தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் குழு - ஓர் அலசல்

எஸ்டர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன்
படக்குறிப்பு, எஸ்டர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஐந்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. இந்த முடிவில் அரசியல், பொருளாதார பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் திங்கட்கிழமை துவங்கியது. இதில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்பட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, சர்வதேச அளவில் அறியப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுமென அறிவித்தார்.

இந்தக் குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் ஆகியோர் அடங்கியிருந்தனர். ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த இந்த அறிவிப்பையடுத்து சமூக வலைதளங்களில் ஆதரவுக் கருத்துகளும் எதிர்ப்புக் கருத்துகளும் கேலியும் நிரம்பி வழிந்தன.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஐந்து பேரும் ஒவ்வொரு வகையில் தத்தம் துறை சார்ந்து பரவலாக அறியப்பட்டவர்கள். பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ள ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவர். ஆனால், பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மோதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து வெளியேறியவர்.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2008ல் இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இவரை நியமித்தார். 2013ல் இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2003 முதல் 2007 வரை சர்வதேச நிதியத்தின் முதன்மை பொருளியலாளராக இருந்தார் ரகுராம் ராஜன். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை விட்டு விலகிய பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியின் பேராசிரியராக பணியாற்றிவந்தார்.

எஸ்டர் டஃப்லோ அமெரிக்காவின் மாஸசூஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். ஏழ்மை ஒழிப்பு, வளர்ச்சிப் பொருளாதாரம் ஆகியவை இவரது துறைகள். இவர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்.

டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தற்போது ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள வாட்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் அண்ட் பப்ளிக் அஃபையர்சில் மூத்த உறுப்பினராக இருக்கிறார்.

பேராசிரியர் ஜான் த்ரேவைப் பொறுத்தவரை இந்தியப் பொருளாதாரம் குறித்து விரிவாக அறிந்தவர். எஸ்தர் டஃப்லோவைப் போலவே வளர்ச்சிப் பொருளாதாரம், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் தேர்ந்தவர்.

டாக்டர் எஸ். நாராயணன் 2003-04ல் பிரதமர் வாஜ்பாயியின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். அதற்கு முன்பாக இந்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக இருந்தவர். தமிழ்நாடு பிரிவு இந்திய குடிமைப் பணி அதிகாரியான நாராயணன், மாவட்ட ஆட்சித் தலைவர், ஊரக மேம்பாடுத் துறை, திட்டமிடுதல் போன்றவற்றில் இரு தசாப்தங்கள் பணியாற்றியவர். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலை நன்கு அறிந்தவர்.

இதில் எஸ்தர் டஃப்லோ ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு பல்வேறு துறைகளில் ஏற்கனவே ஆலோசனை தெரிவித்தவர். 2004ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எப்படி கிராமங்களில் செயல்படலாம் என்ற ஆலோசனையை வழங்கியவர்.

பேராசிரியர் ஜான் த்ரேவைப்

பட மூலாதாரம், Mint

படக்குறிப்பு, பேராசிரியர் ஜான் த்ரேவைப்

எஸ்தர் டஃப்லோ மற்றும் அவரது கணவர் அபிஜித் பேனர்ஜி ஆகியோர் இணைந்து நிறுவிய The Abdul Latif Jameel Poverty Action Lab (J-Pal) அமைப்பானது 2014ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. சிறந்த நிர்வாகத்தைத் தருவதற்காக, புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான திட்டமிடலுக்காக இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்தத் தருணத்தில் அந்தத் தம்பதியின் பணிகளும் ஆலோசனைகளும் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

மற்றொரு அறிஞரான ஜான் த்ரேவும் தமிழ்நாடு குறித்த பார்வையும் அக்கறையும் கொண்டவர். அவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து எழுதிய An Uncertain Glory: India and its Contradictions புத்தகத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் வெற்றி குறித்து விரிவாகவும் நேர்மறையாகவும் விவாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே பிற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருந்தார் ஜான் த்ரே.

வல்லுநர் குழு

பட மூலாதாரம், TN GOVERNMENT

அதேபோல, ஆலோசனைக் குழுவின் மற்றொரு உறுப்பினரான டாக்டர் எஸ். நாராயணன், 2018ல் வெளியிட்ட தனது The Dravidian Years புத்தகத்தில், திராவிட இயக்க ஆட்சியில் அதிகாரமும் ஆலோசனையும் எப்படி கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை விளக்கியிருந்தார். திராவிடக் கட்சிகள் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து எப்படிச் செயல்பட்டன என்பதையும் ஆய்வுசெய்திருந்தார். தமிழ்நாடு அரசு அளிக்கும் இலவசங்களுக்குப் பின்னால் உள்ள சமூக நிர்பந்தங்கள், தேவைகள் ஆகியவற்றைத் தெளிவாக முன்வைத்தார்.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை இந்தக் குழுவினரிடமிருந்து பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளை வகுப்பது, சமூக நீதி, மனித வளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் பொதுவான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறது. மாநிலத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதித் துறையே இந்தக் குழுவின் செயலகமாக இருக்கும். நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் எஸ். கிருஷ்ணன் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் மாநிலங்களுக்கு நிதித் துறை சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள நிலையில் இம்மாதிரி குழுக்கள் தேவையா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

