நரேந்திர மோதியின் ‘ஆத்ம நிர்பார்’ முழக்கம் என்ன ஆனது? தற்சார்பு நடவடிக்கைகளின் இன்றைய நிலை என்ன?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், ஜூபைர் அகமத்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ராஜ்பத்தில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பின் போது, ​​பயோடெக்னாலஜி துறை தனது அலங்கார ஊர்தியில் 'தற்சார்பு இந்தியா' இயக்கத்தின் கீழ் கோவிட் -19 தடுப்பூசியின் மேம்பாட்டு செயல்முறையைக் காட்டியது.

"முழுமையான தற்சார்பு இந்தியா இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்று, இந்தியாவில் பெரிய அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதாகும்," என செய்தித்தாள்கள் மறுநாள் எழுதி இருந்தன.

இப்போது நாம் ஜூன் மாதத்தில் இருக்கிறோம். தடுப்பூசியில் தன்னிறைவு பெற்றதாகக் கூறப்பட்டாலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா தன்னிறைவு பெற்றிருந்தாலும்கூட, அது இப்போது நடந்ததல்ல. பல ஆண்டுகளாகவே இந்தியா தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உலகளாவிய தொழிற்சாலையாக கருதப்படுகிறது. இன்று காணப்படும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மோதி அரசாங்கத்தின் மோசமான நிர்வாகமே காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவிட், கல்வான் மற்றும் ஆத்ம நிர்பார்

செவிலியர்கள்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP VIA GETTY IMAGES

கடந்த ஆண்டு மே 12 ஆம் தேதி 'தற்சார்பு இந்தியா' என்ற முழக்கத்தை எழுப்பினார். அந்த நாளின் உரையில், அவர் 'தற்சார்பு' என்ற சொல்லை ஏழு முறையும், 'தற்சார்பு இந்தியா' என்ற வார்த்தையை 26 முறையும் பயன்படுத்தினார். 20 லட்சம் கோடி பொருளாதாரநிதி தொகுப்பிற்கு 'தற்சார்பு பேக்கேஜ்' என பெயரிடப்பட்டது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரசுரம், தற்சார்பு என்ற வார்த்தையை , 2020 ஆம் ஆண்டின் 'சொல்' என அறிவிக்கும் அளவுக்கு, அது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

பிரதமரின் இந்த முழக்கம் ஒரு சமூக ஊடக பிரசாரமாக மாறியது. அமைச்சர்கள், மாநில அரசுகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே தற்சார்பு பற்றி அதிகம் பேசினர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதல்களுக்குப் பிறகு, தற்சார்பு என்கிற வார்த்தை வலுப்பெற்றதோடு கூடவே தேசபக்தி உணர்வும் சேர்ந்து கொண்டது.

இந்திய அரசு பல சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன.கூடவே சீன இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, தற்சார்பு முழக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

இதெல்லாம் நடந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் நாடு எவ்வளவு தற்சாற்பு நிலையை அடைந்துள்ளது?

இந்தியா சீனா

பட மூலாதாரம், YURCHELLO108

தற்சார்பு என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல என பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான நிலேஷ் ஷா கூறுகிறார். இவர் கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (asset management) முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தற்சார்பு என்பது ஒரு புதிய சொல் அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு நாம் பல ஆண்டுகளாக பால் இறக்குமதி செய்தோம். பின்னர் 'அமுல்' தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. இன்று நாம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இருக்கிறோம். ஆகவே, அமுல் மூலமாக பாலில் தன்னிறைவு அடைந்ததைப் போல, பசுமைப் புரட்சி மூலம் உணவு தானியங்களிலும், தனியார் துறை மூலம் மருந்துகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும்.

நாம் உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். இது ஒரு இலக்கல், ஒரு பயணம். இந்த ஆண்டு நாம் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இருக்கிறோம் என்றால், அடுத்த ஆண்டும் அதைத்தொடர வேண்டும்," என பிபிசியுடனான ஒரு பிரத்யேக உரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

"அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்கள் தற்சார்பு பற்றி பேசியுள்ளன. பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பால் ஆகியவற்றில் தற்சார்பு அடைய வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் பெருந்தொற்றின் போது ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளே தற்சார்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தன. எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை கொரோனா பொதுமுடக்கத்தின் போது வலுப்பெற்றது," என டெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில், சீன விவகாரங்களின் நிபுணராக இருக்கும் முனைவர் ஃபைசல் அகமது கூறுகிறார்.

