ஆக்சிஜன் பற்றாக்குறை: நிர்வாகத் தோல்வியா? அரசியல் விளையாட்டா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு கடுமையான நிலைமை உருவாகியுள்ளது. இது நாடு இதற்கு முன் கண்டிராத ஒரு நிலைமை.
கடந்த சில வாரங்களில், தலைநகர் டெல்லியின் பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கெஞ்சிக் கொண்டிருந்தன, மேலும் சில மணிநேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் சப்ளை மட்டுமே இருப்பதாகவும், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என்றும் இந்த மருத்துவமனைகள் சமூக ஊடகங்களில் செய்திகளை பதிவிட்டன.
மறுபுறம், வெற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்ப நோயாளிகளின் குடும்பங்களும் பராமரிப்பாளர்களும் அங்கும் இங்கும் அலைந்து தடுமாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மே 1 ம் தேதி, டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட 12 கோவிட் நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த இறப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று மருத்துவமனை தெரிவித்தது.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு, டெல்லியின் ரோகிணியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட 20 பேர் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் இறந்துபோனதாக சொல்லப்படுகிறது.
ஆக்சிஜன் வழங்குவதில் தில்லி அரசு தாமதம் செய்ததாக உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை குற்றம் சாட்டியது. ஆனால் இந்த இறப்புகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டவை அல்ல, அவர்கள் மருத்துவமனையில் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலைமையில்தான் இருந்தனர் என்று டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியது.
டெல்லியின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான சர் கங்காராம் மருத்துவமனையும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடுமாறியது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், தீவிரமாக நோயுற்றிருந்த 25 பேர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துபோனதாக சொல்லப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த நோயாளிகள் அனைவருக்குமே `உயர் ஓட்ட` ஆக்சிஜனின் தேவை இருந்ததாக மருத்துவமனை ஒப்புக்கொண்டது. ஆனால் இறப்புகளுக்கான காரணம் ஆக்சிஜன் பற்றக்குறை என்று அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை.
மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கோவிட் -19 நோயாளிகள் இறப்பது ஒரு மாபெரும் குற்றம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மே 4 அன்று கடுமையாக தெரிவித்திருந்தது.
இது 'படுகொலைக்கு குறைவானது அல்ல' என்று நீதிமன்றம் கூறியது. திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து வாங்கி அதை விநியோகம் செய்யும் வேலை ஒப்படைக்கப்பட்ட நபர்கள்தான் இதற்குப்பொறுப்பு என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதே நாளில், டெல்லியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதற்கான தனது உத்தரவை 'செயல்படுத்தாதற்கான' காரணம் கேட்கும் நோட்டீசை,டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்தது. "ஒரு நெருப்புக்கோழி போல உங்கள் தலையை நீங்கள் மணலில் மறைத்துக்கொள்ள முடியும். ஆனால் எங்களால் அது முடியாது,"என்றும் நீதிமன்றம் அப்போது தெரிவித்தது.
ஆக்சிஜன் அரசியல்
மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையின் மிக பயங்கரமான வடிவம் டெல்லியில் காணப்பட்டது. ஆனால் இந்தக் கடுமையான பிரச்சனைக்கு தீர்வு காணும் போதும், தில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இழுபறி விளையாட்டு நடந்தது.
தங்களுக்குரிய முழு ஆக்சிஜனும் கிடைப்பதில்லை என்று டெல்லி அரசு மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
அதே நேரம் டெல்லி அரசால் விநியோகச் சங்கிலியை நிர்வகிக்க முடியவில்லை என்றும், ஆக்சிஜன் டேங்கர்களுக்கு கூட ஏற்பாடு செய்யமுடியவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
கேஜ்ரிவால் அரசு ஆக்சிஜன் ஆலை அமைக்க தாமதப்படுத்தியது என்று தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் நெருக்கடி பற்றி மத்திய அரசு குறிப்பிட்டது.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி அரசு, 'இடத்தின் தயார்நிலை சான்றிதழை' வழங்காததால் நான்கு மருத்துவமனைகளில் அமைக்க திட்டமிடப்பட்ட ஆக்சிஜன் மையம் அமைக்கும் பணி தாமதமானது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல், 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' வண்டிக்காக கிரையோஜெனிக் டேங்கர்களையும் டெல்லி அரசு வழங்கவில்லை என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டுகளை 'பொய்' என்று வர்ணிக்கும் டெல்லி அரசு, ஆக்சிஜன் மையம் அமைப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க மத்திய அரசு, இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறது என்று கூறியுள்ளது.
