நரேந்திர மோதி தன் ஏழாண்டு கால ஆட்சியில் என்ன செய்தார்? விளக்கும் ஏழு படங்கள்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிகில் இனாம்தார் மற்றும் அபர்ணா அல்லூரி
    • பதவி, பிபிசி செய்திகள், டெல்லி

நிறைய வேலை வாய்ப்புகள், வளங்கள், குறைவான அரசு தலையீடு என பல பெரிய வாக்குறுதிகளோடு இந்திய அரசியலுக்குள் நுழைந்தார் நரேந்திர மோதி.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் நரேந்திர மோதி பெற்ற வெற்றி, இந்திய பொருளாதாரத்தில் பெரிய சீர்திருத்தங்கள் வரும் எனும் நம்பிக்கையை அதிகரித்தது.

ஆனால், நரேந்திர மோதி பிரதமராக இருந்த கடந்த ஏழு ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது. ஏற்கெனவே மந்தமாக இருக்கும் பொருளாதாரத்தை, கொரோனா பெருந்தொற்று மேலும் மந்தப்படுத்தி இருக்கிறது.

மோதியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை இந்த ஏழு படங்களில் காணலாம்.

மந்தமான வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக உருவாக்க வேண்டும் என்பது மோதியின் வக்குறுதிகளில் ஒன்று. இதை பணவீக்கத்தோடு சரி கட்டிய பிறகு, என கணக்கெடுத்துக் கொண்டால் கூட மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரும்.

கொரோனாவுக்கு முன்பான, ஒரு சுயாதீன மதிப்பீட்டில் இந்தியா அதிகபட்சமாக 2.6 ட்ரில்லியன் டாலர்களைத் தொடலாம் என கணிக்கப்பட்டிருந்தது. இப்போது கொரோனாவால் மேலும் 200 - 300 பில்லியன் டாலர் குறையலாம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கம், ஒரு பெரிய சிக்கல் என்கிறார் பொருளாதார நிபுணர் அஜித் ராணடே. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடுமாற்றத்துக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல.

நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது 7 - 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2019 - 20 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 3.1 சதவீதமாக சரிந்தது.

2016-ல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருந்த 86% கரன்ஸி நோட்டுகளை துடைத்தெறிந்தது. அதோடு 2017 ஜூலையில் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி வியாபாரங்களை கடுமையாக பாதித்தது.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

வேலையில்லா திண்டாட்டம்

"2011 - 12 கால கட்டத்துக்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு முதலீடுகள் மந்தமடைந்தது, இந்தியாவின் மிகப் பெரிய சவால்," என்கிறார் சென்டர் ஃபார் மானிட்டரிங் தி இண்டியன் எகானமி (சி.எம்.ஐ.இ) என்கிற அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி மகேஷ் வியாஸ்.

"2016ஆம் ஆண்டிலிருந்து இந்திய பொருளாதாரம் தொடர்ந்து பல அதிர்ச்சிகளை அடுத்தடுத்து சந்தித்தது," என்கிறார் அவர்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல்படுத்தியது, அவ்வப்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் என எல்லாம் சேர்ந்து இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து விட்டன என்றார் மகேஷ் வியாஸ்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017 - 18 காலகட்டத்தில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக அதிகரித்தது என அதிகாரபூர்வ அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாக சமீபத்தில் சி.எம்.ஐ.இ என்கிற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2.5 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். 7.5 கோடிக்கு மேற்பட்டோர் மீண்டும் வறுமை நிலையைத் தொட்டிருக்கிறார்கள்.

இதில் 10 கோடி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம். இது கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் கண்ட முன்னேற்றத்தை துடைத்தெறிந்திருக்கிறது என Pew ஆராய்ச்சியில் கூறப்பட்டிருக்கிறது.

"ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் தேவை," என்கிறார் பொருளாதார நிபுணர் ராணடே. ஆனால் கடந்த தசாப்தத்தில், இந்தியா, ஆண்டுக்கு 43 லட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியது.

ஏற்றுமதி விவரம்

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போதவில்லை

மோதியின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றான 'மேக் இன் இந்தியா' திட்டம், அரசின் தலையீடுகளைக் குறைத்து, முதலீடுகளை ஈர்த்து இந்தியாவை உலகின் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றி இருக்க வேண்டும்.