எளிய மக்கள்

பட மூலாதாரம், Getty Images

தற்சார்பு நிலை என்பது கொரோனா பிரச்சனையால் தூண்டப்பட்ட உலகளாவிய போக்கு என சில வல்லுநர்கள் நம்புகின்றனர். பெருந்தொற்றுநோய் காரணமாக தற்சார்பு கொள்கைக்கு பல நாடுகள் முழக்கமிட்டன என்று சிங்கப்பூரில் வசிக்கும் சீன எழுத்தாளர் சுன் ஷி, பிபிசியிடம் கூறினார்.

"இந்த நெருக்கடிக்கு முன்பு உலகமயமாக்கல் ஒரு பொதுவான போக்காக பார்க்கப்பட்டது. இது ஒரே உலகம் என்றும். நாம் வர்த்தக ஒப்பந்தங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அனவரும் கருதினர்.ஆனால் கோவிட் நெருக்கடி ஏற்பட்டபோது தற்சார்பும் அவசியம் என பெரும்பாலான நாடுகள் உணர்ந்திருக்கின்றன. பிரதமர் மோதியின் இந்தக் கொள்கையில் வலு இருக்கிறது, "என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்தியா தற்சார்புக்கு இன்னும் தயாராகவில்லை எனவும் அவர் கருதுகிறார். "சீனா தனக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு தேவை மிக அதிகமாக இருப்பதால், இந்தியா தனக்குத் தேவையான பொருட்களின் பெரும் பகுதியை தானே உற்பத்தி செய்ய முடியவில்லை.சீனா இந்த இடத்திற்கு வர பல தசாப்த காலம் தேவைப்பட்டது. இந்தியா ஓரிரவில் அத்தனை வேகமாக தற்சார்பு நிலையை அடைய முடியாது," என்கிறார் சுன் ஷி.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், சீனா கிட்டத்தட்ட எல்லா பொருளையும் தானே உற்பத்தி செய்து கொண்டு உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த போதிலும், அது உலக போக்கின் ஒரு பகுதியாக இருந்தது.

முன்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பது தான் சீனாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டிலிருந்து இந்நோக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சீன விவகார நிபுணரான முனைவர் ஃபைசல் அகமது தெரிவிக்கிறார்.

"அதிபர் ஷி ஜின்பிங் கடந்த ஆண்டு மே மாதம் 'இரட்டை சுழற்சி' என்கிற கொள்கையை வெளியிட்டார். இனி நாம் வெளிப்புற சுழற்சிக்கு (ஏற்றுமதி) மட்டுமின்றி, உள் சுழற்சி (உள்நாட்டு சந்தை) குறித்தும் கவனம் செலுத்துவோம் என கூறினார். இந்த உள் சுழற்சி என்பது ஒரு வகையில் சீனாவின் தற்சார்பு கொள்கை," என அவர் குறிப்பிட்டார்.

சீன இறக்குமதி மீதான சார்பை குறைக்கும் முயற்சி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு தேசியவாத உணர்வு வேகம் பெற்றது. சீனாவுக்கு எதிரான அறிக்கைகள் தினமும் ஊடகங்களில் வரத் தொடங்கின. சீனப் பொருட்களுக்கு மக்கள் தீ வைத்ததாகவும், அதைப் புறக்கணிக்க கோஷங்களை எழுப்பியதாகவும் பல இடங்களிலிருந்து செய்திகள் வந்தன.

சீன முதலீட்டுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் 200 க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் தற்சார்பு பிரச்சாரம் சீன இறக்குமதிக்கு எதிரானது என்றே தோன்றியது.

சீனாவுடன் வர்த்தகம்

ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சீனாவைச் சார்ந்திருப்பது எவ்வளவு குறைந்துள்ளது என்பது இப்போதைய கேள்வி. உண்மை என்னவென்றால், எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி கணிசமாகக் குறைந்துவிட்டது, ஆனால் சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி குறையவில்லை.

2019-20ஆம் ஆண்டில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவின் மொத்த இறக்குமதி 474.7 பில்லியன் டாலராக இருந்தது, இது 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 345 பில்லியன் டாலராகக் குறைந்தது.

2019-20ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து 65.26 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது ஒட்டு மொத்த இறக்குமதியில் 13.7%. 2020-21 (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையான தரவு) 58.36 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது ஒட்டு மொத்த இறக்குமதியில் 16.9%. மொத்த இறக்குமதியில் சீன இறக்குமதியின் பங்கு 13.7 சதவீதத்திலிருந்து 16.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2019-20ல் ஏற்றுமதி 313.36 பில்லியன் டாலராக இருந்தது. இது 2020-21ல், 256.34 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 2019-20ல், 16.61 பில்லியன் டாலராக இருந்தது 2020-21ல் 18.53 பில்லியன் டாலராக சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவுக்கு பிரச்சனையாக இருந்த சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை, இப்போது சற்றே குறைந்துள்ளது.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது அதிக செலவுபிடிப்பதாகியிருந்தாலும், இறக்குமதி குறைவதாகத் தெரியவில்லை. டெல்லியின் கரோல் பாக் பகுதியில் வாழும் ராஜீவ் சட்டா பல ஆண்டுகளாக சீனாவிலிருந்து மோட்டார் பாகங்களை இறக்குமதி செய்து வருகிறார்.

"சீன ஏற்றுமதியாளர்கள் பொருட்களின் விலையை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்ற ஆண்டிலிருந்து இந்திய துறைமுகங்களில் சீன பொருட்களை விடுவிக்க எடுத்துக் கொள்ளும் காலம் அதிகரித்திருக்கிறது. இதனால் நாங்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறோம்," என அவர் கூறினார்.

நரேந்திர மோதி & ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் உள்ள சிச்சுவான் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் இணை முதல்வர் பேராசிரியர் ஹுவாங் யுன்சோங், இந்தியா மற்றும் சீனாவிற்கிடையிலான இருவழி வர்த்தகத்திற்கும், இந்தியாவில் சீன அதிக முதலீட்டை மேற்கொள்வதையும் ஆதரிக்கிறார். ஆனால் அவர் எச்சரிக்கை தேவை என்றும் அறிவுறுத்துகிறார்.

பிபிசியுடன் பேசிய அவர், "இருதரப்பு உறவுகளை மீண்டும் தொடங்க இதை ஒரு நல்ல அறிகுறியாக நான் பார்க்கிறேன், ஆனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என கூறுகிறார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மருத்துவ உபகரணங்கள் போன்ற துறையில் இந்தியா ஒரே ஆண்டில் குறிப்பிடத்தக்க தற்சார்பை அடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பிபிஇ கிட்டை (பாதுகாப்பு உடை) எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமலானபோது, ​​இந்தியாவில் பிபிஇ கிட் உற்பத்தி ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் நாலரை லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ கிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

மருந்து மற்றும் பாதுகாப்பு துறை

மருந்து

பட மூலாதாரம், ANI

இந்தியா இப்போது பிபிஇ கிட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. முககவசத்திலும் ஏறக்குறைய இதே நிலைதான். இந்தியாவில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முன்பு மிகக் குறைவு. ஆனால் இப்போது அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

சுதந்திரம் பெற்றது முதல் தொற்றுநோய் காலகட்டம் வரை, நாட்டில் 16,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அரசு தரவுகளின்படி, பெருந்தொற்று ஏற்பட்ட ஒராண்டு காலத்துக்குப் பிறகு நாட்டில் 58,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.ஆனால் குறைபாடுகள் குறித்த புகார்கள் பல மருத்துவமனைகளிலிருந்தும் எழுந்துள்ளன என்பது வேறு விஷயம்.

இது தவிர, பல வகையான மருந்துகளை தயாரிக்க 62 சதவீத மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த சார்பு குறைந்துள்ளது. இந்தியாவில் கிடைக்கும் இந்த மூலப்பொருட்களின் விலை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தற்சார்படையச் செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பட்ஜெட்ட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை வலியுறுத்தினார். இருப்பினும் இந்த விவகாரத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றி காணப்படவில்லை.

"பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மிக வேகமாக மாறுகிறது. அந்த தொழில்நுட்பம் எப்போது கிடைக்கும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பாதுகாப்பு, இதுவரை அரசுத்துறையாகவே இருந்துள்ளது. இப்போது மெல்ல தனியார் துறையும் வருகிறது. ஒவ்வொரு துறையிலும் உடனடி வெற்றி கிடைக்கும் என சொல்லமுடியாது. முதலில் அடித்தளம் அமைக்க வேண்டும், அதை பலப்படுத்த வேண்டும், பின்னர் கட்டிடம் கட்டவேண்டும்," என நிலேஷ் ஷா கூறுகிறார்.

உற்பத்தியில் இந்தியாவை தற்சார்பு பெறச்செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மோதி அரசு 2020 ஏப்ரலில் 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட சலுகைத் திட்டம்' அதாவது பி.எல்.ஐ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள், குளிர் சாதனம் போன்ற 13 துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு அரசு, வரி மற்றும் கலால் வரியில் கணிசமான விலக்கை அளிக்கிறது.

அதன் நன்மைகள் அடுத்த சில ஆண்டுகளில் தெரியத்தொடங்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.

இறக்குமதி பொருளாதாரத்துக்கு தீங்கு விளைவிக்குமா?

உலகின் பெரிய ஏற்றுமதி நாடுகள், பெரிய இறக்குமதியாளர்களாகவும் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் இதற்கு எடுத்துக்காட்டுகள். பிரதமர் மோதியின் தற்சார்பு இயக்கத்தின் நோக்கங்களில் இறக்குமதியை பெருமளவில் குறைப்பதும் ஒன்று. அதற்காக ஒன்றியஅரசு, பல பொருட்களின் இறக்குமதி மீதான கட்டணங்களை அதிகரித்துள்ளது.

ஆத்ம நிர்பார்

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் நிலேஷ் ஷா இதை நியாயப்படுத்துகிறார். "வழக்கமாக நீங்கள் மூலப்பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்து அவற்றின் மதிப்பை அதிகரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மலிவான விலையிலும், மூலப் பொருட்கள் அதிக விலையிலும் இறக்குமதி செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. இதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அளிப்பதை நாங்கள் கண்டோம்,"என அவர் கூறுகிறார்.

"நீங்கள் ஒரு செடியை நடவு செய்யும்போது அது வளரும் வகையில் முன்னும் பின்னுமாக வேலி அமைக்கிறீர்கள். அது ஒரு மரமாக மாறும்போது அதற்கு வேலி தேவையில்லை. எனவே சிலகாலம் செடியை நீங்கள் கவனித்துக்கொள்வது போலவே தொழிற்சாலையையும் சிறிது காலம் கவனித்துக்கொள்வது முக்கியம்,"என அவர் விளக்குகிறார்,

ஆனால் இறக்குமதி ஒரு மோசமான விஷயம் அல்ல என சீன எழுத்தாளர் சுன் ஷி கருதுகிறார்.

"உற்பத்தி செய்யும் திறனற்ற ஒன்றை நீங்கள் உருவாக்க முயற்சிக்கக்கூடாது. உங்களை விட மலிவான மற்றும் சிறந்த தரத்தில் அதை உருவாக்கக்கூடிய ஒரு நாட்டிலிருந்து அந்தப் பொருட்களை நீங்கள் வாங்கவேண்டும். இதற்காகத்தான் நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி - ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன," என்கிறார் அவர்.

ஆனால், வர்த்தக பற்றாக்குறையை சமநிலைப்படுத்துவதை சுன் ஷி நிச்சயமாக ஆதரிக்கிறார். சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி, இறக்குமதியை ஒப்பிடும்போது சுமார் 40 பில்லியன் டாலர் குறைவு என்பதால், அது தற்போது சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்திருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் செலவின் முக்கியத்துவம் நிறைய அதிகரிக்கிறது என் ஃபைசல் கூறுகிறார். நாம் சீனாவிலிருந்து சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அதன் மதிப்புக் கூட்டலுக்குப் பிறகு அதன் விலையை குறைவாக வைத்திருக்க முடிந்தால், ஏற்றுமதி லாபகரமாக இருக்கும். இந்த வழியில் பெரிய ஏற்றுமதியாளராக ஆவதற்கு, பெரிய இறக்குமதியாளராக மாற வேண்டும்.

இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு

போர் கப்பல்

பட மூலாதாரம், AFP CONTRIBUTOR

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டுமானால், அப்பகுதியில் தனது சக்தியை அதிகரிக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

" இந்தியப் பெருங்கடலில் நாம் அமெரிக்காவை நம்பியிருக்கிறோம். 'சாகர்' என்ற பெயரில் ஒரு முன்முயற்சி உள்ளது. எனவே அதன் திறனை அதிகரித்து அதை வலுப்படுத்தி , அமெரிக்காவின் மீதான சார்பை குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டால், இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு நாம் பாதுகாப்பை வழங்க முடியும்,"என ஃபைசல் அகமது கூறுகிறார்.

தற்போது​​ இந்த பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் பலவற்றின் மீது சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் என பல நாடுகளும் விரும்புகின்றன.

இந்திய அரசின் தற்சார்புக் கொள்கையுடன் சீன எழுத்தாளர் சுன் ஷி உடன்படுகிறார். ஆனால் அந்த இலக்கை அடைய சீனாவுக்கு பல ஆண்டுகள் பிடித்தது போலவே, இந்தியாவும் தற்சார்படைய பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்கிறார்.

இந்த செயல்முறையை சற்று வேகப்படுத்த முடியும். ஆனால் கண் சிமிட்டும் நேரத்திற்குள் நாட்டை தற்சார்பு நிலைக்குச் கொண்டு செல்ல எந்த மந்திரக்கோலும் நம்மிடம் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :