இறையன்பு ஐஏஎஸ் தலைமைச் செயலாளர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் செயலாளர்களாக 4 மூத்த அதிகாரிகள்

இறையன்பு ஐஏஎஸ்

பட மூலாதாரம், Arunankapilan / wikimedia

படக்குறிப்பு, இறையன்பு

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது.

தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுவந்த வெ. இறையன்பு தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இறையன்பு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதைக் கடந்து, புகழ் பெற்ற எழுத்தாளர், ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பேச்சாளர். அவரது தன்னம்பிக்கை நூல்கள், ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக விரும்புவோருக்கான வழிகாட்டி நூல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றவை. நூற்றுக்கு மேற்பட்ட இத்தகைய நூல்களை எழுதியுள்ளார்.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தாம் எழுதிய 'வையத் தலைமை கொள்' என்ற நூலை பரிசளித்தார்.

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தாம் எழுதிய 'வையத் தலைமை கொள்' என்ற நூலை பரிசளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், முதல்வர் செயலகத்தின் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.

நிர்வாகத் திறனுக்காக பல நேரங்களில் அறியப்பட்ட அவர், நீண்ட காலம் முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் வைக்கப்பட்டிருந்தார்.

முதல்வரின் செயலாளர்களாக...

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு செயலாளர்களாக கல்வித் துறை செயலாளராக இருந்து பெயர் பெற்ற உதயச் சந்திரன் உள்பட நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Udaya Chandran
படக்குறிப்பு, உதயச் சந்திரன் (நடுவில்) - கோப்புப் படம்

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதுமே, அமைச்சர்களாக யார் யார் நியமிக்கப்படப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அதைத் தொடர்ந்து முக்கியத் துறைகளுக்கான அதிகாரிகளைப் பற்றி கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் நியமனம் தொடர்பான முதல் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலின்படி முதல்வருக்கு 4 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அரசு உத்தரவில் பல்வேறு துறைகளில் இருந்து 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படும் தகவல் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி, தற்போது தொல்லியல்துறை ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் உமாநாத், முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் மூன்றாவது செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார்.

முதல்வரின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். அதன் பிறகு தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார். கீழடி அகழாய்வுப் பணிகளில் இவரது கணிசமான பங்களிப்பு உண்டு. இதேபோல மற்ற மூவருமே அவரவர் துறைகளில் கவனம் பெற்றவர்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :