திருமாவளவனின் நான்கு வியூகங்கள் - பொதுத்தொகுதிகளில் விசிக வென்றது எப்படி?

பட மூலாதாரம், THIRUMAVALAVAN FB
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் வரையில் பதற்றத்திலேயே திருமாவளவன் இருந்துள்ளார். என்ன நடந்தது?
மே 2 ஆம் தேதி இரவு 8.30 மணி
திருப்போரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி சுற்று நிறுத்தப்படுகிறது. `தபால் வாக்குகளை எண்ணிவிட்டு இறுதிச் சுற்றுக்கு வாருங்கள்' என பா.ம.க தரப்பு கோரிக்கை வைக்கிறது. இதனால் சலசலப்பு ஏற்படுகிறது. அங்குள்ள நிலவரம் குழப்பத்தை ஏற்படுத்தியதால், வி.சி.க நிர்வாகி ஒருவரைத் திருமாவளவன் செல்போனில் தொடர்பு கொள்கிறார்.
``எந்த ஏரியா அது..,. என்ன நடக்கிறது?"
``சதுரங்க பட்டினம்"
``சதுரங்க பட்டினம்னா.. சட்ராஸா? அங்கு நமக்கு சாதகமான வாக்குகள் வருமா?"
``சாதகமான வாக்குகள் என்று சொல்ல முடியாது. ஆனால், அவை நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாக்குகள் அல்ல."
``அப்படியா... நல்லது. யாராவது பிரச்னை செய்கிறீர்களா?"
``இல்லை அண்ணா. பார்த்துக் கொள்ளலாம்"
- ``மேற்கண்ட உரையாடல் சிறு உதாரணம்தான். வி.சி.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளின் நிலவரத்தையும் கடைசி நிமிடம் வரையில் பதற்றத்துடன் திருமாவளவன் விசாரித்து வந்தார். அவருடைய ஒரே வருத்தம் வானூரில் வன்னியரசுவும் அரக்கோணத்தில் கவுதம சன்னாவும் தோல்வியைத் தழுவியதுதான். வானூர் தலித் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியாக உள்ளது. அங்கு தோல்விக்கான காரணங்கள் என்ன என ஆராய்ந்து வருகின்றனர். அரக்கோணத்தில் புரட்சி பாரதம் உள்பட சில கட்சிகள் செல்வாக்காக இருப்பதும் பின்னடைவுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், நான்கு தொகுதிகளில் பானைச் சின்னத்தின் சத்தத்தை ஒலிக்க வைப்பதற்காக வி.சி.கவினருக்கு ஏற்பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர்.
வி.சி.க எதிர்கொண்ட சவால்கள்

பட மூலாதாரம், THiRUMAVALAVAN
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசியவர், ``காட்டுமன்னார்கோவிலில் வி.சி.க வேட்பாளர் சிந்தனைச்செல்வன், அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறனை 11,274 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திருப்போரூரில் வி.சி.க வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி, பா.ம.க வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை 1947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாகையில் ஆளூர் ஷாநவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். செய்யூரில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.கவின் கணிதா சம்பத்தை வி.சி.க வேட்பாளர் பனையூர் பாபுவால் வெல்ல முடிந்தது. எங்களது வெற்றியைத் தடுப்பதில் அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினர் ஏராளமான குழப்பங்களை அரங்கேற்றினர். இதனால், தேர்தல் களத்தில் எங்களுக்குப் பல சவால்கள் காத்திருந்தன. அதையெல்லாம் மிக எளிதாக திருமாவளவன் முறியடித்தார்.
உதாரணமாக, தேர்தலுக்கு சில வாரங்களே இருந்ததால் தனிச் சின்னத்தை விட உதயசூரியன் சின்னத்தில் நிற்பதே நல்லது என சிலர் பேசி வந்தனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மக்கள் பிரச்னைகளைப் பேச வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் தி.மு.கவினரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதனால் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் திருமா உறுதியாக இருந்தார்.
பானைக்கு வந்த சிக்கல்

பட மூலாதாரம், THIRUMAVALAVAN
அடுத்ததாக, ஆறு தொகுதிகளில் வி.சி.க வேட்பாளர்கள் யார் என்பதில் பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, ` ஏணி சின்னமா.. மோதிரமா' என்ற குழப்பத்தில் இருந்தபோது பானை சின்னத்தைப் பெற்றார்.
எளிய மக்களின் வாழ்வாரத்தில் ஒன்றாக பானை பார்க்கப்படுகிறது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். இப்போதும் அதே பானை சின்னம் கிடைத்ததில் வி.சி.க நிர்வாகிகள் உற்சாகப்பட்டனர்.
