கொரோனா வைரஸ் திரிபுகள் இன்னும் எவ்வளவு மோசமடையும்? அதற்கு ஏதாவது வரம்பு இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேம்ஸ் கலேகர்
- பதவி, பிபிசி அறிவியல் & சுகாதார செய்தியாளர்
2019ஆம் ஆண்டின் இறுதியில் வுஹானிலிருந்து வெளிவந்த கொரோனா திரிபை விட, மிக எளிதாக, அநேகமாக சுமார் இரண்டு மடங்கு எளிதாக பரவக்கூடிய ஒரு வைரஸை நாம் இப்போது எதிர்கொண்டு வருகிறோம் என்பது தெளிவாகிறது.
இங்கிலாந்தின் கென்ட் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஆல்பா கொரோனா திரிபு, கொரோனா வைரஸ் பரவும் திறனில் பெரிய முன்னேற்றம் கண்டது. இப்போது இந்தியாவில் முதலில் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபு, வைரஸ் பரவலில் இன்னும் முன்னேறி இருக்கிறது.
மேன்மேலும் நாம் புதிய மற்றும் மேம்பட்ட, கட்டுப்படுத்துவதில் கூடுதல் சிரமங்களை ஏற்படுத்தக் கூடிய கொரோனா திரிபுகளை நாம் எதிர்கொள்ள இருக்கிறோமா? அல்லது கொரோனா வைரஸ் எவ்வளவு மோசமடையும் என்பதற்கு ஏதாவது வரம்பு இருக்கிறதா?
அதை பார்ப்பதற்கு முன், இந்த வைரஸ் தொற்றின் வரலாற்றை நினைவில் கொள்வது அவசியமாகிறது. கொரோனா வைரஸ் முற்றிலும் வேறுபட்ட உயிரினங்களில் தொற்றை ஏற்படுத்தத் தொடங்கியது. இவ்வைரஸ் முதலில் வெளவால்களில் காணப்பட்டது, இப்போது மனிதர்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது.
வைரஸ்கள் மனிதர்களிடம் பரவும் போது, "அவை முழுமையானவையாக இருப்பது மிகவும் அரிது" என லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் வெண்டி பார்க்லே கூறினார். "வைரஸ்கள் மனித உடலில் குடியேறுகின்றன, பின்னர் அவை வலுவடைவதற்கு நல்ல நேரம் கிடைக்கிறது."

பட மூலாதாரம், Imperial College, Lancet, Australian Government
வைரஸ் பரவலுக்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன, ஃப்ளூ பெருந்தொற்று முதல் எபோலா நோய் வரை, முதலில் வைரஸ் வெளிவரும் பிறகு தான் வேகமாக பரவத் தொடங்கும் என்கிறார் பேராசிரியர்.
எவ்வளவு பரவும்?
வைரஸ்களின் உயிரியல் பரவல் சக்தியை ஒப்பிடுவதற்கான சரியான வழி அவற்றின் R0 ஐப் பார்ப்பது தான் (R-naught என அழைக்கப்படுகிறது). யாருக்கும் நோயெதிர்ப்பு இல்லாமல், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க யாரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கும் போது, சராசரியாக நோய்த்தொற்றுடைய ஒவ்வொரு நபரும் எத்தனை பேருக்கு வைரஸைக் கடத்துகிறார்கள் என்பது தான் R0.
வுஹானில் தொற்றுநோய் தொடங்கியபோது அந்த எண்ணிக்கை 2.5 ஆக இருந்தது, டெல்டா மாறுபாட்டிற்கு 8.0 வரை அதிகமாக இருக்கலாம் என இம்பீரியலில் உள்ள நோய் மாடல்லர்கள் தெரிவித்தனர்.
"இந்த வைரஸ் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, இது நாங்கள் அஞ்சியதற்கும் அப்பாற்பட்டது" என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வைரஸ் பரிணாம வளர்ச்சியை ஆராயும் மருத்துவர் அரிஸ் கட்ஸொராகிஸ்.
"இது 18 மாதங்களில் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது, இரு பெரும் திரிபுகள் (ஆல்பா மற்றும் பின்னர் டெல்டா) ஒவ்வொன்றும் 50% அதிகமாக பரவக்கூடியது என்பது ஒரு மிகப் பெரிய மாற்றமாகும்."

பட மூலாதாரம், WHO
கொரோனா எவ்வளவு அதிகமாகப் பரவும் என்பதற்கு ஒரு உச்ச வரம்பை கணிக்க முயல்வது முட்டாள்தனம் என இவர் கருதுகிறார். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பரவலின் வேகத்தை அவர் எளிதாகக் காணலாம்.
பிற வைரஸ்கள் மிக அதிகமான R0 களைக் கொண்டுள்ளன, உதாரணமாக தட்டம்மை மிக அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது.
"அது இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது" என பேராசிரியர் பார்க்லே கூறினார். "தட்டம்மை நீங்கள் கேட்கும் நபரைப் பொறுத்து R0 14 முதல் 30 வரை இருக்கும், கொரோனா எப்படி மேற்கொண்டு பரவப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை."
Please wait...
கொரோனா திரிபுகள் என்ன செய்கின்றன?
கொரோனா வைரஸ், தன் பரவலை அதிகரித்துக் கொள்ள பல தந்திரங்களை மேற்கொள்கின்றன, அவை:
1. கொரோனா நம் உடலுக்குள் நுழைவதற்கான வழிகளை மேம்படுத்திக் கொள்கிறது.
2. காற்றில் நீண்ட காலம் உயிர்வாழ்கிறது.
3. வைரல் லோட் அதிகரிப்பதால் நோயாளிகள் அதிக வைரஸ்களை சுவாசம் மற்றும் இருமல் மூலம் வெளியிடுகிறார்கள்
4. கொரோனா நோய்த்தொற்றின் போதும் அது மற்றொரு நபருக்கு பரவும்போது மாறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நம் உடலில் சில வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்க இன்டர்ஃபெரான் எதிர்வினைகள் தூண்டப்படும். கொரோனா வைரஸ் தன்னை மேம்படுத்திக் கொண்டு, இந்த இன்டர்ஃபெரான் எதிர்வினைகளின் கண்ணில் படாமல் கடப்பதன் மூலம், ஆல்பா திரிபு அதிகம் பரவக்கூடிய திரிபாக மாறியது.
நாம் கிரேக்க எழுத்துக்களின் வழியாக ஒமேகா என்கிற திரிபை அடையும் நேரத்தில், தடுத்து நிறுத்த முடியாத ஒரு கோரமான கொரோனா திரிபை எதிர்கொள்வோம் என பொருளல்ல.
"இறுதியில் எப்படிப் பார்த்தாலும் சில வரம்புகள் இருக்கின்றன, எல்லா கொரோனா மரபணு மாற்றங்களின் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மரபணு மாற்றங்கள் ஒன்று சேர்ந்து ஒரு சூப்பர் - அல்டிமேட் வைரஸ் உருவாகவில்லை" என மருத்துவர் கட்ஸொராகிஸ் கூறினார்.
வரலாறு காணாத அளவுக்கு மிக விரைவான தடுப்பூசி திட்டம், கொரோனா வைரஸுக்கு வேறு மாதிரியான சவாலை ஏற்படுத்தும், அதோடு வைரஸை வேறு திசை நோக்கி பரிணாம வளர்ச்சி காணச் செய்யும்.
"கொரோனா வைரஸில் ஏற்படும் மாற்றம் தடுப்பூசிகளைக் கடப்பதாக இருக்கலாம், மறு புறம் அதன் பரவும் திறன் வலுவிழந்ததாக இருக்கலாம்" என மருத்துவர் கட்ஸொராகிஸ் கூறினார்.
பீட்டா கொரோனா திரிபை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் - இத்திரிபு E484K எனப்படும் பிறழ்வைக் கொண்டுள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்க்க உதவுகிறது, ஆனால் இத்திரிபால் அதிகம் பரவ முடியவில்லை. ஆனால், டெல்டா கொரோனா திரிபில் காணப்படும் பிறழ்வுகள் நோய் பரவுவதற்கு உதவுகின்றன, அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி மனித உடலில் நுழையவும், நீண்ட நாட்கள் இருக்கவும் கொஞ்சம் உதவுகின்றன.
கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கு சரியான தந்திரமாக என்ன இருக்கும் என்பதை கணிப்பது சிரமமே. வெவ்வேறு வைரஸ்கள் தொற்றுநோயைத் தொடர வெவ்வேறு வழிமுறைகளையும் நுட்பங்களையும் பயன்படுத்துகின்றன.
தட்டம்மை அதிகம் பரவக் கூடியது தான், ஆனால் வாழ்நாள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தியை விட்டுச்செல்கிறது. எனவே அவ்வைரஸ் எப்போதும் புதியவரைக் கண்டுபிடிக்க வேண்டும். இன்ஃப்ளூயன்ஸா மிகக் குறைவான R0 ஐக் கொண்டுள்ளது, ஆனால் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கடந்து பரவக் கூடியது.
"நாம் மிகவும் சுவாரஸ்யமான, கணிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம், அடுத்த ஒரு வருடத்தில் கொரோனா வைரஸ் எப்படி பரவும் என்று கணிப்பது கடினம்" என பேராசிரியர் பார்க்லே கூறினார்.
வலுவான தடுப்பூசி பிரசாரங்களைக் கொண்ட பணக்கார நாடுகளில், பரவலான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அடுத்து வரும் கொரோனா திரிபுகள் ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது.
பிற செய்திகள்:
- பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மம்தாவுடன் சேர்ந்த முகுல் ராய்: தாக்கம் எப்படி இருக்கும்?
- முதியோர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்: தற்காத்து கொள்வது எப்படி?
- வண்டலூர் சிங்கங்களுக்கு, கொரோனா தவிர கேனைன் டிஸ்டம்பர் தொற்று கண்டுபிடிப்பு
- முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