பொருளாதார வல்லுநர் குழு

பட மூலாதாரம், FB / MK STALIN

"இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பரப்பளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானவை. தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடியைக் கையாளுகிறார்கள். சேவைத் துறை, தயாரிப்புத் துறை கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக வளர்ந்திருக்கின்றன. விவசாயத்தைச் சார்ந்திருப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆகவே பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை என்பது நிச்சயம் தேவை.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏழு அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இவற்றை நிறைவேற்ற நிச்சயம் இந்தப் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படும்" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.

ஆனால், தமிழ்நாடு பெரும் கடன் சுமையை எதிர்கொண்டிருக்கிறது. வரி வசூலிக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தக் குழுவால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிதி ரீதியில் பல சவால்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். மாநிலத்தின் நிதி நிலை மிக மோசமான நிலைமையில் உள்ளது. மாநிலத்திற்கு பட்ஜெட்டிற்கு உள்ளே 5.7 லட்சம் கடன் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு வெளியில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்தக் கடன்களுக்காக வருடத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக கட்ட வேண்டியுள்ளது.

இந்த நீண்ட காலக் கடன்கள் ஒருபுறமிருக்க, அன்றாடச் செலவுகளையே சமாளிக்க முடியாத நிலைதான் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டது. இதுபோல கடந்த 100 வருடங்களில் இது நடந்ததில்லை. அன்றாடச் செலவுகளையே அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். இதனால்தான் அரசு முதலில் நிதி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாகச் சொல்லியிருக்கிறது. இம்மாதிரிச் சூழலில், இதுபோன்ற நிபுணர்களின் ஆலோசனை மிக அவசியம்" என்கிறார் ஜோதி சிவஞானம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இந்தக் குழு அமைக்கப்பட்டது மிகச் சிறப்பான நடவடிக்கை என்கிறார் காங்கிரஸ் சார்புடைய பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன். "இது மிகச் சிறப்பான குழு. இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. எஸ். நாராயணன் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளைச் சொல்வதில் சிறந்தவர். எஸ்தர் டஃப்லோவும் ஜான் த்ரேவும் ஏழ்மை ஒழிப்பில் நிபுணர்கள். ரகுராம் ராஜன் வட்டிச் சுமை குறைப்பதை பற்றி, நிதியை கொண்டுவருவதில் நிபுணர்.

மாநிலத்தின் கடன்களை நிர்வகிப்பதில் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அரவிந்த் சுப்பிரமணியன், மாநிலத்தின் தற்போதய பொருளாதாரத்திற்குள் அதனை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகளைக் காட்டுவார். எதிலெல்லாம் முதலீடு செய்யலாம் என்று சொல்வார்." என்கிறார் அவர்.

ஆனால், குழுவில் உள்ள வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவரால் மாநிலத்தின் சமூகச் சூழலை புரிந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. "இந்தக் குழுவைப் பொறுத்தவரை மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்த விரிவான, பரந்த பார்வையிலான வழிகாட்டும் அறிவுரைகளை அளிக்கும். மிக நுணுக்கமான ஆலோசனைகளைத் தர மாட்டார்கள். குறிப்பான அறிவுரைகளை அளிக்க மாநில வளர்ச்சி ஆலோசனைக் குழு இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1950களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருந்தபோது, வளர்ச்சி வந்தால் ஏழ்மை மாறிவிடும் என்று கருதப்பட்டது. 1991ல் பொருளாதார தாராளமயமாக்கத்திற்குப் பின் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இருந்தபோதும் வறுமை என்பது ஒழியவில்லை. இந்த நிலையில்தான் 2004க்குப் பிறகு பல விஷயங்களை குடிமக்கள் உரிமையாக கேட்டுப்பெறும் விதத்தில் சட்டமியற்றப்பட்டது. இதன் பின்னணியில் ஷான் த்ரே இருந்தார்.

அவரது ஆலோசனையின் பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டநிலையில், அதன் தாக்கம் எப்படியிருக்கிறது என விழுப்பரம் மாவட்டத்தில் வந்து ஆய்வுசெய்தார். ஆகவே அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி நன்றாகவே தெரியும்.

அரவிந்த் சுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை வர்த்தகம், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றி வல்லவர். ரகுராம் ராஜனைப் பொறுத்தவரை, சர்வதேச நிதி, பணம் ஆகியவற்றை நிர்வகிப்பதில் திறமை மிகுந்தவர். அவரைப் பொறுத்தவரை General Equlibrium frame workஐ அவர் தொடர்ந்து வலியுறுத்துவார். அதாவது பொருளாதாரத்தில் எதைச் செய்தால் என்ன நடக்கும் என்பது ரகுராம் ராஜனுக்கு நன்கு தெரியும். ரகுராம் ராஜனின் அறிவுரையை மீறித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவுகள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே இந்தக் குழுவைப் பொறுத்தவரை, ஆலோசனைகளை அளிப்பதில் பிரச்சனை இருக்காது" என்கிறார் ஜோதி சிவஞானம்.