இந்தியாவின் ஜிடிபியில் 25% உற்பத்தியாக இருக்க வேண்டும் என்கிற இலக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக 15 சதவீதத்திலேயே தேங்கி நிற்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தி சார் வேலைவாய்ப்புகள் பாதியாகக் குறைந்திருக்கிறது என 'சென்டர் ஃபார் எகனாமி டேட்டா அண்ட் அனாலிசிஸ்' அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

அதே போல ஏற்றுமதியும் கடந்த 10 ஆண்டு காலமாக சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலேயே தேங்கி நிற்கிறது.

நரேந்திர மோதியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து தன் ஏற்றுமதி சந்தையை தன்னை விட சிறிய நாடான வங்கதேசம் போன்ற நாடுகளிடம் இழந்து வருகிறது.

தற்சார்பு என்கிற பெயரில், மோதி இறக்குமதி வரிகளை அதிகரித்திருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரிதாய் ஜொலிக்கும் உள்கட்டமைப்பு

உட்கட்டமைப்பு செலவிடும் விகிதம்

நரேந்திர மோதி அரசு நாள் ஒன்றுக்கு 36 கிலோ மீட்டர் சாலை போடுகிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு போடப்பட்ட 8 - 11 கிலோமீட்டரை விட அதிகம் என ஃபீட்பேக் இன்ஃப்ரா என்கிற உட்கட்டமைப்பு நிறுவனத்தின் துணை நிறுவனர் விநாயக் சாட்டர்ஜி கூறுகிறார்.

சோலார் மற்றும் காற்றாலை போன்ற மரபுசாரா ஆற்றல் தொடர்பான உட்கட்டமைப்புகளை கடந்த ஐந்து ஆண்டில் இரு மடங்கு அதிகமாக நிறுவியுள்ளனர்.

தற்போது இந்தியாவின் மரபுசாரா ஆற்றம் அளவு 100 ஜிகாவாட்டாக இருக்கிறது. 2023ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் அளவுக்கு மரபுசாரா மின்சாரத்தை நிறுவ வேண்டும் என்கிற இலக்கை அடையும் பாதையில் இருக்கிறது இந்தியா.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் புதிய கழிப்பறைத் திட்டம், வீட்டுக் கடன் திட்டம், சமையல் எரிவாயு மானியத் திட்டம், ஏழைகளுக்கு குழாய் நீர் வழங்கும் திட்டம் போன்ற மோதி அரசின் திட்டங்களை பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் வரவேற்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கழிவறைகளில் நீர் வசதி இல்லாமல் இருப்பது அல்லது பயன்படுத்தப்படாமல் இருப்பது, அதிகரிக்கும் எரிபொருள் விலை போன்றவை அரசு கொடுத்த சலுகைகள் மற்றும் நன்மைகளை பயனற்றதாக்குகிறது.

இதெல்லாம் போக ஒன்றிய அரசு தனக்கு வரும் வரி வருவாய் அல்லது ஏற்றுமதி வருமானத்தை விட கூடுதலாக செலவழிப்பது, அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என அஞ்சுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

அமைப்புசார் பொருளாதாரத்துக்குள் வந்த மக்கள்

வங்கிக் கணக்கு எண்ணிக்கை

நரேந்திர மோதியின் மிகப் பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று.

சர்வதேச அளவில் டிஜிட்டல் பேமென்ட்டில் இந்தியா கணிசமாக முன்னேறி இருக்கிறது. அதற்கு அரசின் ஆதரவு பெற்ற பரிமாற்ற அமைப்புக்கு தான் நன்றி கூற வேண்டும். மோதியின் ஜன் தன் திட்டம் கோடி கணக்கான வங்கிக் கணக்கற்ற ஏழை மக்கள், எந்த வித சிக்கலுமின்றி வங்கிக் கணக்கு தொடங்க உதவியது.

வங்கிக் கணக்கு மற்றும் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்தின் அளவு அதிகரித்திருப்பது ஒரு நல்ல சமிக்ஞை தான், ஆனால் பல வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.

