மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கோவிட் நோயாளிகளைத் தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சனிக்கிழமை காலை, மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அக்ஷய் நாயர், மூன்று வாரங்களுக்கு முன்பு கோவிட் -19 தொற்றிலிருந்து மீண்ட 25 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யக் காத்திருந்தார்.
அறுவை சிகிச்சை அறையின் உள்ளே, காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் ஒருவர் ஏற்கனவே அந்த நீரிழிவு நோய் பாதிப்புள்ள நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அவர் அவரது மூக்கில் ஒரு குழாயைவிட்டு, அரிதான ஆனால் ஆபத்தான பூஞ்சை தொற்றான மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றிக் கொண்டிருந்தார். இந்தத் தீவிரமான தொற்று மூக்கு, கண், சில நேரங்களில் மூளையைக்கூட பாதிக்கிறது.
அவரின் சிகிச்சை முடிந்ததும், நோயாளியின் கண்ணை அகற்ற டாக்டர் நாயர் மூன்று மணி நேர நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
"அவளுடைய உயிரைக் காப்பாற்ற நான் அவளுடைய கண்ணை அகற்றவேண்டும். அது தான் இந்த நோயின் தன்மை" என்று டாக்டர் நாயர் என்னிடம் கூறினார்.
கோவிட் -19 இன் கொடிய இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கி வரும் இந்நிலையில், கோவிட் -19 நோயிலிருந்து மீண்ட, மீண்டுகொண்டிருக்கும் நோயாளிகளை "கருப்பு பூஞ்சை" என்றும் அழைக்கப்படும் ஒரு அரிய நோய்த்தொற்று பாதிப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இப்போது தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
மியுகோர்மைகோசிஸ் என்பது என்ன?
மியூகோர்மைகோசிஸ் என்பது மிகவும் அரிதான தொற்று. மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. "இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது" என்கிறார் டாக்டர் நாயர்.
இது சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் நீரிழிவு, புற்று, எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கு உயிருக்குக் கூட ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
50% இறப்பு விகிதத்தைக் கொண்ட இது, தீவிர கோவிட் -19 நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையான ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்டீராய்டுகள் கோவிட் -19 நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும் போது ஏற்படக்கூடிய சில சேதங்களைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத கோவிட் -19 நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சி மியூகோர்மைகோசிஸ் என்ற நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
"நீரிழிவு உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது, கொரோனா வைரஸ் அதை அதிகரிக்கிறது. கோவிட் -19 உடன் போராட உதவும் ஸ்டீராய்டுகள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாகச் செயல்படுகின்றன" என்று டாக்டர் நாயர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கொரொனாவின் இரண்டாவது அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான மும்பையில் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர் நாயர் - ஏப்ரல் மாதத்தில் பூஞ்சைத் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 40 நோயாளிகளை ஏற்கனவே தான் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களில் பலர் நீரிழிவு நோயாளிகளாக இருந்ததாகவும் அவர்கள் வீட்டில் இருந்தே கோவிட் -19 ல் இருந்து மீண்டவர்கள் என்றும் கூறுகிறார். அவர்களில் 11 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட வேண்டியிருந்தது.
டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், மும்பை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய ஐந்து நகரங்களில் உள்ள அவரது ஆறு உடன் பணிபுரிபவர்கள் இத்தகைய தொற்று 58 பேருக்குப் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், கோவிட் -19 இலிருந்து மீண்ட 12 முதல் 15 நாட்களுக்குள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறுப்பிடத்தக்கது.
மும்பையில் பரபரப்பாகச் செயல்படும் சியோன் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களில் 24 பூஞ்சைத் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டனர். முன்னர் இது ஓர் ஆண்டுக்கு ஆறு என்ற அளவில் இருந்தது என்று மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் ரேணுகா பிராடூ தெரிவித்துள்ளார்.
அவர்களில் 11 பேர் இதனால் ஒரு கண்ணை இழந்ததாகவும் ஆறு பேர் உயிரையே இழந்ததாகவும் அவர் கூறுகிறார். அவரது நோயாளிகளில் பெரும்பாலோர் நடுத்தர வயது நீரிழிவு நோயாளிகள், அவர்கள் கோவிட் -19 ல் இருந்து மீண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். "இப்போதே இது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேரைப் பாதிப்பதை நாங்கள் காண்கிறோம். பெருந்தொற்றுக் காலத்தில் இது மேலும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது" என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.
தென்னிந்திய நகரமான பெங்களூரில், கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரகுராஜ் ஹெக்டே இதே போன்ற ஒரு நிகழ்வைக் கூறுகிறார். கடந்த இரண்டு வாரங்களில் அவர் 19 பேருக்கு இந்த மியூகோர்மைகோசிஸ் நோய் பாதித்ததைக் கண்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் இளம் நோயாளிகள் என்றும் சிலரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அறுவை சிகிச்சை கூடச் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
கடந்த முதல் அலையின் போது ஏற்பட்டதை காட்டிலும் தற்போது ஏற்படும் பூஞ்சை தொற்று வீரியம் நிறைந்ததாகவும், எண்ணிக்கையில் அதிகம் இருப்பதையும் கண்டு வியப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 10க்கும் குறைவான தொற்றுகளே பதிவான நிலையில் இந்த ஆண்டு நிலைமையே வேறு என்கிறார் டாக்டர் நாயர்.
பெங்களூரின் டாக்டர் ஹெக்டே ஒரு தசாப்தமாக ஆண்டுக்கு ஓரிரண்டுக்கு மேல் இந்தத் தொற்று பதிவாகவில்லை என்று கூறுகிறார்.
பூஞ்சை தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக மூக்கடைப்பு, மற்றும் மூக்கில் ரத்தம் வழிதல், வீக்கம், கண்ணில் வலி, கண் இமை இறக்கம் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, பார்வை மங்குதல் முதல் பார்வை இழப்பு வரை ஏற்படுகிறது. மூக்கைச் சுற்றித் தோலில் கருப்புத் திட்டுகள் தோன்றலாம்.
மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளில் பெரும்பாலோர் பார்வையிழப்பு ஏற்படத் துவங்கிவிட்ட கட்டத்தில் தான் சிகிச்சைக்கு வருவதாகவும் அந்தத் தொற்று மூளைக்குப் பரவாமல் தடுக்க, கண்ணை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் இரு கண்களிலும் பார்வை இழந்துவிடுவதாகவும் சில அரிய சந்தர்ப்பங்களில், நோய் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் தாடை எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடிய ஒரே மருந்து, ஒரு டோஸ் 3,500 ரூபாய் மதிப்பில், எட்டு வாரங்களுக்கு அன்றாடம் நரம்பில் செலுத்த வேண்டிய ஒரு பூஞ்சை எதிர்ப்பு ஊசி மட்டுமே என்று கூறப்படுகிறது.
கோவிட் -19 நோயாளிகளுக்கு - சிகிச்சையின் போதும் சிகிச்சைக்குப் பிறகும் சரியான அளவிலான ஸ்டீராய்டுகள் சரியான காலத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதே பூஞ்சைத் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும் என்று மும்பையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டாக்டர் ராகுல் பாக்ஸி கூறுகிறார்.
கடந்த ஆண்டில் சுமார் 800 நீரிழிவு கோவிட் -19 நோயாளிகளுக்குத் தாம் சிகிச்சையளித்ததாகவும், அவர்களில் எவருக்கும் பூஞ்சைத் தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். "நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிய பிறகும், மருத்துவர்கள் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்" என்று டாக்டர் பாக்ஸி என்னிடம் கூறினார்.
"இது மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றாலும் இது தொடர்ந்து நாடு முழுவதும் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன என்பதைக் கூற முடியவில்லை என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவிக்கிறார். "இது திரிபு வைரஸாகத் தோன்றுகிறது, இரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது. மேலும் இது குறிப்பாக இளவயதுடையவர்களைத் தான் அதிகம் பாதிக்கிறது" என்கிறார் டாக்டர் ஹெக்டே.
அவர் இது வரை பார்த்ததில் மிகவும் இளம் வயது நோயாளி ஒரு 27 வயது இளைஞர். கடந்த மாதம் சிகிச்சையளிக்கப்பட்ட அவர் நீரிழிவு நோயாளி கூட இல்லை. "கோவிட் -19 தொற்று ஏற்பட்ட இரண்டாவது வாரத்தில் நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரது கண்ணை அகற்ற வேண்டியிருந்தது. இது மிகவும் கொடுமையானது" என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள் :
- கொரோனா சிகிச்சைக்கு டிஆர்டிஓ தயாரித்த புதிய மருந்து: இந்திய அரசு ஒப்புதல்
- வெ. இறையன்பு: தமிழகத்தின் புதிய தலைமைசெயலர் - யார் இவர்?
- கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?
- உங்களால்தான் ஹிட்லர் போல ஆகிவிட்டேன் என்றார் கமல்: ஆர். மகேந்திரன்
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