தமிழ்நாடு அமைத்துள்ள வல்லுனர் குழு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இம்மாதிரி குழு மிக அவசியம் என்கிறார் ஜோதி சிவஞானம்.

"மாநிலங்களின் நிதி இறையாண்மை என்பது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வந்த பிறகு அடியோடு போய் விட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு ஐந்தாண்டுகளில் 14 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றார்கள். அதனால்தான் 2022 வரை இழப்பீடு தருவதாக சொன்னார்கள். ஆனால், நினைத்த வேகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை.

தவிர, ஜிஎஸ்டி கவுன்சில் மிகுந்த அதிகார தோரணையோடு செயல்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்தவரை ஒரு பக்கம் மாநில அரசுகள் மற்றொரு பக்கம் மத்திய அரசு என்றுதான் விவாதம் நடக்குமென நினைத்தார்கள். ஆனால், கவுன்சில் கூட்டங்கள் நடக்கும்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அரசுகள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மத்திய அரசின் பக்கம் நிற்கின்றன. இதனால், பா.ஜ.க. என்ன நினைக்கிறதோ அதுதான் கவுன்சிலில் நடக்கிறது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது மாநில அரசு தனது வருவாயில் 44 சதவீதத்தை இதில் கொண்டுவர ஒப்புக்கொண்டது. மத்திய அரசு 35 சதவீதத்தை விட்டுக்கொடுத்திருக்கிறது. ஆனால், பிரிக்கும்போது மத்திய அரசும் மாநில அரசும் வரி வருவாயை பாதிப்பாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும். இருந்தபோதும் அந்த அமைப்பு ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அரசியல் ரீதியாக கவுன்சில் பிரிந்துகிடக்கிறது.

இப்போதைய சூழலில் மாநிலங்களால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது. மதுபானங்களின் மீது கடுமையான வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத் துறையிலும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சவால்களுக்கு மத்தியில்தான் புதிய மாநில அரசு பணியாற்ற வேண்டும்.

இந்த நிலையில் இந்தக் குழுவில் இருப்பவர்களின் தொடர்புகள் புதிய முதலீடுகளைக் கொண்டுவர உதவலாம். இம்மாதிரி ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதால், பொருளாதாரம், முதலீடு ஆகியவற்றில் மாநில அரசு மிகத் தீவிரத்துடன் பணியாற்றுகிறது என்பதைப் புரிந்துகொண்டு பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரலாம். இதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே வரி வருவாயும் அதிகரிக்கும். தி.மு.க. முன்வைத்த 7 அம்சத் திட்டத்தில் 2 இலக்க வளர்ச்சியை ஏற்படுத்துவது தங்களது இலக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த இலக்கை அடைய இந்த வளர்ச்சி உதவும்" என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், காங்கிரஸ் அரசில் பல ஆலோசனைகளை அளித்த ஜான் த்ரே ஆகியோரைக் கொண்டு குழு அமைத்திருப்பது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கையும்கூட என்கிறார்கள் ஜோதி சிவஞானமும் ஆனந்த் சீனிவாசனும்.

"பிரதமர் ஹார்வர்டா ஹார்ட் ஒர்க்கா என்று கேட்டு, ஹார்ட் ஒர்க்கே முக்கியம் என்றார். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் இந்த நிலையில் இருக்கிறது. ஆனால் மாநில அரசு அப்படிக் கேட்கவில்லை. மேதைகளை மதிக்கிறது. இதற்கு நிச்சயம் பலன் இருக்கும்" என்கிறார் ஆனந்த் சீனிவாசன்.

"நிச்சயம் இது ஒரு அரசியல் நடவடிக்கையும்கூட. மாநில அரசே இம்மாதிரி குழுவை அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த நினைக்கிறதே, மத்திய அரசு செய்யக்கூடாதா என்ற கேள்வியை இந்த நியமனம் எழுப்பும்" என்று சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.

இது போல குழு அமைப்பது, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது என்பது புதிதல்ல. 100 வருடங்களுக்கு முன்பே சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் பி.ஜே. தாமஸ் இந்திய அரசுக்கே ஆலோசனை சொன்னார். ராஜாஜி காலகட்டத்தில் விற்பனை வரியை அறிமுகப்படுத்தியதே தாமஸ்தான். அதேபோல தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குகன் ஆலோசகராக இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பி.ஜே. தாமஸ், கே.என். ராஜ், வி.கே.ஆர்.வி. ராவ், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கிய மெகலனாபிஸ், பி.ஆர். பிரம்மானந்தா, சி.என். வக்கீல், சுக்மாய் சக்ரவர்த்தி, மன்மோன் சிங், கௌசிக் பாசு, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், பனகாரியா போன்றவர்கள் இந்திய அரசுக்கு ஆலோசகர்களாக இருந்தார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :