வெ. இறையன்பு: தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளர் - யார் இவர்?

பட மூலாதாரம், DIPR
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ. இறையன்பு திறமையான அதிகாரியாக மட்டுமின்றி, பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலராக பணிபுரிந்த இறையன்பு, தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிரதான செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தை சேர்ந்த இவர், கடுமையான உழைப்பு, நேர்த்தியான நிர்வாகம் மற்றும் பல்துறை திறமைகளுக்கு சொந்தக்காரர். சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை அடிப்படையிலான பல புத்தகங்களை எழுதியுள்ளார். விவசாயம், உளவியல், இலக்கியம் என பலதுறைகளில் பட்டம் பெற்றவர். சுய முன்னேற்ற புத்தகங்கள் மற்றும் உரைகள் போன்றவற்றால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களை ஊக்குவித்தவர்.
தலைமை செயலாளராக பணியமர்த்தப்பட்ட பின்னர், தான் எழுதிய 'வையத்தலைமை கொள்' என்ற புத்தகத்தை வழங்கி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

பட மூலாதாரம், ARUNANKAPILAN / WIKIMEDIA
இறையன்பு முதலில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றினார். அங்கு பணிபுரிந்த காலத்தில், மணல் கடத்தலை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.அதேபோல வெள்ளநிவாரண பணிகளில் திறமையாக செயல்பட்டு மக்களை ஈர்த்தார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, நெல் கடத்தலை தடுத்தார்.
அடுத்ததாக கடலூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, கடலூர் சிறைகளில் சிறைவாசிகளுக்கு தொழில்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை அளிப்பதை உறுதிசெய்தார். மரம் நடுவதை அதிகமாக ஊக்குவித்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் என பொது இடங்களில் மரங்களை நடவேண்டும் என்றஆர்வத்தை தூண்டினார். நரிக்குறவர்களின் வாழ்க்கை மேம்பட வீடுகள் கட்டித்தரும் திட்டம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக செயல்பட்ட நேரத்தில் நெசவாளர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளராக மாறாமல் கல்வியை தொடர்வதை கண்காணித்தார். பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்காணித்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி மீண்டும் குழந்தைகள் பள்ளிகளில் சேரவேண்டும் என்பதில் வெற்றி பெற்றார்.
மாவட்ட ஆட்சியராகவும் பிற துறைகளில் பணிபுரிந்த சமயங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தடையின்றி கற்கவேண்டியதன் அவசியத்தை தனது பேச்சாலும், புத்தகங்களிலும் உணர்த்தி வந்தார். இந்திய ஆட்சி பணிக்காக, தான் படித்த காலத்தில் தேவையான புத்தகங்களோ, அனுபவத்தை சொல்லித்தர யாரும் இல்லை என்பதால், எப்போதும் மாணவர்களுக்காக தொலைக்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர். தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.
1995ல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் தனி அலுவலராக செயல்பட்டு, அந்த மாநாட்டின் அழைப்பிதழ் தொடங்கி, நிகழ்ச்சிகளை செவ்வெனே நடத்தி மாநாட்டிற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சொற்பொழிவாளர்கள், தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சுற்றுலாத்துறை வனத்துறை,சுற்றுசூழல்துறை, புள்ளியியல் துறை என பலதுறைகளில் பணியாற்றிவர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவராக செயல்பட்டுவந்தார்.
இயற்கை வளத்தை காப்பது, விவசாயிகள் நலன், மாணவர்கள் நலன் மற்றும் எல்லா துறைகளிலும் புதுமையை புகுத்துவது என பயணப்பட்ட இவர், எந்த துறைக்கு மாற்றப்பட்டாலும், தனக்கென வேலைகளை உருவாக்கிக்கொள்பவர்.
இறையன்புவின் சகோதரர் திருப்புகழ் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து அவர் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
- உங்களால்தான் ஹிட்லர் போல ஆகிவிட்டேன் என்றார் கமல்: ஆர். மகேந்திரன்
- காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 25 பேர் பலி
- கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?
- கொரோனா சிகிச்சைக்கு டிஆர்டிஓ தயாரித்த புதிய மருந்து: இந்திய அரசு ஒப்புதல்
- எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மோதல் - என்ன நடக்கிறது அதிமுகவில்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












