கொரோனா: பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை - வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை

தினேஷ் சரவணன்
படக்குறிப்பு, தினேஷ் சரவணன்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா பெருந்தொற்றில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரணாக நின்று கொண்டிருக்கிறார் வேலூரை சேர்ந்த ஐடி ஊழியர் தினேஷ் சரவணன்.

வேலூர் ரங்காபுரம் பால் வியாபாரி செல்வராஜ், அம்சா தம்பதியரின் கடைசி மகன் தினேஷ் சரவணன். 32 வயதான இவர், கணினி பிரிவில் பொறியியல் இளங்கலை முடித்து சென்னையிலுள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வேலூரைப் பசுமையாகும் நோக்கில் தனது சமூக சேவையை தொடங்கிய இவர் படிப்படியாக பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு சூழ்நிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தொடர்ந்து உதவியாக இருக்கிறார்.

குறிப்பாக பொது சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த தமது அண்ணன் சரவணனின் மறைவு இவரது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியுள்ளது. இதையடுத்து அவரின் நினைவாக இந்த பொது சேவையை தினேஷ் தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று முதல் அலை தொடங்கிய கால கட்டத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செய்து, துணையாக இருக்கிறார். வேலை இழந்தவர்களுக்குச் சுயதொழில் தொடங்கிக் கொடுப்பது, ஆதரவற்றோருக்கு உணவளிப்பது, வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தற்போது வரை தொடர்ந்து செய்து வருகிறார்.

பாதி நேரம் ஐடி வேலை - மீதி நேரம் சமூக சேவை - வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக்கதை

"மிகவும் ஏழ்மையிலிருந்து தான் படிப்படியாக எங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் நல்ல நிலைக்கு வந்துள்ளோம்" என்கிறார் தினேஷ் சரவணன்.

"தந்தை ஒருபுறம் பால் வியாபாரம் செய்வார். மற்றொருபுறம் தாய் தயிர் கூடையை தலையில் சுமந்து கொண்டும், ஒரு கையில் நெய் வாளியை ஏந்திக்கொண்டும் நாள்தோறும் நெடுந்தூரம் நடந்தே வீதி வீதியாக வியாபாரம் செய்ய சென்று விடுவார். இதன் மூலம் ஈட்டும் வருமானத்தை கொண்டு எங்களது பெற்றோர் என்னையும், என் உடன்பிறந்த நான்கு பேரையும் வளர்த்தனர்.

ஆரம்பக் காலத்தில் நான் மேல்நிலை வகுப்புகள் படிக்கும் வரை வீட்டில் கழிப்பறை வசதி கூட கிடையாது. குளிப்பதற்கும் வீட்டில் தனி இடம் கிடையாது. குறிப்பாக பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இது மிகவும் சிரமமாக இருக்கும். அதுபோன்ற சூழலில்தான் நாங்கள் வாழ்ந்தோம்," என்கிறார் அவர்.

"என்னுடைய அண்ணன் சரவணன் எங்கள் அனைவருக்கும் மூத்தவர். அவர் சிறிய வயதிலிருந்தே தந்தையுடன் பால் வியாபாரம் முழுவதையும் கவனித்து வந்தார். 8ம் வகுப்புக்குப் பிறகு பள்ளி செல்ல ஆர்வம் இல்லாமல், தந்தையுடன் இருந்து பால் வியாபாரத்தை முழுவதுமாக கவனித்துக்கொண்டு, குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டார்" என்று கூறுகிறார் தினேஷ்.

"குடும்ப சூழல் கடுமையாக இருந்தபோதும், எங்கள் அனைவரையும் அரசுப் பள்ளியில் சேர்க்க விருப்பம் இல்லாமல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். இந்த சூழ்நிலைக்கு இடையில் அவர் ஈட்டும் வருமானத்தில், கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு தொழில் அமைத்து கொடுப்பது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவது என பல்வேறு பொது சேவைகளை செய்து வந்தார். மேலும் தினந்தோறும் முதியோர் இல்லங்களில் இலவசமாக பால் விநியோகம் செய்து வந்தார்.

பாதி நேரம் ஐடி வேலை - மீதி நேரம் சமூக சேவை - வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக்கதை

அக்கா, சின்ன அண்ணன் மற்றும் என்னையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர தனது திருமணத்தை கூட தள்ளி வைத்துக் கொண்டே வந்திருந்தார். ஆனால், நாங்கள் எல்லோரும் படிப்பு நிறைவு செய்து, வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்ட பிறகு, எங்களுக்காக வாழ்க்கை முழுவதும் உழைத்த அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து, அவரை நன்றாக பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தோம். ஆனால், 2014ம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் 35வது வயதில் சரவணன் அண்ணன் உயிரிழந்தார்," என்று தெரிவித்தார்.

அண்ணனின் மறைவுதான் தன்னை முழுவதுமாக மாற்றியதாக கூறும் தினேஷ், அந்த தருணத்தில் இருந்து தனது அண்ணன் செய்து வந்த அனைத்து சமூக பணிகளையும் தான் கையில் எடுத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

"அண்ணன் தொடங்கிய சேவை முடிந்துவிட கூடாது என்பதற்காக கடந்த 2014 முதல் இதை செய்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பாதியை வீட்டில் கொடுத்துவிட்டு, மீதியை சமூகப் பணிகளுக்கு செலவிடுவேன்.

சென்னையில் பணிபுரிந்து வந்த காரணத்தினால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் வந்துவிடுவேன். அந்த இரண்டு நாட்களும் முழுவதுமாக சமூக பணியை செய்வேன். மேலும் வேலூர் வறட்சியான பகுதி என்பதால் இதனை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தினேன். அதன் அடிப்படையில், மரக்கன்று நடுதல், விதைப் பந்து தூவுதல், வீட்டுக்கு வீடு மரக்கன்று வழங்கி அதை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குறுங்காடு அமைப்பது என இயற்கை நலன் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறேன்," என்றார் தினேஷ்.

பாதி நேரம் ஐடி வேலை - மீதி நேரம் சமூக சேவை - வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக்கதை

தொடர்ந்து பேசிய அவர், "இந்த சூழலில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிய அலுவலகத்தில் அறிவுறுத்தினர். இதையடுத்து கடந்த ஆண்டிலிருந்து எனது அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்து வருகிறேன். குறிப்பாக கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பொது மக்கள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இந்த தருணத்தில் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவும் வகையில் டிபன் கடை, காய்கறி கடை, இளநீர் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை தள்ளுவண்டி வசதிகளுடன் ஏற்பாடு செய்து, புதிய சுய தொழிலை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். இது மட்டுமின்றி ஏழை எளிய குடும்பத்திற்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்குவது, ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்குவது என பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் என்னால் முடிந்த உதவிகளை தினந்தோறும் செய்து வருகிறேன்," என்று கூறினார்.

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருமி நாசினி தெளிப்பது, பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது என செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி வேலூரில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தலா ஒரு லட்சத்து பத்து ஆயிரம் மதிப்பில் எல்.இ.டி புரொஜக்டர் மற்றும் ஹோம் தியேட்டர் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இவரது சேவைகளை தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

இவர் செய்யும் அனைத்து சமூக பணிகளையும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 2014 முதல் தமது வருமானத்தில் பாதியை இந்தப் பணிக்கு ஒதுக்குவதாகவும், மேலும் சமூக வலைத்தளப் பதிவுகளைப் பார்த்து பலரும் தானாக முன்வந்து அவர்களால் முடிந்த நிதியுதவி கொடுத்து உதவுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார். அவர்கள் கொடுக்கும் நிதி சமூகப் பணிக்காக எவ்வாறு செலவிடப்படுகிறது என்ற தகவலை வெளிப்படையாக சமூக ஊடகத்தில் பகிர்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

பாதி நேரம் ஐடி வேலை - மீதி நேரம் சமூக சேவை - வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக்கதை

தினமும் காலையில் தந்தையுடன் பால் வியாபாரம் செய்து விட்டு, பின்னர் குறைந்தது 4 மணி நேரம் சமூக பணிக்கு ஒதுக்குவதாக கூறும் தினேஷ். காலை 10.30 மணியிலிருந்து அலுவலகப் பணியை கவனிப்பதாகவும் கூறுகிறார்.

"ஒவ்வொருவரும் என்னை வாழ்த்தும்போது அது மேலும் இந்த சேவையை விடாமல் செய்ய என்னை ஊக்கப்படுத்துகிறது," என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :