கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
உத்தரபிரதேசத்தின் லக்னெளவில் உள்ள பட்லர் கிராஸ்ரோட் அருகே அஞ்சலி யாதவின் எஸ்.எஸ்.பி மருந்து கடையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் விற்கப்படுகின்றன அல்லது வாடகைக்கு கொடுக்கப்படுகின்றன.
ஆனால் மாதம் 15 ஆயிரம் ருபாய் வாடகையில் கொடுக்கப்பட்டுள்ள 15 முதல் 20 கருவிகளை, கடந்த பல வாரங்களாக மக்கள் திருப்பித்தருவதற்கான பேச்சே இல்லை.
திருப்பித்தருவதற்கு பதிலாக, கான்ஸென்ட்ரேட்டர்களின் புக்கிங்கை மக்கள் நீட்டித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளுக்கு வெளியேயும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்துபோகும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் மக்களின் மனதில் தங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அதிகமாகவே உள்ளது.
தற்போது அம்மாநிலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தேவை நிலவுகிறது. இதன் காரணமாக கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் உயிர்களைக் காப்பற்றும் பொருட்டு, ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்தும் ஒரு மாற்று வழியாக பலர் பார்க்கிறார்கள்.

பட மூலாதாரம், REUTERS / RONEN ZVULUN
ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு மாற்றா?
ஆக்ஸிஜன் செறிவூட்டி என்பது காற்றிலிருந்து ஆக்ஸிஜனை சேகரிக்கும் ஒரு இயந்திரமாகும். இந்த ஆக்ஸிஜன் மூக்கு வழியாக ஒரு குழாய் மூலம் உடலுக்குள் செல்கிறது.
இதிலிருந்து வெளியாகும் ஆக்ஸிஜன் 90 முதல் 95 சதவிகிதம் வரை சுத்தமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காக மக்கள் அலைந்து திரிந்து, தெருக்களில் இறந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உயிரைக் காப்பாற்றுவதில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோதி ஒரு லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டல் உபகரணங்களை வாங்குவது பற்றி ட்வீட் செய்துள்ளார். இந்தியாவுக்கு உதவ ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அனுப்பப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களும் மக்களும் தேவைப்படுபவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க முயற்சிக்கின்றனர்.
உயிரைக்காப்பாற்றுவதில் ஆக்ஸிஜன் செறிவூட்டியின் பங்கு
"ஒருவரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே போகிறது என்றால், நீங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை ஆக்ஸிஜன் செறிவூட்டியை தற்காலிகமாக பயன்படுத்தலாம்," என்று அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் ராஜேஷ் சாவ்லா கூறுகிறார்.
ஆக்ஸிஜன் செறிவூட்டி அதிக நோயுற்ற நோயாளிகளுக்கோ அல்லது ஐ.சி.யு நோயாளிகளுக்கோ பயன்படாது. ஏனெனில் அந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, இந்த உபகரணம் உற்பத்தி செய்யமுடியும் அளவைக்காட்டிலும் பலமடங்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் மக்களின் நுரையீரலைத் தாக்கி, ஆக்ஸிஜன் அளவு குறையும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா காலத்தில் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகமாகிவிட்டது.
நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய் என்பது ஒருவகையான நுரையீரல் நோயாகும். அதில் ஆக்ஸிஜன் நுரையீரலை அடைவதற்கான வழி தடுக்கப்பட்டு நோயாளிக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஆக்ஸிஜன் செறிவூட்டியின் உதவியுடன் பலர் தங்கள் சிகிச்சையை வீட்டிலேயே செய்துகொள்ளலாம் என்று டாக்டர் சாவ்லா கூறுகிறார்.
நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு 90-ஐ விடக் குறைவாக இருந்தால், ஆக்ஸிஜன் செறிவூட்டியைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆக்ஸிஜன் செறிவூட்டியால் நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை 88 அல்லது 89 ஆக பராமரிக்க முடியாவிட்டால், அதை பயனுள்ளதாக கருத முடியாது என்றும் டாக்டர் சாவ்லா தெரிவித்தார். .
கையிருப்பு இல்லை

பட மூலாதாரம், Getty Images
உங்களிடம் பணம் இருந்தால் அல்லது அது சந்தையில் எளிதாகக் கிடைத்தால், மின்சாரத்தால் இயங்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டியைப் பற்றி சிந்தியுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு ஐந்து லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஒரு செறிவூட்டியின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும் மணிக்கு 10 லிட்டர் ஆக்ஸிஜனை தயாரிக்கும் உபகரணத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றும் டாக்டர் சாவ்லா சுட்டிக்காட்டுகிறார்.
நாம் இதற்கான பணத்திற்கு எப்படியாவது ஏற்பாடு செய்துவிட்டாலும்கூட, இந்த நேரத்தில் இந்த இயந்திரம் ஆன்லைன் சந்தை அல்லது ஆஃப்லைன் சந்தை என எந்த இடத்திலும் கையிருப்பில் இல்லை.
ஒரு மணி நேரத்திற்கு ஏழு லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் செறிவு இயந்திரம் , ஒரு ஆன்லைன் போர்ட்டலில் ரூ .76,000 க்கு கிடைத்தது. ஆனால் அது கையில் கிடைக்க ஜூலை மாதம்வரை காத்திருக்கவேண்டும்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க காத்திருக்கும் குறைந்தது 500 பேரின் பெயர்கள் மற்றும் அவர்களது எண்களைக்கொண்ட ஒரு பட்டியல், லக்னெளவைச் சேர்ந்த அஞ்சலி யாதவிடம் உள்ளது.
அவற்றின் ஸ்டாக் அமெரிக்காவிலிருந்து வரவேண்டும். அடுத்த தொகுதி மே மாதத்தில் வரும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்டருக்கு ஏற்ப இயந்திரங்கள் கிடைக்குமா அல்லது குறைவான எண்ணிக்கையில் வருமா என்பது அவருக்குத் தெரியாது.
"நான் 8-9 ஆண்டுகளாக இந்தவேலை செய்கிறேன். இதுபோன்ற ஒரு காலத்தையும், இதுபோன்ற சூழ்நிலையையும் , இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












