கமல் பற்றி ஆர்.மகேந்திரன் பேட்டி: "உங்களால்தான் ஹிட்லர் போல ஆகிவிட்டேன்" என்றார்

மக்கள் நீதி மய்யம்

பட மூலாதாரம், மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி தோல்வியடைந்த நிலையில், கட்சியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டு அக்கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்திலும் கமல் ஹாசனிடமும் என்ன பிரச்சனை என பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் அவர். அதிலிருந்து.

கே. 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தீர்கள். மூன்றாண்டுகளில் வெளியேறியிருக்கிறீர்கள். நீங்கள் மருத்துவராக இருந்தும் அரசியலை நோக்கி எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?

ப. 2017க்கு முன்பாக கமல்ஹாசன் எனக்கு அறிமுகம் கிடையாது. அந்தத் தருணத்தில்தான் ஒரு பொதுவான நண்பர் மூலமாக எனக்கு அவர் அறிமுகமானார். பிறகு, அவரை வேறு சில பொதுவான நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தேன். அவர் அரசியல் குறித்து பேசியது அந்தத் தருணத்தில் மிகவும் ஆர்வமூட்டியது. இருந்தாலும் வெளியில் இருந்தே ஆதரிப்போம் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்கள் கமல் என்னை வலியுறுத்தினார். கட்சிக்கு உள்ளேயிருந்து பணியாற்றினால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றார்.

2018 நவம்பரில் கட்சியில் சேர்ந்தேன். எனக்கு அமைப்புகளைக் கட்டியெழுப்பவது மிகப் பிடிக்கும். ஆகவே கட்சி அமைப்பை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்படித்தான் என் பயணம் துவங்கியது.

கே. எந்தக் கட்டத்தில் கமல்ஹாசனுடன் முரண்பாடு ஏற்பட்டது?

ப. மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய கட்டமைப்பு, பெரிய கட்சிகளின் கட்டமைப்பில் பாதிகூட இருக்காது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சி அமைப்பு இதைவிடச் சிறியதாக இருந்தது. ஆனாலும், அந்த அமைப்பை வைத்துத் தேர்தலைச் சந்தித்தோம். அந்தத் தேர்தலுக்குப் பிறகு, அதாவது 2019 மே மாதத்திற்குப் பிறகு கட்சியை இன்னும் வலுவாகக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முடிவுசெய்தோம்.

2020ஆம் ஆண்டு துவங்கியபோது, சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய நேரம் நெருங்கியது. கட்சிக்கு வியூகம் வகுப்பதற்காக ஐ-பேக்குடன் பேசினோம். ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு ஆறு மாதத்தில் அந்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது.

இதற்குப் பிறகு, தேர்தல் வியூகத்தை வகுக்க நாமே ஒரு அமைப்பை உருவாக்கலாம் என அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு அரசியல் குறித்து எதுவுமே தெரியவில்லை. சிறிய அளவிலான புரிதல்கூட இல்லை என்பது மூன்று மாதத்திலேயே தெரிந்துவிட்டது.

அந்த வியூகம் வகுக்கும் குழுவைப் பற்றி கமலிடம் பேச ஆரம்பித்தேன். அவர்கள் கமலுக்கு மோசமான அறிவுரைகளை கொடுக்கிறார்கள்; அதை இவர் ஏற்று நடக்கிறார் என்பதுதான் அந்த நேரத்தில் என் புரிதலாக இருந்தது. அந்த அமைப்பு குறித்து எனது கருத்து என்னவாக இருந்தாலும், கட்சியினரிடம் பேசும்போது விட்டுக்கொடுத்து பேச மாட்டேன். ஆனால், ஒரு கட்டத்தில் கட்சி ஸ்தம்பித்துப் போயிருப்பது எனக்குப் புரிந்தது. கட்சி கீழே சென்று மக்களிடம் சேரவேயில்லை என்பது புரிந்தது.

