் டிஎன்ஏ என்ற மரபணுவின் மாற்றங்கள், மூளைத் திசுக்களின் வளர்ச்சி பாதிப்பு, உடலின் இன்ஃப்ளமேட்டரி மெஷினரி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதுமட்டுமின்றி இதை எந்த வயதில் உள்ள மனிதர்களும் தொடர்ந்து பயன்படுத்துபோது, நரம்புத் தளர்ச்சி, நடுக்கம் வருவது, நடக்க முடியாமல் போவது, ஞாபக மறதி, மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுவது, நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக கோபம் வருவது, அதிக உடல் எடை கூடுவது, கேன்சர் உள்ளிட்ட நாள்பட்ட சரிசெய்ய இயலாத சில வியாதிகளைக்கூட ஏற்படுத்தக் கூடியது என அவர் எச்சரித்தார்.
எனவே, குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகள் அதிகளவில் கொடுப்பது மற்றும் செயற்கை நிறமிகள் கலந்த உணவைக் கொடுப்பதை முற்றிலும் பெற்றோர் தடுத்தால் மட்டுமே, அவர்களின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் குறைவு இருக்காது. மசாலாக்களையும் கூடுமானவரை வீட்டில் அரைத்து பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தினார்.
‘’You are what you eat’’ என ஒரு பழமொழி இருக்கும். "நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுவாகவே ஆகிறோம்." எனவே நல்லதைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் இதுவரை தடையில்லை
கோபி மஞ்சூரியன் தடை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழகத்தில் உள்ள குட்கா, பான் மசாலா தடை, கர்நாடகத்தில் இல்லை. இங்கு பஞ்சுமிட்டாய் தடைபோல் அங்கு மஞ்சூரியன் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக தமிழகத்தில் மஞ்சூரியனுக்கு தடை விதிக்க முடியாது.
ஆய்வுகள் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரையின் அடிப்படையிலேயே தமிழத்தில் தடை விதிப்பது பற்றி முடிவெடுக்க முடியும்," என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












