வண்டலூர் உயிரியல் பூங்கா: சிங்கங்களுக்கு கொரோனா தவிர கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் தொற்றியதும் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீலா என்ற பெண் சிங்கம் இறந்தது. இதையடுத்து இதர சிங்கங்களின் மாதிரிகளை பரேலியில் உள்ள கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பியதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. என்ன நடக்கிறது வண்டலூரில்?
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதால் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் இது உள்ளது.
இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி பூங்காவில் உள்ள சில சிங்கங்களுக்கு இருமல் இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 4 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூங்கா நிர்வாகம், இதர சிங்கங்களின் மாதிரிகளை உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) அனுப்பியது.
பெண் சிங்கம் உயிரிழந்த தகவலை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்டலூரில் நேரடி ஆய்வு மேற்கோண்டு, சிங்கங்களுக்கு அளிக்கப்படும் வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.
என்ன நோய்?
இந்நிலையில், சார்ஸ் கோவ் 2 வைரஸ் தொற்று இருப்பதும், 2 சிங்கங்களுக்கு `கேனைன் டிஸ்டம்பர் வைரஸ்' இருப்பதும் தெரியவந்துள்ளது. `பொதுவாக, நாய்கள் மூலமாக பரவும் கேனைன் டிஸ்டம்பர் வைரசால் விலங்குகளின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும்' எனவும் கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பரேலியில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) அனுப்பப்பட்ட சிங்கங்களின் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனை விவரங்களும் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக, வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குநர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` கடந்த 4 ஆம் தேதி 3 சிங்கங்கள் மற்றும் 4 புலிகளின் மாதிரிகள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) சார்ஸ் கோவ் 2 (SARS CoV2) பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
அந்நிறுவனம் கடந்த 9 ஆம் தேதி அனுப்பிய அறிக்கையின்படி, 4 புலிகள் மற்றும் 1 சிங்கத்தின் மாதிரிகள் `நெகட்டிவ்' என்றும் இறந்த நீலா உட்பட இரண்டு பெண் சிங்கங்களுக்கு `சார்ஸ் கோவ் 2 (SARS CoV2) பாசிட்டிவ்' எனவும் கண்டறியப்பட்டது.
அதே நிறுவனம் எதேச்சையாக வேறு ஏதேனும் நோய்க்கிருமிகள் உள்ளனவா என ஆய்வு செய்ததில் 2 சிங்கங்களுக்கு கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் (CDV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மாதிரிகளில் `நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ` கோவிட் தொற்று நேரத்தில் ஏதாவது மன அழுத்தம், வேறு பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா தொற்று இருப்பது பொதுவானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய தொற்று ஏதும் உள்ளதா என ஆய்வு செய்வது உயிரினங்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்கு பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும்.
சிடிவி (CDV) பாசிட்டிவ் எனக் கருதப்படும் சிங்கம் இதுநாள் வரையில் எந்த அறிகுறியும் இல்லாது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளது.
நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விலங்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புடன் சிடிவி அறிகுறிகள் இருக்கின்றனவா என கண்காணிக்கப்படுகிறது. அதனை உறுதி செய்யவும் திரும்பவும் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார்.
`கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் என்பது புதிய வகையானதா?' என மூத்த கால்நடை மருத்துவர் பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். இவர் டெல்லி உயிரியல் பூங்காவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. "இது புதிய வகையான வைரஸ் அல்ல. ஏற்கெனவே உள்ள வைரஸ்தான். சிங்கம், புலி போன்றவற்றுக்கு வரக் கூடிய ஒன்றுதான். இதற்குத் தடுப்பூசியும் உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதும் உண்மைதான். இந்த வகையான வைரஸ் தாக்கினால் ரத்தம் கலந்து வயிற்றுப்போக்கு ஏற்படும். வாந்தி, மெலிந்து போதல் எனப் பல்வேறு உபாதைகள் ஏற்படும்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` சிடிவி பாதிப்பு என்பது சற்று சிக்கலான ஒன்றுதான் என்றாலும் இதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. வழக்கமாக, ஒரு வயதுள்ள குட்டிகளைத்தான் இது அதிகம் பாதிக்கும். தற்போது வயதான சிங்கங்களுக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதன் சிறுநீர் உள்ளிட்ட கழிவுகள் மூலம் அடுத்த மிருகங்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. வயதான சிங்கம் என்பதால் சிகிச்சைக்கு எவ்வாறு ஒத்துழைப்பு கொடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை" என்கிறார்.
`வண்டலூர் பூங்காவில் இதற்கு முன்னதாக விலங்குகளுக்கு டிஸ்டம்பர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?' என்றோம். ``நான் அங்கு பதவியில் இருந்தவரையில் DHL (distemper hepatitis and leptospirosis) எனப்படும் தடுப்பூசியை போட்டு வந்தேன். இது ஒன்பது வகையான நோய்களுக்கான தடுப்பூசி ஆகும். தற்போது சிடிவி பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார்.
பிற செய்திகள்:
- ட்விட்டரில் களமாடும் ஒன்றிய உயிரினங்கள்: பாஜக கோபம் கொள்வது ஏன்?
- தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்
- காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது
- தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