மகேந்திரன் கமல்

பட மூலாதாரம், MAHENDRAN

கமலிடம் சென்று பேசினேன். மக்களைச் சென்று சந்திப்போம் என்று சொன்னேன். அதே நேரத்தில் அந்த வியூக வகுப்பாளர்கள் கட்சிக்குள், மற்றொரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி மீண்டும் கமலிடம் பேசினேன். அப்போது அவர், "வரும் தேர்தல் வரைதான் அவர்கள் இருப்பார்கள். அதற்குப் பிறகு வெளியேறிவிடுவார்கள்" என்று சமாதானப்படுத்தினார். அதற்குப் பிறகு, 2020 அக்டோபர் - நவம்பரில் பல்வேறு ஊர்களில் மக்களைச் சந்தித்தோம். நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதற்குப் பிறகு பெரும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. கமல் விடும் அறிக்கைகூட நிர்வாகக் குழுவுக்குத் தெரியாமல் போனது. சரி, எல்லாம் தேர்தலுக்குப் பிறகு மாறிவிடும் என்று நினைத்தோம். ஆனால், இது தொடர்ந்துகொண்டே போனது.

அவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்; கமல் அதனை ஏற்றுச் செயல்படுகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், கமல் சொல்லித்தான் அவர்கள் செய்கிறார்கள் என்பது போனவருடக் கடைசியில்தான் தெரிந்தது. பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் சேலத்தில் ஒரு ஹோட்டலில் வைத்து, கமலிடம் விரிவாகப் பேசினேன். "வியூக வகுப்பாளர்கள் இரண்டு பேர், உங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள், மனதில் விஷத்தை விதைக்கிறார்கள், புரிந்துகொள்ளுங்கள்" என்று மன்றாடினேன்.

ஒரு வேளை, கமல் அடிப்படையிலேயே இப்படித்தானோ அல்லது தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லாம் மாறிவிடுமோ என்றெல்லாம் என் மனதில் ஓடியது. இந்தத் தருணத்தில் நாம் ஏதாவது சொன்னால் கட்சியினர் அதிர்ந்துவிடுவார்கள். தேர்தல் கடந்து விட்டால் எல்லாம் சரியாகவிடும் என நினைத்தேன். அதனால்தான் தேர்தல்வரை தாக்குப்பிடித்தேன்.

கே. ஐ - பேக் இதற்கு முன்பாக பெரிய கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஏன் முறித்துக்கொள்ளப்பட்டது?

ப. கமலுக்கு ஆலோசகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மகேந்திரன், பிரச்சார தலைவர் சுரேஷ் அய்யர் ஆகியோருக்கு இது நல்ல பிசினஸ் ஐடியாவாகத் தோன்றியிருக்கலாம். சங்கியா சொல்யூசன்ஸ் என்பது புதிதாகத் துவங்கப்பட்ட ஒரு நிறுவனம். எல்டாம்ஸ் சாலையில் உள்ள முகவரியில்தான் அது பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தைப் பற்றித் தெரிந்ததும், கட்சிக்குள் இருப்பவர்கள்தான் இப்படி தனியாக நிறுவனம் ஆரம்பித்து செயல்படுகிறார்கள் என்பது புரிந்தது. இருந்தாலும், நன்றாகத் திட்டமிட்டால் பரவாயில்லை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

கமல்

பட மூலாதாரம், MAKKAL NEETHI MAIYAM

கே. கட்சிக்குள் இருப்பவர்களே இம்மாதிரி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, செயல்படுகிறார்கள் என்பது கமல்ஹாசனுக்குத் தெரியுமா?

ப. உறுதியாகத் தெரியும். சங்கியா சொல்யூசன்ஸ் என்பது எல்டாம்ஸ் சாலை முகவரியில்தான் பதிவுசெய்யப்பட்டிருந்தது. உங்களுடைய வீட்டு முகவரியில், ஒரு நிறுவனம் துவங்கப்பட்டிருக்கிறது; அது உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியுமா? ஆகவே, கமலுக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது.

கமலே அந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தாலும் தப்பு இல்லை. ஆனால், சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். நன்றாகச் செய்வார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தோம். "நம்மிடம் முன்பே சொல்லியிருக்கலாம். ஆனால், பரவாயில்லை" என்று நினைத்தோம். ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்ட பிறகு அப்படித்தானே நம்புவோம். ஆனால், அடிபட்ட பிறகுதான் புரிந்தது.

கே. கொள்கை சார்ந்த விஷயங்களில் கமலுடைய அணுகுமுறை எப்படி இருந்தது?

ப. கொள்கைகளைப் பொறுத்தவரை காகிதத்தில் எல்லாம் சரியாகவே இருந்தது. வெளியில் ஜனநாயகம் பேசுகிறோம். அது கட்சிக்குள்ளும் இருக்க வேண்டுமல்லவா? வியாழக்கிழமை கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. அப்போது அவர் எல்லோரிடமும் ராஜினாமாவைக் கோரப்போகிறார் என்பது தெரியாது. ஆனால், நான் கடிதம் எழுதி, தயாராக வந்திருந்தேன். ஆனால், கொடுக்கவில்லை. கூட்டம் துவங்கி பத்து - பதினைந்து நிமிடத்திலேயே நான் எடுத்த முடிவு சரி என்று தோன்றியது. அவர் பேசிய விதம் அப்படியிருந்தது.

"Its my party" என்றார். அவருடைய கட்சி என்பது உண்மைதான். ஆனால், எம்.ஜி.ஆர்கூட "என் கட்சி" என்று சொல்ல மாட்டார். "நம் கட்சி" என்றுதான் சொல்வார். கருணாநிதி "தி.மு.க. என் கட்சி" என்று சொல்வரா? அப்படியிருக்கும்போது கமல் இப்படிப் பேசியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இதையெல்லாம் வெளியில் வந்து சொல்ல சில காலம் பிடிக்கலாம். அல்லது சொல்லாமல்கூட இருக்கலாம்.

மகேந்ின்

பட மூலாதாரம், DR MAHENDRAN R/TWITTER

"கடந்த ஆறு மாதங்களாக உங்கள் அணுகுமுறை ஏன் இப்படி இருக்கிறது?" என்று சிலர் கமலிடம் கேட்டார்கள். அதற்கு அவர் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார், "I became the Hitler, because all of you". ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, "நீங்கள் எல்லாம் உங்கள் துறையில் பெரிய ஆட்களாக இருந்திருக்கலாம். ஆனால், இங்கே என்னால்தான் நீங்கள் வளர்ந்தீர்கள்" என்றார். அதில் என்ன ஆச்சரியம்? அவரை முன்வைத்துத்தான் நாங்கள் இயங்கினோம். அதில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் கவனிக்கப்படுவது இயல்புதானே. அதை ஒரு குறையாக சொன்னால் எப்படி?

"கடந்த சில மாதங்களாக மேடையில் தனியாக உட்கார்கிறீர்கள். நூறடி மேடை போட்டாலும் அதில் தனியாக அமர்கிறீர்கள். ஏன்?" என்று ஒருவர் கேட்டார். என்னைப் பொறுத்தவரை, இப்படி கமலை அமர வைப்பது அந்த வியூக வகுப்பாளர்களின் யோசனை என்றுதான் வியாழக்கிழமை காலை வரை நினைத்தேன். ஆனால், "என் யோசனை" என்று அவர் சொன்னபோது அதிர்ச்சியாகஇருந்தது.

கே. இதற்கு என்ன காரணத்தை அவர் முன்வைத்தார்?

ப. எனக்கு இப்போதும் அவர் மீது கோபமில்லை. பரிதாபம்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதனுக்கு கண் ஏன் மூடிப்போனது என்று நினைத்தேன். என்ன போதையில் இருக்கிறார் என்று கேட்கத் தோன்றியது. 2018ல் நான் சந்தித்த கமல்தான் உண்மையான கமல் என்று இப்போதும் நம்புகிறேன். வியாழக்கிழமையன்று அவரைச் சந்தித்தபோது அந்த 12 பக்கக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, "நான் எல்லாவற்றையும் விவரமாக 10 - 12 பக்கத்திற்கு எழுதியிருக்கிறேன். இதை இன்றைக்கு நீங்கள் படித்தால் உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனால், இரண்டு மாதங்கள்கூட நேரம் எடுத்துப் படித்துப் பாருங்கள். கோபம் தணிந்த பிறகு உங்களுக்குப் புரியும்" என்று சொன்னேன். எல்லாவற்றையும் சரி, சரி என்று சொல்லி வாங்கிக்கொண்டார்.

கே. மேடையில் தான் மட்டும் தனியாக அமர்வேன் என்ற போக்கு எப்போது துவங்கியது? அதற்கு என்ன காரணம் சொன்னார்?

ப. வியாழக்கிழமை சொன்ன காரணம்தான். "என்னுடைய பெயரை வைத்து நீங்கதான் வளர்ந்துகொள்கிறீர்கள்" என்று சொன்னார். அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அங்கே ஆறேழு பேர்தான் இருந்தோம். கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் 114 பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் என்ன தவறுசெய்தார்கள்? நான் அங்கே விளக்கம் கேட்கவெல்லாம் போகவில்லை. கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்றுதான் போனேன். மற்றவர்கள்தான் கேட்டார்கள். ஆனால், அவரது பதில் ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் துவங்கியது அக்டோபர் 2020ல்.

கே. சங்கியா சொல்யூஷனைச் சேர்ந்தவர்கள், கமல்ஹாசனை மற்றவர்களிடமிருந்து பிரித்ததாகச்சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் சொல்லும் மற்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால், அவர்தான் தன் விருப்பத்தை சங்கியா மீது திணித்து செயல்படுத்தியதைப் போல இருக்கிறது..

ப. இது குறித்து நான் அவரிடம் தொடர்ச்சியாகப் பேசிவந்தேன். ஜனவரி மாதம் பேசினேன். தேர்தல் பிரச்சாரம் துவங்கிய பிறகு கோயம்புத்தூரில் சென்றும் பேசினேன். சுரேஷ் அய்யர் அங்கு இருக்கும்போதே, "இவர்கள் மிகவும் தவறுசெய்கிறார்கள்" என்று சொன்னேன். "இவர்களுடைய இயலாமை, திறமையின்மையினால் தவறு நடப்பதை மறைத்து மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள். என் மீது பழிபோடுகிறார்கள்" என்று சொன்னேன். அதற்கு முன்பாக கடந்த வருடம் அக்டோபரிலோ, செப்டம்பரிலோ ஒரு நாள் பேசும்போது, "நான் வெளியில் செல்வதுதான் அவர்களுடைய வெற்றி என்று நினைக்கிறார்கள். உண்மையை வெளியில் சொல்லக்கூடிய ஆள் நான். ஆகவே என்னை வெளியேற்ற நினைக்கிறார்கள்" என்று சொன்னேன்.

"நீங்கள் வெளியேறுகிறீர்களா?" என்று கமல் கேட்டார். "இல்லை நான் உங்களோடுதான் இருக்கப்போகிறேன். நீங்கள்தான் தேர்தலுக்குப் பிறகு அவர்களை அனுப்பிவிடப்போவதாகச் சொன்னீர்களே" என்று சொன்னேன்.

மகேந்திரன் கமல்

பட மூலாதாரம், DR MAHENDRAN R/TWITTER

கடந்த ஜூன் மாதம் ஒரு சம்பவம் நடந்தது. அவர்கள் இருவரோடு என்னையும் உட்காரவைத்து கமல் பேசினார். "இதோ பாருங்கள் நீங்கள் கட்சி. சுரேஷ் அய்யர் தேர்தல் வேலைக்காக வந்திருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன் புறப்பட்டுவிடுவார். மகேந்திரன் என்னுடைய பிசினஸ் பார்ட்டனரைப்போல. நான் அழைத்தால் வருவார். வேண்டாமென்றால் சென்றுவிடுவார்" என்று விளக்கினார். "இவர்கள் இருவரும் அரசியலைப் பொறுத்தவரை தற்காலிகமானவர்கள். நீங்கள் அப்படியல்ல" என்று சொன்னார். ஆகவே எனக்கு நம்பிக்கை வந்தது.