ஆனால், அப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்தநேரத்தில் `புதிய தலைமுறை' என்ற பெயரில் இருந்த கட்சிக்குப் பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த கட்சியின் நிர்வாகிகள் வி.சி.க போட்டியிடும் திருப்போரூரில் ஒரு வேட்பாளரை நிறுத்தினர்.
இங்கு இரண்டு கட்சிகளும் ஒரே சின்னத்தைக் கேட்டால், தேர்தல் அலுவலர்கள் குலுக்கல் முறையை பயன்படுத்துவார்கள். இதனை விரும்பாமல் புதிய தலைமுறை கட்சி நிர்வாகிகளிடம் சமசரம் பேச முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வெளிநாட்டில் வசிக்கும் வி.சி.க அனுதாபி ஒருவர் நேரடியாக வந்து அக்கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முடிவில், `வி.சி.க போட்டியிடும் இடத்தில் அவர்கள் போட்டியிட மாட்டார்கள்' என பேசி முடிக்கப்பட்டது. இதில் குழப்பம் ஏற்பட்டிருந்தால் வி.சி.க வேட்பாளர்களுக்கு பிற கட்சிகள் கடும் சவாலை ஏற்படுத்தியிருப்பார்கள்.
பொதுத்தொகுதி வியூகம் ஏன்?
மேலும், வி.சி.க என்பது சாதி ரீதியான கட்சி என்பதை உடைக்க வேண்டும் என்பதற்காக பொதுத் தொகுதியில் நிற்பது என திருமா முடிவெடுத்தார். அதற்கேற்ப, திருப்போரூர் தொகுதியும் நாகப்பட்டினம் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. `பொதுத் தொகுதியில் நிற்கும்போது வி.சி.கவை பொதுக்கட்சியாக மக்கள் அங்கீகரிப்பார்கள். இதன்மூலம், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்' என திருமாவளன் நம்பினார். அதற்கேற்ப, இரண்டு பொதுத்தொகுதிகளில் வி.சி.க வெற்றி பெற்றுள்ளது" என்கிறார்.
இதைத் தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய திருப்போரூர் தொகுதி வி.சி.க பிரமுகர் ஒருவர், ``திருப்போரூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு என தனியாக 28,000 வாக்குகள் உள்ளன. இங்கு முந்தைய காலகட்டத்தில் பா.ம.க வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு ஆளும்கட்சி பிளஸ் பணபலம் துணையாக இருந்தது. ஆனால், வி.சி.க வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி தொகுதிக்கு புதியவர். மக்களிடம் பானைச் சின்னம் சென்று 15 நாள்கள்தான் ஆகியிருந்தன. தவிர, தி.மு.க நிர்வாகிகள் பெரிய அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. உதாரணமாக, திருப்போரூர் தொகுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த கோதண்டம் அ.ம.மு.க பக்கம் சென்றதால், தகுதிநீக்க நடவடிக்கைக்கு ஆளானார்.
23,000 வாக்குகள் எங்கே?
இதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இதயவர்மன் வெற்றி பெற்றார். அவர் ஏறக்குறைய 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், தற்போதைய தேர்தலில் 1947 வாக்குகள் வித்தியாசத்திலேதான் வி.சி.கவால் வெல்ல முடிந்தது. அப்படியானால் தி.மு.க வாங்கிய 23,000 வாக்குகள் எங்கே போனது? தவிர, தி.மு.க நிர்வாகிகள் வசிக்கும் பகுதிகளில் வி.சி.க பெற்ற வாக்குகள் மிகவும் குறைவு. அங்கெல்லாம் பா.ம.கவுக்கு கணிசமான வாக்குகள் விழுந்துள்ளன. இந்தத் தொகுதியில் வன்னியர்கள், தலித்துகள் அல்லாத பிற சமூக மக்களும் பெரிதாக வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இங்கு மீனவ மக்களும் கணிசமான அளவுக்கு வசிக்கின்றனர். இங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மோகன சுந்தரி களமிறக்கப்பட்டார். அவர் பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டார்" என்கிறார்.
மேலும், `உங்கள் வீட்டுப் பெண்களை எல்லாம் காதலித்து மணம் செய்ய தி.மு.க பணம் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளனர். எனவே, பானைக்கு ஓட்டுப் போடாதீர்கள்' என்ற பிரசாரத்தை அ.தி.மு.க கூட்டணி சார்பில் செய்துள்ளனர். இதனால், கூட்டணிக் கட்சியினர் சிலர் பிரசாரத்துக்கே வராமல் இருந்தையும் வி.சி.க நிர்வாகிகள் அதிர்ச்சியோடு கவனித்துள்ளனர். இதையும் மீறி திருப்போரூரில் வி.சி.க வென்றுள்ளது.
எதிர்ப்பை ஆதரவாக மாற்றிய பனையூர் பாபு!
இதேபோல், செய்யூர் தனித் தொகுதியில் உள்ளூர் கோஷ்டி மோதலை வி.சி.க எதிர்கொண்டது. அங்கு சூ.க.ஆதவன் தரப்பினர் வி.சி.க வேட்பாளர் பனையூர் பாபுவுக்கு எதிராக முகநூலில் எழுதி வந்தனர். இதையெல்லாம் சரிசெய்த பிறகு, தி.மு.கவினரிடம் வி.சி.க வேட்பாளருக்கு இணக்கமான சூழல் ஏற்படவில்லை. அதையும் சரிசெய்து தேர்தல் செலவுகளில் சுணக்கம் காட்டாததால், பனையூர் பாபுவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது. `வி.சி.கவுக்கு எதிரான தொகுதியாக பார்க்கப்பட்ட செய்யூரை ஆதரவாக மாற்றியதில் பனையூர் பாபுவுக்கு முக்கியப் பங்கு உண்டு' என்கின்றனர் அங்குள்ள வி.சி.க நிர்வாகிகள். தவிர, அ.தி.மு.க வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தனபால் எதிர்ப்பு காட்டியதும் வி.சி.கவுக்கு பிளஸ்ஸாக மாறிப் போனதாகச் சொல்லப்படுகிறது.
`கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பில் சுணக்கம் ஏற்பட்டதா?' என வி.சி.க மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அப்படியெல்லாம் இல்லை. மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் கட்சித் தலைவரின் பிரசாரம், தி.மு.க தலைவரின் பிரசாரம், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன.
தேர்தல் களத்தில் 24 மணிநேரமும் அவர்கள் எங்களோடு இருந்தனர். அதனால், அவர்கள் வேலை பார்க்கவில்லை என்பதெல்லாம் தவறான தகவல். நாங்கள் முழுக்க முழுக்க பா.ஜ.கவை எதிர்த்து பிரசாரம் செய்தோம். எங்களை மக்கள் அங்கீரித்துள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது. அதிலும் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறோம்" என்கிறார்.
தி.மு.க சுணக்கம் காட்டியதா?
தி.மு.க மீது வி.சி.க நிர்வாகிகள் கூறும் புகார்கள் குறித்து, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``வி.சி.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் தேர்தல் வேலைகளை தி.மு.கவினர் மிகச் சிறப்பாகச் செய்தனர். இதில் எந்தவித சுணக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என தி.மு.க தலைவரும் எச்சரித்திருந்தார். தற்போது இரண்டு தொகுதிகளில் வி.சி.க தோல்வி அடைந்துள்ளது. அங்கெல்லாம் பா.ம.க இறங்கி வேலை பார்த்தது. அதிலும், சில பகுதிகளில் அமைப்புரீதியாகவும் வி.சி.க வலுவாக இல்லை. இதுவும் ஒரு காரணமாக இருந்தது" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``திருப்போரூர் பொதுத் தொகுதியில் வி.சி.க வெற்றி பெற்றது வரவேற்கத்தகுந்த விஷயம். அந்தத் தொகுதியில், `தி.மு.க கூட்டணி சார்பில் எந்த வன்னியர் நின்றாலும் தோற்கடியுங்கள்' என்ற பிரசாரம் செய்தனர். கடந்த முறை திருப்போரூரில் நடந்த தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து நடந்தது. அதனால் அதன் தாக்கம் அந்தத் தொகுதியில் எதிரொலித்தது. இதன் காரணமாக கூடுதல் வாக்குகள் கிடைத்தன. அதுவே தற்போதும் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதே தேர்தலில் விக்ரவாண்டி, நாங்குநேரியில் தி.மு.கவும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தற்போது அங்கு வெற்றி பெற்றுள்ளோம். மற்றபடி, வி.சி.க போட்டியிட்ட சில தொகுதிகளில் தி.மு.கவினர் வேலை பார்க்கவில்லை என்பது சரியான காரணம் அல்ல" என்கிறார்.
பிற செய்திகள் :
- கொரோனா அலை: மிக மோசமான நிலையில் டெல்லி, ராணுவ உதவியை கோரும் அரசு
- மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?
- தேர்தலில் நூலிழையில் தப்பியவர்கள், தவறவிட்டவர்கள் யார் யார்? சுவாரசிய தகவல்கள்
- புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி?
- மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












