செல்லப் பிராணிகளுக்கு கொரோனா வரும் ஆபத்து உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக ஒரு சிங்கம் இறந்து இருப்பதும், எட்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிந்துள்ளதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து கால்நடை மருத்துவ குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், உயிரியல் பூங்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வன அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் நோய்த்தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிபிசி தமிழுக்காகத் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் சுகாதார ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் தினகர் ராஜிடம் பேசினோம்.
செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா தொற்று வரலாம் என்பது குறித்தும், தற்போது கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று ஆய்வு குறித்தும் பல்வேறு தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
"விலங்குகளை பண்ணை விலங்குகள், செல்லப் பிராணிகள், வன விலங்குகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். தற்போது சிங்கம், புலி போன்ற வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டு வன விலங்கு பூங்காக்களில் உள்ள சிங்கங்களும், புலிகளும்கூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் வண்டலூரில் மட்டுமல்ல, ஹைதராபாத், உத்தரப்பிரதேச மாநில உயிரியல் பூங்கா, ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் உள்ள சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா தொற்று தீவிரமாகப் பரவ ஆரம்பித்தவுடன், விலங்குகளுக்கு ஏற்படும் தொற்று குறித்தும் ஆய்வுகள் தொடங்கி விட்டன. இதில், பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளான சிங்கங்கள், புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பது கடந்த ஆண்டே கண்டறியப்பட்டது. பண்ணை விலங்குகளான, ஆடு, மாடு போன்றவற்றிற்கு கொரோனா தொற்றுக்கு வாய்ப்பில்லை என்பதையும் கண்டறிந்தனர்.
செல்லப் பிராணிகள் பாதிக்கப்படும் ஆபத்து

பட மூலாதாரம், Getty Images
செல்லப் பிராணிகளில் நாய், பூனை போன்றவை முக்கியமானவை. நாய்களும் கூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிப்பட்டவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அதற்கும் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம், நாயிடமிருந்து மற்ற நாய்களுக்கோ அல்லது பிற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
பூனைகளிலிருந்து மற்ற பூனைகளுக்குப் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என ஆய்வுக்கூடங்களின் சோதனை மூலம் அறிந்துள்ளனர். இதுவே உள்ளூர் கள ஆய்வு முடிவுகள் இன்னமும் அறியப்படவில்லை. ஆனால், பூனை வகையைச் சேர்ந்த மற்ற உயிரினங்களுக்கு கொரோனா பரவல் உள்ளதால் பூனை வளர்பவர்கள் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். பூனைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் உடனே அதனைத் தனிமைப்படுத்த வேண்டும்.
கால்நடை மருத்துவமனைக்கு அல்லது ஆய்வகங்களுக்கு எடுத்து வந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பூனையுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்களிடமிருந்துதான் செல்ல பிராணிகளுக்கும் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால், தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் செல்ல பிராணிகளுடன் பழகுவதை சில காலம் தள்ளி வைக்க வேண்டும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பண்ணை விலங்குகளுக்கு கொரோனா தொற்றுப் பரவல் இல்லை என்று தெரியவந்துள்ளது. பூனை வகையைச் சேர்ந்த வன விலங்குகளும், செல்லப் பிராணிகளும் மட்டுமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதையும் அறிந்துள்ளனர்.
இந்தியாவில் நான்கு ஆய்வகங்கள் மட்டுமே கொரோனா வைரசை தனியே எடுத்து ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பல முடிவுகள் வெளியே வரலாம்" என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