ஆனால், தேர்தல் காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் யோசித்துப் பார்த்தபோது அவர்கள் செய்ததெல்லாம் இவருடைய ஆணையின்படிதான் என்பது புரிந்தது.

கே. தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் பல குளறுபடிகள் இருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறீர்கள். என்ன நடந்தது?

ப. கூட்டணியைப் பொறுத்தவரை, செய்தித் தாள்களைப் பார்த்துத்தான் சமத்துவ மக்கள் கட்சிக்கு இத்தனை இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். நிர்வாகக் குழுவில் இருந்த ஏழு பேருக்கும் அதற்கு முன்பாகத் தெரியாது.

திடீரென ஒரு நாள் சரத்குமார் வருகிறார் அவரை வரவேற்று அழைத்து வாருங்கள் என்றார்கள். எதற்காக என்று கேட்டபோது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள். சரி என்று சொல்லி சரத்குமார் வந்தவுடன், வரவேற்று கமலிடம் அழைத்துச் சென்றேன். கமலும் சரத்குமாரும் பேசும்போது, "சரி, கூட்டணியை முடிவுசெய்திருக்கிறோம். நன்றாக பணியாற்றுவோம்" என்று பேசினார்கள். "என்ன, கூட்டணி முடிவுசெய்திருக்கிறார்களா?" என்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், கமல், சுரேஷ் அய்யர், மகேந்திரன் ஆகிய மூன்று பேருக்கும் முன்பே தெரிந்திருந்தது. ஆனால், அங்கிருந்த நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவருக்குமே அன்றுதான் தெரியும்.

கே. அந்த சந்திப்பு முடிந்த பிறகு கமலிடம் இது குறித்து நீங்கள் கேட்கவில்லையா?

ப. அப்போது தேர்தல் நெருங்கிவிட்டது. இது நடந்தது மார்ச் 10ஆம் தேதி. தேர்தலுக்கு 25 நாட்களே இருந்தன. அந்த நேரத்தில் கமலின் அணுகுமுறையே மாறியிருந்தது. அந்த சந்திப்பு முடிந்த பிறகு சுரேஷிடமும் மகேந்திரனிடமும் மற்றவர்கள் கேட்டார்கள். "ஆமாம் நாங்கள் முடிவுசெய்துவிட்டோம்" என்றார்கள். சரி, "அவர்களுக்கு எத்தனை இடங்கள்" என்று கேட்டபோது பத்து, பதினைந்து இடங்கள் கொடுக்கப்படும் என்றார்கள். பிறகு பதினெட்டு இடங்கள் என்றார்கள். அவர்களுக்கு அதுவே அதிகமென நான் நினைத்தேன். பிறகு காலையில் செய்தித் தாள்களைப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு 80 இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியும்.

வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதற்காக நாங்கள் நேர் காணல் செய்துகொண்டிருக்கிறோம். எந்தத் தொகுதிகளுக்கு நேர்காணல் செய்கிறோமோ அதே தொகுதிகளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டார். இந்த இடங்களைப் பெற, சாதாரண தொண்டர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு டிடி எடுத்து, மிக கவனமாக விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கிறார்கள். கமல் நேர்காணலை நடத்துவார் என வெளியில், வெயிலில் நாற்காலியில் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், அந்தத் தொகுதியை வேறு யாருக்கோ தூக்கிக் கொடுத்தாகிவிட்டது. இது என்ன நியாயம்? சரி, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு பணம் கட்டியிருந்தவர்களுக்கு அந்த பத்தாயிரம் ரூபாயைத் திருப்பி அனுப்ப வேண்டாமா? அந்தப் பணம் அவர்களுக்குப் பெரிதல்லவா?

கிட்டத்தட்ட 40 சதவீத இடங்களை வேறு கட்சிக்குக் கொடுத்தாகிவிட்டது. அப்படியானால் அந்த மாவட்டச் செயலாளர்களைக் கூப்பிட்டு சொல்லியிருக்க வேண்டாமா? அவர்கள் எங்களை அழைத்து அழுகிறார்கள். என்ன செய்வது?

கே. அந்தத் தருணத்தில் கமலிடம் இதையெல்லாம் சொல்ல முடியவில்லையா?

ப. அவர் கேட்கும் மனநிலையில் இல்லை. கையெழுத்துப் போட்டாகிவிட்டது. அந்த நேரத்தில் போய் இதை ஒரு பிரச்சனையாக்கினால், கட்சியினர் அந்த நேரத்திலேயே மனமுடைந்து போய், தேர்தல் பணிகள் பாதிக்கப்படும்.

கே. கமல் தனக்கான தொகுதியைத் தேர்வு செய்வதிலும் பிரச்சனை இருந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

ப. அவர் கட்சியின் தலைவர். அவர் எந்தத் தொகுதியில் நிற்கப்போகிறார் என்பதை இரண்டு மாதங்களாகக் கேட்கிறோம். மார்ச் 10ஆம் தேதிவரை எந்தத் தொகுதி என்பது தெரியாது. தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு முன்புவரை எந்தத் தொகுதியில் நிற்கப் போகிறார் என்பது அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது. சுரேஷ் அய்யர், மகேந்திரன் ஆகியோரிடம் கேட்டபோது நான்கு தொகுதிகளை இறுதிசெய்து, அவற்றில் எதில் நிற்பது என்பது குறித்து ஆய்வுசெய்து வருவதாகச் சொன்னார்கள். சென்னையில் வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளைச் சொன்னார்கள். அப்படியானால், வேளச்சேரியில் போட்டியிடலாம் என்று சொன்னோம். கடந்த தேர்தலிலும் வாக்குகள் அதிகம் கிடைத்த தொகுதி, படித்தவர்கள் அதிகமுள்ள தொகுதி போன்ற சாதகமான தொகுதியாக இருந்தது.

பிறகு, இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமா என்று ஆலோசித்தார்கள். அப்படியானால் கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிடட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். பிறகு ஒரு வழியாக மார்ச் 11ஆம் தேதி, கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடப் போவதாக சுரேஷ் அய்யரிடம் இருந்து செய்தி வந்தது. பிறகு அவசரஅவசரமாக நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தினோம். என்னைப் பொறுத்தவரை சென்னையில் போட்டியிடுவது சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால், அதன் தாக்கம் சென்னை முழுவதும் இருக்கும். இரண்டு - மூன்று பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். மாநிலச் செயலாலர்கள் ஆறு பேர் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.

ஆனால், கோவை தெற்குத் தொகுதியைத்தான் நாங்கள் பரிந்துரைத்திருக்கிறோம் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு உடனடியாக மாவட்டச் செயலாளரை அழைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். 12ஆம் தேதி காலையில் கமலைச் சந்தித்து, என்னவெல்லாம் அவருடைய தொகுதியில் செய்யலாம் என்பது குறித்து ஒரு பிரசன்டேஷனை போட்டுக் காண்பித்தேன். அதற்குப் பிறகு அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அதாவது, இந்த இரண்டு பேரையும் கோயம்புத்தூரில் வந்து வேலை செய்ய விடாதீர்கள்; பிற தொகுதிகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். மீடியாவை வேண்டுமானால் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்; தேர்தல் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்; என் தலையை வைத்து நான் உங்களை ஜெயிக்க வைக்கிறேன் என்றேன்.

பிறகு, ஊரில் போய் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். அதற்கு அடுத்த நாள் எல்லா நிர்வாகிகளுடனும் ஒரு ஜூம் மீட்டிங் நடந்தது. அதில் பேசிய கமல், நீங்கள் நன்றாகப் பணியாற்றியிருக்கிறீர்கள். ஆனால், எனக்கென்று ஒரு அணியை வைத்திருக்கிறேன். அவர்கள் நான் சொல்வது படி செய்வார்கள். ஆகவே நீங்கள் சிங்காநல்லூரில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள் என்றார். ஆனால், அவர்கள் மக்களோடு இறங்கி செயல்படவில்லை. சில நாட்களிலேயே பிரச்சாரத்தில் பிரச்சனை இருப்பது தெரிந்துவிட்டது. வாக்குகள் குறைந்ததற்கு அதுதான் காரணம்.

கே. நீங்கள் கட்சியை விட்டு விலகுவதற்கு முன்பாக கமீலா நாசர் விலகினார். அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது?

ப. அவருக்கான காரணத்தை அவர்தான் சொல்ல வேண்டும். அவர் தேர்தலுக்கு முன்பாகவே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டார். இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, வேட்பாளர் தேர்வு, இவர்கள் இருவரின் அணுகுமுறை போன்ற எல்லாம் சேர்ந்துதான் அவர் விலகியிருக்கிறார் என்பது எனக்குக் கிடைத்த தகவல். ஆனால், இதனை அவர்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

கே. தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொண்டார் கமல். அவ்வளவு பெரிய நிதி எங்கிருந்து வந்தது?

ப. அது கணக்குகளை சமர்ப்பிக்கும்போது எல்லோருக்கும் தெரிந்துவிடும். பெரிய தலைவர். எல்லா இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆகவே நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டரில் பயணம் செய்வதில் தவறில்லை. நிறைய பேர் நிதி கொடுத்திருக்கிறோம். நானும் கொடுத்திருக்கிறேன். அதை வைத்து பெருமைப்பட நான் நினைக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம்

பட மூலாதாரம், மக்கள் நீதி மய்யம்

கே. கொள்கைகளைப் புரிந்துகொள்வதில் அவர் எப்படி செயல்பட்டார்? இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் குறித்து பதில் சொல்வதில் அவர் சற்றுத் திணறினார்..

ப. இட ஒதுக்கீடு குறித்து பதில் சொல்வதில் அவருக்கு நிச்சயம் திணறல் இருக்கும். இப்படி ரெண்டு பேருக்கு இட ஒதுக்கீடு செய்திருக்கும்போது எல்லோருக்கும் திணறல் இருக்கத்தானே செய்யும். தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை அதனை முழுக்க முழுக்கத் தயார் செய்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. அவர் மிகச் சிறப்பாக அதனை உருவாக்கியிருந்தார். ஆனால், வெளியிட்டபோது எல்லாம் மாறியிருந்தது. வெளியிடும் தினத்தன்றுதான் எங்களுக்கே அதில் என்ன இருக்கிறதென்று தெரிந்தது. நாங்கள் ஏற்கனவே உருவாக்கியிருந்த தேர்தல் அறிக்கை வேறு. மரபணு மாற்றப்பட்ட பயிர், மும்மொழிக் கொள்கை, நீட்டிற்குப் பதிலாக சீட் என ஏதேதோ இருந்தது. இது எதையும் நிர்வாகக் குழுவிடம் தெரிவிக்கவில்லை.

கே. கூட்டணியைப் பொறுத்தவரை பல பெரிய கட்சிகளோடு பேசியதாக தகவல்கள் வந்தன. அதிலெல்லாம் உங்களோடு ஆலோசனைகள் நடத்தப்பட்டதா?

ப. பல கட்சிகள் எங்களோடு கூட்டணி அமைக்க வந்தன. ஆனால், ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது. ஒரு பெரிய கட்சியோடு கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து நின்று பலத்தை நிரூபிப்பதா என முடிவெடுக்க வேண்டியிருந்தது. அது மிகக் கடினமான முடிவுதான். இரண்டு முடிவுகளிலும் இருக்கும் சாதக, பாதகங்களை அவர் முன்பு வைத்தேன். தனித்து நின்றால் மக்கள் விரும்புவார்கள் என்றும் கூறினேன். தேர்தலில் தனித்து நிற்பது கடினமாக இருந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு போராடியிருப்போம்; ஆனால், ஏன் சின்னக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடிவுசெய்தீர்கள் என்று இப்போது நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்கள் கேள்வியெழுப்பினார்கள். தகுந்த வேட்பாளர்கள் இல்லையென நான் நினைத்தேன் என்றார். அப்படி யார் சொன்னது? நேர் காணல் நடத்திய பொதுச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் அல்லவா சொல்லியருக்க வேண்டும். 100 இடங்களுக்கு ஆள் இல்லாமல் போயிற்றா? வீதி வீதியாக சுற்றிய நகரச் செயலாளர்கள் நின்றிருப்பார்களே!

கே. கமல்ஹாசன் உங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் நீங்கள் அவருடைய இமேஜைப் பயன்படுத்த விரும்பியதாகத் தெரிவித்திருந்தார். அப்படி என்ன நடந்தது?

ப. அதைப் படித்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. இந்த வசனம் அவருடையதல்ல. எனக்குத் தெரிந்த கமல்ஹாசன் அப்படி எழுதுபவர் அல்ல. ஆனால், அப்படி எழுதிக் கொடுக்கும் கூட்டமும் வந்துவிட்டது. அதைப் படித்து சரி என கையெழுத்திடும் நிலைக்கு அவரும் வந்துவிட்டார். அதைப் படித்தபோது பரிதாபம்தான் வந்தது.

கே. அவருடைய இமேஜை நீங்கள் பயன்படுத்தியதாகச் சொல்கிறாரே.. அப்படியென்றால் என்ன சொல்கிறார். அதன் பொருள் என்ன?

ப. என்னவென்றே புரியவில்லை. இரண்டாம் நிலை தலைவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்கிறாரா? அப்படி நினைத்தால் அதை தெளிவாகச் சொல்லலாம். அதை ஏற்பவர்கள் கட்சிக்குள் இருக்கலாம். அதில் தப்பில்லை. ஆனால், அந்தத் தெளிவு அதில் இல்லை.

கே. கட்சிக்கு பணியாற்ற வந்தவர்களைத் தடுத்ததாகச் சொல்கிறார்...

ப. கட்சிக்கு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள், மண்டலச் செயலாளர்கள் இருக்கிறார்கள், பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமான நான் ஒரு அலங்காரப் பதவியில் இருக்கிறேன். சரி, கோவைப் பகுதி என் பொறுப்பில் இருந்தது என்று வைத்துக்கொண்டாலும் அங்குதானே சிறப்பாக வாக்குகள் விழுந்திருக்கின்றன. எல்லோரும் 5-6 தொகுதிகளை பொறுப்பாக எடுத்துக்கொண்டார்கள். நான் மட்டும்தான் 19 தொகுதிகளை பொறுப்பெடுத்துக் கொண்டேன். இதெல்லாம் பொய் குற்றச்சாட்டு.

கே. இனி மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமென நினைக்கிறீர்கள்..

ப. இப்போது கோபத்தில் எனக்கு எதிராக அறிக்கை விடலாம். நான் அவரோடு இருக்கும்போது இப்படி யாராவது சொல்லியிருந்தால், அதை ஆராய்ந்து பார்ப்போம் என்று ஆலோசனை சொல்லியிருந்தேன். அவர்கள் சொல்லியிருப்பதில் தவறிருந்தால் சரி செய்யலாம். இல்லாவிட்டால் பேசாமல் இருக்கலாம் என்று சொல்லியிருப்பேன். ஆனால், இவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது செய்வார்கள். கமல் மீண்டும் தன் பழைய பாணிக்கு அதாவது 2019ஆம் ஆண்டுக்கு முந்தைய பாணிக்குத் திரும்பினால், இதனைச் சரிசெய்யலாம்.

கே. உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? வேறு கட்சியில் இணையப் போகிறீர்களா?

ப. இது உணர்ச்சிகரமான தருணம். அமைதியாக இருந்து யோசிக்க விரும்புகிறேன். அடுத்து என்ன என்பதை இனிமேல்தான் முடிவுசெய்ய வேண்டும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :