அதிகமாக தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்கள் ஆதாயம் பெற்றனவா? தேதிகள் சொல்லும் செய்தி என்ன?

எஸ்.பி.ஐ, தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தேர்தல் பத்திரங்களை எந்தெந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும் எண்ணிக்கையில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்தில் இந்தப் பத்திரங்களை வாங்கியுள்ளன, என்பது பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 12-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. இந்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 14-ஆம் தேதி அதன் இணைய தளத்தில் வெளியிட்டது.

இந்த தகவல் இரண்டு பகுதிகளாக வெளியாகியுள்ளது. முதல் பகுதியில், 336 பக்கங்களில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர்களும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில், 426 பக்கங்களில் அரசியல் கட்சிகளின் பெயர்களும் அவை எப்போது, எவ்வளவு தேர்தல் பத்திரங்களை பணமாக்கின என்பது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி அதிமர் சாண்டியாகோ மர்ட்டினின் நிறுவனமான ‘ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டட்’ நிறுவனம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ‘மேகா என்ஜீனியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம்’ ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மூன்றாவதாக ‘க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம்’ ரூ. 410 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. வேதாந்தா நிறுவனம் ரூ.400 கோடிக்கும், ஹால்டியா எனர்ஜி லிமிட்டெட் நிறுவனம் ரூ.377 கோடிக்கும், எஸ்ஸெல் மைனிங் அண்ட் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனம் ரூ.224 கோடிக்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

இந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கிய தேதிகளில் என்ன சுவாரஸ்யம்?

பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம், லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின்

பட மூலாதாரம், MARTINFOUNDATION.COM

படக்குறிப்பு, பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் சாண்டியாகோ மார்ட்டின்

புலனாய்வு சோதனைகளைத் தொடர்ந்து வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்

பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம், லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் பல முறை வருமான வரி சோதனை, அமலாக்கத் துறை சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனம்.

2021 டிசம்பர் 22-ஆம் தேதி மார்டினுக்குச் சொந்தமான ரூ.19.59 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இதற்குச் சில நாட்கள் கழித்து, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி ரூ.100 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை ப்யூச்சர் கேமிங் நிறுவனம் வாங்கியது. இதற்கு அடுத்த நாள் ஜனவரி 6-ஆம் தேதி ரூ.110 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை ப்யூச்சர் கேமிங் நிறுவனம் வாங்கியது.

2022 ஏப்ரல் 2-ஆம் தேதி இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 410 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதற்கு ஐந்து நாட்கள் கழித்து, ஏப்ரல் ஏழாம் தேதி, இந்த நிறுவனம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டன. ஜூலை 6-ஆம் தேதி ரூ.75 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியது.

2023-ஆம் ஆண்டு மே மாதம் 11-12ஆம் தேதிகளில் மார்ட்டினின் சென்னை இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதே ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி சுமார் ரூ.60 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியது.

மேகா எஞ்சினீயரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்

பட மூலாதாரம், INSTAGRAM/PPREDDYOFFICIAL

படக்குறிப்பு, மேகா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் பாமிரெட்டி பிச்சிரெட்டி

தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனத்திற்கு கட்டுமான ஒப்பந்தம்

தேர்தல் பத்திரங்களை வாங்கியதில் இரண்டாவது இடத்தில் இருப்பது மேகா எஞ்சினீயரிங் நிறுவனம். ரூ.966 கோடியை அரசியல் கட்சிகளுக்கு இந்த நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் மேகா எஞ்சினீயரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ஆரம்பத்தில் சிறு ஒப்பந்த வேலைகளைச் செய்துவந்தது. ஒரு கட்டத்தில் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமாக இது உருவெடுத்தது. பெரும்பாலும் அரசு ஒப்பந்தங்களையே இந்த நிறுவனம் மேற்கொண்டு செய்து வருகிறது.

தெலங்கானாவில் உள்ள காலேஸ்வரம் இறவைப் பாசன திட்டத்தின் முக்கிய பகுதி இந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் ரூ.14,000 கோடி மதிப்பிலான தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டமும் மேகாவின் கைகளில்தான் இருக்கிறது.

எஸ்.பி.ஐ, தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம், X/@pbhushan1

நீர்ப்பாசனம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் 15 மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது.

கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த பாமிரெட்டி பிச்சி ரெட்டி, 1989-இல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். பத்துக்கும் குறைவானவர்களுடன் துவங்கப்பட்ட நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாக விரிவடைந்துள்ளது.

மேகா எஞ்சினீயரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் வாங்கியுள்ள தேர்தல் பத்திரங்களின் மூலம் எந்த கட்சி எவ்வளவு தொகையைப் பெற்றுள்ளது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி இந்த நிறுவனம் ரூ.140 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மே 12-ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு ரூ.14,000 கோடி ரூபாய் மதிப்பிலான தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்தும் பணி ஆணை வழங்கப்பட்டது என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் வேதாந்தா

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

படக்குறிப்பு, தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய கலவரத்திற்குப் பிறகு மூடப்பட்டது

'ஸ்டெர்லைட்' வேதாந்தா வாங்கிய தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திரங்களை பெருமளவில் வாங்கிய, தமிழ்நாட்டினுடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனம் வேதாந்தா. வேதாந்தாவுக்குச் சொந்தமாக தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய கலவரத்திற்குப் பிறகு மூடப்பட்டது. இந்த நிறுவனம் சுமார் ரூ.400 கோடி மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது.

இந்த நிறுவனம் முதன் முதலில் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.40 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டு தவிர்த்த அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.337 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒதிஷாவில் உள்ள ராதிகாபூர் மேற்கு நிலக்கரி சுரங்கம் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று ரூ.25 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பாரத ஸ்டேட் வங்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய பட்டியலில் பத்திர வரிசை எண்கள் கொடுக்கப்படவில்லை

எஸ்.பி.ஐ கொடுத்த பட்டியலில் விடுபட்ட முக்கியமான தகவல்

பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர பத்திரங்களின் வரிசை எண் இல்லை. அதேபோல், இரண்டாவது பட்டியலில், எந்த தரப்பினர் டெபாசிட் செய்த தொகை எந்த நாளில் கொடுக்கப்பட்டாலும், பத்திர வரிசை எண் குறிப்பிடப்படவில்லை.

இந்த இரண்டு பட்டியலிலும் பத்திர வரிசை எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், எந்தெந்த கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதை, பத்திர வரிசை எண்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

நிறுவனங்கள் வாங்கிய பத்திர வரிசை எண்களை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்திய பத்திரங்களோடு பொருத்தும் பணியை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது. ஆனால், அந்த வரிசை எண்களைக் கொடுத்திருந்தால், ஊடகங்களோ மற்ற ஆர்வமுள்ள தரப்பினரோ அவற்றைப் பொருத்திப் பார்த்து, எந்தக் கட்சி யாரிடம் நன்கொடை பெற்றது என்பதைக் கண்டுபிடித்திருக்கலாம்.

?(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)