இந்திய பொருளாதாரத்தை சரியான வழியில் கொண்டு செல்லும் முயற்சியில் இது ஒரு பெரிய நடவடிக்கை. குறிப்பாக எந்த வித இடைத்தரகர்களுமின்றி சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக மானியங்கள் செலுத்தப்படுவதை இது அனுமதிப்பதால் இதை பாராட்டுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

சுகாதாரத்துக்கு செய்யும் செலவு போதவில்லை

சுகாதாரத்துக்கு இந்தியா செலவிடும் விகிதம்

"இந்தியாவின் முந்தைய அரசாங்கத்தைப் போல இந்த அரசும் போதுமான அளவுக்கு சுகாதாரத்தில் முதலீடு செய்யவில்லை. உலகிலேயே மிக குறைந்த அளவில் சுகாதாரத்துக்கு செலவிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று" என்கிறார் பொருளாதார நிபுணர் ரீதிகா கேரா.

"இது அமெரிக்காவைப் போன்ற சுகாதார அமைப்பை நோக்கி நம்மை அளவுக்கும் அதிகமான வேகமாக நகர்த்துகிறது. அமெரிக்காவில் சுகாதார சேவைகளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டி இருந்தாலும் சிகிச்சைகளின் பலன்கள் அத்தனை சிறப்பாக இருக்காது" என்கிறார் கேரா.

கடந்த 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மோதியின் சுகாதார காப்பீட்டுத் திட்டம், கொரோனா காலகட்டத்தில் கூட குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

"இந்திய சுகாதார கட்டமைப்பில் இன்னும் நிறைய முதலீடு செய்ய வேண்டும்" என்கிறார் பொது சுகாதார நிபுணர் மற்றும் மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி. ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த, கொரோனாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியா சுகாதார கட்டமைப்பில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார்.

இன்னும் பல இந்தியர்கள் விவசாயத்தில் இருக்கிறார்கள்

பெரிய வளர்ச்சி காணாத விவசாயம்

இந்தியாவின் ஜிடிபிக்கு குறைவாக பங்களிப்பை வழங்கும் விவசாயத் துறை தான், இந்தியாவில் வேலை பார்க்கத் தகுதியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்து வருகிறது.

கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவின் விவசாயத் துறையில் மாற்றங்கள் தேவை என்பதை ஆமோதிக்கிறார்கள். கடந்த ஆண்டு சந்தைக்கு ஆதரவான வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டங்களால் அச்சட்டங்கள் அமல்படுத்தப்படாமல் இருக்கின்றன.

இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் அது விவசாயிகளின் வருமானத்தை குறைத்துவிடும் என விவசாயிகள் தரப்பினர் கூறுகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்த வேண்டும் என உறுதியளித்த மோதியோ அதை மறுக்கிறார்.

சிறிய மாற்றங்களைக் கொண்டு வருவது பெரிய அளவில் பலனளிக்காது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற அரசு முதலீடு செய்ய வேண்டும் என்கிறார் பொருளாதார பேராசிரியரான ஆர். ராம்குமார்.

"பணமதிப்பிழப்பு விநியோகச் சங்கிலியை உடைத்துவிட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் 2017ஆம் ஆண்டில் சில மூலப் பொருட்களின் விலை அதிகரித்தது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்னைகளை நிவர்த்தி செய்ய அரசும் பெரிதாக எதையும் செய்யவில்லை" என்கிறார் அவர்.

"உபரியாக இருக்கும் தொழிலாளர்களை மற்ற துறைகள் பணிக்கு அமர்த்திக் கொண்டால், விவசாயத் துறை சிறப்பாக செயல்படும்" என்கிறார் பொருளாதார வல்லுநர் ராணடே.

இந்தியாவில் தனியார் முதலீடுகள் அதிகரித்தால் மட்டுமே அது நடக்கும். ஆனால் இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனியார் முதலீடுகள் தரை தட்டி இருப்பதாக சி.எம்.ஐ.இ அமைப்பு கூறுகிறது. இது மோதி அரசுக்கு மிகப் பெரிய பொருளாதார சவாலாக இருக்கலாம்.

தரவுகள்: கிரண் லோபோ, வரைபடம்: ஷதாப் நஸ்மி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :