இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?

நோயாளி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷ்ருதி மேனன்
    • பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு , பிபிசி

இந்தியாவில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு "கருப்பு பூஞ்சை" தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்.

பொதுவாக இது மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய ஒரு தொற்றாகும். ஆனால் இந்த தொற்று ஏற்பட்டால் 50% இறப்பு ஏற்படும்.

இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருப்பது இந்தியாவில் இந்த தொற்று அதிகரிப்பதற்கான ஒரு காரணம் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த நாடுகளில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது?

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக உலகம் முழுவதும் சுமார் 38 நாடுகளில் கருப்பு பூஞ்சை தொற்று என்று சொல்லக்கூடிய இந்த மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஆண்டு ஒன்றிற்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என பூஞ்சை தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூஞ்சை தொற்றுகள் குறித்த நிபுணர் டேவிட் டென்னிங், பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் வேறு எந்த நாட்டை காட்டிலும் இந்த தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக தெரிவிக்கிறார்.

"கருப்பு பூஞ்சை தொற்று, மோசமாக கையாளப்படும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. அது இந்தியாவில் அதிகம் உள்ளது," என்கிறார் அவர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டவர்களில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 94 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 71சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

பிற நாடுகளிலும் நீரிழிவு நோயுடன் தொடர்பு உண்டா?

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் அதிகம் பேருக்கு நீரிழிவு உள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லை.

வங்கதேசத்தை பொறுத்தவரை மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர் இன்னொருவரின் பரிசோதனை முடிவு வரவுள்ளது.

இருவருக்குமே நீரிழிவு நோய் இருந்ததாக மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் சமீப வாரங்களில் ஐந்து பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் மே 12ஆம் தேதி உயிரிழந்தனர் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசிலில் இதுவரை 29 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எத்தனை பேருக்கு கோவிட் இருந்தது என்பதும் எத்தனை பேருக்கு நீரிழிவு உள்ளது என்றும் தெரியவில்லை.

ரஷ்யாவிலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எண்ணிக்கை தெரியவில்லை.

அமெரிக்காவில் அதிக அளவில் நீரிழிவு கொண்டவர்கள் உள்ளனர். கிட்டதட்ட அந்நாட்டின் மக்கள் தொகையில் 9.3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல அங்குதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

பூஞ்சை

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும் மியூகோர்மைகோசிஸ் அரிதாக ஏற்படுகிறது. அங்கு நீரிழிவு உள்ளவர்களில் வெறும் 3 சதவீதம் பேர்தான் அதுகுறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்கள் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

நீரிழிவு ஏன் காரணமாகிறது?

நீரிழிவு இருப்பதைக் காட்டிலும் அது பற்றி அறியாமல் இருப்பதால்தான் பிரச்னை அதிகமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கையில் நீரிழிவு உள்ளவர்களில் சுமார் 57 சதவீதம் பேருக்கு நீரிழிவு இருப்பது கண்டறியப்படவில்லை எனவும் அந்த எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என்று தெரிவிக்கிறது.

பாகிஸ்தானிலும் அதிக அளவில் நீரிழிவு கண்டறியப்படாமல் உள்ளது.

"இந்தியாவில் பலர் முறையான உடல் நல பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை என்பதால் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு அங்கு அதிகமாக உள்ளது" என க்ருகிஸ்தானில் உள்ள சர்வதேச மருத்துவ பள்ளியின் மருத்துவர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

பலருக்கு பிற நோய் பாதிப்பு ஏற்படும்போதுதான் நீரிழிவு குறித்து கண்டறியப்படுகிறது என்றும், மேலும் பலர் அதற்கான முறையான சிகிச்சை எடுத்து கொள்வதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

சரியான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றால் நீரிழிவு நோய் மேலும் பல தொற்றுகளுக்கு வித்திடும். அதில் பூஞ்சை தொற்றும் ஒன்று.

ஆப்பிரிக்காவில் சுமார் 60 சதவீதம் வரை நீரிழிவு கண்டறியப்படாமல் உள்ளது. ஆனால் அங்கு 3 சதவீதம் அளவிற்கு கருப்பு பூஞ்சை தொற்று பதிவாகியுள்ளது.

"அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம். அதை கண்டறிவதும் எளிதானதல்ல" மருத்துவர் டென்னிங் தெரிவிக்கிறார்.

திசு மாதிரி எடுப்பதில் உள்ள சிரமம், நீரிழிவு நோய் சோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பது ஆகியவை கருப்பு பூஞ்சை தொற்றுகள் கண்டறியப்படாமல் இருப்பதற்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருப்பு பூஞ்சை ஏற்படுவதற்கு வேறு என்ன காரணம்?

ஸ்டீராய்டுகளை அதிகப்படியாக பயன்படுத்துவதும் இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் டெக்சாமெதாசோன் மற்றும் மிதைல்ப்ரெட்னிசொலோன் ஆகிய இரண்டு ஸ்டீராய்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் இந்த மருந்துகளை சிலர் எடுத்துக்கொள்வதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து எடுத்து கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பிரிட்டனில் சுமார் 2,000 கோவிட் நோயாளிகளிடம் செய்த ஆய்வுப்படி, மிதமான அல்லது தீவிர கொரோனா தொற்று ஏற்பட்டவகளுக்கு டெக்சாமெதாசோன் அளித்தபோது இறப்பை கணிசமாகத் தவிர்க்கிறது என்பது தெரியவந்தது.

இருப்பினும் இது மிக குறைந்த தொற்று உள்ளவர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம். இந்த ஆய்வில் மருத்துவர்கள் டெக்சாமெதாசோன் பரிந்துரை செய்தனர். ஆனால் இந்தியாவில் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்கிறவர்ககள் சிலருக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டது.

அதிகப்படியான ஸ்டீராய்டுகள் நல்லது அல்ல என்பது ஆய்வுகளின் மூலம் நன்றாக தெரிகிறது என்கிறார் மருத்துவர் டென்னிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :