மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் எங்கு நடைபெறுகிறது?

பட மூலாதாரம், dmk
(தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய அரசியல் மற்றும் பிற செய்திகளின் தொகுப்பு.)
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தலைமை செயலகத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.
முதல் கூட்டத்தொடர் குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ள தலைமை செயலக செயலர் சீனிவாசன், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்வதற்காக, தேர்தல் சான்றிதழை கொண்டுவரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையை விடுத்து, ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் சார்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாத சூழலில் சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
மே 10ம்தேதி அதிமுகவினர் இரண்டாவது முறையாக கலந்துபேசி முடிவு செய்யப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், தமிழகத்தில் திங்கள் முதல் ஊரடங்கு அமலாகுவதால் அந்த கூட்டம் நடைபெறுமா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
'அண்ணா நூற்றாண்டு நூலக கால்மிதியின் தரமே புரிய வைக்கிறது' - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi FB page
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வாயிலில் உள்ள கால்மிதியின் தரமே கடந்த பத்து ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் இந்த நூலகம் எப்படி நிர்வகிக்கப்பட்டது என்று புரியவைத்துவிட்டது என்று கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நூலகம், அதன் திறப்புவிழாவின்போது இருந்த நிலைக்கு விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.
ஒன்பது மாடிகள் கொண்ட இந்த நூலகம் கடந்த திமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. சுமார் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இங்குள்ளன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் மேற்கொள்ளப்படும் முதல் ஆய்வு அண்ணா நூலகத்தில் தொடங்கியுள்ளது பெருமை தருவதாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த நூலகத்தால் எண்ணற்ற மாணவர்கள் பயன்பெற்றுள்ளதை கண்ணாரக் காணமுடிகிறது என்றார்.
''இந்த நூலகத்தில் வந்து படித்து பல மாணவர்கள் இன்று அரசுப்பணியில் இருக்கிறார்கள். மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு இங்குவந்து படித்து வெற்றி பெற்றதும் நூலக அதிகாரிகளிடம் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இந்த நூலகம் எத்தகைய சமூகமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எளிதாக புரிந்துகொள்ளமுடியும். இந்த நூலகம் திறப்புவிழாவின்போது எவ்வாறு இருந்ததோ அதே போல விரைவில் மிளிரும்,'' என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அண்ணா நூலகத்தில் அடிப்படையான குடிநீர் மற்றும் நூலக மேம்பாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், ''தற்போது குறை, குற்றங்களை அடுக்குவதைவிட, இந்த நூலகத்தை மேலும் பயனுள்ள இடமாக எப்படி மாற்றுவது என்ற செயலில் ஈடுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,''என்றார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் முழுகட்டணம் வசூலிக்கப்படுவதை பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்விஎழுப்பினர்.
''தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. முழு கட்டணத்தை எப்படி பெற்றோர்கள் கட்டுவார்கள் என்று யோசிக்கவேண்டியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட ஒரு வழிகாட்டு குழுவை உருவாக்கி இந்த பிரச்னைக்கு தீர்வு காண்போம்,''என்றார் அமைச்சர்.
5 மாவட்டங்களில் ரெம்டெசிவர், 12,500 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பட மூலாதாரம், மா.சுப்ரமணியன்/twitter
தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்து கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் ரெம்டெசிவரை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதால், பல மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் வந்து அந்த மருந்தை வாங்கிசெல்லும் நிலை உள்ளது.
இதனை கருத்தில்கொண்டு, ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தின் பிற ஐந்து மாவட்டங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
12,500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு
ஸ்டான்லி மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர், தமிழ்நாட்டில் 12,500 ஆக்சிஜன் உதவி பொருத்தப்பட்ட படுக்கைகள் தயாராகிகொண்டிருப்பதாகவும், மத்திய அரசிடம் தற்போது அளிக்கப்படும் ஆக்சிஜன் அளவை விட தேவை அதிகரித்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறினார்.

''உயிரிழப்புகளை பற்றி மட்டுமே நாம் பேசுவதைவிட, உயிரை காக்கும் நடவடிக்கைகளை நாம் பேசலாம். ஸ்டான்லி மருத்துவமனையின் சூப்பர் ஷ்பெஷாலிட்டி கட்டடம், கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றம் செய்யப்படுகிறது .
இந்த மருத்துவமனையில் 500 புதிய படுக்கைகள் உடனடியாக உருவாக்கப்படும். முன்கள பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் அவர்கள் நேரடியாக என்னையோ அல்லது மருத்துவத் துறை செயலாளரையோ நேரடியாக தொடர்பு கொள்ளலாம்,''என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
தடுப்பூசிப் பணிகள் தொடரும்
மேலும்,தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- தலைமைச் செயலாளர் இறையன்பு: முதல்வரின் செயலாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
- கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்களிக்க அமெரிக்கா ஆதரவு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