ஏப்ரல் 23 ம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய மாநாட்டில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோதியிடம், தலைநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்யுமாறு கைகூப்பி வேண்டிக்கொண்டார். ஆக்சிஜனை டெல்லிக்குள் வரவிடாமல் அண்டை மாநிலங்கள் நிறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார் .
அவர் அந்த மாநாட்டை நேரலையாக ஒளிபரப்பினார். அந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பைக் காண்பிப்பது நெறிமுறைக்கு எதிரானது என்றும் அது நியாயமற்றது என்றும் பிரதமர் மோதி கெஜ்ரிவாலிடம் சொல்ல வேண்டிவந்தது. இதற்கு பதிலளித்த கேஜ்ரிவால் எதிர்காலத்தில் இது தொடர்பாக கவனமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சில மாநிலங்களில் உள்ள " சட்ட ஒழுங்கற்ற ஆட்சி" காரணமாக ஆக்சிஜன், டெல்லியை வந்தடைய முடிவதில்லை என்று கூறினார்.
ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் பெயரை குறிப்பிட்ட சிசோடியா, இந்த மாநிலங்களில் ஆக்சிஜன் ஆலைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மற்ற மாநிலங்களுக்கான ஆக்சிஜனை தங்கள் மாநிலங்களுக்கு திருப்பிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார். .
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்?
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென பலமடங்கு அதிகரித்ததால் மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் தேவை திடீரென அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
கிழக்கு மாநிலங்களான ஒடிஷா அல்லது ஜார்க்கண்ட் போன்ற இடங்களில்தான் ஆக்சிஜன் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆக்சிஜன் டெல்லியை அடைய சுமார் 1,500 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இதுதான் டெல்லி உட்பட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதற்கு முக்கிய காரணம்,
அகில இந்திய தொழில்துறை எரிவாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (AIIGMA) தலைவராக சாகேத் டிக்கு உள்ளார். கடந்த ஆண்டு, கோவிட் -19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதை அடுத்து மருத்துவ ஆக்சிஜனை போதுமான அளவில் வழங்குவதை உறுதிசெய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட, இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
கோவிட் தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், இந்தியாவில் மருத்துவத் துறையில் சராசரியாக நாளொன்றுக்கு 850 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது என்று சாகேத் டிக்கு, பிபிசியிடம் தெரிவித்தார்.
"2020 ஏப்ரல் முதல், இந்த தேவை அதிகரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள், நாம் ஒரு நாளைக்கு மூவாயிரம் டன்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம்,"என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"2020 அக்டோபருக்குப் பிறகு கோவிட் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் ஆக்சிஜனுக்கான தேவையும் குறையத் தொடங்கியது. பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நாம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 டன் மருத்துவ ஆக்சிஜனைப் பயன்படுத்தி வந்தோம். அதன் பிறகு தேவை திடீரென்று அதிகரித்தது, இன்றைய நிலவரப்படி நாம் 8,000 டன்களுக்கும் அதிகமான ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறோம். ஒரு நாளைக்கு 850 டன்னாக இருந்த தேவை இப்போது 8,000 டன்னாக உயர்ந்துள்ளது," என்று சாகேத் டிக்கு சுட்டிக்காட்டுகிறார்.
உலக நாடுகளைப்போலவே இந்தியாவிலும் தொழில் துறையில் ,குறிப்பாக எஃகு தொழிலில் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில், 85 சதவிகித ஆக்சிஜன் தொழில்களிலும், 15 சதவிகிதம் மருத்துவத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிரையோஜெனிக் கொள்கலன் மூலமாக மட்டுமே, திரவ ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
கிரையோஜெனிக் கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. இந்தியாவில் ஆக்சிஜன் நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம். இன்று புதிய கிரையோஜெனிக் கொள்கலன்களை தயாரிக்க ஆர்டர்களை வழங்கினால், அவை வந்துசேர 5 முதல் 6 மாதங்கள் ஆகும் என்று டிக்கு கூறுகிறார்.
"நமது ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் சரியான இடங்களில் இல்லை என்பது ஒரு சவால். துர்காபூர், பிலாய் மற்றும் ரூர்கேலாவில் அவை இருப்பதால், சுமார் 1500 கிலோமீட்டர் பயணம் செய்தபிறகே ஆக்சிஜன் வடக்கு அல்லது மேற்கு இந்திய மாநிலங்களை அடைய முடியும். ஆக்சிஜன் டேங்கர் பற்றக்குறை காரணமாக திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் டேங்கர்களுக்கு, ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அனுமதியை அரசு வழங்கியுள்ளது."என்று அவர் கூறுகிறார்,
ஏப்ரல் 7 ஆம் தேதி, இந்திய அரசு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தது என்று டிக்கு கூறுகிறார். அதன்படி தொழில்துறை ஆக்சிஜன், மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
"தொழில்துறை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. மருத்துவ ஆக்சிஜன் தொடர்பாக ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முடிவு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டது. அதனால்தான் இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. பெரிய எஃகு ஆலைகளால் இன்று ஆக்சிஜனை வழங்க முடிகிறது, "என்று அவர் கூறுகிறார்.
ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் உற்பத்தி திறன் சில நாட்களுக்கு முன்புவரை நாளொன்றுக்கு 7,200 டன்னாக அதிகரித்துள்ளது.
இந்தத்திறன் மேலும் கூட்டப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு 8,500 முதல் 9,000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது என்று டிக்கு கூறுகிறார். ஆனால் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஆக்சிஜனுக்கான தேவை இதை விட அதிகமாக உள்ளது.
"மத்திய, மாநில அரசுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ஒன்றுமே செய்யவில்லை என்றே சொல்லலாம்," என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் தொழில்துறை, மருத்துவ வாயுக்களின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று, 'ஐனாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட்.' தற்போதைய ஆக்சிஜன் நெருக்கடி குறித்து இந்த நிறுவனத்தின் இயக்குனர் சித்தார்த் ஜெயினுடன் , பிபிசி பேசியது.

பட மூலாதாரம், Getty Images
"மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசேர்க்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் இவ்வளவு தூரத்திலிருந்து ஆக்சிஜனை விரைவாக கொண்டுசேர்க்க அதிக எண்ணிக்கையில் பெரிய கிரையோஜெனிக் டேங்கர்கள் தேவை," என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்காக ரயில்வே அமைச்சகம் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸைத் தொடங்கியுள்ளது. விமானப்படையும் காலியாக உள்ள கொள்கலன்களை விமானம் மூலம் கொண்டு வருகிறது. ஆனால் பிரச்சனை போக்குவரத்து மட்டுமே அல்ல.
"நகரத்திற்கு கொள்கலன்கள் வரும்போது,அவை சிறிய லாரிகளுக்கு மாற்றப்பட வேண்டும். இந்த லாரிகள் இறுதியில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை வழங்குகின்றன. மருத்துவமனைகள் சில நேரங்களில் மிகவும் நெரிசலான பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகவே பெரிய லாரிகளால் மருத்துவமனைகளுக்குள் நுழைய முடிவதில்லை," என்று ஜெயின் கூறுகிறார்.
"இது போன்ற கூடுதல் சுமையை சமாளிக்க மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வடிவமைக்கப்படவில்லை" என்றும் ஜெயின் கூறுகிறார்.
"தேவை எங்கு பத்து மடங்கு அதிகரித்துள்ளதோ அங்கு ஆக்சிஜனைப் பெறுவதற்கான உள்கட்டமைப்பு முன்பு போலவே உள்ளது. ஆக்சிஜனுக்காக மருத்துவமனை அமைப்பின் மீது அதிகரித்த அழுத்தத்தை நீங்கள் கற்பனை செய்துபார்க்கலாம். ஆக்சிஜனை அனுப்புவது மட்டுமே பிரச்சனை இல்லை, அதைப் பெறுவதும் ஒரு பிரச்சனையாக உள்ளது," என்கிறார் அவர்.
கோவிட் பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு ஐனோக்ஸ், ஒரு நாளைக்கு சுமார் 400 டன் மருத்துவ ஆக்சிஜனை சப்ளை செய்து கொண்டிருந்தது. இப்போது ஒரு நாளைக்கு சுமார் 2,700 டன் சப்ளை செய்கிறது என்று ஜெயின் சொல்கிறார்.
"நாங்கள் எங்கள் ஆலைகளில் உற்பத்தியை சுமார் 30 முதல் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளோம். இது ஒரு மிகப்பெரிய பொறியியல் போராட்டமாக இருந்து வருகிறது, அவ்வாறு செய்ய நாங்கள் கணிசமான அளவு முதலீடு செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார்.
கோவிட் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு நாட்டில் மருத்துவ ஆக்சிஜனுக்கான மொத்த தேவை, ஒரு நாளைக்கு 700 டன் என்று ஜெயின் கூறுகிறார்.
"இன்று இந்தத் தேவை ஒரு நாளைக்கு 7,000 முதல் 7,500 டன் ஆகும். அதாவது இது 10 மடங்கு அதிகரித்துள்ளது. வேறு எந்த நாடும் இத்தகைய நுகர்வு அல்லது தேவை அதிகரிப்பை எதிர்கொண்டதாக கருதவில்லை,"என்று அவர் தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில், டெல்லியில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை இல்லை என்பதும், டெல்லி எப்போதுமே ஆக்சிஜனுக்காக தன் அண்டை மாநிலங்களை நம்பியிருப்பதும்தான் டெல்லியில் ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட ஒரு முக்கிய காரணம் என்று டிக்கு கூறுகிறார்.
"தொற்றுக்கு முன்பு, டெல்லி ஒரு நாளைக்கு சுமார் 100-120 டன் ஆக்சிஜனைப் பயன்படுத்தியது. டெல்லிக்கு ஆக்சிஜன் சப்ளை, ராஜஸ்தானின் பிவாடி, உத்தரபிரதேசத்தின் நொய்டா, உத்ராகண்டின் டேராடூன் மற்றும் ஹரியானாவில் இருந்து வருகிறது. ஆனால் சில மாவட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு அனுமதி மறுக்கின்றனர். அவர்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களை நிறுத்துகிறார்கள். மத்திய உள்துறை செயலரின் உத்தரவை மாவட்ட அதிகாரிகள் மதிக்காதபோது அமைப்பு முறை சரிந்துவிடும்," என்று அவர் தெரிவிக்கிறார்.
அவரைப் பொருத்தவரை, அண்டை மாநிலமான டெல்லியின் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளதால், இப்போது டெல்லி ஆக்சிஜனை பெற வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
" லாரிகளை அனுப்புவதன் மூலம் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப், ரூர்கேலாவிலிருந்து ஆக்சிஜனை பெறுகிறது. உத்தரபிரதேசம் பொகாரோவிலிருந்து எடுத்துச் செல்கிறது. மற்ற மாநிலங்கள் இப்படி செய்யும் போது, டெல்லியும் செல்ல வேண்டியிருக்கும்,"என்று அவர் கூறுகிறார்.
வீணாகும் ஆக்சிஜன்
அறிவார்ந்த முறையில் ஆக்சிஜனைப்பயன்படுத்த நாடு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை டிக்கு மற்றும் ஜெயின் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.
"ஆக்சிஜன் வீணாகிறதா என்பதை மருத்துவர்கள் கண்காணிக்கவேண்டும். ஆக்சிஜன் ஒரு நிறமற்ற, மணமற்ற வாயு. இது உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. உங்கள் முகத்திலிருந்து முகமூடியை அகற்றிவிட்டு கழிவறைக்கு நீங்கள் சென்றால், ஆக்சிஜன் முகமூடி வழியாக காற்றில் கசிந்து கொண்டே இருக்கிறது. ஒரு நோயாளி முகமூடியை அகற்றும்போது ஆக்சிஜன் வழங்கல் அணைக்கப்படுவதைக் காண உங்களுக்கு ஆக்சிஜன் மானிட்டர் தேவைப்படும். "என்று ஜெயின் தெரிவிக்கிறார்.
இதற்கு முன்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அதிகம் பயன்படுத்தப்படாத பகுதிகளில் ஆக்சிஜன் வீணாக்கல் அதிகரித்து வருவதாகவும் ஜெயின் கூறுகிறார். "ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதில் அனைவருக்கும் அனுபவம் இல்லை. வால்வை எப்போது மூடுவது மற்றும் திறப்பது என்பதை அறிவது கடினம்" என்று அவர் கூறுகிறார்.
"ஆக்சிஜனை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஓட்டம் எந்த விகிதத்தில் கொடுக்கப்படுகிறது என்பது ஒரு கேள்வி. சில மாநிலங்களில், ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் ஓட்டத்திற்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது மற்றும் அதிக அளவு ஆக்சிஜன் நுகரப்படுகிறது. நோயாளிகளுக்கு எந்த ஓட்டத்தில் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு சொல்ல வேண்டும். "என்று டிக்கு கூறுகிறார்.
பல மாநிலங்களில் தற்போதுள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையும் ஆக்சிஜன் நுகர்வும் பொருந்தவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.
"மகாராஷ்டிராவில் ஏழு லட்சம் பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், இந்த மாநிலம் தினமும் 1,500 டன் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. குஜராத்தில், ஒரு லட்சம் பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இங்கு தினமும் சுமார் 1,500 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு பக்கம் கேரளா உள்ளது . அங்கு 3.5 லட்சம் பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு 300 டன் ஆக்சிஜன் கூட பயன்படுத்தப்படுவதில்லை.கேரளா சிறந்த ஆக்சிஜன் நிர்வகிப்பு மாநிலமாக இருப்பதால், மற்ற மாநிலங்கள் அதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். "என்று அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடி மீண்டும் வராமல் இருக்க என்ன செய்வது?
மருத்துவ ஆக்சிஜனின் பயன்பாட்டை பகுப்பாய்வு செய்வதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு காலத்தில் இருந்த சிறிய காற்று பிரிப்பு அலகுகளை அரசு புதுப்பிக்க வேண்டும். மின்சார கட்டணம் அதிகரித்த காரணத்தால், பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலைமையில் அவை செயல்பாட்டை நிறுத்திவிட்டன என்று சாகேத் டிக்கு கூறுகிறார்.
"இந்த ஆக்சிஜன் நெருக்கடியின் போது,இந்த காற்று பிரிக்கும் யூனிட்டுகளின் தேவை உணரப்பட்டது. ஏனெனில் நாட்டில் 35 முதல் 40 சதவிகிதம் ஆக்சிஜன் இன்னும் சிலிண்டர்கள் மூலமே வழங்கப்படுகிறது. இந்த யூனிட்டுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். புதிய திட்டங்கள் அல்லது மின்சார கட்டணங்களில் தள்ளுபடி வழங்கல் மூலம் இவற்றுக்கு உதவி அளிக்கப்படவேண்டும். பல மாநிலங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் இல்லை. அந்த மாநிலங்களில், இதுபோன்ற காற்று பிரிக்கும் அலகுகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்," என்கிறார் அவர்.
இந்த நெருக்கடியை சமாளிக்க இந்திய விமானப்படை, காலி கிரையோஜெனிக் கொள்கலன்களை விமானங்கள் மூலம் எஃகு ஆலைகளுக்கு கொண்டு செல்கிறது. இவை நிரப்பப்பட்டு, இந்திய ரயில்வேயின் "ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்" ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
சமீபத்திய தகவல்களின்படி, மே 6 ஆம் தேதிக்குள், 40 "ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்" ரயில்கள், 161 டேங்கர்கள் மூலம் சுமார் 2,511 டன் ஆக்சிஜனை 161 மாநிலங்களுக்கு கொண்டு சென்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்த சிறப்பு ரயில்கள், டெல்லிக்கு 1,053 டன், உத்தரபிரதேசத்திற்கு 689 டன், ஹரியானாவுக்கு 259 டன், மத்திய பிரதேசத்திற்கு 190 டன் மற்றும் தெலுங்கானாவுக்கு 123 டன் ஆக்சிஜனை கொண்டுசேர்த்தன. சமீபத்திய தகவல்களின்படி, 400 டன் ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் 22 டேங்கர்கள், விரைவில் மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு வந்து சேரும்.
இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியதிலிருந்து, உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தொடர்பான கருவிகளைப் பெறும் பணிகள் தொடங்கின.
வெளிநாட்டிலிருந்து உதவி
இந்திய விமானப்படை இதுவரை 54 காலி கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களையும், 900 வெற்று ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்துள்ளது.
இதுவரை 21 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் சிங்கப்பூரிலிருந்தும், 18 துபாயிலிருந்தும், 11 பாங்காக்கிலிருந்தும், 4 பிராங்ஃபர்ட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல் இந்திய விமானப்படை இதுவரை பிரிட்டனில் இருந்து 900 வெற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளது.
இந்திய விமானப்படை 180 காலி கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கொள்கலன்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் ஆலை உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவமனை உபகரணங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசேர்த்து வருகிறது.
மே 5 வரை, இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் இந்தியாவுக்கு வெளியே நான்கு வெவ்வேறு இடங்களிலிருந்து ஆக்சிஜன் கொள்கலன்களை கொண்டு வந்தன. ஒரு விமானம் சிங்கப்பூரிலிருந்து 350 ஆக்சிஜன் சிலிண்டர்களை, ஹிண்டன் ஏர் பேஸுக்கு கொண்டுவருகிறது. மற்றொரு விமானம் மூன்று கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களை பாங்காக்கில் இருந்து, பனாகட் விமான தளத்திற்கு கொண்டு வந்தது.
இதுதவிர ஒரு விமானம் 4 காலி கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களை பாங்காக்கிலிருந்து பனாகட் விமான தளத்திற்கு கொண்டுவரவும், மற்றொரு விமானம் பெல்ஜியத்தின் ஆஸ்டெண்டில் இருந்து 4 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்களை, பனாகட் விமான தளத்திற்கு கொண்டுவரவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க தொழில்துறையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற ஆக்சிஜன் விநியோகச் சங்கிலியின் ஒரு பணிக்குழுவை இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) அமைத்துள்ளது. இந்த பணிக்குழு ஆக்சிஜனின் போக்குவரத்து, சிலிண்டர்கள் கிடைக்கச்செய்வது மற்றும் கொள்கை அளவில் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் செயல்படுகிறது.
டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஜே.எஸ்.டபிள்யூ குரூப், அதானி, ஐ.டி.சி மற்றும் ஜிண்டல் ஸ்டீல் & பவர் உள்ளிட்ட பல தனியார் தொழில்துறை நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்சிஜன், கிரையோஜெனிக் கொள்கலன்கள், போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் போன்றவற்றை வழங்க முன்வந்துள்ளன.
பிற செய்திகள் :
- வெ. இறையன்பு: தமிழகத்தின் புதிய தலைமைசெயலர் - யார் இவர்?
- கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?
- உங்களால்தான் ஹிட்லர் போல ஆகிவிட்டேன் என்றார் கமல்: ஆர். மகேந்திரன்
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












